எந்த நோயால் வலியும் உயிரிழப்பும் அதிகமோ அதைக் கண்டு அஞ்சுவது உலக இயல்பு. புற்றுநோய், "எய்ட்ஸ்' போன்றவற்றிலிருந்து முழுமையாகக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதால் அச்சப்படுகின்றனர்.
இப்போது அதிகரித்துவரும் சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு ஆகியவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும் கண்காணிப்பும் இருந்தால்தான் நோய் கட்டுக்குள் இருக்கும் என்பதால், வாழ்நாள் முழுவதும் கட்டுப்பட்டு வாழவேண்டுமே என்று நோயாளிகள் வருந்துகின்றனர். அதிலும் உணவுக் கட்டுப்பாடு அவர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இவற்றிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்ட, குணப்படுத்தக்கூடிய, குறுகியகால சிகிச்சை கொண்ட, உணவுக் கட்டுப்பாடு இல்லாத, இன்னும் கூடுதலாக - அதிக சத்துகள் நிறைந்த - உணவை உட்கொள்ளவேண்டிய கட்டாயமுள்ள நோய்தான் காசம்.
உணவுக் கட்டுப்பாடு இல்லாத, குறுகிய கால சிகிச்சை கொண்ட, முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் நாளுக்கு நாள் குறைய வேண்டுமே தவிர அதிகரிக்கக்கூடாது. ஆனால் இந்தியாவில் காசநோய் பெருகிக்கொண்டே போவதுடன் அலட்சியம் செய்யப்பட்டு, ஆபத்தாக மாறிவருகிறது.
இந்தியாவில் 140 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 லட்சம் பேர் "தொற்றும் தன்மையுள்ள' (சளியில் கிருமியுள்ள) காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சளியில் கிருமியுள்ள ஒரு நோயாளி, சராசரியாக ஆண்டொன்றுக்கு 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். தொற்று நோய்களிலேயே காசநோய்தான் உயிர்க்கொல்லி நோய் என்பதை மறக்கக்கூடாது. நம் நாட்டில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் - சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம்பேர் - காசநோயால் இறக்கின்றனர்.
"மைக்ரோ-பாக்டீரியம் டியூபர்குலோசிஸ்' என்னும் கிருமி மூலம் காசநோய் பரவுகிறது. இது காற்றின் மூலம் பரவும். காசநோய் உள்ள நோயாளி இருமும்போதோ, தும்மும்போதோ, அவர் துப்பும் கோழை மூலமாகவோ கிருமி காற்றில் பறந்து அக் காற்றை சுவாசிக்கும் மற்றொரு நபரைச் சேருகிறது. அவருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந் நோய் அவரைப் பற்றிக்கொள்கிறது.
இப்போதுள்ள சூழலில் பொதுவாகவே அனைவரின் உடலிலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதாலும், பொருளாதாரக் காரணங்களால் சத்தான உணவை போதிய அளவு சாப்பிட முடியாததாலும், வேலை தொடர்பாக அலையவேண்டி இருப்பதாலும் இந்த நோய்க்கு இரையாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால்வரை "எச்.ஐ.வி.' என்னும் "எய்ட்ஸ்' பாதிப்பு உள்ளவர்களுக்கு காச நோயும் சேர்ந்துகொண்டது. இப்போது சர்க்கரை நோயாளிகளை எளிதில் பற்றுகிறது.
ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்களும், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களும்கூட இந்நோய்க்கு எளிதில் இரையாகிவிடுகிறார்கள்.
இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், விட்டுவிட்டு காய்ச்சல் அல்லது மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு, மார்பு வலி, சளியில் ரத்தம், மூச்சிரைப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இவை அனைத்தும் ஒரு நோயாளிக்கு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலும் பரிசோதித்துப் பார்த்துவிடுவது நல்லது.
சளிப் பரிசோதனை, "எக்ஸ்-ரே' பரிசோதனை, "மாண்டோ' பரிசோதனை, நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை, "டியூபெர்குலின்' சோதனை, ரத்த நிணநீர் சோதனை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் காசநோய் பாதிப்பை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.
மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும்போது நாமாகவே கடைக்குச் சென்று இருமலுக்கு, சளிக்கு என்று ஏதாவது மாத்திரை வாங்கிச்சாப்பிட்டு வியாதியை முற்றவைத்துக்கொள்ளக்கூடாது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் விரைவில் குணப்படுத்திவிடலாம்.
எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் காசநோய்க்கான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் தனிப்பிரிவாகச் செயல்படுவதால் எளிதாகவும் உடனடியாகவும் சிகிச்சைத் தொடங்கப்படுகிறது.
மேலும், "டாட்ஸ்' என்னும் நேரடியான, குறுகிய கால சிகிச்சைத் திட்டத்தின் மூலம், நோயாளியின் இருப்பிடத்துக்கு அருகிலேயே காசநோய் மருந்துகள் கிடைக்கின்றன. எனவே தினமும் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம்கூடக் கிடையாது.
இவ்வளவு வசதிகள் இருந்தும் காசநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சி முழு வெற்றியடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் "நீண்ட' சிகிச்சைக் காலம். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் எட்டு மாதங்கள் வரையிலோ, நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலோ சிகிச்சை தரப்படுகிறது. தொடர்ந்த சிகிச்சை என்பது நோயாளிகளுக்கு மிகவும் சிரமமான, சவாலான செயலாக இருக்கிறது. இதைச் சரியாக சாதிப்பவரே நோயிலிருந்து விடுபடுகிறார்.
காசநோயால் பாதித்தவரைக் குணப்படுத்துவதில் அவருடைய குடும்பத்தாருக்கு முக்கியப் பங்கும் பொறுப்பும் இருக்கிறது. வேளைக்கு மருந்து கொடுத்து சாப்பிடச் செய்து, நல்ல சத்துள்ள ஆகாரங்களைக் கொடுத்துவர வேண்டும். அவர் மனம் தளரும்போதும் சலிக்கும்போதும் ஆறுதல் கூறி ஊக்கப்படுத்த வேண்டும். இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதால் சமுதாய நன்மையைக் கருதியாவது மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடவேண்டும் என்று புரியவைக்க வேண்டும்.
இந்த மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கி பிறகு நிறுத்திவிட்டாலும், அடிக்கடி இடைவெளிவிட்டு சாப்பிட்டாலும் முழுமையான பலனைத் தராது, சில வேளைகளில் நோய் கடுமையாகவும் வாய்ப்பு உண்டு.
நோயாளியும் அவரைச் சார்ந்த சுற்றுப்புறமும் தூய்மையாக இருப்பது அவசியம். அவரிடம் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இருந்தால் அதை நிறுத்திவிட வேண்டும். அப்போதுதான் நோயின் கடுமை குறைந்து மருந்துகளுக்குப் பலன் ஏற்படும். காசநோயாளிகள் சிகிச்சை பெறுவது தங்களுடைய நலனுக்காக மட்டுமல்ல, சமுதாய நலனுக்காகவும் என்பதை மறக்கக்கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.