ஒரு தேர் சீராக ஓடுவதற்கு அச்சாணி எவ்வாறு அவசியமோ அதுபோல் சமுதாயக் கட்டமைப்பு அமைதியாக இயங்க வேண்டும் என்றால் கட்டுக்கோப்பான காவல்துறை இன்றியமையாதது. ""நான் விழையும் காவல்துறை(யினர்) (நல்ல) சீர்திருத்தவாதிகளாகவே இருப்பர்'' என்ற மகாத்மா காந்தியின் அறிவுரை மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து உணரப்பட வேண்டியவை.
எவ்வளவு நல்ல பணி செய்தாலும் ஒரு தவறு எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது. சறுக்கல்கள்தான் பேசப்படுகிறது. வெற்றிகள் சமுதாயத்தின் ஆமோதிப்பிற்கு ஏங்கி வெறிச்சோடிக் கிடக்கிறது,
சமீபத்தில் பல மாநிலங்களில் காவல்துறை கடுமையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளது, ""மாமூலாக "மாமூல்' வாங்குவதுபோய், தில்லியில் ஒரு காவல் நிலையத்தில் "முதல் தகவல் அறிக்கை' (எஃப்.ஐ.ஆர்.) வாபஸ் பெறுவதற்கு காவல் நிலைய அதிகாரியே, முதல்அறிக்கை தாக்கல் செய்தவருக்குப் பணம் கொடுத்தார் என்ற செய்தி எந்த அளவிற்கு மெத்தனப்போக்கு சில இடங்களில் ஊடுருவி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த "நிர்பயா' கற்பழிப்பிற்குப் பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஊடகங்களில் பிரதானமாகச் சித்திரிக்கப்படுகிறது, இதனால்தானோ என்னவோ தம்மீது கவனஈர்ப்பைத் தவிர்ப்பதற்கு அந்த அதிகாரி பணம் கொடுத்துச் சமாளிக்க முற்பட்டார். இது மேலும் ஒரு அவல நிலையின் எடுத்துக்காட்டு.
எந்த ஒரு பிரச்னையானாலும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு, வழக்காடுவதுபோல் வாதங்களை முன்வைத்து, எதிர்தரப்பை விசாரிக்காமலேயே "முடிவும்' கொடுக்கப்படுகிறது, செய்தி ஊடகங்களின் ஆதிக்கம், சமீபகால வளர்ச்சி கட்டுக்குள் இல்லாமல் நிலைத்துவிட்டது; ""எப்போது - அடிப்பதை நிறுத்தினாய்?'' என்பது போன்ற காவல் அதிகாரிகளை சாடும் விதமான கேள்விகளுக்கு "ஆம்', "இல்லை'யென்று எந்தப் பதில் சொன்னாலும் சிக்கவைக்கும்; ஊடகங்களுக்குச் சரியான தகவல் கொடுக்கும் பயிற்சி காவல்துறைக்கு அவசியம். எதிர்மறையான கருத்துகளைக்கூறி காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படாது விளக்கம் அளிப்பது என்பதற்கு நிச்சயமாகக் கூர்மையான பயிற்சி தேவைப்படுகிறது.
"நிர்பயா' கற்பழிப்புச் சம்பவத்திற்குப் பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று தில்லி போலீஸ் முனைப்பாகச் செயல்பட்டது உண்மை. டிசம்பர் 2012-இல் இருந்து எல்லா தில்லி நகர் காவல் நிலையங்களும் எந்த ஒரு புகார் வந்தாலும் உடனே பதிவு செய்கின்றன. இதனால் பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இதனிடையில் மகேஷ்குமார் என்ற கொடூரன் ஏப்ரல் மாதம், பக்கத்துக் குடியிருப்பில் இருந்த 5 வயதான சிறுமியை இரண்டு நாள்கள் தனது அறையில் வைத்துப் பாலியல் கொடுமைபுரிந்தான் என்ற சம்பவம் எல்லோரையும் நிலைகுலைய வைத்தது; தகவல் அறிந்து அந்தச் சிறுமியைத் தில்லி போலீஸார் மீட்டு, தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த கற்பழிப்புச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த இளைஞர்களின் கூட்டத்திலிருந்து ஓர் இளம் பெண் ஆவேசமாகப் பேசியவாறே காவல்துறை அதிகாரி மீது பாய்வதைப்போல வந்தார்; அதைத் தடுத்தார் அந்த அதிகாரி. அதையே அந்தப் பெண்ணை அடித்ததாகத் திரும்பத்திரும்பக் காண்பித்து தில்லி காவல்துறை மீது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது ஒரு தொலைக்காட்சி நிறுவனம்; இந்தச் சம்பவத்தில் உண்மையை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு உடனடியாகச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது காவல்துறை. எதிரியைப்பற்றி ஒரு விவரமும் இல்லை. அக்கம்பக்கத்தில் கேட்டபோதும் ஒன்றும் தகவல் இல்லை. ஆயினும், தில்லி போலீஸார் திடமான முயற்சி மேற்கொண்டு எதிரியை, பிகார் மாநிலம் முசபர்பூர் என்ற இடத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். ஒரு தகவலும் இல்லாதபோதும் எதிரியை விரைவாகக் கண்டுபிடித்ததற்கு ஒரு பாராட்டும் இல்லை; ஊடகங்களைச் சந்தித்து விளக்கம் அளித்த காவல் ஆணையாளரிடம், "ஏன் பாலியல் குற்றங்கள் சமீப ஆறு மாதங்களில் அதிகமாகிவிட்டது?' என்று வினவப்பட்டது, ஆனால், அவரது முயற்சியால் அவரது உத்தரவின்பேரில் ஒளிவு மறைவு இன்றி குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன, அதனால்தான் குற்றப்புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடுகின்றது, விரைவுப் பதிவினால் குற்றங்கள் எண்ணிக்கை உயரும். அதற்கும் காவல்துறையைக் குறை கூறினால் என்ன நியாயம்? நிகழ்வுகளைப் பதிவு செய்தாலும் பழி, பதிவுசெய்யாவிட்டாலும், "மூடி மறைத்து கடமையில் தவறிவிட்ட காவல்துறை ஒழிக' என்ற கோஷம்; என்ன செய்வார்கள் காவல்துறையினர்? "நான் பதவி விலகுவதால் குற்றங்கள் நடவாது என்றால் பதவி துறக்கத் தயார்' என்று தில்லி மாநகர காவல்துறை ஆணையர் சலிப்படைந்தே சொன்னார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், பாஸ்டன் நகரப் போலீஸாரிடம் உயர் கண்டுபிடிப்புக் கருவிகள் இருந்தன, ஹெலிகாப்டர் வட்டமிட்டது, மிகவும் பலம் வாய்ந்த உளவுத்துறையின் தகவல் இருந்தது. ஆயினும் அவர்களால் ஒரு வீட்டின் திறந்தவெளியில் ஒளிந்து கொண்டிருந்து குண்டுவைத்த 18 வயது எதிரியை ஒரு பொதுஜனம் கொடுத்த தகவலின் பேரில்தான் பிடிக்க முடிந்தது! அதற்கு அவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்தன. பொதுமக்கள் ஒத்துழைத்தார்கள். எதிர்க்கட்சிகள் காவல்துறையைக் குறை கூறவில்லை. காவல்துறை ஸ்தல அதிகாரியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, பொதுமக்கள் காவல்துறையுடன் ஒத்துழைத்து காவல்துறை கடமையாற்ற உதவியாக இருந்தனர்.
நமது நாட்டில் நிலைமை வேறு; "சமூக ஆர்வலர்' என்ற போர்வையில் காவல்துறையின் செயலாக்கத்தை முடக்குபவர்களுக்குப் பாராட்டு. ஆனால், காவல்துறைக்கு எப்போதும் எதிர்ப்புக்கணைகள். ஏதோ காவல்துறையே சதியிட்டு குற்றங்களை வளரவிடுவதாகச் சித்திரிக்கப்பட்டு மிகப்பெரிய அவப்பெயரைத் திணிப்பது நியாயமானதா என்பதைச் சிந்திக்க வேண்டும்; நல்லது, கெட்டது எதற்கும் நாம் காவல்துறையைத்தான் அணுகவேண்டும் என்பதை மறக்கலாகாது.
குற்றங்களே நிகழாது என்று யார்தான் உத்தரவாதம் கொடுக்க முடியும்? 2-ஜி, 3-ஜி என்று சரமாரியாக ஊடகங்களில் பிரச்னை வெளிவந்தாலும் ரயில் வாரிய உறுப்பினர் நியமனத்தில் பணம் கைமாறியது - அதுவும் நாட்டின் தலைநகர் தில்லியில்! குற்றபயம், குற்ற உணர்வு எங்கிருக்கிறது? குற்றங்கள் நிகழாது என்றால் காவல் நிலையங்களை மூடிவிடலாமே! அறிவுபூர்வமாகப் பிரச்னைகளை அணுக வேண்டும், உணர்ச்சிப்பிழம்பாய் அல்ல. குறைகள் இருக்கும் இடத்தில் உரிய நடவடிக்கைகள் மூலம் குறைகளைக் களைய வேண்டும். நேர்மையாகப் பணி செய்பவர்களுக்குப் பலம் சேர்க்க வேண்டும். அதுதான் முதிர்ச்சியான அணுகுமுறை.
காவல்துறைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பான அறிவிப்புகளைக் காவல் மானியக் கோரிக்கை முடிவில் தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது மனநிறைவு அளிக்கிறது. சாதாரண நாள்களில் செம்மையான காவல் பணி என்பது மிக அவசியம், அதுதான் அவசரகாலப் பணி நேரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தரும். காவல்துறையின் சேவைகள் சீரான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும். அவர்களது செயல்திறன் மேன்மையுறப் பயிற்சி தேவை. காவலர்களது தேவைகள் நிறைவுற்றால்தான் பணியில் கவனம் செலுத்த முடியும். வேலைப்பளுவைக் குறைக்க களப்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதேசமயம் பணி சிறக்கத் தேவையான நவீனக் கருவிகள், புலன் விசாரணைக்கு விரிவான வழிமுறைகள் இவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் காவல் களப்பணியாளர்கள் 33 காவல் மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். 12 சரகங்கள்; 247 உபகோட்டங்கள்; 1,740 காவல் நிலையங்கள். அதில் 200 மகளிர் காவல் நிலையம்; 218 போக்குவரத்து காவல் நிலையம்; காவல் சேவையை மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்றன. சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மக்கள் மனநிலை அறிந்து தக்க தருணத்தில் உரிய நடவடிக்கையைக் காவல்துறை எடுப்பதால் அமைதி காக்கப்படுகிறது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தவிர்ப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் 13 அம்ச நடவடிக்கைகள் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் காவல் பணிக்கு அதிக எண்ணிக்கையில் மகளிர் போலீஸார் அமர்த்தப்பட வேண்டும் என்று உணரப்படுகிறது. நமது மாநிலத்தில் 16,215 பெண் களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
எந்த ஓர் அமைப்பிற்கும் புதிய ரத்தம் அவசியம். 30 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்; இதுதவிர 17,138 காவலர்களும், 1,091 உதவி ஆய்வாளர்களும் புதிதாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதுதவிர காவல்துறையில் உள்ள துணைப் பணிகளுக்காக இளைஞர் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட இருக்கிறது. இதில் முதல் கட்டமாக 10,500 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு, ரோந்துப் பணிகளுக்காக 1,000 இரண்டு சக்கர வாகனங்களும். சிறிய தெருக்களில் செல்ல ஏதுவாக குறுகிய தளம் கொண்ட வாகனங்களும், காவல்துறையின் குற்றத் தடுப்பு நடவடிக்கையைப் பலப்படுத்தும். 12 புறக்காவல் நிலையங்கள் காவல் நிலையங்களாக நிலை உயர்த்தப்படும்.
சாலைப் பாதுகாப்பிற்காக 100 அவசர சிகிச்சை வாகனங்கள், உயிரிழப்பைத் தவிர்க்கும். காவல் நிலையச் செயல்பாடுகளைக் கண்காணிக்க 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், சாலை சந்திப்பு இடங்களில் பொருத்தப்பட்டால் பாதுகாப்பு பலம் பெறும். லண்டன் போன்ற நகரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்ககள் இயங்கி வருகின்றன. சென்னை மாநகரில் முதல் கட்டமாக 2,700 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன.
எல்லா காவலர்களுக்கும் வீடு அளிப்பது அரசின் லட்சியம். காவலர்களுக்கு தற்போது 49,863 குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த வருடத்தில் 4,800 வீடுகள் கட்டப்பட உள்ளன. பணிப்படி உயர்வு, சீருடைப்பணி உயர்வு, வீரதீரச் செயல்களுக்கு அதிக ரொக்கப் பரிசு, மலிவு விலையில் அத்தியாவசியப் பொருள்கள் என்று பல காவலர் நல அறிவிப்புகள் காவலர்கள் உற்சாகத்துடன் பணி செய்வதற்கு உந்துதலாக அமையும்.
பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் காவல் சேவை, பணித் திறமைக்கு வலிமை, காவலர் நலம், குற்றவியல் ஆளுமைக்கு மேன்மை - இவையெல்லாம் முதலமைச்சரின் அறிவிப்புகளில் அடங்கியிருப்பது தனிச்சிறப்பு.
இந்தியாவின் இறையாண்மை, உள்நாட்டுப் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் காவல்துறை பெரும் பங்கு வகிக்கிறது. நமது நாட்டில் எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொண்டும், பிரிவினைச் சக்திகளை முறியடித்து மாநிலங்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காவல்துறை பாதுகாத்து வருகின்றது என்பதில் ஐயமில்லை. காவல்துறைச் செயல்பாட்டிற்கு குறுக்கே நிற்கக் கூடாது. சுதந்திரமாக, சட்டத்தின் அடிப்படையில் செயல்படச் செய்வது அவசியம். ஆனால், குறைகள் இருக்கும்போது தலையிட்டுக் களைவதும் முக்கியமானது. குறுக்கீடு தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், தவறுகளைக் களையத் தலையிடுதல் தவிர்க்க முடியாதது. எதற்கெடுத்தாலும் ஒட்டுமொத்தமாக காவல்துறையைக் குறை கூறுவது சமுதாயத்திற்கே நல்லதல்ல. இதன் பின்னணியில்தான் காவல் துறையை மேம்படுத்துவது, உச்ச நீதிமன்றம் கொடுத்த காவல்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவது போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றது. களங்கமில்லா காவல் பணிக்கு காவலர் முதல் காவல்துறை தலைமை இயக்குநர் வரை பொறுப்பு. களங்கம் ஏற்பட்டால் உடனடியாகக் களையப்பட வேண்டும்.
காவல் பணியோடு பிணைந்த பின்னடைவுகளைச் சமாளித்து மக்கள் மதித்தாலும், மிதித்தாலும், தாமரை இலை தண்ணீர்போல் உணர்ச்சி வசப்படாது கடமை உணர்வோடு பணிகளைத் தொடரும் காவலரைப் போற்றுவோம்.
கட்டுரையாளர்: டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.