தாவரங்களின் தந்திரங்கள்!

காலை எழுந்தவுடன் காஃபி - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு! என்று பாரதி பாட்டை மாற்றிப் பாடுகிற அளவுக்குத் தென்னிந்தியர்களுக்குக் காஃபிப் பித்து அதிகம்.
Updated on
3 min read

காலை எழுந்தவுடன் காஃபி - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு!' என்று பாரதி பாட்டை மாற்றிப் பாடுகிற அளவுக்குத் தென்னிந்தியர்களுக்குக் காஃபிப் பித்து அதிகம். 16-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பாபா புடான் என்ற முஸ்லிம் பெரியவர் அரேபியாவிலிருந்து காஃபியைக் கடத்தி வந்து குடகுப் பகுதியில் பயிரிட்டார். பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் சீனாவிலிருந்து தேயிலையைக் கடத்தி வந்து அஸôம், டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் பயிரிட்டுத் தேநீரை வட இந்தியர்களின் அபிமான பானமாக்கிவிட்டனர்.

காஃபியையும் தேநீரையும் விடாப்பழக்கமாக ஆக்குவது அவற்றிலுள்ள "கஃபீன்' என்ற வேதிதான். அது மனநிலையை ஊக்கமும் உற்சாகமும் கொண்டதாக மாற்றி மூளையின் சுறுசுறுப்பையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

2013 மார்ச் மாதம் பிரிட்டிஷ் ஆய்வர்கள் இந்தத் தாவரங்கள் தமது வளர்சிதை மாற்ற ஆற்றலைச் செலவழித்துக் கஃபீனை உற்பத்தி செய்வது ஏன் என விளக்கும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். புகையிலைச் செடிகூட "நிக்கோட்டின்' என்ற வேதியை உற்பத்தி செய்கிறது. அது கூட விடாப்பழக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுதான். கஃபீனும் நிக்கோட்டினும் காஃபிச் செடியிலும் புகையிலைச் செடியிலுமுள்ள இலைகள் கசப்பாகவும் துவர்ப்பாகவும் இருக்கும்படி செய்கின்றன. அவற்றைத் தின்ன வரும் பிராணிகள் முதல் கடியிலேயே முகத்தைச் சுளித்துக்கொண்டு விலகிப் போய்விடும். ஆடு தின்னாப் பாளை, ஆடு தொடா இலை போன்ற தாவரங்களும் இதேபோலத் தமது இலைகளில் கசப்பு வேதிகளைப் பரப்பிக்கொண்டு கால்நடைகளிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்கின்றன.

பிரிட்டிஷ் ஆய்வுக்கட்டுரை ஒரு விநோதமான விஷயத்தையும் வெளிப்படுத்துகிறது. காஃபிச் செடியின் இலைகளிலும் விதைகளிலும் கிளைகளிலும் மட்டுமின்றி அதன் மலர் இதழ்களிலும் மலருக்குள்ளிருக்கிற தேனிலும்கூட இம்மியளவுகளில் கஃபீன் காணப்படுகிறது. இங்குதான் செடியின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது.

கஃபீன், நிக்கோட்டீன் ஆகியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டால் உயிருக்கே ஆபத்து வரும். ஆனால், அவற்றை நுண்ணிய அளவில் உட்கொண்டால் இனிய மனநிலையை உண்டாக்கி உற்சாகமூட்டும். காஃபிச் செடியின் மலர்களை நாடி வரும் தேனீக்களும் பிற பூச்சியினங்களும் அவற்றிலுள்ள தேனை உண்டு பழகி விட்டால் கஃபீனுக்கு அடிமையாகி விடுகின்றன. அதன் காரணமாக அவை அடிக்கடி காஃபி மலர்களுக்கு விஜயம் செய்து தேனைப் பருகுவதோடு மகரந்தத் துகள்களையும் வினியோகித்துத் தாவரத்தின் இனப்பெருக்கத்துக்கும் உதவுகின்றன.

இத்தனைக்கும் மலரின் தேனிலுள்ள சர்க்கரையின் அளவில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவான அளவிலேயே கஃபீன் உள்ளது. அதுவே தேனீக்களுக்கும் பூச்சிகளுக்கும் காஃபிப் பித்தை உண்டாக்கப் போதுமானதாயிருக்கிறது. அது பூச்சிகளின் கற்றல் திறன், நினைவுத்திறன் ஆகியவற்றில் கணிசமான அதிகரிப்பை உண்டாக்குகிறது. அவை கஃபீன் இல்லாத தாவரங்களின் மலர்களைப் புறக்கணித்துக் காஃபிச் செடிகளைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து தேனைப் பருக வருகின்றன.

பிரிட்டிஷ் ஆய்வர்கள் ஒரு தேன் கூட்டுக்கருகில் வேறு மலர்களின் மணம் கலந்த சர்க்கரைக் கரைசலையும், நுண்ணிய அளவில் கஃபீன் கலந்த சர்க்கரைக் கரைசலையும் வைத்தார்கள். அதிக எண்ணிக்கையிலான தேனீக்கள் கஃபீன் கரைசலையே நாடி வந்தன. அவற்றை நுணுக்கமாகக் கண்காணித்தபோது பல தேனீக்கள் திரும்பத் திரும்பத் தாகம் தீர்த்துக்கொள்ள வருவதாயும் புலப்பட்டது. அதையடுத்து இரண்டு மூன்று நாள்கள் கஃபீன் கரைசலை வைக்காமலிருந்து விட்டுத் திரும்பவும் வைத்தபோது தேனீக்கள் மீண்டும் அதையே தேடி வந்தன. இதன் மூலம் கஃபீன் அவற்றின் நினைவுத்திறனை அதிகரித்திருப்பது நிரூபணமாயிற்று. அடுத்து ஆய்வர்கள் தேனீக்களின் மூளை அமைப்பை ஆராய்ந்தனர். அவற்றின் மூளையில் புரதம் படிந்த நரம்பு ùஸல்கள் (நியூரான்கள்) உள்ளன. சாதாரணமாக அவை "அடினோசீன்' என்னும் மூலக்கூறைக் கவர்ந்து பற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை. அதன் காரணமாகத் தேனீயின் மனநிலையில் அமைதியும் சாந்தமும் நிலவும். ஆனால் தேனீ கஃபீனை உட்கொண்ட பின்னர் கஃபீன், அடினோசீனைப் புறந்தள்ளி விட்டு அதனிடத்தில் தான் அமர்ந்து கொள்கிறது.

அதன் விளைவாக நியூரான்கள் கிளர்வடைந்து தேனீ பரபரப்பும் சுறுசுறுப்பும் கொண்டதாகிச் சுற்றிச்சுற்றி வருகிறது. அதன் ஞாபகசக்தியும் கூர்மையடைகிறது. மூளையில் கஃபீன் செறிவு சற்றே குறைந்தாலும் அது காஃபிச் செடிகளைத் தேடி ஓடுகிறது. எவ்வளவு மெய்மறந்த போதையிலிருந்தாலும் "டாஸ்மாக்' கடைக்குச் செல்லும் - வழியை மறந்துவிடாத - குடிமகனைப்போல நேராகத் தனக்குப் பழக்கமான காஃபிச் செடியை நோக்கி விரைகிறது.

இவ்விதமாகக் காஃபிச் செடி ஆடு, மாடுகளுக்குக் கசப்பான இலைகளைக் காட்டி அவை வெறுத்தோடும்படி செய்கிறது. தனது இனப்பெருக்கத்துக்கு உதவுகிற தேனீக்களுக்குக் கஃபீன் கலந்த தேனை வழங்கி அவை திரும்பத் திரும்பத் தன்னை நாடி வரும்படி செய்கிறது. விசுவாசத்துடன் அதிக முறை விஜயம் செய்யும் தேனீக்களால் தாவரத்தின் இனப்பெருக்க வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

தாவரங்களின் தற்காப்பு உத்திகளில் இலைகளில் நிறமாற்றத்தை ஏற்படுத்துவதும் ஒன்று. வசந்தகாலத்தில் இலைகள்கூடப் பூக்களைப்போல வண்ணங்களுடன் தோற்றமளிக்கும். மாவிலைக் கொழுந்துகள் சிவந்த நிறத்திலிருப்பதைக் காண முடியும். முற்றிய இலைகளில் "குளோரோஃபில்' என்ற நிறமி நிறைந்திருப்பதால் அவை பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கொழுந்தான இலைகளில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்கள் தென்படும். அவற்றில் "கராட்டினாய்டுகள்' என்ற நிறமிகள் பெரும்பான்மையாகி இலைகளின் மேல் பரப்புக்கருகில் பரவியிருக்கும். சிவப்பு நிறம் "ஆந்தோசயனின்' என்ற நிறமியால் ஏற்படுவது. அது இலையின் ùஸல்களில் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள் படாமல் தடுத்து அவற்றைப் பாதுகாக்கிறது.

அத்துடன் இலைகளை உண்ண வரும் பல பூச்சிகளுக்குச் சிவப்பு நிறத்தை உணர முடியாத நிறக்குருட்டுத் தன்மையுள்ளது. அவை கொழுந்துகளைக் கண்டுபிடிக்காமலிருக்கச் சிவப்பு நிறம் உதவுகிறது.

பல தாவரங்களில் சிவப்பு நிறமிகளுடன் கூடவே "ஃபீனால்கள்' எனப்படும் கசப்பூட்டும் வேதிகளும் இலைக்கொழுந்துகளில் உருவாவதுண்டு. சூடு கண்ட பூனையைப் போலக் கால்நடைகள் எல்லாச் சிவப்பு இலைகளுமே கசக்கும் என எண்ணி வாயை மூடிக் கொண்டு போய்விடும்.

ஆந்தோசயனின் நிறமிகளுக்குப் பூஞ்சைகளைக் கொல்லும் நச்சுத்தன்மையும் இருப்பதால் அவை கொழுந்து இலைகளைப் பூஞ்சைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றுகின்றன. மித வெப்ப நாடுகளைவிட வெப்பமண்டல நாடுகளில் சாகபட்சிணிகளால் தாவரங்கள் அழிக்கப்படுவது அதிகம். கால்நடைகள் இளம்செடிகளையும் கொழுந்து இலைகளையும் விரும்பி உண்ண முனையும். அதன் காரணமாகவே வெப்ப மண்டலத் தாவரங்களில் இளம் செடிகளும் கொழுந்து இலைகளும் அதிகமாகச் சிவப்பு நிறத்தை உண்டாக்கிக் கொண்டு "இனப்படுகொலையிலிருந்து' தப்பிப் பிழைக்கின்றன.

மகரந்தச் சேர்க்கையைப் பரவலாக்கித் தமது இனப்பெருக்கத்துக்கு உதவும் பூச்சிகளைக் கவரத் தாவரங்கள் பல விநோதமான உத்திகளைக் கையாளுகின்றன. பல கோடியாண்டுகளுக்கு முன்பே அவை பலவிதமான வண்ணங்களும் நறுமணங்களும் கொண்ட மலர்களை உருவாக்கிக்கொண்டு விட்டன. அவற்றில் சில மலர்கள் பூச்சிகளின் காம உணர்வைத் தூண்டும் வேதிகளை ஒத்த மணங்களை வீசும். பெண் பூச்சிகளும் ஆண் பூச்சிகளும் தத்தம் இணைகளை வசீகரிக்கப் "பெரமோன்கள்' என்ற வேதிகளைக் காற்றில் பரப்பும். பல மலர்களும் அந்த வேதிகளைப் போன்ற நறுமணங்களைப் பெற்றுள்ளன. பூச்சிகள் தமது இணைகள் அந்த மலர்களுக்குள்ளிருப்பதாக எண்ணி ஓடி வரும். இதில் கூடுதலான அற்புதம் என்னவென்றால் ஒரு பகுதியில் பெரும்பான்மையாக உள்ள பூச்சியினத்தின் காதல் பெரமோன்களை ஒத்த மணம் வீசும் வேதிகளை மட்டுமே அந்தப் பகுதியிலுள்ள மலர்கள் உருவாக்கிக் கொள்வதுதான். மாமிசத்தில் சுவையுள்ள பூச்சியினம் அதிகமாக உள்ள பகுதிகளில் சில மலர்கள் அழுகிய மாமிசத்தின் நாற்றத்தை வெளியிடுகின்றன.

இவ்வாறெல்லாம் தந்திரோபாயங்களைத் திட்டமிட மூளையமைப்பும் சிந்தனைத் திறனும் இருக்க வேண்டும். ஆனால், தாவரங்களில் மூளை என்ற அமைப்பு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. சில விஞ்ஞானிகள் தாவரங்களில் என்ன செய்தாவது இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்துகிற ஏதோ ஒருவகை "ஜீன்' இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டுரையாளர்:

பணி நிறைவுபெற்ற பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com