நேர்மையான வேட்பாளரை நிறுத்துவோம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். இவர்களுடைய
Updated on
4 min read

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். இவர்களுடைய தேர்தல்களைப் பற்றிய வழக்குகளை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் விசாரித்து முடிவு செய்யும் அதிகாரமும் இந்தச் சட்டத்தின் மூலம் தரப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவிகளில் அமர்ந்து பணியாற்றும்போது, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால் அவர்களுடைய பதவி பறிக்கப்படும் சட்ட, விதிமுறைகள் பற்றி நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அரசியல் அமைப்புச் சட்டமும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும் 62 ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஒரு பிரிவு செல்லாது என்று 10.7.2013ஆம் நாள், இரண்டு நீதிபதிகள் அமர்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். 1950ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, 1951ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஒரு பிரிவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(4)வது பிரிவு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி செல்லாது என்று தீர்ப்பு வழங்கிட பொதுநல வழக்குப் போடப்பட்டது. இந்த வழக்கில்தான் 2013ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதி பற்றிய விதிமுறைகள் உள்ளன. வெற்றி பெற்று பதவியில் தொடர்ந்து செயல்பட்டிட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு பதவிகளில் அமர்ந்து பலன் பெறும் ஒருவர் தேர்தலில் போட்டியிடவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பதவிகளில் தொடரவும் முடியாது.

இதுபோல் மூளைப் பாதிப்பு உள்ளவர்கள், கடன் சுமையால் "இன்சால்வென்ட்' என்று அறிவிக்கப்பட்டவர்கள் இந்தியக் குடிமகனாக இல்லாதவர்கள், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், இந்திய நாட்டுக்கு எதிராக வெளிநாடுகளுக்கு உதவுபவர்கள் ஆகியோர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடவோ, பதவிகளில் தொடரவோ முடியாது.

அரசமைப்புச் சட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் போட்டியிடவும், வெற்றி பெற்றுத் தொடர்ந்து பணியாற்றவும் சட்ட விதிமுறைகள் வகுத்திட நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த அதிகாரத்தின்படி 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள விதிகள்படி, தண்டனை பெற்றவர்கள் பதவி இழப்பார்கள். அவர்கள் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இதுபோல் எந்தக் குற்றத்திற்கும் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் பதவிகளில் போட்டியிடவும், வெற்றி பெற்றவர்கள் பதவிகளில் தொடரவும் முடியாது என்றும், மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் பதவியில் போட்டியிடவும், வெற்றி பெற்று பதவிகளில் தொடர்ந்திடவும் விதிக்கப்பட்ட விதிகள் பற்றி மேலே கூறப்பட்டுள்ளது. ஆனால், அதே அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி 1951 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி மதக் கலவரங்களைத் தூண்டுதல், லஞ்ச ஊழல் வழக்குகள் போன்ற பல காரணங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் எவ்வாறு பதவி இழப்பார்கள் என்று விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. தீண்டாமைச் சட்டம், சாதி-மத மோதல், தேர்தல் களத்தில் செய்யப்படும் குற்றங்கள், வெளிநாட்டுப் பண மோசடி, தேசியக் கொடியை அவமதித்தல், கடத்தல், கலப்படம், வரதட்சணைக் கொடுமை போன்ற பல குற்றச்செயல்கள் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதுபோல் ஒருவர் எந்தக் குற்றத்திற்கும் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றிருந்தால் பதவி நீக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டத்தில் கூறியுள்ள பல பிரிவுகளில் பதவி இழப்பவர்கள் மேலும் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பதவி இழப்பவர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 18 பிரிவுகளின்படி பதவி இழப்பவர்கள் என்ற விவரங்கள் மேலே கூறப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அதிகாரம் பெற்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை நிறைவேற்றும்போது, இந்தச் சட்டப் பிரிவுகளின்படி தண்டனை பெற்றவர்கள், மேல்முறையீடு செய்திட கால அவகாசம் வழங்கி, பதவியில் தொடர்ந்திட வழிமுறைகள் வகுத்து, 8(4) என்ற ஒரு பிரிவு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமை பெற்று ஒரு சட்டம் இயற்றும்போது, அந்தச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்பவர்களுக்கு கால அவகாசமாக மூன்று மாதங்கள் வழங்கி சட்டப்பிரிவு கூறுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றுதான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(1), (2), (3) பிரிவுகளின்படி தண்டனை பெற்றவர்கள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்றும், அவர்கள் மேல்முறையீடு செய்திட 3 மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது தவறு என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்து விடுதலை பெற்றாலும் இழந்த பதவியை மீண்டும் பெறமுடியாது என்றும் தெரிகின்றது.

இதுபோன்ற குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்திட கால அவகாசம் வழங்கி, அதுவரையில் பதவியில் தொடர்ந்திட வழிவகுக்கும் ஒரு பிரிவை அரசமைப்புச் சட்டத்திலேயே சேர்த்திட வேண்டும் என்று ஒரு திருத்தத்தை முன்மொழிந்து விவாதங்கள் 1949ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை நிறைவேற்றிய போதே நடைபெற்றுள்ளன.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அதே பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, நாடாளுமன்றம் நிறைவேற்றிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல வகையான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இல்லாது, பதவி பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தேர்தலில் போட்டியிடும்போது மேற்கூறப்பட்ட விதிமுறைகளின்படி வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தடுப்பது தெளிவாக உள்ளது. ஆனால், பதவியில் இருப்பவர்கள் மேல்முறையீடு செய்திட கால அவகாசம் தருவது யாரையும் பாதிக்காது.

2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அமர்ந்து வழங்கிய தீர்ப்பில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(4) பிரிவு பற்றி கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது.

Sub Section (4) of Section 8 of Representation of Peoples Act operate as an exception: 'Clearly the saving from the operation of Sub-Sections 1, 2 and 3 is founded on the factum of membership of a House. The purpose of carving out such an exception is not to confer an advantage on any person; the purpose is to protect the House''.

எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஆவது பிரிவின்படி உள்ள குற்றங்களுக்குத் தண்டனை பெறும்போது மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தருவது ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து இயங்க வழிவகுக்கப்படுமாதலால் தவறல்ல என்பதை உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.

இது 5 நீதிபதிகளின் கருத்தாகும், இது தீர்ப்பல்ல என்று 2013ஆம் ஆண்டு இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்தாலும், விடுதலை பெற்றாலும் உறுப்பினர்களாக தொடரமுடியாது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

குற்றங்களுக்கு தண்டனை வழங்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். ஆனால், அந்தச் சட்டப்படி வழங்கிய தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைத்துச் சட்டம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்று தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2013இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஏற்கெனவே குற்றங்களுக்கு தண்டனை பெற்று மேல்முறையீடு செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றுபவர்களை பாதிக்காது என்று தீர்ப்பில் விதிவிலக்கும் வழங்கப்பட்டுள்ளது.

1950ஆம் ஆண்டு நிறைவேறிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 1951 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின்படி கூறப்பட்டுள்ள குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்ற முடியாது என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. அபராதம் மட்டும் தண்டனையாக வழங்கப்பட்டாலும் பதவி பறிபோகும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலை, பணியாற்றிவரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான், 1949ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியே அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே மேல்முறையீடு செய்திட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று திருத்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. பேராசிரியர் ஷிபான் லால் சக்சேனா என்ற உறுப்பினர் அரசியல் அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய சபையிலேயே இந்தத் திருத்தத்தை முன்மொழிந்துள்ளார்.

இவ்வாறு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தரப்பட்ட விளக்கத்தை ஏற்று, இந்தத் திருத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற சட்டம் நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று மாறி மாறி பதவி ஏற்கும் இந்தக் கால கட்டத்தில், ஆட்சியில் அமர்பவர்கள் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் படலம் தோன்றி வளர்ந்து வரும் இன்றைய அரசியல் களத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை பறித்திடும் வாய்ப்பு தோன்றியுள்ளது. மேல்முறையீடு செய்து தண்டனைகளை ரத்து செய்து விடுதலை பெற்று பதவிகளில் தொடர்ந்திடும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை ஏற்படக்கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய சபையிலேயே திருத்தம் கொண்டு வந்து பேசிய ஷிபான் லால் சக்சேனா பாராட்டுக்குரியவர் என்றே தோன்றுகிறது.

தண்டனையிலிருந்து இடைக்காலத் தடை விதிப்பது நீதித்துறைப் பணியாகும். நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் தண்டனையை நிறுத்தி வைத்திட அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகுக்கவில்லை என்ற கருத்தும் சிந்திக்கத் தக்கது.

ஆள் பலம், பண பலம், சாதி மத உணர்வுகளுக்கு இடம் தராமல் நீதி, நேர்மை உள்ள வேட்பாளர்களை, அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் நிறுத்தி இதுபோன்ற சட்டப் பிரச்னைகளைத் தவிர்ப்பதே நாட்டுக்கு நல்லது.

கட்டுரையாளர்: தமிழக முன்னாள் அமைச்சர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com