மொழிகளின் உயிர்ப்பு

ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதன் பனுவல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதே அதற்குக் காரணம்.
Published on

ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதன் பனுவல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதே அதற்குக் காரணம்.

மனித அறிவின் உச்சமென சொல்லப்படும் மொழி என்பது, மனிதர்களுக்கு இயல்பானதோ இயற்கையானதோ இல்லை. அவர்களின் பல கண்டுபிடிப்புகளில் அதுவும் ஒன்று. தங்களிடம் உள்ள அறிவால் - வாயொலி மூலமாக வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி மொழியை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் காரணமாத்தான் "மொழியே அறிவு கிடையாது. மொழி அறிவால் உண்டாக்கப்பட்டது' என்று சொல்லப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்கள் பரிணாம வளர்ச்சியுற்று பல ஆயிரம் ஆண்டுகள் மொழியில்லாமல் மகிழ்ச்சியோடு காதல் புரிந்து கூடி குழந்தைகள் பெற்றுக்கொண்டு வாழ்ந்தார்கள். பசுமாடுகளைப் பிடித்துக் கட்டி பால் கறந்து குடித்தார்கள். காவலுக்கு நாய்கள் வளர்த்தார்கள். பெரிய விலங்குகளை வேட்டையாடி விருந்து வைத்தார்கள். காற்றின் கீதத்தையும் பறவைகளின் இன்னொலியையும் இணைத்துப் பார்த்தார்கள். தாங்கள் மலை முகடுகளிலும், வனங்களிலும், சமுத்திரத்திலும் புரிந்த சாகசங்களையும், மனத்தில் தோன்றிய கதைகளையும் நடந்தவற்றையும் நடக்குமென்று நம்பியவற்றையும் மற்றவர்களோடு உடலாலும், முக பாவனையாலும், வாயொலியாலும் காட்டினார்கள். அதில் வாயொலியே அதிகமாக மற்றவர்கள் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

எனவே அதனையே பிரதானமாகக் கொண்டார்கள். வாயொலியே வார்த்தைக்கு மூலமானது. துல்லியமாகச் சொல்ல ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகள் தேவைப்பட்டன. ஆனாலும் சொல் என்பது ஒலிதான்.

சொல் அதாவது வார்த்தை என்பது மனித அறிவால் அறியப்பட்டது. எனவே பொருள் அதாவது அர்த்தம் கொண்டது. பொருள் இல்லாத சொல் என்பது கிடையாது. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தொல்காப்பியர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், மனிதர்கள் முதலில் பேசிய சொல் எது? எது மனிதனின் முதல்மொழி? அதனைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் உலகத்தில் ஆறாயிரம் மொழிகள் உள்ளன என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

மனிதர்கள் பேசும் மொழியும் எழுதும் எழுத்தும் ஒரே காலத்தில் கண்டறியப்பட்டதில்லை. பேச்சுமொழி திருத்தம் பெற்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுத்து என்பது கண்டறியப்பட்டது. எழுத்து என்பது கோடு. மனிதர்கள் கைகளால் மலைகளிலும், பாறைகளிலும், மணல் தரைகளிலும் கரி, சுண்ணாம்புக்கல், எலும்புகள் குச்சிகளால் கோடுகள் கிழித்தார்கள். சித்திரங்கள் வரைந்தார்கள். காலப்போக்கில் ஒலியையொட்டி குறியீடாக எழுத்துகளை உருவாக்கிக் கொண்டார்கள். சுமேரியர்கள், எகிப்தியர்கள், சீனர்கள், சிந்து சமவெளி மக்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் அவர்கள் நாடு அழிந்துவிட்டது; மொழி இறந்து போய்விட்டது. அவர்கள் மொழி எழுதப்பட்டிருந்ததால் நிலைத்திருக்கிறது. அவர்கள் எழுத்தைப் படிக்கத் தெரிந்தவர்கள் இல்லை. அதனால் பல நூற்றாண்டுகள் பழைய நாகரிக மக்களின் படைப்புகள் படிக்கப்படாமலே கிடந்தன.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மொழி, எழுத்து, இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள், கல்வெட்டாளர்கள் போன்றோரின் பெரும் முயற்சியால் பழைய கல்வெட்டுகள் கண்டெடுத்து படிக்கப்பட்டன. அதில் வாயொலியான மொழி இறந்துவிட்டாலும் எழுதப்பட்டதால் அம்மொழியின் படைப்பு ஜீவிதமாக இருக்கிறது என்பது தெரிந்தது. அதனால்தான் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே பேசும் மொழியும் எழுதும் எழுத்தும் முதலிடத்தில் இருக்கின்றன.

ஏசுநாதர் பிறப்பதற்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செகோபட்டோமியாவில், கில்காமெஷ் என்ற காப்பியம் அக்காட்டன் மொழியில், குன்னிஃபம் எழுத்தில் எழுதப்பட்டது. அக்காட்டன் மொழி இறந்துவிட்டது. குன்னிஃபம் எழுத்து முறை வழக்கொழிந்துவிட்டது. கில்காமெஷ் காப்பியம் எழுதப்பட்ட களிமண் சிலேட்டுகள் பூமியில் புதையுண்டு போய்விட்டன. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தற்செயலாக அவற்றைக் கண்டெடுத்தார்கள். தங்களுக்குத் தெரிந்த மொழியையும் எழுத்துகளையும் வைத்துக்கொண்டு பல ஆய்வாளர்கள் முழுக்காப்பியத்தையும் படித்தார்கள். கவிதையாகவும், உரைநடையாகவும் இருந்தது அது. கில்காமெஷ் கதை பழைய கதையாக இல்லை. சொல்லப்பட்ட முறையாலும், கருத்தாலும் அது நவீனமாகவே இருக்கிறது. மொழியாலும், எழுத்து வடிவத்தாலும், காலத்தாலும் ஒரு அசலான படைப்பு எதையும் இழந்து விடுவதில்லை. ஒரு மொழியின் உயிர்ப்பு அதுதான். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் என்று புதிய புதிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதால் அது எதனையும் பெறுவதில்லை. பழைய மொழியான தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதில் எது எதனையும் இழந்து விடுவதுமில்லை. 1986-ஆம் ஆண்டில் க.நா. சுப்பிரமணியம் கில்காமெஷ் காப்பியத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இலக்கியம் என்பது மொழியால் எழுதப்படுகிறது என்றாலும் அது மொழிக்குள்ளே அடங்கி அமிழ்ந்துபோய் விடுவதில்லை. அது மொழி வழியாகவே, மொழிபெயர்ப்பு என்பதன் மூலம் தன் இருத்தலை நிலைநாட்டிக் கொள்கிறது. தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது. சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டு எட்டுத்தொகை போன்ற நூல்கள் எழுதப்பட்ட எழுத்து வரிவடிவம் மாறிவிட்டது. ஆனால், மொழி இலக்கணம் மாறவில்லை. மொழியின் வழியாகச் சொல்லப்பட்ட வாழ்க்கை, தத்துவம், சரித்திர நிகழ்வுகள், கதைகள் - சொல்லப்பட்டதுபோலவே இருக்கின்றன. காலத்தால் மாறாமல் இருக்கும் பழந்தமிழ்க் கவிதைகள் சிலவற்றை புதிய மொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1967-ஆம் ஆண்டில் ஏ.கே. ராமானுஜன் வெளியிட்டார். தமிழ்க்கவிதையே புதுக்கவிதையாக இருப்பது தெரிந்தது. சொல்லப்பட்டதன் வழியாக சொல்லப்படாத அம்சம் இருக்கிறது என்பதை மொழிபெயர்ப்பு வழியாக அறிந்தார்கள்.

மொழியென்பது வீட்டிற்குள் பேசப்படுவதோ, அங்காடிகளில் கேட்கப்படுவதோ, கடவுளை இறைஞ்சி வேண்டுவதோ, சான்றோர்கள் அருளுரை கூறுவதோடோ அமைந்துவிடுவதில்லை. அது மனத்தைச் சுடும். ஆறாத வடுவை உண்டாக்கிவிடும். அதைத்தான் திருவள்ளுவர் "நாவினால் சுட்ட வடு' என்று சொல்லியிருக்கிறார். அதோடு மொழி ஆணையிடும். தண்டனை கொடுக்கும். மொழியே அதிகாரத்தின் உச்சம். உலகத்தில் பல நாடுகளிலும் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வரும் பழைய, புதிய மொழிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆங்கிலமொழி வருகிறது. ஆனால், அது பிரிட்டிஷ் ஆங்கிலம் இல்லை. அதிகாரம், செல்வ வளம், ராணுவ பலம் கொண்ட அமெரிக்க ஆங்கிலம். அது அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரபூர்வமான ஆட்சிமொழி இல்லை. ஆனால், அமெரிக்காவில் நிர்வாகம், சட்டம், நீதி, தொழில், வணிகம் எல்லாமுமே ஆங்கில மொழியில்தான் நடைபெறுகின்றன.

அமெரிக்காவில் 336 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 176 மொழிகள் ஆதி பழங்குடி மக்களின் தாய்மொழி என்றும் கணக்கெடுத்திருக்கிறார்கள். தொன்னூறு சதவீத மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.

1795-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆட்சிமொழி ஆங்கிலம் என்றாக்க பலர் முயற்சி மேற்கொண்டார்கள். ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எதிர்த்தார்கள். அமெரிக்க செனட்டிற்கு வாக்கெடுப்பிற்குச் சென்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆட்சி மொழி ஆங்கிலம் என்ற தீர்மானம், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்குரிய மொழியைத் தேர்ந்து கொள்ள உரிமை உண்டு. அமெரிக்காவில் உள்ள ஐம்பது மாநிலங்களில் இருபத்தெட்டு மாநிலங்களில் ஆங்கிலம் ஆட்சிமொழி. ஆனால், அமெரிக்காவின் தலைநகரம் அமைந்திருக்கும் "டிஸ்டிரிக் ஆப் கொலம்பியா'வில் ஆங்கிலம் அதிகாரபூர்வமான மொழியில்லை.

1950-ஆம் ஆண்டில் இந்தியா குடியரசு என்று பிரகடனப்படுத்தப்பட்டபோது அதிகாரபூர்வமான ஆட்சி மொழி பற்றி பிரச்னை ஏற்பட்டது. இந்தியாவில் நெடுங்காலமாக நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. அவற்றில் இருபத்திரண்டு மொழிகளை தேசிய மொழிகள் என்று அன்றைக்கு அடையாளம் கண்டார்கள். தேவநாகரி எழுத்தில் எழுதப்படும் இந்தியை ஆட்சி மொழி என்றார்கள். அரசியல் நிர்ணய சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பலர் இந்தி ஒன்றுதான் ஆட்சி மொழி என்பதை ஏற்க மறுத்தார்கள்.

எனவே ஆட்சிமொழி பற்றிய விவகாரம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. ஆதரவாகவும் எதிராகவும் சம வாக்குகள் பதிவாயின. தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் தன்னுடைய வாக்கை இந்திக்கு ஆதரவாக அளித்தார்.

1965-ஆம் ஆண்டில் இருந்து இந்தி மொழி ஒன்றுதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்றாகியது.

மனிதர்கள் சொந்த அறிவின் வழியாகக் கண்டுபிடித்த பேசும் மொழியும், எழுதும் எழுத்தும் மனிதர்களை மட்டுமின்றி, பிரபஞ்சத்தையே அறியவும், பேசவும், எழுதவும் வைத்திருக்கிறது.

ஆனால் மொழிகளும், எழுத்தும் வித்தியாசப்பட்டிருந்தாலும் - அவை பழைய மொழிகளாக இருந்தாலும் - புதிய மொழிகளாக இருந்தாலும் மொழிபெயர்ப்பு பனுவல்கள் மனிதர்களை ஒன்றுபடுத்தி வருகிறது. அதாவது மொழிகளாலும் எழுத்துகளாலும் வித்தியாசப்பட்டிருக்கும் சமூகத்தை மொழிபெயர்ப்புகள் ஒன்றிணைக்கின்றன. அதுவே மொழிகளின் உயிர்ப்பு.

கட்டுரையாளர்: எழுத்தாளர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com