அருகும் நேர்மை; பெருகும் ஊழல்

சர்தார் வல்லபபாய் படேல் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாடுபட்டதும் அவரது அபரிதமான தேசப்பற்றும் இப்போது பேசப்படுகிறது, போற்றப்படுகிறது.  அவரது சேவையைத் தமதாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு பலதரப்பட்டவர்களிடம் போட்டி
Updated on
3 min read

சர்தார் வல்லபபாய் படேல் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாடுபட்டதும் அவரது அபரிதமான தேசப்பற்றும் இப்போது பேசப்படுகிறது, போற்றப்படுகிறது.  அவரது சேவையைத் தமதாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு பலதரப்பட்டவர்களிடம் போட்டி இருந்தாலும் அதன்மூலம் இளைய தலைமுறைக்கு இத்தகைய கடமை வீரர் அர்ப்பணிப்போடு இந்தியாவை இணைத்தார் என்பது  தெரிய வருவதை வரவேற்க வேண்டும்.

  இரும்பு மனிதர் படேல் அக்டோபர் 31, 1875-ல் பிறந்தார். 1950-ம் வருடம் சுதந்திர இந்தியாவில் மறைந்தார்.   மன்னர் ஆட்சிக்கு கீழ் குறு நிலங்களாக துண்டு துண்டாக இருந்த பாரதத்தை ஓர் இந்தியவாக ஒருங்கிணைத்தார். அவர் இறந்தபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்த சேமிப்பு ரூ.247 மட்டும்தான். 

 "வானிலையை கட்டுக்குள் கொண்டுவர ஏதாவது செய்ய வேண்டும்' என்ற ஒரு வாசகம் உண்டு.  இயற்கை நமது கையில் இல்லை கட்டுக்குள் வராது என்பது அதன் பொருள். ஆனால் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சாட்டிலைட் மூலம் வானிலை மாற்றங்களை ஓரளவிற்கு கணிக்க முடிகிறது.  ஆனால் கட்டுக்கடங்காமல் வைரஸ்போல் பரவியிருக்கும் நோய் ஊழல்.

  ஊழல் எதிர்ப்பு வாரம் படேல் ஜயந்தியோடு இணைத்து ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.  மத்திய விழிப்புணர்வு ஆணையம், ஊழல் எதிர்ப்பு கருத்தினை முன் வைத்து அதை கவனமாக கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.  விழிப்புணர்வு வாரத்தில் மத்திய மாநில அரசு அலுவலங்கள் மற்றும் பொதுத்துறை அலுவலங்களில் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழியும் எடுக்கப்படுகிறது.

  தனியார் நிறுவனங்களில் ஏனோ இந்த உறுதிமொழியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. ஊடுருவும் ஊழலுக்கு வழி பொது மற்றும் தனியார் அமைப்புகளின் விபரீத இணைப்புதான் காரணம்.  அதனால்தான் போன வருடம் மத்திய விழிப்புணர்வு ஆணையம் "பெரிய திட்டங்களை நிறைவேற்றுகையில் பொருள்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்'  என்று அறிவுறுத்தியது.  ஆனால் வேதனைத்தரும் வகையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் கோல்கேட் எனப்படும் ஊழல் வெளிவந்துள்ளது.

  கடந்த வருடங்களில் ஊழல் காளான்கள், காமன்வெல்த் போட்டி ஊழலில் துவங்கி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, ஆந்ரக்ஸ் தேவாஸ் ஒப்பந்தம், கோதாவரி படுகை எரிவாயு தோண்டுதலில் பிரச்னை,  தேசிய பொருள்கள் பரிமாற்ற சந்தையில் ஊழல், ஏர் இந்திய நிறுவன விமானக் கொள்முதலில் பிரச்னை என்று நீண்ட பட்டியல் பொது மக்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

  தனியார் நிறுவனங்களில் தொழில் மற்றும் வர்த்தகம் கூட்டுறவு சங்கம் (ஃபிக்கி) ஒரு ஆய்வு மேற்கொண்டது.  வர்த்தகம், பொருளாதாரம் தொழில் முதலீடு, மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமான கட்டமைப்புகளை, ஊழல், லஞ்சம் கொடுக்கல் வாங்கல் எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து கேள்விகள் தொகுப்பு மூலம் முதலீட்டார்களிடமும், தொழில் நிறுவனங்களிடமிருந்தும் கருத்துக்களை கேட்டறிந்தது, இதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து வெளியிட்டது.

  முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வரும் நடுத்தர வர்கம், செழுமையான கிராமங்கள், திறமைசாலிகள் உள்ளடக்கிய இந்திய சமுதாயம், இவை நிறைந்த இந்தியா முதலீட்டார்களின் சொர்கம்.  தொழில், மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அருமையான தருணம்.  இவைதான் இந்தியாவின் பக்கம் மேலை நாடுகளின் கவனம் திரும்பக் காரணம். ஆனால் இதன் பயன்பாட்டை முழுமையாக அடைய முடியாததற்கு தடங்கலாக இருப்பது ஊழல் என்கிறது ஃபிக்கி அறிக்கை.  நிலத்தரகர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் நிலப்பரிமாற்றம், கட்டமைப்பு வசதிகள் சம்பந்தப்பட்ட பணிகள், கனிம சுரங்கத் தொழில்கள், விமானப் போக்குவரத்து, இராணுவத்திற்கான கொள்முதல், மின்சார உற்பத்தி போன்ற துறைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நேர்மையற்ற தனியார் நிறுவனங்கள் எவ்வாறேனும் கால் ஊன்ற வேண்டும் என்று பல தகாத வழிகளைத் தேடுகின்றன.   நியாயமாக தொழில் நடத்துவர்களின் நிலை மோசமாகிறது. புதிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு தொய்வு ஏற்படுகிறது.  நடந்து கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளில் தேக்க நிலை ஏற்படுகிறது.  இதில் மொத்த உற்பத்தி பெருக்கம் (ஜிடிபி) தொய்வடைகிறது.  இந்தகைய பாதக சுழற்சியின் பிடியில் பொருளாதார வீழ்ச்சியை நிலை நிறுத்த பிரம்ம பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

  2005-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த சர்வதேச ஊழல் ஒழிப்பு பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டது.  ஆனால் பாராளுமன்றத்தில் 2011ஆம் ஆண்டுதான் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.  இன்னும் அதற்கேற்ற சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை. பல நாடுகளில் தனியார் நிறுவனங்களையும் ஊழல் ஒழிப்பு சட்டத்தில் கொண்டுவர புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் பிரத்யேக ஊழல் ஒழிப்பு சட்டம் 2011இல் அமல்படுத்தப்பட்டது.

  மத்திய விழிப்புணர்வு ஆணையம் தேசிய ஊழல் எதிர்ப்பு நெறிகள் அடங்கிய வியூகங்களை வகுத்துள்ளது. தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் இவர்களது ஒத்துழைப்பின்றி ஊழலை ஒழிக்க முடியாது என்ற அடிப்படையில் அரசு, பொது மக்கள், சமுதாய அமைப்புகள், தன்னார்வத் தொண்டர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.  திறனுடைய உழைப்பில் ஒழுக்கவியல் குறைதல், சமுதாய மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஆகியவை ஊழலுக்கு முக்கிய காரணங்கள்.  தொழில் நுட்பம் மேலோங்கிய இந்த காலகட்டத்தில் சிறப்பாக அதனை ஊழல் ஒழிப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.  இது தவிர அரசு நிறுவனங்கள் பொதுச்சந்தையிலிருந்து திட்ட நிறைவேற்றலுக்கு பொருள்கள் கொள்முதல் முறையில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். 

  கணினி மூலம் இ-வாங்குதல் முறை வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்.சர்வதேச வெளிப்படைத் தன்மை இயக்கம், பொருள்கள் கொள்முதல் செய்கையில் சம்பந்தபட்ட நிறுவனங்களோடு நேர்மை உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.  இந்த சிறந்த நடைமுறையை  கொள்முதல் செய்யும் அரசு அமைப்புகள் பின்பற்ற வேண்டும்.  தனியார் நிறுவனங்களும் அரசுத்துறைகளும் இதற்கு ஒப்புதல் அளித்து இவ்வாறு நேர்மை உடன்பாடு செய்தலை ஒரு நிபந்தனையாகவும் பொருள்கள் கொள்முதல் செய்கையில் விதிக்க வேண்டும்.

  ஊழல் எதிர்ப்பு பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணையம் ஊடகங்கள் மூலம் 2011இல் இருந்து முயற்சி எடுத்து வருகிறது. ஊழல்பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஒரு தீர்மானம் 2004இல் இருந்து அமலில் உள்ளது.  ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு நேரடியாக தகவல் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

   அபாய நேர்வுகளை கணிக்கும் ஆளுமை தனியார் நிறுவனங்களில் முதலீடுகளை பாதுகாக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அமல்படுத்தப்படுகிறது.  இந்த முறையை நவீன ஊழல் விழிப்புணர்வோடு இணைப்பதன் மூலம் தனியார் நிறுவனங்களின் செய்ல்பாடுகளில் ஊழலைத் தடுக்கலாம்.  தனியார் நிறுவனங்களையும் ஊழல் தடுப்பு சட்டத்தில் உட்படுத்தினால்தான் ஊழலை ஓரளவு ஒழிக்க முடியும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

  இது தவிர சட்ட அமலாக்கமும் சரியான முறையில் இயங்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உச்சநீதிமன்றம் சமீப தீர்ப்பில், சட்டம் இயற்றுவர்களும் சட்டத்தை பாதுகாப்பவர்களும் முழுமையாக ஈடுபட்டு சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான் சட்டத்தை மீறுபவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

  சர்வதேச ஊழல் கணிப்பு மையம் வெளியிட்ட தகவல்படி உலக நாடுகளில் இந்தியாவின் தர வரிசை 87இல் இருந்து 94க்கு சரிந்துள்ளது.  அதிக ஊழல் உள்ள நாடு என்று 118ஆம் நிலையில் உள்ள இந்தோனேஷிய நாடு பல ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை எதிர்ப்புகளுக்கிடையே எடுத்துள்ளது.   கே.பி.கே என்ற சுதந்திரமாக இயங்கக்கூடிய ஊழல் தடுப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. கெக்கோ என்று மக்களால் அழைக்கப்படும்  இந்த அமைப்பு சிறப்பாக இயங்குகிறது.

  2011-12 இல் நமது நாட்டில் தொழில்துறை முதலீடுகளில் நம்பகத்தன்மை, வெளிப்படை நிர்வாக சூழல் இல்லாததால் இழப்பு சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்று ஃபிக்கி அமைப்பால் கணக்கிடப்பட்டுள்ளது.

 ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய ஆசிய நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டு, அரபு நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

  நமது நாட்டில் வளங்கள் இருக்கின்றன. திறமையுள்ள இளைய சமுதாயம் உள்ளது,  ஆனால்  அதோடு வறுமையும் புழங்குகிறது.  முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஊழலை அழிக்க அனைவரது அர்ப்பணிப்பும் தேவை.

  நல்லாட்சி மேன்மையடைய விழிப்புணர்வின் முக்கிய பங்கு என்ற கருத்தினை முன்வைத்து செயலாக்கத்தை வகுக்க மத்திய ஆணையம் எல்லா அரசு துறைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com