பேதம் என்பது இல்லை

மதுரை என்றால் மல்லிகை, நெல்லை என்றால் அல்வா, காஞ்சிபுரம் என்றால் பட்டுச் சேலை என ஒவ்வோர் ஊருக்கும் ஒரு புகழ் உண்டு. தொழில் சார்ந்து இந்த பெயர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்பட்டு காலம் காலமாக நிலைத்து நிற்கின்றன.
Updated on
2 min read

மதுரை என்றால் மல்லிகை, நெல்லை என்றால் அல்வா, காஞ்சிபுரம் என்றால் பட்டுச் சேலை என ஒவ்வோர் ஊருக்கும் ஒரு புகழ் உண்டு. தொழில் சார்ந்து இந்த பெயர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்பட்டு காலம் காலமாக நிலைத்து நிற்கின்றன.

இதுபோல் மனிதர்களும் அவரவர்கள் செய்த சாதனைகளால் வேறுபடுத்தி அறியப்படுகின்றனர். இது உலகம் முழுமைக்கும் பொதுவானது. இதுபோன்ற வேற்றுமைகள் சிறப்பை குறிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

விலங்குகளிலும் தாவரங்களிலும் இன வேற்றுமை உண்டு. ஒவ்வொன்றின் குணம் அடிப்படையில் அவை பிரித்து பார்க்கப்படுகின்றன. மனிதர்களில் ஜாதி, மதம், நிறம் போன்றவற்றால் பிரிவுகள் இருக்கின்றன.

ஆனால் இதில் இந்த ஜாதி உயர்ந்தது, இந்த மதம் உயர்ந்தது, இந்த நிறம் சிறப்பானது என்ற பாகுபாடு மனிதர்களில் ஒருவித குரோதத்தை விதைத்து வளர்த்து விடுகிறது. நாளடைவில் இந்த வேற்றுமையே குழு மோதல்களாகவும் உருவெடுத்து, சில பகுதிகளை உலகுக்கு அடையாளப்படுத்தி விடுகின்றன.

இந்த அடையாளம் எந்த வகையிலும் சிறப்பு தரப் போவதில்லை. மாறாக, மனிதர்கள் தங்களுக்குள் முட்டி மோதி உயிரிழக்கவும் அமைதியான சூழலைக் கெடுக்கவும்தான் வழி செய்கிறது. இதற்கு இந்திய அளவில் பல உதாரணங்களைக் கூறலாம்.

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பலர் உயிர்ப்பலியாக காரணமாக இருந்தது. தமிழகத்தில் மண்டைக்காடு கலவரத்தில் ஆரம்பித்து, மரக்காணம் கலவரம் வரையும் ஜாதி, மத மோதல்களாகவே இருந்துள்ளன.

இந்திய சுதந்திரத்தின்போதும் மத அடிப்படையிலான பிரிவினையால் ஆயிரக்கணக்கானோர் மடிந்து போகும் ஆபத்து நிகழ்ந்தது. தமிழகத்தில் இந்த மோதல் பல இடங்களிலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளின் பெயரால் ஏற்படுகிறது. சமீபத்தில் காதலின் பெயரால் கூட இந்த இந்த வேற்றுமை துளிர்க்க ஆரம்பித்துள்ளது.

மனிதர்களை இனத்தால் பிரித்து மோதலை ஏற்படுத்தும் இந்த சூழ்ச்சிக்கு மனிதனே இரையாகிப் போவதோடு, தொழில் வளர்ச்சியை அடியோடு குலைத்து விடுகிறது. பல இனத்தைச் சேர்ந்தவர்களை ஒரே வரிசையில் நிறுத்தி அவர்களை இன வாரியாக அடையாளப்படுத்த முடியமா என்றால் முடியாது. நடை, உடை பாவனைகளை வைத்து அல்லது பேச்சு வழக்கை வைத்து அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று மட்டும் அடையாளம் கூற முடியும்.

மனம் என்பது சந்தர்ப்பத்துக்கு தகுந்தவாறு மாறும். அதை கட்டுப்படுத்தி ஆளத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நாம் பெரியவர்கள், இவர்கள் சிறியவர்கள் என்ற எண்ணம் சிறு வயதில் சிலரால் உருவாக்கப்பட்டு விடுகிறது. அதை கட்டுப்படுத்தி வைத்திருக்காமல் இஷ்டம் போல் உலவ விடும்போது அழிவு ஆரம்பமாகிறது. கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களும் இதை வேடிக்கை பார்க்கும்போது அழிவு மேலும் அதிகமாகிவிடுகிறது.

எல்லாருக்கும் ஆளும் உரிமை இருக்கிறது. இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கையாண்டார்கள் என்பது வரலாறு. அந்த சூழ்ச்சி இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அண்மைக்கால கலவரங்களும் உயிர்ப் பலிகளுமே சாட்சி.

நமது சொந்த தொழில் வளர்ச்சி என்று வரும்போது இனம் பார்த்து யாரையும் ஒதுக்குவதில்லை. அதற்கு எல்லாரது தயவும் தேவைப்படுகிறது. ஆனால், இனம் என்ற உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு குளிர்காய நினைக்கும் சிலரால் இந்த நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு இடத்தில் இந்த உணர்ச்சித் தீ அணையாமல் பாதுகாக்கப்படுகிறது என்றால், அதனால் லாபம் அடைபவர்கள் எங்கோ இருந்து கொண்டிருக்கின்றனர் என்றே அர்த்தம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர், எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் ஓர் நிறை போன்ற வேற்றுமையை நீக்கும் தமிழ் வாசகங்களை விட சிறந்த வாசகங்கள் உலகில் வேறு இருக்க முடியாது.

இந்த வார்த்தைகளை எப்போதும் நம் மனதில் பதிய வைத்திருந்தால் போதும் நம்மிடையே இன வேற்றுமை என்பது உருவாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com