நாகரிக உலகம் போரை விரும்புவது இல்லை. காரணம், இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து, அதனால் ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்தும், அனுபவித்தும் அச்சமடைந்திருக்கிறது. இனிமேல் போர் வருமானால் அது அணுப் போராக மாறி உலகமே அழிந்துவிடும்.
அறிவியல் வளர்ச்சியால் உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. பரந்துபட்ட உலகம் மிகவும் சிறியதாகக் குறுகி விட்டது. மனிதனின் மனமும் அதைப்போல குறுகி விட்டதே! இதனால் புதிது புதிதாகப் பிரச்னைகளும் முளைத்துக்கொண்டு இருக்கின்றன. ஆசைகளும், சுயநலமும் அவனைப் பிடித்து ஆட்டுகின்றன. இது தனிமனிதருக்கு மட்டுமல்ல, ஆளுகின்ற அரசாங்கங்களுக்கும் பொருந்தும்.
உலகம் எல்லாவற்றிலும் வளர்ச்சியடைந்துவிட்டது. ஆனால் போரும், பூசலும் குறையவில்லை; மாறாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. "பயங்கரவாதம்' என்ற பெயரால் கலகங்களும், குழப்பங்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வன்முறை இல்லாத இடம் உண்டா?
அடுத்தடுத்த நாடுகளுக்குள் ஆயிரம் பிரச்னைகள். எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை தாண்டாத தீவிரவாதம் அன்றாடம் வெடித்துக் கொண்டிருக்கின்றன. அவரவர் நாட்டு மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு முடியாத அரசுகள் எல்லை கடந்த பயங்கரவாதங்களை கட்டவிழ்த்து விடுகின்றன.
சிரியாவில் இரண்டரை ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் போரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று ரசாயன குண்டுகள் வீசப்பட்ட தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் நச்சு வாயுவை சிரிய ராணுவம் வீசியதா அல்லது அது கிளர்ச்சியாளர்களால் வீசப்பட்டதா என்பது பற்றி ஒருவருக்கொருவர் புகார் தெரிவித்துக் கொண்டனர். எனினும் ரசாயன குண்டுகள் வீசப்பட்டதை ஐ.நா. விசாரணைக் குழு உறுதி செய்தது.
அமெரிக்காவின் போர் எச்சரிக்கையைத் தொடர்ந்து சிரிய அதிபர் பஷார் அல் அஸôத் ரசாயன ஆயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க ஓர் ஆண்டு ஆகும் என்றும், அதற்கு 100 கோடி டாலர் செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகரான நைரோபியின் "வெஸ்ட் கேட்' வணிக வளாகத்தை முற்றுகையிட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அவ்வணிக வளாகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற சோமாலியா பயங்கரவாத அமைப்பான ஷெபாப், பிணைக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என எச்சரித்தது. இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும், இதில் இந்தியர்களும் அடங்குவர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
சோமாலியா நாட்டில் ஆப்பிரிக்க யூனியன் படைகளுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் போரில் கென்யா தலையிட்டதற்கு பழிவாங்கவே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக ஷெபாப் அமைப்பு கூறியுள்ளது. இது செப்டம்பர் 21 அன்று நிகழ்ந்தது.
பாகிஸ்தான் பெஷாவர் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 81 பேர் உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயமடைந்துள்ளனர். செப்டம்பர் 22 ஞாயிறு பிரார்த்தனை நடந்தபோது இது நிகழ்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் என்ற அமைப்பின் ஜாண்டுல்லா குழு பொறுப்பேற்றுள்ளது. "பயங்கரவாதிகளுக்கு எந்த மதமும் கிடையாது என்றும், அவர்கள் குறிவைப்பது அப்பாவி மக்கள் என்றும், அவர்கள் எல்லா மதத்தினருக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள் என்றும், இது இஸ்லாத்துக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உலகில் ஆங்காங்கு போர்களும், கலவரங்களும், நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள்தான். இந்த மோதல்களுக்கும், தாக்குதல்களுக்கும் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஓர் உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.
அரசுகளும் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதிக்க வேண்டும். உரிமையும், நீதியும் கேட்கும் மக்களை எதிரிகளாக நோக்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். போராடும் மக்களின் நியாயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தை உள்நாட்டுப் போராக மாற்றியது அந்நாட்டின் சர்வாதிகார அரசாங்கம். ராஜபட்ச அதிபராக வந்ததும் இனப்படுகொலை நடத்தி லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தார். இன்றுவரை அவர்களை அகதிகளாகவே நடத்திக் கொண்டிருக்கிறார். போர் முடிந்து 4 ஆண்டுகளாகியும் அமைதி திரும்பவில்லை.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடந்து, "தமிழ் தேசியக் கூட்டணி' பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு கானல்நீராகவே காட்சியளிக்கிறது. அடிமைகளுக்கு அமைதி ஏது?
பூமியில் இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்பது பற்றி புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.
அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தியுள்ளார்கள்.
இந்த ஆய்வில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.
பூமியானது 75 விழுக்காடு வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது என்றும், பூமிக்கு இன்னும் 25 விழுக்காடு ஆயுள்தான் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. நம்மைத் தாங்கும் பூமியை நாம் அழிக்கப் பார்ப்பது நன்றி கொன்ற செயல் அல்லவா!
சொற்ப காலமே வாழும் அற்ப மனிதனால் எல்லாவற்றையும் அளந்தறிய முடிகிறது. ஆனால் அவனது ஆயுளை அவனால் கணித்தறிய முடியாதபோது, அடுத்தவரின் ஆயுளை முடிக்கும் போர் எதற்காக? பயங்கரவாதம் எதற்காக? சிந்திக்க வேண்டாமா?
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்களின் ஆட்சியில் போரே முதலிடத்தில் இருப்பதைக் காணலாம். இவ்வாறு மன்னர்கள் போர் செய்த வரலாறே தேசத்தின் வரலாறாக வரையப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் அதுவே வீரவரலாறாகப் பேசப்பட்டது. அதுவே ஆட்சியின் பெருமையாகவும், சாதனையாகவும் மதிக்கப்பட்டது.
மனித வரலாறு என்பதே மன்னர்களின் வரலாறாக இருந்தது. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் வீர தீர பராக்கிரமங்களைப் பறைசாற்றுவதற்காக நாட்டையே பலியிட்டனர். தமது பேரரசை விரிவுபடுத்திக்கொண்டே போயினர்.
இன்று அந்தப் பேரரசர்களும் இல்லை; அவர்கள் கட்டி எழுப்பிய கோட்டைகளும் இல்லை. எல்லாம் மண்மேடாகவே போய்விட்டது. காலம் நமக்குப் பாடம் கற்பிக்கிறது. நாம்தான் அந்தப் பாடத்தை மறந்து விடுகிறோம்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் அடுத்தடுத்து இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. அச்சு நாடு என்று கருதப்பட்ட ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமாவும், நாகசாகியும் இந்த அவலத்தை அனுபவித்தது. உலகம் மறக்க முடியாத சோகம் அது.
ஆயிரம் சூரியன்கள் வெடித்துச் சிதறியது போல நீல வெளிச்சம் எங்கும் எகிறிப் பாய்ந்தது. அந்த அழிவில் சிக்கியவர்கள் அந்த நொடியே ஆவியாகிப் போனார்கள். மற்ற மனிதரும், விலங்குகளும், பறவைகளும் வெப்பத்தில் பொசுங்கிச் சாம்பலானார்கள். அப்படிக் கரைந்து போகாதவர்கள் தொடர்ந்து நரக வேதனையை அனுபவித்தார்கள்.
"அணுவின் தந்தை' என்று அழைக்கப்படும் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் இதனை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தார்.
முன்னர் ஒரு சமயம் அவர் வீட்டிற்கு வந்த ஒருவர், அவருடைய சமன்பாட்டின் அடிப்படையில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்று கூறியபோது, கோபமுற்ற ஐன்ஸ்டீன் அவரை அடிக்காத குறையாக வீட்டை விட்டே வெளியேற்றினார். இதனால் அவர் உலக அமைதியை எவ்வளவு நேசித்தார் என்ற உண்மை புலனாகும்.
போர் எப்போதும் தேவையில்லை. போர் அநாவசியமானது. நல்லவர் பலரது உயிரைக் "காவு' கொள்ளும் போர் அநாகரிகத்தின் வடிவமாகும். நல்லியல்புகள் பல கொண்ட மனிதத் தன்மைக்கு மாறானது போர்.
மனிதனை மனிதனாக வாழவொட்டாது மிருக இயல்புகளுக்கு ஆளாக்கும் போர் இன்றி வாழ்வதே அறிவுடைய செயலாகும். இப்போது நம்முன் இருக்கும் கேள்வி இதுதான்: உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? அழிவை நோக்கியா? அமைதியை நோக்கியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.