1896 - புதன்கிழமை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பம்பாயில் (இன்றைய மும்ûயில்) இருந்து வந்த ரயில் நின்றது. அதிலிருந்து மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இறங்கினார். அவர் தென்னாப்பிரிக்கா நேட்டால் காங்கிரஸ் செயலாளர் என்ற முறையில் வந்தார்.
லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டு தொழில் புரிந்து வந்தார். பம்பாயில் இருந்த தாதா அப்துல்லா கம்பெனி தென்னாப்பிரிக்காவில் தொழில் வர்த்தகம் செய்து வந்தது. அதற்கு சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. கம்பெனி சார்பாக வழக்காட தகுதியான வழக்குரைஞரைத் தேடிக் கொண்டிருந்தவர்களின் கண்களில் காந்தி பட்டார். மாதம் 105 பவுண்டு சம்பளம். மனைவி, மக்களை விட்டு விட்டு கப்பல் ஏறினார் காந்தி. அப்பொழுது அவருக்கு வயது இருபத்து நான்கு.
1860-ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் காலனியாக இருந்த தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவில் அவர்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். கூலிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.
1893-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா டர்பன் துறைமுகத்தில் பாரிஸ்டர் காந்தி தரையிறங்கினார். தென்னாப்பிரிக்காவில் எல்லா இந்தியர்களையும் போல் அவரும் கூலி பாரிஸ்டர் என்றழைக்கப்பட்டார். அவர் குஜராத்தி பாணியில் தலைப்பாகைக் கட்டிக் கொண்டு நீதிமன்றம் சென்றார். கூலி பாரிஸ்டர் தலைப்பாகைக் கட்டிக் கொண்டிருக்கக் கூடாதென்று நீதிபதி அதனை எடுக்கச் சொன்னார். அதனை ஏற்க மறுத்து காந்தி வெளியில் வந்தார். காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தார். அப்போது வெள்ளைக்காரர்களால் ரயிலில் இருந்து வெளியே இழுத்துத் தள்ளப்பட்டார். ஓட்டலில் தங்க இடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
தென்னாப்பிரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் பார்சிகள், முகமதியர்கள், தமிழர்கள், குஜராத்திகள், வங்காளிகள் போன்றோரின் பொதுநலனைப் பாதுகாக்க "நேட்டால் காங்கிரஸ்' என்ற மக்கள் இயக்கத்தை காந்தி ஏற்படுத்தினார். அவர் அதன் செயலாளரானார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் பிரச்னை என்பது தென்னாப்பிரிக்காவோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. இந்திய மக்களின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் தேவையென காந்தி கருதினார். எனவே அவர் இந்தியா புறப்பட்டு வந்தார்.
இந்தியா வந்த காந்தி பம்பாயில் கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர், டாக்டர் பண்டாரக்கர் ஆகியோரைச் சந்தித்து, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் படும் இன்னல்கள் பற்றி விவரித்தார். அவர் இந்திய பயணத்தில் சென்னை மிக முக்கியமானதாக இருந்தது. ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் ஒப்பந்த கூலிகளாகவும், விவசாயிகளாகவும், சுரங்கத் தொழிலாளர்களாகவும் ஏராளமான தமிழர்களே இருந்தார்கள். அவர்களில் பலர் குடும்பத்தோடு அங்கு இருந்தார்கள். அவர்களின் பரிதாபகரமான நிலைமையை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வது தன் கடமையென காந்தி கருதினார். அதற்காக கப்பலில் வரும்போதே தமிழ் படித்து கற்றுக் கொண்டார்.
தென்னாப்பிரிக்காவில் கூலிகள் பிரச்னை என்ன என்பது பற்றி ஒரு துண்டு பிரசுரம் எழுதினார். பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டார். அதற்குப் பச்சை அட்டை போட்டு இருந்தார். எனவே அது "பச்சை பிரசுரம்' என்று பெயர் பெற்றது. சென்னைக்கு வந்ததும் பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று தன் துண்டு பிரசுரத்தைக் கொடுத்தார் காந்தி.
1896, அக்டோபர் 26 ஆம் தேதி. சென்னை பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் திரளாகக் கூடினார்கள். கூட்டத்திற்கு நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைமை தாங்கினார். பிரதான பேச்சாளர் காந்திதான். அவர் சன்னமான குரலில் ஆனால் உறுதியுடன் சொன்னார்:
"தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை அடியோடு ஒழித்து விட்டார்கள். சுகாதாரக் கேடான பகுதிகளில் அடைத்து வைத்து விட்டார்கள். பிறகு "இந்தியர்கள் அழுக்குப் பிடித்தவர்கள்; மூடப் பழக்கம் கொண்டவர்கள்' என்று அவர்கள் நிந்திக்கிறார்கள்.
"அவர்களின் நிந்தனைகளுக்கும், அவமானங்களுக்கும் பணிந்து போனால் நாம் ஒன்றுமே இல்லாமல் போய் விடுவோம். எனவே நாம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும். அதிலும் தமிழ் மக்கள் அதிகமான அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் அன்னல்படுவோரில் பெரும்பான்மையானவர்கள் உங்கள் சகோதரர்கள். அவர்கள் துயர் துடைக்க ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்' என்றார்.
சென்னையில் அதுதான் காந்தியின் முதல் பேச்சு. அதற்கு தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், "மெட்ராஸ் மெயில்' பத்திரிகை மட்டும் காந்தியின் தென்னாப்பிரிக்கா குறித்த பேச்சை கண்டித்தது. எங்கோ ஓரிடத்தில் நடப்பதை அவர் பெரிதுபடுத்தி விட்டார் என்று எழுதியது.
காந்தி சென்னையில் பதினொரு நாள்கள் தங்கியிருந்தார். கூட்டங்களில் தன் உரையை எழுதி வாசித்தார்.
சென்னையில் இருந்து புணே சென்றார். அங்கு பொதுக்கூட்டம் போட்டு தென்னாப்பிரிக்கா நிலவரம் பற்றிப் பேசினார். தென்னாப்பிரிக்காவில் இனவெறி கொடுமைகள் அதிகரித்தன. இந்தியர்களுக்கு என்று தனி சேரிகள் உருவாக்கப்பட்டன. எனவே காந்தி உடனடியாகத் தென்னாப்பிரிக்கா திரும்பி வர வேண்டுமென அங்கிருந்த நேட்டால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தந்தி கொடுத்தார்கள். காந்தி தன் மனைவி கஸ்தூரிபாய் மற்றும் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு கப்பல் ஏறி தென்னாப்பிரிக்கா சென்றார். 1897-ஆம் ஆண்டு அங்கு சென்ற அவர் 1914-ஆம் ஆண்டு வரை பலவிதமான போராட்டங்களை நடத்தியபடி இருந்தார்.
தென்னாப்பிரிக்க கவர்னராக இருந்த ஜெனரல் ஜான் கிறிஸ்டீன் ஸ்மட்ஸ் இந்தியர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டார். நிலம், வீடு வாங்கக் கூடாது. தங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது. இரவில் வெளியில் வர வேண்டுமென்றால் அடையாள அட்டையோடு வர வேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் அங்கு அமலில் இருந்தது. ஒரு நீதிபதி இந்தியர்கள் திருமணம் செல்லாது. அவர்கள் கிறிஸ்துவ முறைபடி திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யாத திருமணத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சட்டப்படி உரிமையில்லை என தீர்ப்பு வழங்கினார்.
காந்தி தென்னாப்பிரிக்க காலனி இந்தியா சம்பந்தமான சட்டங்களை எதிர்த்தார். மக்கள் ஆதரவைத் திரட்ட "இந்தியன் ஒப்பினியன்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். அது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளிவந்தது. ரஷ்ய மேதை டால்ஸ்டாய் பெயரில் சத்தியாகிரகிகளுக்காக ஒரு பண்ணையை ஏற்படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி தொடங்கிய சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள். 1913-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட பெண்மணிகளில் ஒருவர் வள்ளியம்மை. அவர் ஜோகன்ஸ்பர்க்வாசி. முத்துசாமி முதலியார் மனைவி. வயது பதினாறு. தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். ஆனால், அவர் பூர்வீகம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு (அப்போது மாயவரம்) அருகிலுள்ள தில்லையாடி. சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் உறுதியுடன் இருந்தார். காந்தி அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார். ஆனால், சில நாள்களிலேயே வள்ளியம்மை இறந்து போனார். அவர் இறப்பு பற்றி காந்தி எழுதினார்: "அவர் உடல்தான் மறைந்து போனது. ஆனால், அவர் பெயர் எங்கள் மனதை விட்டு மறைந்து போகவே இல்லை' - என்று.
1914-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நிலைமை ஓரளவு மேம்பட்டது. ஓராண்டு ஒப்பந்தத்தில் சென்ற காந்தி இருபதாண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி இருந்து ஒரு மக்கள் தொண்டராகவும், தலைவராகவும் உருவாகிவிட்டார். பின்னர் அவர் இந்தியா வந்தார்.
1915-ஆம் ஆண்டில் காந்தி இரண்டாம் முறையாக சென்னை வந்தார். அவர் மனைவியும் உடன் இருந்தார். சென்னையில் தி இந்து, சுதேசமித்திரன் தொடங்கிய பத்திரிகையாசிரியர் கணபதி சுப்பிரமணிய ஐயர் உடல்நலம் குன்றி இருந்தார். தேசபக்தரும் பத்திரிகையாசிரியருமான அவரை காந்தி சென்று பார்த்தார். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபையில் ஹரிசந்திரா நாடகம் பார்த்தார்.
தில்லையாடிக்கு சென்று வள்ளியம்மையின் உறவினர்களைக் கண்டு தனது ஆறுதலைத் தெரிவித்தார். தில்லையாடி சென்று திரும்பிய காந்திக்கு சீர்காழி, மாயவரம், பூம்புகார், பொறையாறு ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி தரங்கம்பாடி கடற்கரையில் வரவேற்பு கொடுத்தார்கள்.
மகாத்மா காந்தியின் ஐந்தாவது சென்னை விஜயம் 1919 ஆம் ஆண்டு. அப்போது அவர் சென்னையில் காங்கிரஸ் தலைவர் சேலம் விஜயராகவாச்சாரியார் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது அங்கு பாரதியார் முன்அனுமதி இன்றி உள்ளே நுழைந்தார். ராஜாஜியுடன் இருந்த காந்தியைப் பார்த்து, திருவல்லிக்கேணியில் நடைபெற உள்ள தன் கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்தார். காந்தி செயலாளரைப் பார்த்தார். அந்த நேரம் வேறு அலுவலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று செயலாளர் தெரிவித்தார். பாரதியார் திரும்பி வந்துவிட்டார்.
1946-ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று நிகழ்ந்தது மகாத்மா காந்தியின் இருபதாவது சென்னை வருகை. பதினைந்து நாள்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றார். பெரும்பாலும் ரயில் பயணம்தான். கார் பயணமும் இருந்தது. ரயில் பயணமென்றால் மூன்றாம் வகுப்பு. அவரின் இந்த இருபதாவது சென்னை விஜயமே கடைசி பயணமாயிற்று.
1920-ஆம் ஆண்டில் நவஜீவன் பத்திரிகையில் தமிழ் மக்கள் என் உள்ளத்தில் பதிந்துள்ள முறையே தனி என்று எழுதினார். அதையே தமிழ் மக்கள் சொல்லாலும் செயலாலும் காட்டினார்கள்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.