பாரதியாரும் கோவில் யானையும்

மகாகவி பாரதியாரின் வாழ்வில் அவரது மரணத்திற்கு முன்னர் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
பாரதியாரும் கோவில் யானையும்

மகாகவி பாரதியாரின் வாழ்வில் அவரது மரணத்திற்கு முன்னர் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை அவரைக் கீழே தள்ளிய நிகழ்ச்சியாகும்.

 இது குறித்து பாரதி வரலாற்றாசிரியர்கள் பலரும் எழுதியிருக்கின்றனர். வ.ரா. தமது "மகாகவி பாரதியார்' நூலிலும், செல்லம்மா பாரதியின்  "தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம்' நூலிலும், சகுந்தலா பாரதி எழுதிய "என் தந்தை பாரதி' நூலிலும், பெ.தூரனின் "பாரதி தமிழ்' நூலிலும், ரா.அ.பத்மநாபனின் "சித்திர பாரதி' நூலிலும், ரா.கனகலிங்கம் எழுதிய "என் குருநாதர் பாரதியார்' நூலிலும், சீனி.விசுவநாதனின் "மகாகவி பாரதி வரலாறு' நூலிலும் இந்நிகழ்வு முக்கியத்துவம் உடையதாகப் பேசப்பட்டிருக்கின்றது.

  எனினும் சம்பவம் நடந்த நாளில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டிலிருந்த செல்லம்மாள் பாரதியும், மகள் சகுந்தலா பாரதியும் எழுதிய பதிவுகளே பெரிதும் முதல்நிலையில் கொள்ளத்தக்கனவாகும். இவர்கள் நூல்களுள்ளும் செல்லம்மாள் பாரதி பெயரிலான நூல் அவர் சொல்லக் கேட்டு மூத்த மகள் தங்கம்மாள் பாரதி எழுதியதாகும். சகுந்தலா பாரதி எழுதிய நூலில் உள்ளவையே நேரடிப் பதிவுகள் என்று கொள்ளத்தக்கனவாகும். 

அந்த நிகழ்ச்சியை சகுந்தலா பாரதி பின்வருமாறு விவரித்திருக்கின்றார்:

 சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்த என் தந்தை ஒரு நாள் யானைக்குப் பழம் கொடுக்கப் போனார். யானைக்கு மதம் பிடித்திருந்ததால் நான்கு கால்களுக்கும் சங்கிலி போட்டுக் கட்டப்பட்டிருந்தது. ஜனங்கள் கம்பி வேலிக்குப் புறம்பே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

  என் தந்தை வழக்கம் போல வாழைப்பழத்தை யானையின் அருகில் சென்று கொடுத்தார். துதிக்கையை நீட்டி பழத்தை வாங்கிய யானை, அவரைத் துதிக்கையால் கீழே வீழ்த்திவிட்டது. யானையின் நான்கு கால்களுக்கும் இடையில் விழுந்துவிட்டார். கீழே பாறாங்கல் பரவிய தரை. என் தந்தை எழுந்திருக்கவில்லை. முகத்தினின்றும் இரத்தம் பெருக்கெடுத்துவிட்டது. யானை தன் நண்பனுக்கு தீங்கிழைத்துவிட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல, அசையாமல் நின்றுவிட்டது. அது தன் காலை ஒருமுறை அசைத்திருக்குமானால் அத்துடன் பாரதியார் கதை முடிந்திருக்கும். சுற்றி நின்றிருந்த ஜனங்கள் திகைத்துவிட்டார்கள். உள்ளே நுழைந்து அவரைத் தூக்க ஒருவருக்கும் தைரியம் இல்லை. அந்த வேளையில் எங்கிருந்தோ வந்தான் குவளைக் கிருஷ்ணன். தன் உயிரைத் திரணமாக மதித்து உள்ளே குதித்து என் தந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தான். பின்னர் கேட்க வேண்டுமா? ஜனங்கள் அவரைத் தாங்கிய வண்ணம் கோயில்  வாசல் மண்டபத்திற்குக் கொண்டு வந்தார்கள். எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாஸôசாரியாருக்கு விஷயம் எட்டியது. அவர் ஓடிவந்து ஒரு வண்டியில் என் தந்தையைப் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்குக்  கொண்டுபோனார். குவளைக் கிருஷ்ணனும் கூடவே போனான்...

  மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால் ஏற்பட்ட காயம். தலையில் நல்ல பலமான அடி. மண்டை சிதைவுற்று இருந்தது. நல்ல காலமாக, அவரது பெரிய தலைப்பாகை இருந்தபடியால் தலை தப்பிற்று.

(திருமதி சகுந்தலா பாரதி, "என் தந்தை பாரதி', பக்.132-137)

இந்தப் பதிவே முதல்நிலையில் நம்பகமாகக் கொள்ளத்தக்கது.

 சகுந்தலா பாரதியின் குறிப்பானது உண்மைக்கு மிகவும் நெருக்கமாக அமைகின்றபோதிலும் சம்பவம் எப்பொழுது நடந்தது என்ற காலகட்டத்தை எடுத்துரைக்கவில்லை. எனினும் பாரதி வரலாற்றாசிரியர்கள் சம்பவம் நடந்த காலத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்:

1.இந்தச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பாரதியார் இறந்துபோனார் - வ.ரா.

2.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் நெடுநாள் உலகில் வாழவில்லை - பெ.தூரன்

3.யானைச் சம்பவம் ஜூன் மாதத்தில் - ரா.அ.பத்மநாபன்

4.யானையால் தாக்குண்ட அதிர்ச்சி சம்பவம் 1921 ஜூன் மாதத்தில் நிகழ்ந்திருக்கலாம் போலும் - சீனி. விசுவநாதன்

சம்பவம் நடந்த காலம் குறித்த பாரதி வரலாற்றாசிரியர்களின் முதன்மையான பதிவுகள் இவை. செல்லம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, கனகலிங்கம் முதலியோர், காலத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மேற்காட்டிய குறிப்புகளில் இறப்பதற்கு மூன்று மாதங்கள் முன் என்பதும், ஜூன் மாதத்தில் என்பதும் ஒன்றே.

  சம்பவம் நடந்த காலத்தை முதலில் ஒருவர் சுட்டிப்போக, மற்றவர்கள் அதனை வழிமொழிந்து சென்றனவாக இக்குறிப்புகள் அமைகின்றனவேயல்லாமல், ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவனவாக அமையவில்லை. சம்பவம் நடந்த காலத்தை வரையறுக்க முதன்முறையாக இப்பொழுது நமக்குச் சில அரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

  சீனி.விசுவநாதன் 08-01-1921ஆம் நாள் வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகையின் துணைத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 1920ஆம் வருஷ அனுபந்தத்தில் இடம்பெற்றுள்ள படைப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தத் துணைத்தலையங்கத்தின் ஒரு பகுதியானது பின்வருமாறு அமைந்துள்ளது:

 "மறுபடியும் மன்மத ராணி என்று கதை சொல்ல ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி வந்துவிட்டார். உள்ளுறைப் பொருள் விளங்கும்படி கதை சொல்லுவதில் பாரதிக்குள்ள சாமர்த்தியம் இக்கதையில் நன்கு பிரகாசிக்கிறது.

 ஸ்ரீ பாரதியின் கதைகள் தெவிட்டாதனவாகையால் "கோவில் யானை' என்ற கதையைப் படித்துவிட்டு, பாரதியின் கதை இன்னுமிருக்கிறதோ என்று நேயர்கள் தேடிப் பார்ப்பார்கள் என்பது நிச்சயம்'.

(சீனி. விசுவநாதன் (ப.ஆ.), கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், தொகுதி 12, பக்.458 - 461)

 08-01-1921 இல் வெளிவந்த சுதேசமித்திரன் துணைத் தலையங்கமானது, அதற்கு முன்பே வெளிவந்த சுதேசமித்திரன் வருஷ அநுபந்தத்தில் பாரதி எழுதிய "கோவில் யானை' என்னும் கதை வெளிவந்துவிட்ட செய்தியைத் தெரிவிக்கின்றது. 1921ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதிக்கு முன்னரே பாரதி எழுதிய "கோவில் யானை' என்னும் கதை சுதேசமித்திரன் வருஷ அநுபந்தத்தில் வெளிவந்துவிட்டது என்னும் செய்தி ஒரு மாபெரும் வரலாற்று உண்மையைச் சுமந்து நிற்கிறது.

  மேலும் பாரதியின் மகள் சகுந்தலா பாரதி ஓர் அரிய குறிப்பை "என் தந்தை பாரதி' என்னும் நூலில் தெரிவித்துள்ளார். அக்குறிப்பு:

என் தந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லையெனக் கேட்டு என் மனம்  ஒருவாறு ஆறுதல் அடைந்தது. காயங்கள் சிறிது குணமடைந்து அவர் திரும்ப வேலைக்குச் செல்ல பல நாள்களாயின. யானை அவரைத் தள்ளிய சில காலத்திற்கெல்லாம், ஏதோ ஒரு பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக என் தந்தை தனிமையாக நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் படம் (தாடியில்லாமல்) எடுக்கப்பட்டது. யானை தள்ளிய கதையையும் தன் சொந்தக் கற்பனையையும் சேர்த்து "காளி கோயில் யானை' என்ற கதையொன்று எழுதியிருந்தார். அது சுதேசமித்திரனில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

(திருமதி சகுந்தலா பாரதி, என் தந்தை பாரதி, பக். 132-137)

இதே செய்தியை ரா.கனகலிங்கம் தனது "என் குருநாதர் பாரதியார்' நூலில் சிறு மாற்றத்துடன் (கோவில் யானை என்னும் தலைப்பில் பாரதி கட்டுரை எழுதியதாக) பதிவு செய்துள்ளார்.

  இந்த இரண்டு செய்திகளையும் இணைத்துப்பார்க்கும்பொழுது பாரதியைத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தள்ளிவிட்ட சம்பவம் நடந்த காலத்தை நாம் கண்டறிய முடிகின்றது. "கோவில் யானை' படைப்பானது சுதேசமித்திரனில் 8-01-1921க்கு முன்னரே வருஷ அநுபந்தத்தில் வெளிவந்துவிட்டது. அந்தப் படைப்பு வெளிவந்ததற்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்ததால் யானையால் தாக்குண்ட சம்பவம் பெரிதும் 1920 டிசம்பரில் நடந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் 1921 ஜனவரிக்கு முன்னரே யானையால் தாக்குண்ட சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்பது தெளிவாகின்றது. பாரதி வரலாற்றாசிரியர்கள் இதுவரை கூறிவந்த இறப்பதற்கு மூன்று மாதம் முன் என்னும் கருத்துக்கு மாறாக இறப்பதற்கு ஒன்பது மாதம் முன்னரே யானையால் தாக்குண்ட சம்பவம் நடந்துவிட்டது என்பது புலனாகின்றது.

 பாரதியின் எண்ணத்தில் யானை கீழே தள்ளிவிட்ட அந்தச் சம்பவம் ஒரு படைப்பை உருவாக்கும் அளவுக்குத் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பது மனங்கொள்ளத் தக்கது. அத்தகு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட "கோவில் யானை' படைப்பும் இப்பொழுது கிடைத்துவிட்டது. இந்தப் படைப்பு உண்மையில் சிறுகதையாக அமையவில்லை. சிறு நாடகமாக அமைந்துள்ளது. அமரபுரத்தின் அரசன் சூரியகோடி என்பவன். அவனது மகன் இளவரசன் வஜ்ரி. அவ்விளவரசன் தன் நாட்டிலே உள்ள ஒரு பெருஞ்செல்வனாகிய நித்தியராமன் என்பவனது மகள் வஜ்ரலேகையை காதலிக்கின்றான். மன்னனோ அங்க தேசத்து அரசன் மகளை மணந்து கொள்ளுமாறு தன் மகனுக்குச் சொல்கிறான். அங்க தேசத்து அரசன் மகனாகிய சந்திரவர்மன் வஜ்ரியின் தோழனாகவும் விளங்குகின்றான். ஒருநாள் தோழனோடு இளவரசன், காளி கோயில் யானைக்கு மதம் ஏறியிருப்பது தெரியாமல் அருகில் சென்று பழத்தை அளிக்கின்றான்.

 தன் தோழனிடம் அந்த யானை தனக்கு மிகவும் பழக்கமானது என்றும் தன்னிடம் பூனைக்குட்டி போல நடந்துகொள்ளும் என்றும் சொல்லிவிட்டுப் பக்கத்திலே செல்கின்றான். பல காலம் பழக்கமான யானையாக இருந்தபோதிலும் இம்முறை துதிக்கையால் இளவரசனைக் கீழே தள்ளிவிட்டது யானை. அப்போது நடந்ததைச் சந்திரவர்மன் என்னும் அந்தத் தோழனது கூற்றாகப் பின்வருமாறு அந்தப் படைப்புள் பாரதி விவரிக்கின்றார்:

சந்திர: ஆனால் இந்த முறை துரதிருஷ்ட வசத்தால் இவன் நேரே தன் முகத்தைக் காட்டாமல் தலையைக் குனிந்துகொண்டு யானையிடம் சென்றான். அப்படிக்கு அது அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. துதிக்கையால் இவனைத் தள்ளி வீழ்த்தி விட்டது. கீழே ஒரு கல் மண்டையில் அடித்து ரத்தம் வெள்ளமாகப் பெருகிற்று. யானை அதைக் கண்ட மாத்திரத்தில் திடுக்கிட்டுப் போய் விட்டது. அப்போது நான் அந்த யானையின் முகத்தை உற்று நோக்கினேன்  ஓரிரு க்ஷணங்கள் தன் துதிக்கையால் வஜ்ரியின் கால்களைத் துழாவிக்கொண்டிருந்தது. இவன் பிரக்கினையின்றிக் கீழே அதன் முன்பு வீழ்ந்து கிடக்கிறான். உம், உம் என்று ஒருவித உறுமுதல் இவன் வாயினின்றும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

  யானை,  தன் தந்தையுடைய கடிகாரத்தை வீழ்த்தியுடைத்துவிட்டுப் பின் பச்சாதாபமெய்தும் குழந்தை விழிப்பது போலே விழித்துக் கொண்டு நின்றது. ஓரிரு க்ஷணங்களுக்கப்பால், நான் மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டு வேலிக்குள் இறங்கி இவனை வெளியே தூக்கி வந்தேன். வெளியே கொண்டு வந்து நிறுத்திய அளவிலே இவனுக்குப் பிரக்கினை மீண்டுவிட்டது. இதுதான்  நடந்த சங்கதி.

 இதன் பின்னர் கதையானது மகனின் விருப்பப்படியே அவன் காதலிக்கும் பெண்ணை மணந்து  கொள்ள தந்தை இசைவளிப்பதாகவும் திருமணம் நிகழ்வதாகவும் நிறைவுபெறுகிறது. மேலும் இப்படைப்பின் தொடக்கத்தில் இளவரசனின் காதலி தனக்குள் பேசிக்கொள்வதாக, "நல்லையடா நீ விதியே, நல்லை நீ. ஐந்து பிராயம் ஆகுமுன்னே என் தாயைக் கொன்று விட்டாய்' என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி பெண்ணின் கூற்றாக அமைகின்றபோதிலும் பாரதி தன்னின் கூற்றாகவே இதனை அமைத்துள்ளார் என்று தோன்றுகின்றது. பாரதி தன் இளம் பிராயத்தில் தாயை இழந்துவிட்ட துயரத்தை சுயசரிதை படைப்பிலும்,

"என்னை யீன்றெனக் கைந்து பிராயத்தில்

ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை'

என்று பாடியிருப்பார். இந்தப் பாடலின் சொல் தொடர் பொருளையே கொண்டு அமைந்ததாக இந்த உரைநடைப் பகுதியும் அமைந்திருக்கின்றது. இவ்வாறெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையிலும் தன் வாழ்வின் இளம்பருவ உண்மைச் செய்திகளையும் இறுதிக்கால உண்மை நிகழ்வுகளையும் ஒருசேரப் படைப்பிற்குள் பதிவு செய்த வெளிப்பாடாகவும் இந்த "கோவில் யானை'  என்னும் நாடகக் கதைப் படைப்பு அமைந்துள்ளது.

 ஆயிரம் துயரங்களுக்கிடையில் நலிந்த அவனது இறுதிக்காலம் தொடர்பாக, இதுவரை சொல்லப்பட்டதற்கு மாறாக இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அல்லாமல் ஒன்பது மாதங்களுக்கு முன்பே யானை தள்ளிவிட்ட சம்பவம் நடந்தது என்னும் உண்மையும், அதனடிப்படையில் அவன் படைத்த படைப்பும் நமக்கு இப்போது கிடைத்துள்ளன. பாரதியியலுக்கு ஒளி சேர்க்கும் புதிய வரவுகளாக இவை அமைகின்றன.

இன்று பாரதியாரின் 92-ஆவது நினைவு நாள்.

கட்டுரையாளர்:  உதவிப் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com