இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில்தான் ஏழை பள்ளிக் குழந்தைகளுக்குப் பகல் உணவு இலவசமாக வழங்கும் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அதுவே சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் எல்லா குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கும் இலவச உணவு வழங்கும் திட்டமாக உருவானது. இதன் ஆரம்பமும் வளர்ச்சியும் மிகவும் சுவாரஸ்யமானவை.
காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை அவர் காரில் கிராமப்புறத்தில் பயணம் செய்தார். ஒரு இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு கார் நிறுத்தப்பட்டதால் காரிலிருந்து இறங்கி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களைச் சந்திக்க நேரிட்டது. காமராஜரை கண்ட ஆண்களும் பெண்களும் அவரை நோக்கி ஓடி வந்தனர். அவர்களின் நலம் விசாரித்த முதல்வர் அவர்களுடன் பல சிறுவர்களும் சிறுமியரும் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தார்.
""இவர்களெல்லோரும் பள்ளிக்கூடம் செல்லவில்லையா?'' என கேட்டார். ""ஐயா, எங்களிடம் வசதி இல்லை'' என்ற பதில் வந்தது.
பள்ளிக் கல்வி இலவசம் என்ற நிலைமையில், அவர்கள் வசதியில்லை எனக் குறிப்பிட்டது மதியம் குழந்தைகளுக்காகும் உணவுச் செலவு என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்ட காமராஜர், சென்னை திரும்பியதும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அது 1956-ஆம் ஆண்டு. அன்றைய நிலைமையில் வறுமையில் வாடிய சுமார் 20 லட்சம் குழந்தைகள், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தொடக்கக் கல்வி நிலையங்களில் ஆண்டுக்கு 200 நாள்கள் இந்த இலவச மதிய உணவை உண்டு பலனடைந்தனர்.
அடுத்த பெரிய நிகழ்வாக 1982-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழக அரசின் "முதலமைச்சரின் மதிய சத்துணவுத் திட்டம்' தொடங்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் குழந்தைகள் நல மையங்களான 20 ஆயிரத்து 747 இடங்களிலும், மதிய உணவுக்கூடங்கள் 32 ஆயிரத்து 470 ஆரம்பப் பள்ளிகளிலும் உணவு தயாரித்து 55 லட்சத்து 96 ஆயிரம் குழந்தைகளுக்கு சராசரி 400 கலோரி உணவு வழங்கப்பட்டது.
அப்போது இந்தத் திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கான செலவு ரூபாய் 120 கோடி. அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது 1982 செப்டம்பர் 15-ஆம் தேதி முதல், இந்தத் திட்டத்தை நகர்ப்புற தொடக்கப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தியது அன்றைய எம்.ஜி.ஆரின் அரசு. இதனால் கூடுதலாக 6 லட்சத்து 50 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பலனடைந்தனர்.
அன்றைய நிலையில் 64 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் பலனடைந்ததைக் கணக்கிட்டால், தமிழ்நாட்டின் மொத்த சிறுவர் சிறுமியர்களில் 60 சதவிகிதம் பேர் இலவச உணவு பெற்றனர் என உலகெங்குமிருந்து பாராட்டுகள் கிடைத்தன.
இலவச மதிய உணவுத் திட்டத்தை விளக்கி வெளியான துண்டுப் பிரசுரத்தில் எம்.ஜி.ஆர். தன் குழந்தைப் பருவத்தில் ஏழ்மையில் உணவில்லாமல் வாடியது பற்றி விளக்கப்பட்டிருந்தது. தன் குழந்தைப் பருவத்தில் பசியால் வாடிய எம்.ஜி.ஆர். மற்றவர்கள் வழங்கிய உணவை உண்டு வாழ்ந்தவர். "ஏழ்மையும் உணவின்மையும் வாழ்க்கையின் அனுபவமாக பெற்றவர் நமது முதல்வர். எனவே இன்றைய குழந்தைகளுக்கு அதுபோன்ற நிலைமை இருக்கக் கூடாது என எண்ணுபவர்' என விளக்கியது அந்தத் துண்டுப் பிரசுரம்.
இதே காலகட்டத்தில்தான் சமூக நலத் துறையின் குழந்தைகள் நல மையங்களில் பாலசேவிகாக்கள் எனும் அரசு ஊழியர்களின் மேற்பார்வையில் 2 வயது முதல் 4 வயது நிரம்பிய ஏழைக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் திட்டம் மத்திய அரசின் திட்டமாக நடைமுறைக்கு வந்தது. பாலசேவிகாக்கள் மற்றும் இலவச உணவு தயாரிக்கும் உதவியாளர்கள் வேலைகளுக்கு ஆதரவற்ற மற்றும் விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் உணவு வழங்கப்பட்டவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர் என ஒரு கணக்கு கூறுகிறது.
எம்.ஜி.ஆரின் அரசு மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியதன் விளைவாக, பகுதிநேர சமையல்காரர்களும் உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். 500 குழந்தைகளுக்கு ஒரு சமையல் பெண்ணும், ஒரு உதவியாளரும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இதன் விளைவாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 802 பெண்களுக்கு வேலை கிடைத்தது. நாடு சுதந்திரம் பெற்று 35 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உருவாகிய வேலைவாய்ப்பில் இதுவே மிக அதிகமானது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதனால் கிராமப்புறங்களில் குழந்தைகளின் போஷாக்கு, உடல்நலம் ஆகியன முன்னேறியதுடன் அதிக வேலை பெற்ற பெண்மணிகளினால் சமூக பொருளாதார முன்னேற்றமும் உருவாகியது என பல ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை அதிகரித்தது. பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் படிப்பை இடையில் நிறுத்திவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.
இதுபோன்ற ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர். மீது ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. இந்தத் திட்டம் அன்றைய பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் சாதுர்யமாக நடைமுறைப்படுத்தப்பட்டது எனக் கூறப்பட்டது.
இலவசத் திட்டம் என்பதால் இந்தப் பணத்தினால் பொருளாதார உற்பத்தி பெருகாது; விலைவாசி உயர்வு ஏற்பட்டு கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவார்கள்; ஆளும் கட்சியினரின் தலையீடும் இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது.
அரசினால் வழங்கப்பட்ட பணம் உணவு தயாரிக்கப் போதுமான அளவில் இல்லை. பட்ஜெட்டில் அதிக அளவு பணம் ஒதுக்கவும் முடியவில்லை, அரசு ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை இந்த சமூகநலத் திட்டத்திற்காக நன்கொடையாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளமும் சினிமா தியேட்டர்களின் ஒரு நாள் வசூலும்கூட இத்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. தமிழ்நாட்டு கோயில்களின் வருமானத்திலிருந்து ரூபாய் 75 லட்சம் நன்கொடையாகப் பெறப்பட்டது.
அரசின் வருவாய் அதிகரித்தால் மட்டுமே சத்துணவுத் திட்டம் போன்ற ஒரு நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்கிற நிலையில் தமிழ்நாட்டில மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு கள், சாராயம் மற்றும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
அன்றைய நிலைமையில் மது ஒழிப்பைக் கைவிட இலவச உணவுத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது எம்.ஜி.ஆர். அரசு என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. சத்துணவுத் திட்டத்தைக் குறை கூறிய திமுக, 1989-இல் ஆட்சியில் அமர்ந்தபோது, சத்துணவுத் திட்டத்தையும் கைவிடவில்லை. மதுவிலக்கையும் மீண்டும் அறிமுகப்படுத்தவில்லை. மாறாக, சத்துணவில் முட்டையையும் சேர்த்துக் கொடுக்கிறோம் என்று விரிவுபடுத்தத்தான் முற்பட்டது.
1982ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அரசு செலவிட்ட தொகையான ரூபாய் 120 கோடி, அந்த ஆண்டு பட்ஜெட் செலவீனமான ரூபாய் 1576 கோடி என்ற கணக்கில் 7.6 சதவீதம் ஆகிறது. இந்த ஆண்டு (2013) தமிழக அரசின் இலவச உணவுத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூபாய் 1486 கோடி.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் செலவுத்தொகை ரூபாய் 1லட்சத்து17ஆயிரத்து 915 கோடி. இதில் 1.3 சதவீதம்தான் மதிய உணவுக்காக செலவிடப்படுகிறது.
சத்துணவுத் திட்டத்தின் பின்னணியை நினைத்துப் பார்த்தால் காமராஜரும், எம்.ஜி.ஆரும் எந்த அளவுக்குத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டனர் என்பது தெரிகிறது.
மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை எப்படி கட்டமைப்பது என்பதை மேலை நாடுகளின் படித்த மேல்தட்டு அறிஞர்கள் விவாதித்து முடிவு காணாத நிலையில், தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏழ்மையின் முழு பரிமாணங்களையும் அறிந்திருந்ததால்தான் காமராஜராலும், எம்.ஜி.ஆராலும் இலவச உணவுத் திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது. மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், குறுகிய வாக்கு வங்கி அரசியலுக்காக நிறைவேற்றப்படாமல், தொலைநோக்கு சிந்தனையுடனும், உண்மையான அக்கறையுடனும் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே வெற்றி அடையும் என்பதற்கு காமராஜரின் மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டமும் எடுத்துக்காட்டுகள்.
அதனால்தான், இந்த ஒரு திட்டம் மட்டும், ஆட்சிகள் மாறினாலும் யாராலும் தவிர்க்க முடியாமல் தொடர்கிறது!
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.