பூனை கண்ணை மூடினால்...

"நான் நிதியமைச்சராக இருந்த 2004 முதல் 2008 அக்டோபர் வரையிலான காலகட்டத்தைப் பொருளாதாரப் பாய்ச்சல் என்றே சொல்ல
Updated on
4 min read

"நான் நிதியமைச்சராக இருந்த 2004 முதல் 2008 அக்டோபர் வரையிலான காலகட்டத்தைப் பொருளாதாரப் பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும். அப்போது பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருந்தது மட்டுமல்ல, வரலாறு காணாத வகையில் 9.3 சதவீதத்தை எட்டியும் பிடித்தது. இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் 2007-08ஆம் ஆண்டு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

அப்போது அன்னியச் செலாவணி கையிருப்பு 309 பில்லியன் டாலரை தாண்டியது. நிதிப் பற்றாக்குறை 2.9 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. சேமிப்பு அதிகபட்சமாக 36.8 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்த  உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) மிக அதிகபட்சமாக 9.3 சதவீதமாக இருந்தது.

பின்னர், பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். 2008-09 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளில் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நிலவியது. அந்த நேரத்தில் பிரணாப் முகர்ஜி வரிச் சலுகைகளை அறிவித்தார். அப்படி அறிவித்த வரிச் சலுகைகளை 2011ஆம் ஆண்டே அவர் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். பிரணாப் முகர்ஜி அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்.

2012இல் நான் மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றேன். வரிச் சலுகைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளைத் தொடங்கினேன். இந்த நடவடிக்கைகளை பிரணாப் முகர்ஜி எடுத்திருந்தால் அதன் பயன்களை கடந்த ஆண்டே நாம் பார்த்திருக்க முடியும்.

இப்போது பொருளாதாரம் நிலைத்த தன்மையுடன் உள்ளது. பொருளாதாரத்துக்கான அடிப்படை அம்சங்கள் வலுவாக உள்ளன. நிதிப் பற்றாக்குறை 4.6 சதவீதமாக உள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு 300 பில்லியன் டாலராக உள்ளது. இதில் மேலும் 25 பில்லியன் டாலர் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 60 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இப்போது மிகவும் குறைவாக 35 பில்லியன் டாலராக உள்ளது' - இப்படிக் கூறியிருப்பவர் ப. சிதம்பரம். வலுவாக இருந்த பொருளாதாரத்தைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டார் இப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், வாஜ்பாயி அரசில் நிதியமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் அளித்திருக்கும் தன்னிலை விளக்கம்தான் இது.

நிதியமைச்சராகத் தான் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டேன் என்றும், பிரணாப் முகர்ஜி எவ்வாறு மோசமாக செயல்பட்டார் என்றும் மறைமுகமாக இடித்துரைந்திருக்கிறார் சிதம்பரம். பிரணாப் முகர்ஜி இப்போது குடியரசுத் தலைவராக பதவி வகிப்பதால் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கு அவரால் விளக்கம் அளிக்கக்கூட முடியாது. பொருளாதார நடவடிக்கைகளில் தான் தன்னிகரற்று விளங்குவதாகவும், நெருக்கடி நிலைகளைக் கையாள்வதில் குறை காண முடியாதவாறு செயல்படுவதாகவும் ப.சிதம்பரம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறாரே, அது எந்த அளவுக்கு சரி?

பொருளாதார சீர்குலைவுக்கு காரணமான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்து எப்படி நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதை ஆய்வு செய்தால், தேர்ந்த வழக்குரைஞரான ப. சிதம்பரம் எந்த அளவுக்கு பொருளாதாரப் புரிதலில்லாதவர் என்பதும், இந்தியப் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு தேசத்தை கடன் புதைகுழியில் தள்ளி இருக்கிறார் என்பதும் புரியும். நடிகர் செந்திலின் "வாழைப்பழ' விளக்கம் போல, இல்லாததைத் திரும்பத் திரும்பக் கூறி, உண்மையை மறைக்கப் பார்க்கிறார் ப. சிதம்பரம்.

அன்னியச் செலாவணி கையிருப்பு இப்போது 300 பில்லியன் டாலராக உள்ளது என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடியும் தருணத்தில் 325 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் தம்பட்டம் அடிக்கும் ப. சிதம்பரம், 2004இல் 112.6 பில்லியன் டாலராக இருந்த வெளிநாட்டுக் கடன் 2013 டிசம்பரில் 4 மடங்கு அதிகரித்து 426 பில்லியன் டாலராக உயர்ந்தது குறித்து மூச்சே விடவில்லை.

குறுகிய கால கடன் 26 மடங்கு அதிகரித்து 5 பில்லியன் டாலரில் இருந்து 106 பில்லியன் டாலராக உயர்ந்தது குறித்தும் அவர் வாயே திறக்கவில்லை. 2004இல்,  மொத்த கடனில் குறுகிய காலக் கடன் வெறும் 4 விழுக்காடாக இருந்தது, 25 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. 2004இல் 22 பில்லியன் டாலராக இருந்த புற வர்த்தக கடன் 2013இல் 6 மடங்கு உயர்ந்து 121 பில்லியன் டாலராக அதிகரித்தது.

வர்த்தகக் கடன்கள் 4 பில்லியன் டாலரில் இருந்து 22 மடங்கு உயர்ந்து 87 பில்லியன் டாலராக அதிகரித்தது. அதேபோல, வெளிநாட்டுக் கடன் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கான விகிதம் 2004இல் 18 சதவீதமாக இருந்தது. அது 2013 டிசம்பரில் 21 சதவீதமானது.

ப.சிதம்பரம் கூறுவது போல, ஏற்றுமதி அதிகரித்ததாலோ அல்லது வெளிநாட்டு முதலீடு அதிகரித்ததாலோ நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறையவில்லை. அதிக வட்டி விகிதத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 23 பில்லியன் டாலர் கூடுதலாக வைப்புத் தொகை வைத்ததால்தான் குறைந்தது. அதை வசதியாக அவர் வெளிப்படுத்தவில்லை.

பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய கடந்த 10 ஆண்டுகளாக கிடைத்த வாய்ப்பை காங்கிரஸ் கூட்டணி அரசு இழந்து விட்டது என்பது மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் ப. சிதம்பரத்தால் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

2004-05இல் ப.சிதம்பரம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பதே தொடங்கியது. அதன் பின்னர் 10 ஆண்டுகளில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை 360 பில்லியன் டாலராக உயர்த்திய பெருமை ப. சிதம்பரத்தை நிதியமைச்சராக எட்டு ஆண்டுகள் வைத்திருந்த மன்மோகன் அரசையே சாரும்.

அதற்கு முன்னர், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்த 2 ஆண்டுகளில் 22 பில்லியன் டாலர் நடப்புக் கணக்கு உபரியாக இருந்தது. அதற்கு முன் தொடர்ந்து 25 ஆண்டுகள் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைதான் நீடித்து வந்தது. அந்த நிலைமையை மாற்றி இந்தியப் பொருளாதாரத்தை வலுவாக விட்டுச் சென்றதற்காக பாஜக கூட்டணி ஆட்சியை மன்மோகன் அரசில் நிதியமைச்சராகப் பதவி ஏற்ற ப.சிதம்பரமே புகழ்ந்தது அவருக்கு மறந்திருக்காது.

2008 அக்டோபரில் ப. சிதம்பரம் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி பிரணாப் முகர்ஜியிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 60 பில்லியன் டாலராக இருந்தது. மீண்டும் நிதியமைச்சரான பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் மேலும் 125 பில்லியன் டாலர்களை அதிகப்படுத்திய பெருமை சிதம்பரத்துடையது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறைதான் இந்திய ரூபாயின் மதிப்பை பாதியாகக் குறைத்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45இல் இருந்து 2013 ஆகஸ்டில் 68 ஆக சரிந்தது. அதற்கு 8 மாதங்கள் முன்னர்தான், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் உண்மையான மதிப்பு வெறும் 19.75தான் என்று "தி எகனாமிஸ்ட்' பத்திரிகை (2.1.2013) குறிப்பிட்டிருந்தது. 2012இல் ப.சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றதும், இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்துக்குப் போனதும் பொருத்தமாக அமைந்தது.

ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுக்கிறோம் என்றால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை கூடுதலாக அளிக்கிறோம் என்று பொருள். ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 குறைந்தது என்றால், ஆண்டுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ரூ.2.3 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு என்று பொருள்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்க கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதிதான் காரணம் என்று பொத்தாம்பொதுவாக ப.சிதம்பரம்  கூறிவிட்டார். ஆனால், 2014 வரையில் காங்கிரஸ் அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் கச்சா எண்ணெய் 515 பில்லியன் டாலர் அளவுக்கும், தங்கம் 161 பில்லியன் டாலர் அளவுக்கும்தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 587 பில்லியன் டாலர் அளவுக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அதுதான் பொருளாதார சீரழிவுக்கு மூல காரணம்.

இதில் 400 பில்லியன் டாலர் அளவுக்கு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதும், மீதி 187 பில்லியன் டாலர் பிரணாப் நிதியமைச்சராக இருந்தபோதும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மூலதனப் பொருள்களின் இறக்குமதியானது, உள்ளூர் மூலதனப் பொருள் சந்தை வளர்ச்சியை 2012-13இல் 10 சதவீத அளவுக்கும், உற்பத்தி வளர்ச்சியை 11.5 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாகவும் வீழ்ச்சி அடையச் செய்தது.

360 பில்லியன் டாலர் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது அதே அளவுக்கு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதித்தது என்பதுடன், அதே அளவு நமது நாட்டு வளம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று பொருள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் பாதியளவு சீனாவின் வர்த்தக உபரியாக மாறியது. இது அந்த நாடு மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறைக்கு செலவிடும் தொகைக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிப் பேசுகிறார் ப. சிதம்பரம். இந்த வகையிலும் சிதம்பரத்தின் தலைமையில் இந்தியப் பொருளாதாரம் இயங்கியபோது, சாதனை என்று சொல்லிக்கொள்ள சோதனைகள்தான் எஞ்சும்.

2014 மார்ச் 10ஆம் தேதியிட்ட திட்ட கமிஷன் தகவல் புத்தகத்தில் (பக்கம் 110இல் காணப்படும் புள்ளிவரம் இது.) 1999 முதல் 2004 வரையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளில் 60.7 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2004 முதல் 2010 வரையிலான கால கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு வெறும் 2.7 மில்லியன் வேலை வாய்ப்புகளையே உருவாக்கியது. ஒரு மாதத்துக்கு வெறும் 37,500 வேலைவாய்ப்புகளைதான் காங்கிரஸ் அரசு உருவாக்கி இருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் வேளாண் துறையில் 21.25 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் 6 ஆண்டுகளில் வேளாண் துறையில் வேலை வாய்ப்பு 15.7 மில்லியனாக குறைந்ததுதான் மிச்சம்.

உற்பத்தித் துறையில் பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் 11.7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றால், காங்கிரஸ் கூட்டணி அரசின் 6 ஆண்டு கால ஆட்சியில் 7.23 மில்லியன் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளில் 14 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அது ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அல்ல. பிரணாப் நிதியமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தில்  பேரழிவு பெரும்பாலும் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதுதான் நிகழ்ந்தது.

காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் ரூபாயின் மதிப்பு 30 முதல் 35 சதவீதம் சரிந்தது. வெளிநாட்டுக் கடன் 4 மடங்கு அதிகரித்தது. கடனை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருந்த அன்னியச் செலாவணி கையிருப்பு நான்கில் மூன்று பங்காகக் குறைந்துவிட்டது. கட்டுப்பாடற்ற முறையில் மூலதனப் பொருள்களை இறக்குமதி செய்தது நமது நாட்டின் உற்பத்தித் துறையின் அடிப்படையையே தகர்த்துவிட்டது.

இவ்வளவுக்கும் பிறகு, நான் வளமான பொருளாதாரத்தை விட்டுச் செல்கிறேன் என்கிறார் ப.சிதம்பரம். விடுங்கள், அவருக்குத் தெரிந்த பொருளாதாரம் அவ்வளவுதான். தொழிலால் ப. சிதம்பரம் ஒரு வழக்குரைஞர். அதனால், வாதம் செய்து பார்க்கிறார் - தன் பக்க வழக்கு பலவீனமானது என்பது தெரிந்தும்!

யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டு சரியானதுதான். பொருளாதாரத்தை சீரழிக்கும் பணியை முதலில் ப.சிதம்பரம்தான் துவக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com