ஜாலியன்வாலாபாக்: மதச்சார்பின்மையின் முன்னோடி!

முதல் உலகமகா யுத்தம் இந்தியர்களுக்கு சொல்லொணா துயரத்தையும், பல புதிய அனுபவங்களையும் கொடுத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தைத்

முதல் உலகமகா யுத்தம் இந்தியர்களுக்கு சொல்லொணா துயரத்தையும், பல புதிய அனுபவங்களையும் கொடுத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இது உதவியது.

மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட் போன்றோர் யுத்தத்தை ஆதரித்தனர்.

நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டன் யுத்தத்தில் வெற்றி பெற உதவி செய்தால், ஒரே ஆண்டில் சுயாட்சி கிட்டும் என்று காந்தி நம்பினார். இந்திய ராணுவம் யுத்தத்தில் ஈடுபடவும், இளைஞர்கள் ராணுவத்தில் சேரவும் அவர் முயற்சி எடுத்தார். அப்போது மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டத்திற்கு இடைக்கால விடுமுறை கொடுக்கப்பட்டது.

அன்று உருவான கிலாபத் இயக்கத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டதன் விளைவாக இந்து - முஸ்லிம் ஒற்றுமை உருவானது. இந்த ஒற்றுமை, இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு உதவும் என்று காந்தி நம்பினார். கிலாபத் இயக்கம்தான் முஸ்லிம்  லீக்கையும், முகமது அலி ஜின்னாவையும் காந்தியுடன் இணைத்தது.

இந்தியர்கள் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதல் உலகமகா யுத்தத்தில் ஈடுபட்டார்கள். எகிப்து, பாலஸ்தீனம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 95 ஆயிரம் இந்திய சிப்பாய்கள் அனுப்பப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். யுத்தம் முடிந்தபிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் உயிரிழந்திருந்தனர். 65 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தார்கள். 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். இந்த எண்ணிக்கையில் பஞ்சாபியர்களின் பங்குதான் அதிகம்.

இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் வெள்ளை அரசு யுத்தத்திற்காக ஏற்றுமதி செய்தது. முதல் உலகமகா யுத்தம் நடந்த (1914 - 18) காலத்தில் இந்தியாவில் பட்டினியும் பஞ்சமும் அதிகரித்தது. உலகின் பல நாடுகளுடைய நிலையும் இதுதான். முதல் உலகமகா யுத்தம் குறித்து இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், அறிவுப்பூர்வமான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

யுத்தத்தில் கிடைத்த இரண்டு மிகப்பெரிய பலன்கள்: ஒன்று, உலகின் முதல் உழைப்பாளி மக்களின் அரசு சோவியத் யூனியன் மாமேதை லெனின் தலைமையில் உருவானது. இதைத்தான் யுகப்புரட்சி என்றும், மாகாளியின் கடைக்கண் பார்வை ரஷ்ய நாட்டின் மீது பட்டது என்றும் மகாகவி பாரதி வர்ணித்தான். இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அதிகரித்தது. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைய அது உதவியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இரண்டு, விஞ்ஞானத் தொழில்நுட்பத்தில் மனிதகுலம் அதுவரை சிந்திக்க முடியாத மகத்தான முன்னேற்றத்தை அடைந்தது.

1919 தொடக்கத்திலேயே இந்திய நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. பசி, பட்டினியை எதிர்த்து எங்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை எங்கும் மக்கள் தன்னிச்சையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால் யுத்தத்திற்குப் பிறகு மகாத்மா எண்ணியதைப் போல நமக்கு சுயாட்சி கிடைக்கவில்லை. எனவே, இந்தியாவில் எழுச்சிகள் வரும், ஆட்சிக்கு எதிராக போராட்டம் வலுக்கும் என்று உணர்ந்த வெள்ளை ஏகாதிபத்தியம் 1919 மார்ச் 18ம் தேதி ரெளலட் சட்டத்தை லண்டனில் இருந்து பிறப்பித்தது.

எல்லையில்லா அதிகாரத்தை இந்த சட்டம் வெள்ளை அரசாங்கத்திற்கு வழங்கியது. விசாரணையின்றி கைது செய்ய, சொத்துக்களைப் பறிமுதல் செய்ய, பேச்சு உரிமை, கூட்டம் போடும் உரிமைகளை ரத்து செய்ய, பத்திரிகை தணிக்கை போன்ற இத்யாதிகள் இட்டார்கள்.

காந்தி இந்த சட்டத்தை கருப்புச் சட்டம் என்று வர்ணித்தார். அறவழி சத்யாகிரகப் போராட்டத்திற்கான அறைகூவலை அவர் விடுத்தார். இந்த கருப்புச் சட்டம் மக்களின் போராட்டத்தைத் தடுக்க முடியவில்லை. தடையை மீறி சிறைக்குச் செல்ல மக்கள் தயங்கவில்லை.

பஞ்சாபில் போராட்டம் வேகமாகப் பரவியது. சத்யபால், சைபுதீன் கிச்சு ஆகிய முக்கியமான இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை கருப்புச் சட்டத்தில் கைது செய்தார்கள். அவர்களை எங்கு கொண்டு போனார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது மக்களுக்குத் தெரியவில்லை. மக்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி பஞ்சாபில் மிக முக்கியமான பாய்சாகி எனப்படும் திருவிழா தினமாகும். இது விவசாயிகளுக்கு முக்கியமானதாகும்; அறுவடை தொடங்குகிறது என்று அறிவிக்கும் காலமாகும். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைத்து பிரிவினரும் இணைந்து கொண்டாடக்கூடிய நாள் அது.

அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக் தோட்டத்தில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று மாலை 4.30 மணிக்கு மக்கள் குடும்பம் குடும்பமாகக் கூடினார்கள். சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்துப் பிரிவினரும் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் அங்கு இருந்தனர். அந்த திருவிழா, தலைவர்களை விடுதலை செய் என்று கோருவதற்கான பொதுக்கூட்டமாக மாறியது.

தடையை மீறி கூடிய அந்தக் கூட்டத்தைக் கலைக்க, ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டயர் ​(RE​G​I​N​U​LD​ DW​Y​ER)​தலைமையில் சிப்பாய்கள் துப்பாக்கிகளில் ரவையை நிரப்பி வந்தனர். ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த மக்களை சுட்டுத் தள்ளுமாறு டயர் உத்தரவிட்டார். பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் சிப்பாய்கள் நிரப்பிவந்த குண்டுகள் தீர்ந்துவிட்டன.

1,650 தடவை சுட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 370 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 1100 பேர் காயமடைந்ததாகவும் விசாரணையின்போது அரசுத் தரப்பில் கூறப்பட்டது. தேசிய காங்கிரஸ் விசாரித்து வெளியிட்ட அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000 என்றும், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1500 என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில் அனைத்து மதத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

இந்த சம்பவம் உலகை உலுக்கியது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அன்றைய பிரமுகர்கள் வின்சன்ட் சர்ச்சில் போன்றவர்கள் இதைக் கண்டித்தனர். ரவீந்திரநாத் தாகூர் இந்த கொடுமையை கண்டித்தது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசு அவருக்கு வழங்கிய அத்தனை கெளரவ பட்டங்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

கொலைகார டயர் மீது ஹேமர் கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணையில் நான் செய்தது சரி என்றும், இந்தியர்களுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுப்பதற்காகத்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டதாகவும் ஜெனரல் டயர் கூறினார். இந்த விசாரணையின் முடிவில்,  பஞ்சாபை தக்கவைக்கப் போய், இந்தியாவை இழந்துவிட்டோம் என்று ஹேமர் கமிட்டி  தனது அறிக்கையில் கூறியது. பிரிட்டிஷ் அரசு டயருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து லண்டனுக்கு திரும்ப அழைத்துக் கொண்டது. 1927இல் அவர் லண்டனில் இறந்து போனார்.

இந்த கொடூரத்தில் அடிபட்ட 16 வயது இளைஞன், படுகொலைக்கு காரணமான அன்றைய பஞ்சாப் கவர்னர் மிச்சேல் ஓ டயரை ​(M‌i​c‌h​a‌e‌l​ O​ D‌w‌y‌e‌r)​ தேடி அலைந்தான். 21 ஆண்டுகள் கழித்து லண்டன் நகரில் 1940 மார்ச் 13ஆம் தேதி கேக்ஸ்டன் ஹால் (CA​X​T​ON​ HA​LL)​ என்ற இடத்தில் கவர்னர் டயரைக் கண்டுபிடித்து சுட்டுத் தள்ளினான்.

அவன் தான் உத்தம் சிங். காவல் துறை உடனே அவனைக் கைது செய்தது. உன் பெயர் என்ன என்று கேட்டபோது, அவன் ராம் முகமது சிங் என்று பதில் கூறினான். இரண்டு நாள் விசாரணை நடத்தப்பட்டது. அவன் குற்றத்தை மறைக்கவில்லை. அவன் ஆற்றிய நீதிமன்ற உரை, இன்றும் அழியாத ஓர் வரலாற்று ஆவணமாகும். அவன் புன்முறுவலுடன் தூக்குமேடை ஏறி என்றும் அழியாப் புகழை எய்தினான்.

இவன் செய்த கொலையை மகாத்மா காந்தி ஏற்கவில்லை. ஆனால் உத்தம் சிங்கின் துணிச்சலை அவர் பாராட்டினார். பண்டித நேரு, தியாகி உத்தம் சிங் என்றழைத்தார்.

இந்திய அரசியல் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்ற வாசகம் இப்படிப்பட்ட சம்பவங்களால்தான் உருவானது. இதைக் காப்பது இன்றைய தலைமுறையின் கடமை.

கட்டுரையாளர்: மாநிலங்களவை உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com