புதிய ஐம்பெருங்காப்பியங்கள்

ஐம்பெருங்காப்பியங்கள் எத்தனை?' என்று யாரிடமாவது கேட்டால் சற்றே தள்ளிப்போய், "கோடைக்காலம் இப்படித்தான் சில பேரைப் பாடாய்ப்படுத்தும்' என்று முனகுவர்.
Updated on
3 min read

ஐம்பெருங்காப்பியங்கள் எத்தனை?' என்று யாரிடமாவது கேட்டால் சற்றே தள்ளிப்போய், "கோடைக்காலம் இப்படித்தான் சில பேரைப் பாடாய்ப்படுத்தும்' என்று முனகுவர். ஆனால் "தமிழில் தற்போதுள்ள ஐந்து பெருங்காப்பியங்கள் எத்தனை?' என்று விரிவான வினாவாக்கி மொழி ஆர்வலர்களிடமோ புலவர்களிடமோ அறிஞர்களிடமோ கேட்டால் சரியான விடை வரும். "ஐந்து என்ற எண் இப்பொழுதைக்கு இடுகுறி. மூன்று என்பதே உண்மை' என்ற அந்த விடை நம் மனத்தைக் கசக்குகிறதா, இல்லையா?

"இழப்புகள் இயற்கை' என்று அவ்வளவு இலேசாக, எல்லா இழப்புகளுக்கும் ஒரே ஆறுதலைச் சொல்லிக் கொள்ள முடியாது. "இழப்புகள் இனிவருங்காலங்களுக்கான பாடங்களைப் போதிக்கும் ஆசான்கள்' என்பது சரிதான் என்றாலும், இழப்புகளின் வலி தொடரத்தான் வேண்டுமென்ற கட்டாயமேதுமில்லை.

வாழ்க்கைக் களத்தில் ஆயிரமாயிரம் ஆதாயங்களைப் பெற்றிருந்தாலும் எப்பொழுதாவது ஒன்றிரண்டை இழந்துவிட்டால் அந்த வலியும் உறுத்தலும் அதுவரை பெற்ற ஆதாய சுகங்களை விஞ்சிய சோகங்களாகிவிடுகின்றன. ஏனோ தெரியவில்லை, மொழிவளம் தொடர்பான இழப்புகள் அந்தந்த மொழிப் பற்றாளர்களிடமும் அதிகமான பாதிப்பையும் நெருடலையும் கொடுக்கத் தவறிவிடுகின்றன.

"நம் பாட்டனும் பூட்டனும் நம் மரபின் வளத்துக்காக ஐந்து தங்கக் கட்டிகளை வைத்துவிட்டுச் சென்றார்கள்; அவற்றில் இரண்டு கட்டிகள் தொலைந்துவிட்டன' என்று ஒரு தந்தை தன் மகனிடம் சொன்னால், அதைக் கேட்ட மகன் குதிப்பான்; கொதிப்பான்; பதைபதைப்பான். ஆனால் நம் தமிழுக்கென்று ஐந்து பெருங்காப்பியங்கள் இருந்தன. அவற்றில் இரண்டு தொலைந்து போயின என்று சொன்னால் எந்தக் குதிப்பும் கொதிப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டு விடாது.

தனிமனித இழப்புகளோ குடும்ப இழப்புகளோ ஏற்பட்டால் அவ்வப்போது ஈடுசெய்யப்படுகின்றன; அல்லது இழப்பின் அளவுக்கேற்றபடி, தேவைகளைக் குறைத்துக் கொண்டு ஈடு செய்வது போன்ற பாவனையாவது உருவாக்கப்படுகிறது. சமுதாய இழப்புகளோ, பண்பாட்டிழப்புகளோ, நாடு, மொழி தொடர்பான இழப்புகளோ ஏற்பட்டால், அவற்றைப் பட்டியலிட்டுக் கட்டுரைகளாக, நூல்களாக எழுதி வெளியீட்டு விழா நடத்திவிடுவதால் மட்டும் நம் கடமை முடிந்துவிடாது.

இழந்தவைகளை மீட்டெடுக்க முயலவேண்டும். அது சாத்தியப்படவில்லை என்பது முற்ற முடிந்த முடிவான பிற்பாடு, அதற்கு ஈடாகத் தக்கதான மற்றதொன்றை அந்த வெற்றிடத்தில் வைத்து நிரப்ப முடியுமா என ஆராய வேண்டும்.

வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்திற்குப் பஞ்சமகா காவ்யங்கள் என்ற தொகுப்பாகிய ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன. அவை, காளிதாச மகாகவி படைத்த இரகு வம்சம் மற்றும் குமார சம்பவம், பாரவி இயற்றிய கிரார்தார்ஜுனீயம், மாகன் படைத்த சிசுபாலவதம், ஸ்ரீ ஹர்ஷர் இயற்றிய நைஷதம் என்பன. அந்த ஐந்து பெருங்காப்பியங்களும் முனைமுறியாமல் இன்றும் நின்று நிலைத்து வாழ்ந்து பயன்தருகின்றன.

திராவிட மொழிக் குடும்பத்தில் நம் செந்தமிழுக்கடுத்த செவ்விய மொழியாகிய சுந்தரத் தெலுங்கிலும் பஞ்சமகா காவ்யங்கள் எனப்படும் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன. அவை, கிருஷ்ண தேவராயரின் அவைக்களப் புலவராகிய அல்லசானி பெத்தன்னா படைத்த மனு சரித்திரம், இராமானுஜ பூஷணர் இயற்றிய வசு சரித்திரம், கிருஷ்ண தேவராயர் படைத்தளித்த ஆமுக்த மால்யத என வழங்கும் விஷ்ணு சித்தீயம், நந்தி திம்மனா என்னும் நற்கவிஞர் புனைந்தளித்த பாரிஜாதாபகர்ணம், ஸ்ரீ நாதகவி படைத்து வழங்கிய சிருங்கார நைஷதம் என்பன. அந்த ஐந்து பெருங்காப்பியங்களிலும் ஓரெழுத்துக்கூட உதிர்ந்து போகாமல் உயிர்ப்புடன் உலாவந்து கொண்டுள்ளன.

ஆனால் நம் செந்தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என ஐந்து பெயர்களைச் சொல்கிறோம். வளையாபதியும் குண்டலகேசியும் கிடைக்கவில்லை என்ற சோகத்தையும் சொல்கிறோம். இனி அவை இரண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லையா? தொலைந்தவை தொலைந்தே போய்விட்டனவா? அவை இனிக் கிடைக்க வழியில்லை என்பது முற்ற முடிந்த முடிவுரைதானா? என்றெல்லாம் கேட்டால் துக்கம் தொண்டையை அடைக்க ஆம்; ஆமாம் என்று தலைகுனிவதைத் தவிர வேறுவழியில்லை. அவற்றைத்தேட என்னென்ன முயற்சிகள் நடந்தன என்று பார்த்தால் இந்த முடிவுக்கு ஏன் வர நேர்ந்தது என்பது புரியும்.

ஓலைச்சுவடி நூல்களைத் தேடிச் சேகரித்தலில் வல்லமை மிக்க ஒரே ஒரு மனித இயக்கத்தின் பெயர் உ.வே.சாமிநாதையர். அவர் சொல்கிறார்: "நான் என் இளமைக் காலத்தில் வளையாபதி, குண்டலகேசி இலக்கியங்களைப் படித்ததுண்டு. நான் பதிப்புப் பணியில் ஈடுபட்டபின் அந்நூல்களைப் பதிப்பிப்பதற்காதத் தேடினேன். கிடைக்கவில்லை' என்று.

உ.வே.சா. அவர்கட்குப் பிற்பாடு ஓலைச்சுவடித் தமிழ் நூல்களை வையாபுரிப் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை உள்ளிட்ட பல பேரறிஞர்கள் பதிப்பிக்கும் திருப்பணி செய்தனர். அவர்களில் யாருக்கும் வளையாபதியும் குண்டலகேசியும் சிக்கவில்லை.

நவீன வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சுவடித்தமிழ் நூல்களைத் தேடும் பணி எளிமையானதென்றே சொல்லலாம். என்றாலும் சுவடிநூல்கள் வைத்திருப்பவர்கள் தமிழ்நலம் கருதிப் பொது நிறுவனங்களுக்கோ அரசுக்கோ வழங்க முன்வரவேண்டும். அந்த "மனஇளகல்' அத்துணை எளிமையென்று சொல்லமுடியவில்லையே!

பல்லாண்டுகளுக்கு முன்பு வளையாபதியில் 70 பாடல்களும் குண்டலகேசியில் 29 பாடல்களும் மட்டும் கிடைத்தன. அவை தமிழ்ச் சுவைஞர்களின் மனங்களை ஈர்ப்பனவாக இல்லை. 19ஆம் நூற்றாண்டில் இந்நூலைப் படித்தவர்கள் சொன்னதைக் கொண்டு உரைநடை கதைச் சுருக்கங்கள் வெளிவந்தன. அவையும் நாம் பெருமிதப்படும் அளவுக்கோ, சமயச் செய்திகளை அழுத்தமாகச் சொல்வனவாகவோ இல்லை. இக்கருத்துகளைச் சிந்திக்கும்போது மாற்றுச் செய்ய மனம் துணிகிறது.

நாமிழந்துவிட்ட வளையாபதி மற்றும் குண்டலகேசி ஆகிய பெருங்காப்பியங்களுக்கு ஈடாக, வேறு காப்பியங்கள் நம்மிடம் இல்லையா என்ன? இனி ஒரு விதி செய்வோம். உலகத் தமிழர்களால் நன்கறியப்பட்டனவும், தமிழிலக்கியவாதிகளின் பெரும்புழக்கத்திற்குப் பயன்பட்டுக் கொண்டிருப்பனவுமாகிய பெரிய புராணத்தையும் கம்பராமாயணத்தையும் ஐம்பெருங்காப்பியங்களில் சேர்ப்போம்.

இனி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெரிய புராணம், கம்பராமாயணம் என்பன தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று குறைவிலா நிறைவாக்கிக் "கோதிலாத் தமிழில் ஐம்பெருங்காப்பியங்களும் நிரம்பி நிறைந்தன' எனத் தலை நிமிர்ந்து சொல்வோம்.

இப்படிக் கொள்வதால் மேலும் ஒரு நன்மை உண்டு. சிலப்பதிகாரத்தில் இயற்கைத் தெய்வங்கள், கொற்றவை, முருகன், சிவன், திருமால், அருகதேவன் என வரும் எல்லாத் தெய்வங்களுக்குமான துதிகளும், செய்திகளும் உள்ளமையால் அதனைப் பழந்தமிழகச் சமயங்களின் பொதுக்காப்பியம் எனலாம். மணிமேகலை தெரிந்த பாடாகப் பௌத்தக் காப்பியம். சீவக சிந்தாமணி சமணக் காப்பியம். பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். கம்பராமாயணம் இந்து சமயப் பொதுமை உணர்வு பொதிந்ததெனினும் திருமாலவதாரம் பற்றியதாகையால் வைணவக் காப்பியம்.

ஆக இந்தத் திருந்திய பட்டியலின்படி தமிழ் நிலத்துத் தொல்பழஞ் சமயங்கள் யாவும் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் தொகுப்பில் இடம் பெறுகின்றன. மேலும் சற்றொப்ப 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களைக் கொண்டே ஐம்பெருங்காப்பியங்களை நிரல் செய்ததாகவும் ஆகிறது.

தமிழில் ஐம்பெருங்காப்பியங்களை மேலெழுதியவாறு நிரல் செய்வதில் ஏற்படத்தக்க சில ஐயங்களுக்கும் இங்கே விடை கண்டாக வேண்டும். பெரிய புராணம் சைவத் திருமுறைகள் நிரலில் பன்னிரண்டாவதாகச் சொல்லப்படுவதாயிற்றே, ஒரு தொகுப்பில் சேர்க்கப்பட்ட நூலை இன்னுமொரு தொகுப்பிலும் அடக்க முன்னுதாரணம் உண்டா? என்பது முதல் ஐயம்.

உண்டு. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் சேர்க்கப்பட்டதாகிய திருமுருகாற்றுப்படையைச் சைவத்தின் திருமுறைத் தொகுப்பில் பதினொன்றாம் திருமுறையுள்ளும் நம் முன்னோர் சேர்த்துள்ளனர். எனவே, ஒரு தொகுப்பில் இடம் பெறும் நூல், மற்றுமொரு தொகுப்பிலும் இடம் பெற முந்தையோர் கண்ட நெறி உள்ளது.

இராமாயணம் இதிகாசங்களில் ஒன்றாயிற்றே அதை ஐம்பெருங்காப்பியங்களில் சேர்க்கலாமா என்றால் அதற்கும் விடையுண்டு. "இதிகாசம்' என்னும் தொகுப்பமைப்பைத் தமிழ் இலக்கண நூல்கள் சொல்லவில்லை. பெருங்காப்பிய இலக்கணம் மட்டும் தண்டியலங்காரத்திலும் பாட்டியல் நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

அன்றியும் இதிகாசங்கள் மூன்று. இராமாயண, பாரத, பாகவதம் என்பன அவை. செவ்வைச் சூடுவார் பாகவதம் மிகப்பிற்காலத்தது. மொத்தத்தில் இதிகாசம் என்ற வழக்காறு தமிழிலக்கிய உலகில் இல்லை.

மேற்காண் கருத்துகளைச் சிந்தித்துத் தமிழார்வலர்களும், புலவர்களும் அறிஞர்களும் ஏற்றுக் கொண்டால், "ஐம்பெருங்காப்பியங்கள் எத்தனை?' என்ற வினாவுக்கு "ஐந்து; அதிலென்ன ஐயம்?' என ஆனந்தப் பூரிப்புடன் விடை சொல்லி மகிழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com