‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மக்கள் பணம் மக்களுக்கே...

நிகழாண்டில் நாடு முழுவதும் பத்தாயிரம் வங்கிக் கிளைகள் திறக்கப்படும் என,  அண்மையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 9:04 pm

வை. இராமச்சந்திரன்

நிகழாண்டில் நாடு முழுவதும் பத்தாயிரம் வங்கிக் கிளைகள் திறக்கப்படும் என,  அண்மையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், வங்கிகள் அமையும் பகுதியில் அவற்றால் எத்தகைய வளர்ச்சி ஏற்படப்போகிறது என்பதை ஆய்வுசெய்ய வேண்டிய தருணமிது.

இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கிகள் உள்ளிட்டவற்றின் கிளைகள் பல ஆயிரக்கணக்கில் ஊரகப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த வங்கிகளால் அப்பகுதியில் உள்ளோருக்கு சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு  உள்ளிட்ட பல்வேறு கணக்குகள் தொடங்கப்படுகின்றன. நகைக் கடன்,  விவசாயக் கடன், தொழிற்கடன், அடமானக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன.

வங்கிகள் இருக்கும் ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில், வங்கிக் கடன்கள் மூலமாக பொருளாதாரம் மேம்படுகிறது எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு பேருராட்சி அளவிலேயே 5-இல் இருந்து 10 வங்கிக் கிளைகள் உள்ளன. ஒரு கிளையில் சுமார் 30-40 ஆயிரம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இதில், மூன்றில் ஒரு பங்கு கணக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளன. இதேபோன்று நாடு முழுவதும் உள்ள ஊரகம் மற்றும் கிராமப் பகுதிகளில் கோடிக்கணக்கில் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன.

ஒவ்வொரு கிளையிலும் கோடிக்கணக்கில் அப்பகுதியினருக்கு கடன் வழங்கப்படுகிறது.  நகைக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் ஆகியன அதிகளவில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கிளையிலும் நகைக் கடன் மட்டும் நாள்தோறும் பல லட்சக் கணக்கில்  வழங்கப்படுகிறது.

இத்தகைய கடன் மூலம் பெறப்படும் வட்டி, போதிய பரிவர்த்தனை இல்லாத  கணக்குகளுக்கான கட்டணம், பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான கட்டணம் என வங்கி வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் என ஒவ்வொரு வங்கிக் கிளையும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றன.

இதோடு கணக்கில் வரவு-செலவு செய்யாமல் குறைந்த இருப்புத் தொகையுடன் கேட்பு இல்லாமல் இருக்கும் தொகையும் கோடிக்கணக்கில் உள்ளன.

வங்கிகள் கொடுக்கும் கடன் மூலமாக ஊரகம் மற்றும் கிராமப் பகுதிகள் தொழில் வளம் பெருக உதவியாக இருந்தாலும், வங்கிகளும் பெரிய அளவில் லாபம் ஈட்டுவதை மறுக்கமுடியாது. ஒவ்வொரு வங்கிக் கிளையும் ஈட்டும் லாபம் வெளியில் தெரியாமலேயே போய்விடுகிறது.

வங்கிகள் ஈட்டும் லாபம் குறிப்பிட்ட சதம் மத்திய அரசுக்கு டிவிடெண்ட்டாக  வழங்கப்பட்டாலும், வங்கிகள் தொழில் செய்து லாபம் ஈட்டிய பகுதிக்கு, வங்கிகளால் என்ன லாபம் கிடைத்தது என்பதுதான் தற்போது எழும் கேள்வி.

லாபம் ஈட்டிய பகுதிக்கு அவை என்ன சேவை செய்கின்றன? கணக்கு தொடங்குவதும், கடன் கொடுப்பதும் மட்டும்தான் சேவையா? ஊரக பகுதியாயினும், கிராமப்பகுதியாயினும் அப்பகுதி மக்களின் உழைப்பை சக்கையாக பிழிந்து வட்டியாக, அபராதமாக, சேவைக்கட்டணமாக பல்வேறு வழிகளில் வசூலித்து அதனால் கிடைத்த வருமானம் தானே அது!

ஊரகப் பகுதியிலும் சரி, கிராமத்திலும் சரி ஒரு டீ கடை தொழில் செய்பவர்கள்கூட அப்பகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு, கல்விப் பணிகளுக்கு, ஆன்மிகப் பணிகளுக்கு, பொங்கல் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தங்கள் லாபத்தில் இருந்து சிறு தொகையை நன்கொடையாக வழங்குகின்றனர்.

ஆனால், கோடிக்கணக்கில் லாபத்தை அள்ளும் வங்கிகளால், அவை இருக்கும் பகுதியின் வளர்ச்சியில் எந்தப் பங்களிப்பும் இருப்பதில்லை. சிறிதளவேனும்கூட நிதி உதவி செய்வது இல்லை. யோசிக்க வேண்டிய விஷயம் இது.

வங்கிக் கிளைகளை நாள்தோறும் திறந்துகொண்டிருக்கும் மத்திய நிதி அமைச்சர், வங்கிகளுக்கு கிடைக்கும் லாபத்தில் சிறு பகுதியை, அவை இருக்கும் பகுதியின் வளர்ச்சிக்கு செலவிட புதிதாக ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும்.

அதன்படி, ஒவ்வொரு வங்கிக் கிளையும் அவற்றின் லாபத்தில் குறைந்தபட்சம் ஒரு சதவீதமாவது அப்பகுதியின் வளர்ச்சிக்கு நிதியாக வழங்கவேண்டும். வளர்ச்சிப் பணிகளை நேரடியாக வங்கிகளே செய்ய இயலாது என்பதால், நிதியை உள்ளாட்சி நிர்வாகத்திடம் வழங்கலாம்.

கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலமாக பணிகளை சிறப்பாக  செயல்படுத்தலாம். மேலும், உள்ளாட்சிகள் அந்த நிதியை சரியாக பயன்படுத்துகிறதா என்பதை வங்கிகள் ஆய்வுசெய்து வருவதோடு, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

இதன்மூலம் மக்களிடம் இருந்து வட்டியாக வங்கிக்குச் செல்லும் பணத்தில், ஒரு சிறிய பகுதியாவது மீண்டும் மக்களுக்கே போய்ச் சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.