சமத்துவ ஆராதனை

ஆக்ஸ்ஃபாம் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2004இல் இருந்து 2008 வரை பொருளாதார நிலை மோசமானது என்றும் இது உலக அளவில் பொருளாதார தேய்மானத்தின் விளைவு என்றாலும், அதே வருடங்களில் இந்தியாவின் லட்சக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 61ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 250 பில்லியன் டாலர் சொத்து விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களிடம் குவிந்துள்ளது என்பது கசப்பான உண்மை.
Updated on
3 min read

ஆக்ஸ்ஃபாம் என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2004இல் இருந்து 2008 வரை பொருளாதார நிலை மோசமானது என்றும் இது உலக அளவில் பொருளாதார தேய்மானத்தின் விளைவு என்றாலும், அதே வருடங்களில் இந்தியாவின் லட்சக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 61ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 250 பில்லியன் டாலர் சொத்து விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களிடம் குவிந்துள்ளது என்பது கசப்பான உண்மை.

அதற்கு முக்கிய காரணம் 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி பங்கிடுதல், ராணுவ ஹெலிகாப்டர் கொள்முதல், ஆதர்ஷ் குடியிருப்பு என்று அடுக்கடுக்காக நீளும் ஊழல் பட்டியல். ஏழை எளியவர்களைப் பற்றியெல்லாம் வாயளவில் மட்டுமின்றி உணர்வளவிலும் சிறிதேனும் கவனம் இருந்தால் "கரீபி ஹட்டாவோ' என்ற ஏழ்மையை ஒழிப்போம் முழக்கம் எப்போதோ நிறைவேறியிருக்கும்.

சமத்துவமும் கண்ணியமும்தான் தனி மனிதனுக்குப் பெருமை சேர்க்கிறது. சம உரிமை, சம வாய்ப்பு, சமமாக நடத்தப்படுதல் இவையெல்லாம் கண்ணியமான சமுதாயத்தின் அடையாளங்கள். இவற்றைப் போராடிப் பெற வேண்டியதில்லை, ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளமான நாடுகள் மேன்மையடைந்ததற்கு அடிப்படைக் காரணம், மனித வளத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.

அந்த நாடுகளிலும் ஒரு காலகட்டத்தில் தேக்க நிலை இருந்தது. பிதுரார்ஜிதமும் அதிதீவிரப்போக்கும் சமூக வளர்ச்சிக்கு தடைகளாக இருந்தன. வெறியுணர்ச்சி சமூகத்தைப் பிளவுபடுத்தியது. தன் இன உணர்ச்சி, முன்னேற்றத்தின் சம பகிர்விற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இவற்றையெல்லாம் கடக்க சமுதாயப் புரட்சி தேவைப்பட்டது. மறுமலர்ச்சி ஒரு இயக்கமாக வளர்ந்து முன்னேற்றப்பாதைக்கு வழி வகுத்தது.

மறுமலர்ச்சி புதிய விஞ்ஞான சிந்தனைகளுக்கு ஊற்றாக அமைந்தது. முதலில் தொழிற்புரட்சி பின்பு விஞ்ஞானப் புரட்சி இப்போது அறிவுப்புரட்சி ஆகியவை இணையதளம் மூலம் உலக சமுதாயத்தை தழுவிவுள்ளன. அந்நியர் ஆட்சியில் இருந்த இந்தியா தொழில் விஞ்ஞானப் புரட்சியில் முழுமையாக பங்களிக்க முடியவில்லை. தற்போதைய அறிவுப் புரட்சியில் உலகிற்கு நம்மை முதன்மைப்படுத்த மிக அரிய வாய்ப்பு. பல்லாயிரக்கணக்கான நமது இளைய தலைமுறையினர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவது நமக்குப் பெருமை.

அமெரிக்காவின் விண்வெளி விஞ்ஞான மையம் நாஸாவில் 36 இந்திய விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர். தொழில் நுட்பம் மற்றும் கணினி மென்பொருள் வடிவமைத்து நிர்வகிப்பதில் தமிழர்கள் பல நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.

சிரத்தையோடு பணிபுரிதல், கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமுறைகளை பின்பற்றுதல், எவ்வளவு நேரமானாலும் சலிக்காமல் பணியை நிறைவு செய்தல், ஒத்துழைத்தல் இத்தகைய குணாதிசயங்கள்தான் இந்தியப் பணியாளர்களின் வலிமை. அதுவும் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் அவை மேலோங்கியிருப்பதால் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சர்வதேச அளவில் ஈட்டிய நற்பெயரைக் காப்பாற்றவும், மேலும் நமது இளைஞர்களை தயார் செய்வதற்கும் திறன் மேம்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் படித்ததற்கும் நிறுவனங்களில் பணிபுரிய வேண்டிய திறமைகளுக்கும் இடைவெளி இருக்கத்தான் செய்யும். அதனால்தான் பணியில் சேர்ந்தவுடன் அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் எல்லா பணிகளுக்கும் பொதுவான மென் திறன்கள் இருக்கின்றன. கணினி கையாள்வது, அதில் தகவல்களை சேமித்தல், பகிர்தல், இணைத்தலுக்கான பரிச்சயம், எழுத்து மற்றும் பேச்சுத்திறன் இவை முக்கியமானவை.

அதுதவிர, பிரத்யேகமாக தொழில் பட்டறை சம்பந்தமான திறமைகள், முக்கியமாக மின்சார இணைப்பு கையாளுதல், குழாய் பழுது பார்த்தல், மின்னியல் வல்லமை, தச்சு வேலை இவற்றுக்கு எப்போதுமே தேவை உண்டு. மத்திய கிழக்கு ஆசியாவில் எழுபதுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட வளர்ச்சியில் இந்தியாவிலிருந்து சென்ற தொழில் நுட்ப பணியாளர்களின் திறமைதான் அதிகமாக தேவையிருந்தது.

தமிழக முதலமைச்சரின் தொலை நோக்குத்திட்டம் 2023இன்படி கல்லூரியில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் மூலம் 16 வயதுக்கு மேற்ப்பட்ட சுமார் ஒன்றறைக் கோடி இளைய சமுதாயத்தினருக்கு திறன் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1990ஆம் வருடம் கணினி புரட்சி துவங்கியபோது நமது நாட்டில் ஒன்றரை லட்சம் கணினி பயிற்சி பெற்றவர்கள்தான் இருந்தார்கள். ஆனால் படிப்படியாக பயிற்சி கொடுக்கப்பட்டு வெகுவிரைவில் 25 லட்சம் மென்பொருள் நிபுணர்களை தொழில்நுட்ப யுகம் உருவாக்கியது. இதன் முலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு அடிப்படை வேலை அளிக்கப்படும்போதும் அது தொடர்பாக மூன்று சேவை துறை வேலைகள் உருவாகின்றன. இத்தகைய வேலை வாய்ப்பு பெருக்கலின் தாக்கம்தான் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. நாடு முழுவதும் ஜி.டி.பி. 6 சதவீதம் என்றிருக்கையில் தமிழ்நாட்டில் அது சுமார் 10 சதவீதத்தை தாண்டியுள்ளது என்பது தமிழக அரசின் மிகப்பெரிய சாதனை. அது தவிர, சராசரி தனி நபர் ஆண்டு வருவாய் ரூ.84,058. இது அகில இந்திய சராசரி தனி நபர் வருவாயை விட 30 சதவீதம் அதிகம்.

உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் தனி நபர் வருமானத்திற்கு இணையாக தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 2023ஆம் ஆண்டில் இன்றைய விலையில் ஆறு மடங்காக ரூ.6 லட்சம் அல்லது பத்தாயிரம் அமெரிக்க டாலராக உயரும் என்று அரசு குறிப்பு கூறுகிறது. இது நிச்சயமாக சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை.

மில்டன் ப்ரீட்மென் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் அடிப்படை சித்தாந்தம், வளர்ச்சிப்பணிகளின் மூலம் வசதிகள் பெருக்க வேண்டும்; செல்வம் கொழிக்க வேண்டும் என்பதே. செல்வப் பெருக்கே ஒரு நாட்டுப் பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

இல்லாமை இல்லாத நிலை என்பது முயன்றால்தான் வரும். இயலாமை முயலாமையின் கழிவு. நமது நாட்டில் எல்லா வளமும் இருக்கிறது. இயற்கையன்னையின் அருள் பார்வை உண்டு. இல்லாவிடில் வருடம் முழுவதும் விவசாயம் செய்யக்கூடிய பருவ நிலை உள்ளதே. மேலை நாடுகளில் அவ்வாறு இல்லை. பனி சூழ்ந்த இடங்களில் ஆறுமாதம் நிலம் முடியே இருக்கும்.

விளைச்சல் மட்டுமல்ல, விவசாயம், தானிய வகைகள் கொள்முதல், பாதுகாப்பான கிடங்கு வசதி, முறையான விநியோகம் இவைதான் முழுமையான விவசாயப் பயனளிப்பை சமுதாயத்திற்கு வழங்கும். கிடங்குகளின் கொள்ளளவை கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு அதிகரிக்கவில்லை. இருக்கும் கிடங்குகளும் சரியாக பயன்படுத்தவில்லை என்று மத்திய கணக்காயம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு மலிவு விலையில் வழங்குவதற்கு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவக திட்டம் எல்லாராலும் வரவேற்கப்படுகிறது. சர்வதேச தொண்டு நிறுவனங்களும் பல மாநில அரசுகளும் இத்திட்டத்தினைப் பாராட்டுகின்றன. ராஜஸ்தானிலிருந்து அதிகாரிகள் பார்வையிட்டு அந்த மாநிலத்திலும் இத்தகைய உணவகங்கள் துவங்க திட்டமிட்டுள்ளனர். தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் இத்திட்டம் துவங்க அந்தந்த மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சமுதாய மேன்மைக்கு அடிப்படையான அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற மூன்று வகை சுதந்திரத்தில் அந்நியர் ஆட்சியிலிந்து அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டோம். ஆனால் சமூக, பொருளாதார சுதந்திரம் முழுமையாக அடையவில்லை. சமத்துவ உரிமைகள் மூலமாக, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், நலிவுற்றோருக்கு சமூக பாதுகாப்பு நல்கும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் சமூக சுதந்திரத்திற்கு உத்வேகம் அளிக்கும்.

தமிழக அரசின் தொலை நோக்குத்திட்டம், சமூக பொருளாதார சுதந்திரம் எய்த துரித நடவடிக்கைளுக்கு வழிவகை செய்துள்ளது. உயர்விகித பொருளாதார வளர்ச்சியுடன் வருமானத்தில் சம நிலையின்மையை ஈடுகட்ட கணிசமான ஆதாரங்களை குறைந்த வருமானத் தொகுதியினருக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் தமிழ்நாடு வறுமையற்ற மாநிலமாகத் திகழும் என்பது உறுதி.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதி, 25 லட்சம் ஏழைகளுக்கு பசுமை வீடுகள், அனைவருக்கும் இடைக்கல்வி, கல்லூரிகளில் 50 சதவீதத்தினருக்கும் மேல் கல்வி, உயர் வேக நெடுஞ்சாலைகள், எல்லா மாவட்டங்களிலும் உயர்தர சாலைகள், தொழில் மையங்கள் ஆகியவை தொலை நோக்கு பார்வையில் திட்டமிட்டப்படி பணிகள் துவங்கியுள்ளன.

சமத்துவ சமுதாயம் உருவாக தமிழ்நாட்டில் எடுக்கப்படும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழகம் முதன்மையாக மிளிர்கிறது. சமத்துவ சமுதாயம் மலர்வதற்கு எல்லாருடைய உழைப்பும் ஒத்துழைப்பும் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com