வெற்றியடைய கற்றுத்தருவோம்!

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வைலான்ட் என்ற உளவியல் நிபுணரின் தலைமையிலான ஆய்வர் குழு, சிறுவர்களின் மனநிலையை ஆராயும் நோக்கில் நாற்பது ஆண்டு ஆய்வு நடத்தியது.

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வைலான்ட் என்ற உளவியல் நிபுணரின் தலைமையிலான ஆய்வர் குழு, சிறுவர்களின் மனநிலையை ஆராயும் நோக்கில் நாற்பது ஆண்டு ஆய்வு நடத்தியது. அதன் விளைவாகப் பெறப்பட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் நாமும் நம் குழந்தைகளுக்கு ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும்.

அந்த ஆய்வர் குழு, சில நூறு சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது வாழ்க்கை முறையைப் பதிவு செய்து கொண்டது. பின்னர் அவர்களுடைய 25, 31, 47 ஆகிய வயதுகளில் அவர்களை மீண்டும் சந்தித்து விசாரித்தது. அப்போது அவர்கள் விவரித்த தகவல்களை அவர்களுடைய இளம்பருவ வாழ்க்கை முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது.

இளம் பருவ வாழ்க்கை என்கிறபோது, பகுதி நேர வேலைகள், வீட்டு வேலைகள், விளையாட்டுகள், கல்வி சாராத நடவடிக்கைகள், பள்ளிகளில் அவர்களுடைய கல்வி முயற்சிகளை அளவிடும் வகையிலான தேர்வு மதிப்பெண்கள், பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்வு காணும் திறமை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஒருவர் புத்திசாலித்தனம் குறைந்தவராயிருக்கலாம்; ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கலாம்; படிக்க வாய்ப்பில்லாதவராயிருக்கலாம்; எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ, சாதியையோ சார்ந்தவராயுமிருக்கலாம்.

அவர் சிறு வயதிலேயே ஏதாவது வேலைகள் - அவை சொந்த வீட்டுக்காகக் கடைகண்ணிகளுக்குப் போய் வருதல், தம்பி தங்கைகளைக் கவனித்துக் கொள்ளுதல், வீட்டைப் பராமரித்தல், தாயாருக்கு உதவியாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், தந்தைக்கு உதவியாகத் தோட்டத்தில் அல்லது வயலில் வேலை செய்தல் போன்றவையாக இருந்தாலும்கூட - செய்தவராக இருந்தால், அவர் இளம் பருவத்தை சொகுசாகக் கழித்தவர்களைவிட அதிகமான மன நிறைவும் மகிழ்ச்சியும் அமைந்த வாழ்க்கையும் பெற்றிருந்தனர்.

வீட்டிலும் வெளியிலும் வேலை செய்து பழகிய சிறுவர்களுக்குச் செயல்திறன் அதிகமாயிருந்தது. சமூகத்தில் தான் ஒரு மதிப்புள்ள உறுப்பினர் என்ற மனோபாவம் அவர்களிடமிருந்தது. தன்னைப் பற்றி உயர்வான எண்ணத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டதால், பிறரும் அவர்களை உயர்வாக மதிக்கத் தொடங்கினர்.

சிறுவனாக இருந்தபோது ஒருவர் செய்த வேலைகளுக்கும், வளர்ந்தபின் அவர் பெற்ற வாழ்க்கை நிலைக்குமிடையில் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது. சிறு வயதில் சிறப்பான செயல்பாடுள்ளவர்கள் பெரியவர்களான பின் பலதரப்பட்ட மக்களுடன் சிறப்பான உறவுகளை உருவாக்கிக் கொள்வதில் மற்றவர்களைவிட இரு மடங்கு மேலான வெற்றி பெற்றிருந்தார்கள்.

அவர்களுடைய சராசரி வருமானம் மற்றவர்களுடையதைவிட ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது. அவர்களில் தக்க வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை மற்றவர்களினுடையதில் ஐந்தில் ஒரு பங்காகவே இருந்தது.

சிறுவயதில் வீட்டிலும், வெளியிலும் வேலை ஏதும் செய்யாமல் சொகுசாக வாழ்ந்தவர்களில், சிறை சென்றவர்களின் சதவீதம் மிக அதிகமாயிருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாயும், இளவயதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாயுமிருந்தது.

ஆய்வு செய்யப்பட்டவர்களின் மூளைத்திறன், புத்திக்கூர்மை, அவர்களுக்குக் கிட்டிய கல்வி வசதி, வாய்ப்புகள், அவர்களுடைய குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்து போன்ற காரணிகளால் அவர்களுடைய பிற்கால வாழ்க்கையில் பெரிய தாக்கங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இரண்டாவது உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. சிறுவர்கள்கூட குடும்பத்துக்கு உதவ வேண்டியிருந்தது. அச்சிறுவர்கள் 1980-களில் பெரியவர்களாகி அமெரிக்காவின் செல்வ நிலையை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்தனர். தங்கள் குழந்தைகளுக்கு வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தனர்.

ஒரு இளைஞர் தனது சிறுவயது அனுபவத்தின் அடிப்படையில் "குழந்தைகளை அளவுக்கு மீறி திட்டக்கூடாது, அடிக்கக் கூடாது. அதேசமயத்தில் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைத் நாம் செய்து தரக்கூடாது' என்று அன்னையருக்கு அறிவுரை கூறுகிறார்.

குழந்தைகள் நடக்கப் பழகியவுடனே அம்மாவுக்கு உதவி செய்ய விரும்பும். இரண்டு, மூன்று வயதில் அம்மாவுடன் கடைக்குப் போகவும் சிறிய பொருள்களைத் தூக்கி வரவும் ஆசைப்படும். துவைத்து வைத்தத் துணிகளை ரக வாரியாகப் பிரித்து வைக்கக் குழந்தையைப் பயிற்றுவித்தால் அதற்கு நிறங்களையும், வடிவங்களையும் பிரித்தறியும் பயிற்சி கிடைக்கிறது. அன்னை அதற்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.

ஐந்தாறு வயதில் சிறிய வேலைகளைச் செய்யவும், கடைகளுக்குப் போய்ச் சிறு பொருள்களை வாங்கி வரவும், பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும், அண்டை வீட்டாருக்குப் பொருள்களைக் கொடுத்துவிட்டு வரவும், அவர்களிடமிருந்து பொருள்களை வாங்கி வரவும் பழக்க வேண்டும். தமது துணிகள், புத்தகங்கள், பொம்மைகள் போன்றவற்றை ஒழுங்காக அடுக்கி வைக்கவும் பழக்குதல் நல்லது.

ஏழெட்டு வயதானவர்களிடம் உணவுப் பரிமாறுதல், படுக்கை விரித்தல், தம்பி தங்கைகளுக்கு விளையாட்டுக் காட்டுதல், உணவூட்டி விடுதல், தூங்கப் பண்ணுதல் போன்ற பணிகளை ஒப்படைக்கலாம்.

அவர்களுடைய சக்திக்கு மீறிய வேலைகளைத் தரக்கூடாது. ஒரு வேலையைச் செய்து முடிப்பதில் குழந்தைக்கு வெற்றி கிட்டவில்லையெனில், அது மனமுடைந்துபோய் மீண்டும் அந்த வேலையைச் செய்ய முன்வராது.

குழந்தையைவிடப் பெரியவர்களால் ஒரு காரியத்தைச் சிறப்பாகவே செய்ய முடியும் என்றாலும், குழந்தைகள் செய்யக்கூடிய காரியத்தைப் பெரியவர்கள் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யக்கூடாது. சாப்பாட்டுத் தட்டை குழந்தை சரியாகக் கழுவவில்லை எனில், திட்டிவிட்டு அம்மா அந்தத் தட்டை மீண்டும் கழுவக் கூடாது. அதனிடமே தட்டைக் கொடுத்துச் சரியான முறையில் கழுவச் செய்ய வேண்டும்.

ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்துகாட்டி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிலமுறை அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையைச் செய்து காட்டி, பின்னர் அவர்களே அதை முடிக்கும்படி விட்டுவிட வேண்டும்.

இதன் மூலம் அவர்களுடைய தன்னம்பிக்கையும் செயல்திறனும் வளரும். அவர்கள் வேலை செய்யும்போது அனாவசியமாகக் குறுக்கிடக் கூடாது. தேவையேற்பட்டால் ஆலோசனை அல்லது வழிகாட்டலை மட்டுமே அளிக்க வேண்டும்.

அவர்கள் தமக்குத் தோன்றுகிற முறையில் அந்த வேலையைச் செய்ய விரும்பினால், அதை அனுமதித்துவிட வேண்டும். அதில் தவறு இருந்தால் மென்மையாகச் சுட்டிக்காட்டினால் போதும். வேலையைச் செய்து முடிக்க நியாயமான அவகாசம் அளிக்க வேண்டும்.

ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடித்த குழந்தைக்கு ஒரு புன்னகை, ஒரு முத்தம், ஒரு தாங்க்யூ ஆகியவையே சிறந்த பரிசுகள். அதன் காதில் விழுகிற மாதிரி, அது செய்து முடித்த செயலைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்வது அதற்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.

குழந்தைகளின் கைச்செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பது அவசியம். ஆனால், ஒரு செயலைச் செய்ததற்கான கூலியாகவோ லஞ்சமாகவோ அதைத் தரக்கூடாது. அதேசமயம், அந்தக் குழந்தை கட்டாயமாகச் செய்து முடிக்க வேண்டிய குளித்தல், சாப்பிடுதல், வீட்டுப்பாடம் எழுதுதல் போன்ற வேலைகளுக்காகப் பணம் அல்லது மிட்டாய் கொடுப்பது தவறு. அவ்வாறு செய்து பழக்கிவிட்டால், அந்தக் குழந்தை எல்லா வேலைகளுக்கும் காசு கேட்க ஆரம்பித்து விடும்.

வீட்டுக் கொல்லையில் குவிந்து கிடக்கும் குப்பையை எடுத்து வெளியே கொட்ட ஒரு நபரை அமர்த்தினால் என்ன செலவாகும் என்று தெரிந்துகொண்டு அந்தக் காசைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து அந்த வேலையைச் செய்யச் சொல்லலாம். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேலையின் பண மதிப்பு பிள்ளைகளுக்குத் தெரிய வருவதுடன், உரிய கூலியைப் பேச்சுவார்த்தை மூலம் நிர்ணயித்துக் கொள்கிற திறமையும் ஏற்படும்.

குழந்தைகளுக்குப் படிக்கவும், விளையாடவும் போதுமான அவகாசமளித்து, மீதமுள்ள நேரத்தில் அவர்களிடம் வேலை வாங்க வேண்டும். தாயும் தந்தையும் வேலைக்குப் போகிற வீடுகளில் வீட்டு வேலைகள் முழுவதும் பிள்ளைகளின் தலையில் சுமத்தப்பட்டு விடுவதுண்டு.

கொத்தடிமையைப்போல உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், அவர்

கள் உற்சாகமும் சுயமதிப்பும் இல்லாதவர்களாகி விடுவார்கள். இது நம் குடும்பம், இதை நிர்வகிப்பதில் நமக்கும் பொறுப்பு உண்டு என்ற உணர்வு வரும் வகையில் பிள்ளைகளை நடத்தினால் அவர்களுக்கு அடிமை மனப்பான்மை ஏற்படாது.

வேலையாட்கள் இருக்கக்கூடிய வசதியான குடும்பங்களில்கூட பிள்ளைகளை சமையற்காரருடன் கூடமாட நின்று சிறு சிறு வேலைகளைச் செய்யவோ, தோட்டக்காரருடன் போய்க் களையெடுக்கவோ நீர் பாய்ச்சவோ பழக்கலாம்.

அதனால், அவமானமோ மதிப்புக் குறைவோ ஏற்பட்டு விடாது. மாறாக அவர்களுக்குச் சமநோக்கும், சகஜ மனப்பான்மையும் வளர்ந்து சிறப்பான எதிர்காலத்தை அது அமைத்துத் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com