விளையாட்டு வினையாகும்

ஒருவரின் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரை என்பார்கள். அதற்காக அடுத்தவரின் மூக்கு நுனி வரை விரலை நீட்டி பேசுவது முறையாகாது.
Updated on
2 min read

ஒருவரின் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரை என்பார்கள். அதற்காக அடுத்தவரின் மூக்கு நுனி வரை விரலை நீட்டி பேசுவது முறையாகாது.

அதுபோல, இந்தியா ஜனநாயக நாடு; இங்கு என்ன வேண்டுமானாலும் செய்ய ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு என்கிற வாதத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, நமது நாட்டில் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடிய அளவுக்கு பல நேரங்களில் சிலர் நடந்து கொள்கின்றனர்.

சமீபத்தில் ஒருவர், தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் தனக்கு பாதிப்பு வருவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால், முறையாக எந்தவித விதிமுறை மீறலும் இல்லாமல் கடை அமைக்கப்பட்டிருப்பதாக எதிர்தரப்பில் பதில் கூறப்பட்டது.

அதற்கு நீதிமன்றம், கடையானது எவ்வித விதிமுறை மீறல் இல்லாமல் நிறுவப்பட்டிருக்கலாம். ஆனால், குடிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தனி மனிதனின் உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிற எதையும் அனுமதிக்க முடியாது. எனவே, அந்த இடத்திலிருந்து கடையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

தனி மனிதனின் பாதிப்புக்கே இப்படி என்றால், நிர்வாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுவது வழக்கம். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையிலோ அல்லது காவல் நிலையத்திலோ தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக மனு அளிப்பார்கள்.

ஆனால், சமீப காலமாக இந்த முகாம் போலீஸ் பாதுகாப்புக்கிடையே நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. எப்போது கூட்டம் நடந்தாலும் யாராவது ஒருவர் தீக்குளிக்க முயற்சிக்கிறார் அல்லது விஷம் குடிக்க முயற்சிக்கிறார்.

ஆகவே, கூட்டத்துக்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அத்துடன் தீப்பெட்டியைக்கூட கொண்டு செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது.

முன்பெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் மக்கள் மனுக்களுடன் கூட்டமாக காணப்பட்ட நிலைமை மாறி தற்போது போலீஸார் அதிக அளவில் காணப்படுகின்றனர்.

சில முக்கிய தினங்களில் போலீஸார் ரயில், பேருந்து நிலையங்களில் சோதனை செய்வது போன்ற தினமாக குறைதீர் கூட்ட நாள்களும் மாறிவிட்டன.

இதற்கு என்ன காரணம்? ஏழை எளியவர்களுக்கு நிகழும் கொடுமைகள், அரசு அலுவலகங்களில் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை அணுகி முறையிட்டும் தீர்வு காணப்படாததால் அவர்கள் விரக்தியடைந்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துக் காத்திருக்கின்றனர்.

சில நேரங்களில் மனு கொடுக்க அனுமதி மறுக்கப்படும்போது தங்களது நிலையை அரசுக்கு உணர்த்த இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர்.

பொதுவாக மக்களுக்கு தங்களது பிரச்னைதான் பெரிதாக தெரிகிறதே தவிர, உயிரை மாய்த்துக் கொள்வதாக பயமுறுத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

தனி மனித உரிமைகள் பறிக்கப்படும்போதோ அல்லது பாதிக்கப்படும்போதோ அரசு கண்டிப்பாக பாதுகாப்புக்கு வர வேண்டும் என்பது நியாயம்தான். ஆனால், எல்லாப் பிரச்னைகளும் உடனடியாக தீர்க்கக்கூடியவையாக இருப்பதில்லை.

தனி நபர்கள் மட்டுமல்ல, சங்கங்களும் பொதுநல அமைப்புகளும்கூட தங்கள் பிரச்னைகளுக்கும், மக்கள் பிரச்னைகளுக்கும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்ட நிலைகளின் மூலம் பிரச்னைகளின் தீவிரத்தை அரசுக்கு உணர்த்த முயற்சிக்கின்றன.

தனது உயிரை பணயம் வைத்து அந்தப் பிரச்னையின் வீரியத்தை அரசுக்கு நிலை நாட்டுதல் என்பது முட்டாள்தனம்.

அந்த ஒருவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்றைய அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, மற்றவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் போய்விடுகிறது.

ஒருவரால் 100 பேர் பாதிக்கப்படுகின்றனர். இப்போது பிரச்னை யாரால்? இப்படிப்பட்டவர்களை என்ன செய்வது.? 

மனித உயிர்கள் விலை மதிப்பு மிக்கவைதான். அரசு அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் என்பதும் உண்மைதான். அதற்காக இதுபோன்ற விளையாட்டுகள் தேவைதானா?

விளையாட்டு சில நேரம் வினையாகி விடும். எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com