அழுது வாழ வேண்டும்

கண்ணிலே நீரெதற்கு? இந்தக் கேள்விக்குக் "காலமெல்லாம் அழுவதற்கு!' என்று ஒரு கவிஞர் சொன்னார்.
Updated on
3 min read

கண்ணிலே நீரெதற்கு? இந்தக் கேள்விக்குக் "காலமெல்லாம் அழுவதற்கு!' என்று ஒரு கவிஞர் சொன்னார். "அண்ணன் அடிச்சான், அண்ணி அழுதாள், அவள் கண்ணிலேயிருந்த அழுக்கெல்லாம் போச்சு!' என்று நாத்தனார் ஒருத்தி கேலி பண்ணினாளாம். உண்மையிலேயே கண்ணீர் உடலின் கழிவுகளை நீக்க உடல் கையாளுகிற ஓர் உபாயம் என்று விஞ்ஞானம் கூறுகிறது.

வெங்காயத்தை உரிக்கிறபோது வருகிற கண்ணீருக்கும், அழுகை அல்லது ஆனந்தம் காரணமாக வருகிற கண்ணீருக்கும் பெரும் வேதியியல் வேறுபாடு உண்டு. உணர்ச்சிகளாலேற்படும் மன இறுக்கத்தின்போது, உடலில் உருவாகும் கழிவுப் பொருள்கள் அழுகை அல்லது ஆனந்தக் கண்ணீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதாபாத்திரத்தின் வாயிலாக "அழுகை நுரையீரல்களைத் திறந்து விடுகிறது; முகத்தை அலம்பி விடுகிறது; கண்களுக்குப் பயிற்சியளிக்கிறது; மன இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. அதனால், போதுமென்கிற அளவுக்கு அழுது தீர்த்து விடு!' என்கிறார்.

உணர்ச்சிக் குமுறல்களின் வெளிப்பாடாகக் கண்ணீர் விட்டு அழுவதில் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால், அதற்கென்று "நீலிக்கு நெற்றியில் கண்ணீர்' என்று சொல்ல வைக்கிற மாதிரி எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது.

கண்ணீர் விட்டு அழுதால் மனம் லேசாகி அதன் இறுக்கம் தணியும். அடிக்கடி கண்ணீர் விட்டு அழுகிறவர்களுக்கு மன அழுத்தத்தினால் வருகிற வயிற்றுப் புண், மலக்குடல் வீக்கம், மூலம் போன்ற கோளாறுகள் வருவதில்லை.

ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகவும் அடிக்கடியும் அழுகிறார்கள். அதற்கு அவர்களது உடல் வேதித்தன்மை காரணமாயிருக்கலாம்.

கண்ணின் பாதுகாப்புக்கு மூன்று அடுக்குகள் அமைந்துள்ளன. விழிவெளிப் பரப்பின் மேல் சளி போன்ற ஒரு படலம் பரவி அதை ஒரு சீரான ஈரப் பதத்தில் வைக்கிறது. நடுவிலுள்ள நீர்ப் படலம் அதற்குத் தேவையான கண்ணீரை வழங்கி ஈரத்தையும் வழவழப்பையும் வழங்குகிறது. வெளிப்புறமாக உள்ள ஒரு நெய்ப்படலம், கண்ணீர் ஆவியாகாமலும் விழி வறண்டு விடாமலும் தடுக்கிறது.

சளிப்படலம் கண்ணின் வெளிப்பரப்பிலுள்ள ùஸல்களிலிருந்து உருவாகிறது. வெளிப்புறமுள்ள நெய்ப்படலம், இமைகளின் விளிம்புகளிலுள்ள நுண் சுரப்பிகளிலிருந்து வெளிப்படுகிறது. நடுவிலுள்ள நீர்ப்படலம், கண் குழியின் மேற்பகுதியிலுள்ள கண்ணீர்ச் சுரப்பிகளில் உற்பத்தியாகிறது. அது உபரியாக உற்பத்தியாகிறபோது கண்ணீராக வெளியே வழிகிறது.

சராசரியாக நாம் நிமிஷத்துக்குப் பதினாறு முறை கண்ணைச் சிமிட்டுகிறோம். அப்போது இமைகள் கண்ணின் மேற்பரப்பில் படியும் தூசுகளை மூக்குப் பக்கமுள்ள விழியோரத்துக்குத் தள்ளுகின்றன. அங்குள்ள சிறு வடிகால் பள்ளங்கள் வழியாக கண்ணீர் அந்த அழுக்குகளைக் கழுவி வெளியே தள்ளிவிடும்.

கண் உறுத்தல், அழுகை, ஆனந்தம் போன்ற காரணங்களால் பெருகும் கண்ணீர் விழியின் உட்புற முனைகளிலிருந்து மூக்கிற்குள் புகுந்து வெளிப்படுவதுண்டு. அதை "அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்' என்ற சொற்றொடர் குறிப்பிடும்.

சினிமா நடிகர்கள் "கிளிசரின்' உபயத்தில் விடுகிற கண்ணீர், விழியின் வெளிமுனைகளிலிருந்து வழியும். அதிக அளவிலான கண்ணீர் இமைகளில் தளும்பி நடுக்கண் பகுதியிலிருந்து கன்னங்களில் இறங்கும்.

கண்ணீரில் உள்ள லைசோசைம் என்ற நொதி, சிறந்த கிருமிக் கொல்லியாகும். வியர்த்தல், சிறுநீர் கழித்தல் ஆகியவற்றைப் போன்று கண்ணீர் விடுதலும் ஒரு கழிவு நீக்கச் செயல்பாடு என வில்லியம் ஃப்ரே என்ற அமெரிக்க விஞ்ஞானி கண்டு பிடித்தார்.

சில ஐரோப்பிய ஆய்வர்கள் கண்ணீரில் மாங்கனீஸ் என்ற உலோகம் இருப்பதைக் கண்டனர். அது உணவு மூலமாக உடலுக்குள் புகும் தனிமம். ரத்த சீரத்திலுள்ளதை விட, கண்ணீரில் மாங்கனீஸ் செறிவு அதிகமிருக்குமானால் கண்ணீர்ச் சுரப்பிகள் ரத்தத்திலிருந்து உபரியான கனிமங்களைத் திரட்டிக் கண்ணீர் மூலம் வெளியேற்ற வல்லவை எனப் பொருளாகிறது.

"உடலில் மாங்கனீசின் செறிவு அதிகமானால் மனச்சோர்வும் எரிச்சலும் அதிகமாகும்' என ஃப்ரே கண்டு பிடித்தார். சீரத்திலுள்ளதை விட முப்பது மடங்கு அதிகமான மாங்கனீஸ், உணர்ச்சிக் கண்ணீர், உறுத்தல் கண்ணீர் ஆகிய இரண்டு வகையிலும் இருப்பதாக அவர் கண்டார்.

உணர்ச்சிக் கண்ணீரில், உறுத்தல் கண்ணீரை விட அதிகமான அளவில் புரதங்கள் உள்ளன. கண்களில் வலி மரப்புப் பொருள்களைத் தடவினால், உறுத்தல் கண்ணீர் வெளிப்படுவது கணிசமாகக் குறையும். ஆனால், உணர்ச்சிக் கண்ணீர் வழக்கமான அளவிலேயே வெளிப்படும்.

எனவே, உறுத்தல் கண்ணீரும், உணர்ச்சிக் கண்ணீரும், வெவ்வேறு நரம்பமைப்புகளின் மூலம் தூண்டப்படுவதாக ஃப்ரே

கூறினார்.

கண்ணீர் விட்டழுதால் மனச்சுமை குறைகிறது. அழத்தூண்டும் சோகத்திற்கும், அழுகைக்குமிடையில் ஒரு ரசாயனத் தொடர்பு உள்ளது. ஃப்ரே 18 முதல் 75 வயது வரையுள்ள ஆய்வுத் தொண்டர்களிடம், கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்ணீர் விட்டழுத சம்பவங்களின் எண்ணிக்கை, அவற்றின் பின்னணிகள், அழுத பின் அவர்களது மன நிலையிலேற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த முப்பது நாள்களில் பெண்கள், ஆண்களைவிட அதிகமாக உணர்ச்சி மேலிட்டுக் கண்ணீர் விட்டிருந்தனர். பெண்களில் 85 சதவீதத்தினரும், ஆண்களில் 73 சதவீதத்தினரும் அழுத பின் மனச்சுமை குறைந்ததாக உணர்ந்தனர். அந்த முப்பது நாள்களில் 6 சதவீதப் பெண்களும், 45 சதவீத ஆண்களும் ஒருமுறைகூட அழவில்லை.

ஓர் இளம் தாய் முப்பது நாள்களில் 16 முறை அழுதிருந்தாள். தனது குழந்தைகள் நீந்தப் பயிற்சி பெற்றுத் திறமையுடன் நீந்துவதைக் கண்டபோது ஏற்பட்ட ஆனந்தம், பிறந்தகத்திற்குப் போகுமுன் கணவனிடம் விடை பெற்றபோது ஏற்பட்ட வேதனை, சமையல் சரியாக அமையாத போது ஏற்பட்ட நிராசை எனப் பல காரணங்களால் அவள் அழுதிருந்த போதிலும், அவளது குடும்ப வாழ்க்கையில் பூரணமான மனநிறைவும், எதிர்காலத்தைப் பற்றித் தளராத நம்பிக்கையும் கொண்டிருந்தாள்.

ஓர் இளைஞன் தனது பாசத்துக்குரிய அத்தை மரணமடைந்த செய்தி கேட்டபோது ஒரு முறையும், போரின் கொடுமைகளைச் சித்தரித்த ஒரு திரைப்படத்தைப் பார்த்தபோது ஒரு முறையும் அழுதிருந்தான்.

பெண்கள் அழுவதற்கு, உறவினர் தொடர்பான சம்பவங்களே பெரிதும் காரணமாகின்றன. பிரிவு முதன்மையான காரணம். பிரிந்தவர் கூடினால் பேச்சைவிடக் கண்ணீர்தான் அதிகமாக வருகிறது. அழுகை மூட்டிய சம்பவங்களில் 49 சதவீதம் சோகமும், 21 சதவீதம் ஆனந்தமும், 10 சதவீதம் கோபமும் காரணமாயிருந்தன. எல்லாப் பெண்களுக்கும் கோபப்படும்போது கண்ணீர் வந்தது. ஆண்கள் சினம் கொள்கிற போது கண்ணீர் விடுவதில்லை.

மார்கரட் க்ரீப்பூ என்ற ஆய்வர் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வில், 137 நபர்களிடம் கேள்விகேட்டு ஆரோக்கியமானவர்களையும், மன அழுத்தத்தினால் அவதிப்படுகிறவர்களையும் ஒப்பீடு

செய்தார்.

ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளைவிட அதிகமான முறை அழுதிருந்தார்கள். அவர்கள் அழுவதற்கு வெட்கப்படவில்லை. அழுத பின் அவர்களுடைய மனதில் நிம்மதி நிரம்பியது.

சமூகக் கட்டுப்பாடுகள், பெற்றோரின் வளர்ப்பு முறை போன்றவை, அழுகையை பலவீனம், ஒழுங்கின்மை போன்றவற்றின் அறிகுறிகளாகச் சித்திரிக்கின்றன. அவற்றின் காரணமாக அழுகையை மென்று விழுங்குகிறவர்கள் உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றால் பீடிக்கப்படுகிறார்கள்.

ஆரோக்கியமானவர்கள் விடும் கண்ணீர், கோபதாபங்களையும், சோகங்களையும், மனச் சோர்வுகளையும் கழுவி வெளியேற்றி ஆன்மாவைச் சுத்தம் செய்து

விடுகிறது.

மகாத்மா காந்தி இறந்தபின் பல இரவுகளில் பண்டித நேரு தனிமையிலிருக்கும்போது மேஜையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுவார் என அவருடைய தனிச் செயலராயிருந்த மத்தாய் ஒரு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். போர்முனையிலிருந்து வரும் அறிக்கைகளைப் படிக்கும்போது சர்ச்சில் கண்கலங்குவாராம்.

"ஆண் பிள்ளை அழலாமா' என்ற கேள்வியே பல ஆண்களை அழவிடாமல் வயிற்றுப் புண்களை வரவழைக்கின்றது. கண்களில் நீர் வரவழைக்கும் சூழ்நிலைகளை விட்டு விலகிப் போய்விடவே ஆண்கள் முனைகிறார்கள். அழுகிற பெண்களை யாரும் விரும்புவதில்லை.

அண்மை ஆய்வுகள்படி, சிறு குழந்தைகள் அழுகிற பாணியில் ஆண், பெண் என்ற வேறுபாடு எதுவுமில்லை. பருவமெய்தும் வரை இரு பாலரும் ஒரே மாதிரிதான் அழுகிறார்கள்.

12 முதல் 18 வயது வரையான காலத்தில் பெண்களின் உடலில் ப்ரோலாக்டின் என்ற ஹார்மோனின் சுரப்பு ஆண்களைவிட 60 சதவீதம் அதிகமாயிருக்கிறது. அந்தக் காலகட்டங்களில் பெண்கள், ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாக

அழுகிறார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com