ஆறு மாத கால அசுர சாதனை!

உற்பத்தித் திறன், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழல், ஏற்றுமதி ஆகியவற்றில் மற்ற நாடுகளைவிட இந்தியா

உற்பத்தித் திறன், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழல், ஏற்றுமதி ஆகியவற்றில் மற்ற நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. இந்நிலை மாற வேண்டுமானால், வெளிப்படைத்தன்மை கொண்ட திறமையான மத்திய அரசு வேண்டும்.

திறமை, வெளிப்படையான நிர்வாகம் மூலமே நாட்டு மக்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க முடியும்.

நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், அதிவேக ரயில்கள், மருத்துவ வசதிகள், தடையில்லா மின்சாரம், மனித வளம், விவசாயத்தில் வளர்ச்சி ஆகிய அடிப்படை  கட்டமைப்புகள் வலுவாக இருந்தால்தான், ஒரு நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிபெறும்.

விண்வெளி ஆராய்ச்சியிலும், ராணுவத்திலும் இந்தியா வளர்ச்சி பெற வேண்டும். எவ்வளவுதான் முன்னேறிய நாடாக இருந்தாலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.

மோடி, பிரதமர் பதவியில் ஆறு மாதங்களை நிறைவு செய்துவிட்டார். இந்த ஆறு மாதங்களில் அவரது செயல்பாடுகள் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் விதத்தில் அமைந்துள்ளன. பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததில் அவரது ராஜதந்திரம் வெளிப்பட்டது.

அண்டை நாடுகளுடன் மட்டுமல்ல, உலக நாடுகளுடனும் உறவை மேம்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில் பூடான், நேபாளம், பிரேசில், அமெரிக்கா, ஜப்பான், மியான்மர், ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயரச் செய்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களின்போது அந்தந்த நாட்டுத் தலைவர்களை மட்டுமே சந்திக்காமல், தொழிலதிபர்கள், இந்திய வம்சாவளியினர் என பல தரப்பினரையும் சந்தித்து அவர்களுக்கு இந்தியாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்.

பல நாடுகளின் நாடாளுமன்றங்கள், கூட்டங்களில் உரையாற்றிய மோடி, இந்தியாவில் குவிந்துள்ள வாய்ப்புகளை எடுத்துக் கூறி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

விடுத்தது உலகத் தலைவர்களை வியக்க வைத்துள்ளது. மோடியின் பேச்சிலிருந்த அடக்கமும், எளிமையும் இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தின.

பிரதமர் எதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும்? பதவியேற்றது முதல் வெளிநாட்டுப் பயணத்திலேயே பிரதமர் இருக்கிறார் என்றெல்லாம் முழு விவரங்களையும் அறியாதவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

125 கோடி மக்களைக் கொண்ட நம் நாட்டில் அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு முதலீடு தேவைப்படுகிறது.

கிராம ஊராட்சி முதல் மத்திய அரசு வரை பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நமது நாட்டில் தேவையான நிதியை ஒதுக்க முடியாது. உள்நாட்டு

வரிகள், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதியங்களிடம் கடன் பெறுவது, உள்நாட்டில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது, அன்னிய முதலீடு ஆகிய நான்கு வழிகளில் நமக்குத் தேவையான நிதியைப் பெறலாம்.

சுமார் 60 கோடி இளைஞர்களைக் கொண்ட நம் நாட்டில், அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமையாகும்.

இந்த இக்கட்டான நேரத்தில் அன்னிய முதலீடு இல்லாமல் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது சாத்தியமல்ல.

இதனை உணர்ந்துதான் "மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்) என்ற திட்டத்தை மோடி கொண்டுவந்துள்ளார். பிரதமரின் முயற்சிக்கு பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று ரூ. 2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளார்.

ஜப்பான் வரலாற்றில் முதல் முறையாக தலைநகர் டோக்கியாவுக்கு வெளியே பழமையான கியாட்டோ நகரில் பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் அந்நாட்டு அதிபர். இப்படிப்பட்ட மரியாதை இதுவரை எந்த ஒரு இந்தியப் பிரதமருக்கும் கிடைத்ததில்லை. ஜப்பானும் நமது நாட்டில் லட்சக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

அதுபோல, பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது ரஷியா, மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பலநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்கூறி முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியர்களிடம் மோடி ஆற்றிய உரை அவருக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரை அமெரிக்கப் பத்திரிகைகள் "தி வேர்ல்ட் ராக் ஸ்டார்' என வர்ணித்து எழுதின.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து நாடு முழுவதும் ஊடகங்களிலும், பொதுத் தளங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடுமையான எதிர் விமர்சனங்களும் வந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், கொள்கைகள் இருக்கும் நம் நாட்டில், மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பானதுதான்.

மாறுபட்ட கருத்துகள் இருப்பதை தவறு எனக் கூற முடியாது.

அதே நேரத்தில், ஒரு உண்மையை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். மோடி நமது பிரதமர் என்பதை மறுக்கவோ, ஒதுக்கவோ முடியாது. நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமராக நாம் பார்க்கக்கூடாது.

அவர் இந்தியாவின் பிரதமர். அரசியல் என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே இருக்க வேண்டும். தவறுகள், கொள்கை முரண்பாடுகள் இருந்தால் மட்டுமே விமர்சிக்க வேண்டும்.

கடந்த ஆறு மாத கால ஆட்சியில், "தூய்மை இந்தியா', "மேக் இன் இந்தியா', "100 நவீன நகரங்கள்', "அனைவருக்கும் வங்கிக் கணக்கு' உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தூய்மை இந்தியா திட்டம் அனைத்துத் தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனவர்களும், பொதுமக்களும் போராட, வழக்கு செலவுக்காக தமிழக அரசு ரூ.20 லட்சம் கொடுத்தது.

பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பேசினார். இதனைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வளவும் செய்துவிட்டு, இதற்கு நான் தான் காரணம் என ஆர்ப்பாட்ட அரசியல் செய்யாமல் தனது கடமை என அமைதியாக இருக்கிறார் மோடி.

நமது முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் ஏழ்மையைப் போக்க நீர்ப் பாசனத் திட்டங்கள், அணைக்கட்டுகள், இரும்பு உருக்காலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், ரயில் பெட்டி தொழிற்சாலை, ஆயுதத் தொழிற்சாலை என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்.

இரண்டாவது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி "ஜெய் ஜவான்', "ஜெய் கிசான்' என முழக்கமிட்டு ராணுவ வீரருக்கு நிகராக விவசாயிக்கு மரியாதை அளித்தார்.

வங்கிகளை தேசியமயமாக்கி, பாகிஸ்தான் போரில் வென்று வங்கதேசத்தை உருவாக்கி, முதல் அணுகுண்டை சோதனை செய்து இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்தார் நமது மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி.

இந்திராவுக்கு அடுத்து பிரதமரான ராஜீவ் காந்தி, இன்றைய நவீன தொலைத் தொடர்பு, கணினி யுகத்துக்கு அடித்தளமிட்டார். தங்கத்தை அடகு வைக்கும் ளவுக்கு பாதாளத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்தவர் நரசிம்ம ராவ்.

"தங்க நாற்கரச் சாலை' திட்டத்தின் மூலம் இந்தியாவை இணைத்து தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா சாதனைப் படைக்க வித்திட்டார் வாஜ்பாய்.

இவர்களின் வரிசையில் 15-ஆவது பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடியும் தனது சாதனைப் பயணத்தை தொடங்கியுள்ளார். எல்லைப் பிரச்னை இருந்தாலும் சீனாவுடன் நல்லுறவு, அதிவேக ரயில் திட்டத்துக்கு தொழில்நுட்ப உதவியைப் பெறுதல் என தயக்கமின்றி இந்தியாவின் நலன் ஒன்றையே இலக்காகக் கொண்டு பயணத்தை தொடங்கியுள்ள மோடிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்; துணை நிற்க வேண்டும். அப்போது தான் நமது நாடு வல்லரசாக மாறும்.

இன்று உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு ஒரு தனி மரியாதை உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com