அண்ணாமலைப் பல்கலை: மீண்டெழும் கலைக்கோயில்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்ற ஆலவிருட்சம் 1929-ஆம் ஆண்டு, அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் தோற்றுவிக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்ற ஆலவிருட்சம் 1929-ஆம் ஆண்டு, அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலைநகரில் தோற்றுவிக்கப்பட்டது.

பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய மாவட்டமான தென்னாற்காடு மாவட்டத்தை செட்டிநாட்டரசர் கொடைவள்ளல் அண்ணாமலைச் செட்டியார் தேர்ந்தெடுத்ததன் நோக்கமே பின்தங்கிய இப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் கல்வியறிவு பெற்று முன்னேற வேண்டும் என்பதே.

இந்திய அளவில் தலைசிறந்த அறிஞர்கள் மற்றும் கல்விமான்களை அண்ணாமலைக்கு அழைத்து வந்து பணியமர்த்தி அழகு பார்த்தவர் அண்ணாமலைச் செட்டியார் ஆவார். இதனால் இப்பல்கலை வளர்ச்சி விரைவில் உயரிய நிலையை எட்டியது.

தென் இந்தியாவின் நாளந்தா என புகழப்படும் அளவுக்கு பல்கலைக்கழகம் தரம் உயர்ந்தது. உலகின் மிகப்பெரிய உண்டு உறைவிடப் பல்கலையாக அண்ணாமலைப் பல்கலை மாறியது. ஆரம்பம் முதலே இது ஒரு அரசுப் பல்கலைக்கழகம்தான்.

சில சிறப்பு அதிகாரங்களுடன் இணைவேந்தர் பதவி மட்டுமே அண்ணாமலைச் செட்டியாருக்கு வழங்கப்பட்டது. அண்ணாமலைச் செட்டியார் ரூ.20 லட்சத்தையும் ஏற்கனவே அவர் நடத்தி வந்த மீனாட்சி கல்லூரியோடு இணைந்த 300 ஏக்கர் நிலத்தையும் அப்போதைய சென்னை மாகான அரசுக்கு தானமாக அளித்து விட்டார்.

ஆனால், அன்றைய சென்னை மாகாண அரசோ ரூ.25 லட்சத்தை பல்கலைக்கழகத்திற்காக வழங்கியது. அன்று முதல் இன்று வரை அரசு இப்பல்கலை வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி பணத்தை செலவிட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழக செயல்பாடுகளை ஆய்வு செய்து சட்ட திருத்தங்களை மேற்கொள்ள 1965-இல் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் ஒரு குழுவை நியமித்தார். ஆனால், அக்குழு அறிக்கைகள் அமல் படுத்தப்படவில்லை.

1980-களில் பல துறை பிரிவுகளுடன் பல்கலை வளர்ந்தது. அதே சமயம் பிரச்னைகளும் கூடவே வளர்ந்தது.

ஆசிரியர்கள் ஊழியர்கள் நிரந்தரப் படுத்தப்படாமல் தாற்காலிக அடிப்படையிலேயே பணியில் தொடர அனுமதிக்கப்பட்டனர். சொற்ப சம்பளமே வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. ஆசிரியர், ஊழியர், ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து போராடினர். அப்போது உருவானதுதான் கூட்டு நடவடிக்கைக் குழு.

மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு ஆசிரியர், ஊழியர்கள் பணி நிரந்தரம் பெற்றனர். அதன் பிறகும் பல போராட்டங்கள் தொடர்ந்தன.

1983-இல் அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் இப்பல்கலையின் இணை வேந்தரை மாற்ற முடிவு செய்தார். பிறகு அப்போதைய இணை வேந்தர் முத்தையா செட்டியாரின் தலையீட்டையடுத்து அம்முயற்சியை கைவிட்டார். இதன்பிறகு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன.

ஏறக்குறைய 85 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்று அப்பல்கலைக்கழகம் 10 புலங்கள், 45 துறைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 12,500. பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து, விசாரணை நடத்த தமிழக அரசு இரு குழுக்களை நியமித்தது. அக்குழுக்கள் விசாரணை நடத்தி, முறைகேடுகள் நடந்திருப்பதாக அரசுக்கு அறிக்கை தந்தன.

பல்கலை ஊழல் நிர்வாகத்தின் விளைவாக வரலாறு காணாத நிதிச் சிக்கலில் சிக்கித் தவித்தபோது அரசு பல்கலையின் இணைவேந்தர், துணைவேந்தரை மாற்றி விட்டு கல்வியமைச்சரை இணைவேந்தராகவும், ஷிவ்தாஸ் மீனா ஐ.ஏ.எஸ்.ûஸ நிர்வாகியாகவும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.

பல்கலைக் கழகம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசு தலையீடு வரையறைக்கு உள்பட்டது. பல்கலை அதிகார அமைப்புகளான ஆட்சிமன்றக் குழுவும், கல்விக் குழுவும் நிதிக்குழுவும் தான் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கல்விக் கட்டணங்கள் யாவும் முந்தைய நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. அரசு தலையீட்டுக்கு பிறகு கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை.

நிதி நிலைமையை சீர்படுத்த, பாழ்பட்ட ஊழல் கறை படிந்த நிர்வாகத்தை சீரமைக்க போதிய கால அவகாசமென்பது அவசியமானது. பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை இந்தக்காலம் நிர்வாக மாற்றக் காலமாகும் (பதஅசநஐபஐஞச டஉதஐஞஈ). சட்ட ரீதியான கட்டமைப்புகளை ஏற்படுத்த இவ்வளவு காலம் தேவைப்பட்டது.

இப்போது ஆசிரியர் ஊழியர் டெபுடேஷன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிக நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மருத்துவக் கல்லூரி அரசுக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அரசு வழிமுறைப்படிதான் இவை நடக்க இயலும். மாணவர்கள் லட்சக் கணக்கில் செலுத்திய கேபிடேஷன் பீஸ் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பும் நிர்வாக சீர்திருத்தங்களுக்குப் பிறகு சாத்தியமாகும்.

பல்கலைக்கழக நிர்வாகியாக ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சோதனை செய்யப்பட்டு, போலிச் சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதல் அலுவலர்களை வேறு அரசுக் கல்லூரிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

பல்கலையில் கல்விக் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு மூலம் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை என்ற நிலையை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பல லட்சம் ரூபாய் கேபிடேஷன் தொகை என்ற முந்தைய நிலை தற்போது ஒழிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுககான விடுதி வசதிகள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாணவிகளுக்காக தனி விடுதி ஒன்றும் கூடுதலாக திறக்கப் பட்டுள்ளது.

பல்வேறு சான்றிதழ்கள் மாணவர் நலன் கருதி விரைவாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக் கட்டணம் தாமதமாக செலுத்தும் மாணவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைகள் அரசு வழங்கிய உடனேயே மாணவர்களுக்கு தாமதமின்றி சென்று சேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு துறைக்கும் மாணவர் நல மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புல வாரியாக மாணவர் சேவையாற்ற யு.ஜி.சி. விதிப்படி சம வாய்ப்பு மைய ஆலோசனைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புல வாரியாக வேலைவாய்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு தலையிட்டு நிர்வாகம் மாறிய பிறகு ஆசிரியர் ஊழியர்கள் போராட்டம் ஏதும் நடத்தவில்லை. நிர்வாகத்துடன் இணைந்து நிர்வாகச் சீர்திருத்தங்களில் முழுமனதுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த நவம்பர் மாதம் இந்திய உயர்கல்வி தரமதிப்பீட்டு அமைப்பு (சஅஅஇ)கமிட்டி பல்கலைக்கு தரமதிப்பீடு செய்ய வந்த போது ஆசிரியர்கள் ஊழியர்கள் மாணவர்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு "ஏ' கிரேடு அந்தஸ்டு பெற்றது.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கும், தொலைதூரக் கல்வி இயக்கத்தில் பயிலும் மாணவர்களுக்கும் அரசு வழங்கும் அனைத்து உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன.

அவர்கள் கல்லூரியில் சேரும்போதே அரசு உதவித்தொகை நீங்கலாக மீதமுள்ள தொகையைக் கட்டினாலே போதுமானது. அவற்றை சிலர் தாமதமாகக் கட்டினாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.

அதுபோன்றே, பள்ளி மேற்படிப்புக்கான கல்விக் கட்டணச் சலுகையும் தகுதியுள்ள அனைத்து மாண்வர்களுக்கும் கல்லூரியில் சேரும்போதே வழங்கப்படுகிறது.

கடந்த கல்வி ஆண்டில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், சுமார் இரண்டாயிரம் பேருக்கு அந்த உதவித்தொகை வழங்க அரசுக்கு ஒப்புதல் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

பல்கலையின் வரலாறு மற்றும் இன்றைய நிலையை மருத்துவ கல்லூரி மாணவர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி.ராமசுப்ரமணியன் மிகத் தெளிவாக விளக்கியுள்ளதுடன் அரசின் நிலைப்பாட்டையும் உறுதி செய்துள்ளார். இந்தத் தீர்ப்பு (ரட 20720 ஹய்க் 223052014) வரலாற்று ஆவணமாகும்.

பல்கலைக்கழகம் தற்போது மேற்கொண்டு வரும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் வாயிலாகவும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் அயராத உழைப்பாலும் ஏற்கனவே இழந்துவிட்ட பெயரையும், புகழையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது மீண்டும் பெற்று புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

விரைவில் இப்பல்கலைக்கழகம் தென்னகத்தின் நாளந்தாவாக மீண்டும் பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்: ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com