பெண்மையின் பெருமையா, உரிமையா?

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அதிலும் சரிபாதி பெண்கள். உலகத்தின் மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, இந்தப் பெண்ணினம் குறித்த கருத்துகள், பார்வைகள் மற்றும் கொள்கைகள் ஒரு புதிய பரிணாமத்தை அடையத் துவங்கியுள்ளன என்று கூறலாம்.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அதிலும் சரிபாதி பெண்கள். உலகத்தின் மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, இந்தப் பெண்ணினம் குறித்த கருத்துகள், பார்வைகள் மற்றும் கொள்கைகள் ஒரு புதிய பரிணாமத்தை அடையத் துவங்கியுள்ளன என்று கூறலாம்.

புதுமைப் பெண், படித்த பெண், வேலைக்குப் போகும் பெண், பெண்ணுரிமை, பெண்ணியம், பெண் விடுதலை, சம உரிமை போன்ற வார்த்தைகள் எல்லாம் இந்தியாவிலும்கூட அதன் சமூக வெளிகளிலே உலா வரத் துவங்கி இரண்டு நூற்றாண்டுகளாகிவிட்டன. ஆனாலும் கூட பெண் பற்றிய இந்தப் பார்வை எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதில் பெரும் சர்ச்சை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விவாதத்தில் நமக்குத் தெளிவு வர வேண்டுமானால் சற்று வரலாற்றை திரும்பிப் பார்த்துதான் ஆக வேண்டும்.

செல்வத்திலும் செல்வாக்கிலும் வளர்ந்துவிட்ட மேற்கத்திய சமூகங்கள் அவர்களது நீண்ட சமூக - அரசியல் பயணத்தில் பெண்களுக்குப் பெரிதான இடம் கொடுத்துவிடவில்லை. பெண்கள் பற்றிய பார்வையில் மேற்குலகம் பெரிய விவாதங்கள், போராட்டங்கள், வன்முறை போன்றவற்றைச் சந்திக்க நேர்ந்தது. சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்துப் பெற்ற உரிமைகளை மேற்குலகம் தனது ஆண் சமுதாயத்திற்கான ஏகபோகமாகவே வைத்துக் கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற இப்போராட்டங்களால் "உரிமை' முழக்கம் மட்டுமே முன்வைக்கப்பட்டு அதனால் "தனிநபர் உரிமை' என்பது மறுதலிக்கப்பட முடியாத ஒரு தத்துவமாக மலர்ந்திருக்கிறது. இன்று உலகம் முழுவதிலுமே சுதந்திரம் மற்றும் தனிநபர் உரிமை போன்றவை கொள்கை ரீதியாக கோலோச்சும் நிலை தோன்றியுள்ளது.

இதன் விளைவாக சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடி ஆண் சமுதாயம் பெற்றுக்கொண்ட உரிமைகளை எல்லாம் ஆண்களை எதிர்த்துப் போராடி பெண்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை. அதுதான் அங்கு "பெண்ணியம்' என்றும் பேசப்பட்டது. இதற்காக பல கட்டங்களில் வன்முறைகூடப் பயன்படுத்தப்பட்ட வரலாறும் உண்டு. மேற்கில் பெண்ணுக்குக் கிடைத்த ஒவ்வொரு உரிமையும் போராடிப் பெற்றதுதான்.

இதோ சில உதாரணங்கள்: பாராளுமன்ற முறையின் தாய் என்று போற்றப்படும் இங்கிலாந்தில் பல நூற்றாண்டுகளாக ஜனநாயக முறை ஆட்சி இருந்தாலும் கூட 1928இல்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை தரப்பட்டது. அமெரிக்காவில் இது 1920இல்தான் நடைபெற்றது. மிகவும் போற்றப்படும் சுவிட்சர்லாந்தில் பெண்கள் 1971இல்தான் ஓட்டுரிமை பெற்றார்கள் என்பது அவர்களை மேற்குலகம் இரண்டாம் தரக் குடிகளாகவே நடத்தியது என்பதன் அடையாளம்தானே? இவ்வளவு ஏன், மேற்குலகின் இறையியல் கூட கடவுளை "தந்தை' என்றுதானே கருத்துருவாக்கம் செய்துள்ளது.

எனவே இன்றைய மேற்கத்தியப் பெண்ணியம் என்பதன் உட்பொருளும் ஊடுபொருளும் பெண்ணின் தனி உரிமை பற்றியது - ஆணை எதிர்த்துப் போராடுவது என்றே முற்றிலுமாக மாறிப் போனது. அதன் விளைவாக ஒரு சமூகத்தின் பாரம்பரியமான குடும்பக் கடமைகள் கூட புறந்தள்ளப்பட்டன.

குழந்தை பெற்றுக்கொள்வது கூட அடிமைத்தனத்தின் அடையாளமாக்கப்பட்டது. திருமணத்திற்கு முன்னரே தாய்மை அடையும் பதின்பருவத்துச் சிறுமியர் அதிகரித்து வருகின்றனர். அந்த நாடுகளில் இது சாதாரண நிகழ்வாகவே கருதப்படுவது நமக்கெல்லாம் அதிர்ச்சியாக அமையும்.

அதிகரித்து வரும் விவாகரத்துகளின் எண்ணிக்கை. திருமணத்திற்கு முன் காதலும், திருமணத்திற்குப் பின் விவாகரத்தும் சகஜமாகிவிட்ட ஒரு சமூகச் சூழலில் இன்று மேற்கத்திய சமூகங்கள் வாழ்கின்றன.

திருமணம் செய்து கொள்ளாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை. தந்தை இல்லாமல் தாயுடன் மட்டுமே வாழும் குழந்தைகள் உள்ள ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள். சிதைந்து வரும் குடும்ப உறவுகள் அதனால் வேகமாக குறைந்து வரும் மக்கள் தொகை - இன்று பல வளர்ந்த நாடுகளில் அதன் மக்கள் தொகை அபாய அளவில் குறையத் துவங்கியுள்ளது.

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் வக்கிரப்போக்கின் உக்கிரம். துரதிருஷ்டவசமாக இத்தகைய விவகாரங்களுக்கு இந்தியாவிலும் கூட சிறிது ஆதரவு இருப்பது ஆச்சரியமானது.

இத்தகைய சிக்கல்களை மேற்குலகம் சந்திக்கிறது என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும். வரைமுறையற்ற தனிநபர் உரிமை கோஷம், குடும்பத்தையும் சமூகத்தையும் சிக்கலில் கொண்டு சேர்க்கும் என்பதை நாம் மேற்கத்திய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டாக வேண்டும்.

துரதிருஷ்டவசமாக மேற்கத்தியச் சிந்தனை முறையும் வாழ்க்கை முறையுமே நவீனம் என்று கருதப்பட்டுவிட்ட காரணத்தால் பாரம்பரியமாக தனக்கென்று ஒரு வாழ்க்கை முறை கொண்ட இந்தியச் சமூகம் கூட மேற்கத்திய முறைகளின் தாக்கத்தால் தத்தளிக்கிறது என்பது வேதனைக்குரியது. ஆனால் இந்தியாவின் "பெண்' வரலாறு காட்டும் பண்பாட்டுக் காட்சி சற்று வேறுபட்டது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

இந்தியாவில் பாரம்பரியமாகவே "பெண்மை' பற்றிய நோக்கு மேற்கத்திய அனுபவங்களில் இருந்து மாறுபட்டதாகவே உள்ளது. இங்கு "உரிமை'யை விட "பெருமை' முக்கிய இடம் பெறுகிறது. புராண காலம் தொட்டு தற்காலம் வரை இந்தியாவில் பெண் "சக்தி'யாகவே உருவகப்படுத்தப்படுகிறாள்.

இந்திய இறையியலில், கடவுள் தந்தையாகவும் தாயாகவும் இருக்கிறார் என்பதே உலகில் பலருக்கும் புதிய செய்தி. இறைவனே கூட "தாயுமானவ'னாக போற்றப்படுகிறார். இந்தியாவில் பெண் கடவுளர்கள் உண்டு; பெண்களே கடவுளாவதும் உண்டு.

இந்தியாவின் கோடிக்கணக்கான குடும்பங்களில் குலதெய்வமாக அமைந்துவிட்ட பெண் தெய்வங்களும், கண்ணகி போன்ற பத்தினி தெய்வ வழிபாடும் அதற்கு உதாரணங்கள். இன்றும் கூட சுமங்கலி பூஜை, கன்யா பூஜை என்று பெண்களை வழிபடுவது நமது பாரம்பரியத்தில் உண்டு. இவையெல்லாம் மேற்குலகம் அனுபவித்திராத ஒரு வாழ்க்கை முறை.

தங்களது நாட்டைக் கூட மேற்கில் "தந்தை நாடு' என்றே பெருமைப்படுத்துகிறார்கள். இந்தியனுக்கோ இது "தாய் நாட'ல்லவா? சுவாமி விவேகானந்தர் இதைத்தான் "எங்கள் நாட்டின் பெண்மை என்பது தாய்மை என்ற இலட்சியம் கொண்டது' என்று அமெரிக்க மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

இந்தியாவும்கூட தனது சமூகவியல் வரலாற்றில் எத்தனையோ பரிசோதனைகளைச் செய்த நாடுதான். வரைமுறையற்ற தனிநபர் உரிமை என்பது சமூகத்தைப் பாழ்படுத்தும் என்ற உண்மை அறிந்தவர்கள் நமது முன்னோர்கள்.

பகவத்கீதையில் கிருஷ்ணர், "பரஸ்பரம் பாவைந்தஹ' என்கிறார். நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறோம் என்பதே அதன் தாத்பரியமாகும். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் சூழலில் யாரிடமிருந்து யாருக்கு விடுதலை?

பாரம்பரியமான இந்தியச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அந்தஸ்துதான். ஆனால் பணிகள் சிறிது மாறுபட்டுள்ளன. இந்தியாவில் நமது முன்னோர்கள் பெண்ணுக்கு "உரிமை' தரவில்லை, "பெருமை' தந்தார்கள். அந்தப் பெருமை பெண்ணுக்குக் கடமையுணர்வினால் வருமேயன்றி உரிமை கோஷத்தால் வந்துவிடாது. இந்த விஷயத்தில் நாம் மேலை நாடுகளைப் பின்பற்ற முடியாது.

ஆணும் பெண்ணும் சமம் என்ற அரசியல் கருத்தில் தோன்றியது மேற்கத்திய பெண்ணியக் கோட்பாடுகள். ஆனால் ஆணும் பெண்ணும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதே இந்தியாவின் சிந்தனை. இந்தியச் சமூகவியலில் பெண்ணுக்கு உரிய இடம் அபாரமானது. மனு ஸ்மிருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யத்ர நாரியஸ்து பூஜ்யந்தே ரமன்தே

தத்ர தேவதஹ

(எங்கு பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கு எல்லா தேவதைகளும் குடிகொண்டு இருக்கும்.)

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. நமது இராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் சிலப்பதிகாரத்திலும் நாம் பெறும் படிப்பினை என்ன? சீதைக்கு நேர்ந்த அநீதியால் இலங்கை அழிந்தது. கண்ணகிக்கு நேர்ந்த அநீதியால் மதுரை எரிந்தது என்பதுதானே. ஒரே ஒரு பெண்ணுக்கு அநீதி என்றால் கூட அது ஒட்டுமொத்த சமூகத்திற்கே அழிவு என்பது தானே அது தரும் செய்தி

ஆங்கிலமே மொழியாகவும் மேற்கத்திய முறைகளே வழிமுறையாகவும் மாறிவிட்ட இந்தக் காலத்திலும், அதைக் கையாளும் நம் நாட்டுப் பெண்களின் லாவகம் பாராட்டத்தக்கதுதான். பொருளாதாரத்தின் ஆதாரமாகவும் இந்தப் புதுமைப் பெண்களால் இருக்க முடிகிறது. ஆனால் இவையெல்லாமே பாரம்பரியச் சரடு அறுந்துவிடாமல் நமது பெண்கள் தொடுத்த பூமாலைகள்தான்.

ஓர் இந்தியப் பெண் சமூக அந்தஸ்தில் எவ்வளவு உயரத்தில் அமர்ந்திருந்தாலும் தனது குடும்ப பொறுப்புகளை விட்டு விடுவதில்லை. குழந்தை பெற்றுக்கொள்வதையும், அதைப் பேணி வளர்ப்பதையும் சுமையாக கருதுவதில்லை. மிகவும் முக்கியமாக உடனடி விவாகரத்துக்கு எப்போதுமே உடன்படுவதில்லை. இந்தியாவில் விவாகரத்து என்பது ஒரு வலியாகவே பார்க்கப்படுகிறது.

நமக்குத்தேவை பாரம்பரியமான இந்தியப் பண்பாட்டின்படியான பெண்ணின் பெருமையா அல்லது மேற்கத்திய போராட்ட அனுபவங்களில் இருந்து அச்சமூகம் பெற்று மகிழ்ந்திருக்கும் பெண் உரிமையா? இன்றைய இந்தியப் பெண்ணுக்கு தேவை உரிமைகளை அள்ளித்தரும் நவீனமல்ல. அதற்கு மாறாக பெருமையைக் கொட்டிக் கொடுக்கும் மரபுகளே ஆகும்.

இந்த இரண்டில் ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும் என்பதே உண்மை. இதுவரை இந்தியப் பெண்கள் "பெருமை'யின் பக்கமே நிற்கிறார்கள் என்பதே நமக்குப் பெருமைதான்.

நமது அக்கறை எல்லாம் அடுத்தடுத்த பெண்கள் தலைமுறையும் அவ்வாறே வாழ வேண்டும் என்பதுதான். இந்தியப் பெண்களுக்கு ஒரு புதிய உலகளாவிய பொறுப்பும் உருவாகியிருக்கிறது.

இன்றைய உலகத்தின் பல சிக்கல்களுக்கு காரணம் குடும்ப வாழ்வின் பிரச்னைகளே என்பதால், அவற்றிற்கான தீர்வும் குடும்ப வாழ்வை அடிப்படையாகக் கொண்ட - இந்தியப் பண்பாட்டில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாத இந்தியப் பெண்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

கட்டுரையாளர்: துணைத்தலைவர், பிரிக்கால் லிமிடெட், கோயம்புத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com