ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோல்கூத்துப் பாவை

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
Updated on
3 min read

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை என்பது இந்திய விடுதலைப் போரின்போது மகத்தான விழுமியங்களாக மேலெழுந்தது. சுதந்திர இந்தியா மதச்சார்பின்மை எனும் மகத்தான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டது. மதச்சார்பின்மை என்பது மேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாக்கம் அல்ல. நமது நாட்டில் மகத்தான மரபுகளில் ஒன்று அது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் வரிகள் அன்றைய வாழ்க்கை முறையின் சாரமே ஆகும்.

தமிழ்நாட்டின் புகழ்மிக்க நாடகக் கலைஞராக விளங்கியவர் நவாப் ராஜமாணிக்கம். சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஒத்தவாடை தியேட்டரில் ஏராளமான நாடகங்கள் நடக்கும். என்னுடைய சிறு வயதில் நவாப் ராஜமாணிக்கம் அவர்களால் நடத்தப்பட்ட "பக்த ராமதாஸ்' எனும் நாடகத்தை அந்த அரங்கில் பார்த்தது இன்னமும் என்னுடைய நினைவில் பசுமையாக பதிந்துள்ளது. அந்த நாடகத்தின் கதை இதுதான்:

தற்போதைய ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் அமைந்துள்ள ஊர் பத்ராசலம். அந்த ஊரில் முன்சீப் ஆக இருந்த ராமதாஸ் பெரும் ராமபக்தர். மக்களிடம் வரி வசூலித்து நவாப்பின் கஜானாவில் கட்ட வேண்டிய பொறுப்பு அவருடையது. ஆனால் மக்களிடம் வசூலித்த பணம் முழுவதையும் பத்ராசலம் கோவிலில் உள்ள ராமர், சீதாதேவி சிலைகளுக்கு விலை உயர்ந்த பட்டாடைகள், ஆபரணங்கள் வாங்கி அணிவித்தார்.

அரசனுக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஆண்டவனுக்கு செலவழித்துவிட்டார். பத்ராசலத்திலிருந்து வரிவசூல் தொகை வந்து சேராததால் முன்சீப் ராமதாûஸ விசாரணைக்கு அழைப்பார் நவாப். இவர் சென்று வரிப்பணம் முழுவதையும் ராமனுக்கும், சீதைக்கும் செலவழித்துவிட்டதாக நவாபிடம் கூறுவார்.

இதனால் கோபமடைந்த நவாப், அரசு பணத்தை கையாடல் செய்ததாக ராமதாûஸ சிறையில் அடைக்க உத்தரவிடுவார். இதனால் பெரும் துன்பத்திற்கு ஆளாவார் பக்த ராமதாஸ்.

ராமனை மனதில் நினைத்து, "ராம பிரானே அந்த பணத்தில் நான் ஒரு நயா பைசா கூட எடுத்துக் கொள்ளவில்லையே, அனைத்தையும் உனக்கும், சீதா தேவிக்கும் தானே செலவழித்தேன். இப்போது என்னை சிறையில் அடைத்துவிட்டார்களே, நீ ஏதும் செய்யாமல் இருக்கிறாயே' என்று புலம்புவார்.

அடுத்து, சீதையிடம் முறையிடுவார். "அன்னையே உன்னைத்தானே என்னுடைய தாயாக கருதினேன். உனக்கு கண் இல்லையா ராமனிடம் எனக்காக சிபாரிசு செய்யக் கூடாதா' என்று அழுவார்.

அப்போது சீதை, ராமரிடம் "உங்கள் பக்தன் புலம்புவது கேட்கவில்லையா? அவனுக்கு நீங்கள் உதவக் கூடாதா' என்று கேட்க, அதற்கு ராமன் "என்ன இருந்தாலும் அவன் அரசாங்கப் பணத்தை எடுத்து செலவழித்தது தவறுதானே, அதற்குரிய தண்டனையை அவன் அனுபவிக்கத்தான் வேண்டும். பின்னர் தக்கசமயத்தில் சென்று உதவுவோம்' என்பார்.

இந்த நிலையில், பக்த ராமதாஸ் சிறையிலேயே விஷமருந்தி செத்துப்போக முடிவு செய்வார். இதனால் பதறிபோன சீதை, ராமனிடம் சொல்ல அவர் உடனடியாக புறப்படுவார்.

அது இரவு நேரம். நவாப் அந்தப்புரத்தில் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருப்பார். எப்போதும் பலத்த காவல் இருக்கும் அந்தப்புரத்தை யாரும் நெருங்க முடியாது. எனினும், ராமன் தனது சக்தியால் கட்டுக் காவலை மீறி நேரடியாக அந்தப்புரம் சென்று நவாப் படுத்திருக்கும் அறையின் கதவை தட்டுவார். தூக்கம் கலைந்த கோபத்தில் நவாப் கதவை ஆத்திரத்துடன் திறப்பார்.

அங்கு நின்று கொண்டிருக்கும் ராமனை பார்த்து "யாரது இந்த நேரத்தில்' என்று கேட்பார். "நான்தான் ராமன். என்னுடைய பக்தன் ராமதாஸ் செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்துவதற்காக வந்திருக்கிறேன்' என்பார் ராமன்.

ராமனை நேரில் பார்த்த பரவசத்தில் நவாப், "கடவுளே அல்லா, ராமா, அல்லா, ராமா, அல்லா, ராமா' என்று கதறுவார். ராமன் "என்னுடைய பக்தன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறான். உடனடியாக பணத்தை பெற்றுக் கொண்டு அதற்குரிய ரசீதை கொடு' என்பார். "ரசீது, அரசு முத்திரை அனைத்தும் அரண்மனையில் அல்லவா உள்ளது. இப்போது எப்படி கொடுக்க முடியும்' என்பார் நவாப். அதற்கு ராமன், "உன்னுடைய மோதிரத்தில் ராஜமுத்திரை உள்ளது அல்லவா அதை வெற்றிலை போட்ட உன்னுடைய நாக்கில் வைத்து என்னுடைய கையில் அரச முத்திரையை பதித்துவிடு. நான் அதை காட்டி என்னுடைய பக்தனை விடுவிக்கிறேன்' என்பார்.

நவாப் பதறிவிடுவார். "கடவுளின் கைகளில் என்னுடைய எச்சில் படிவதா' என்பார். உடனே ராமன் நவாப்பிற்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டுவார். அந்த காலத்திலேயே நவீன உத்திகளை பயன்படுத்தி மேடையில் பல்வேறு ரூபங்களில் ராமன் உருவம் தெரிவது போல காட்டியிருந்தது அற்புதக் காட்சியாகும்.

நவாப் வேறு வழியின்றி தன்னுடைய நாக்கில் படிந்த வெற்றிலைப் பாக்கு கறையை ராமனுடைய கையில் அரச முத்திரையாக பதித்து கொடுப்பார். பணத்தை பெற்றுக்கொண்ட நவாப் உடனடியாக தானே சிறைக்குச் சென்று ராமதாûஸ விடுவிப்பார். ராமனே நேரில் வந்து பணத்தை கொடுத்துவிட்டுச் சென்ற செய்தியை ராமதாஸிடம் தெரிவிப்பார்.

இதற்கு ராமதாஸ் ராமனை நினைத்து, "ஆயுள் முழுவதும் உன்னையே வணங்கிய, உன்னைத் தவிர வேறெதையும் சிந்திக்காத எனக்கு நேரில் காட்சி தராத நீ, ஒரு இஸ்லாமியருக்கு உன்னுடைய விஸ்வரூபத்தை காட்டியுள்ளாயே ராமா' என்று புலம்புவது தனிக்கதை.

இந்த நாடகத்தில் நவாப்பாக ராஜமாணிக்கம் நடித்திருப்பார். அந்த பாத்திரமாகவே அவர் மாறி நடித்ததால்தான் அதற்குப் பிறகு அவர் "நவாப்' ராஜமாணிக்கம் என்றே அழைக்கப்பட்டார்.

இந்த கதை இன்னமும் கோதாவரி பகுதியில் கர்ண பரம்பரை கதையாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த கோவிலும் உள்ளது. மதங்களை கடந்த அன்பையும், ஒற்றுமையையும் இந்த கதை பேசுகிறது.

இந்த கதையில் ராமபிரான் மதங்களை கடந்தவராக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்துபவராக காட்டப்படுகிறார். இதுதான் மக்களிடம் உள்ள இயல்பான நம்பிக்கை. எளிய மக்கள் கடவுள்களிடையே பேதம் பார்ப்பதில்லை. இந்த கர்ண பரம்பரை கதை இதைத்தான் உணர்த்துகின்றது.

வடமொழியில் வால்மீகியும் தமிழில் கம்பனும் படைத்துள்ள ராமகாதைகளிலும்கூட ராமன் அன்புவயப்பட்டவனாகவே படைக்கப்பட்டுள்ளார். அரசகுலத்தில் பிறந்த ராமன் வேடுவனாகிய குகனையும், வானரக் கூட்டத்தின் தலைவனாகிய சுக்ரீவனையும், அரக்க குலத்தில் பிறந்த விபீஷணனையும் தன்னுடைய தம்பிகளாக ஏற்றுக் கொண்டான்.

தன்னுடைய தம்பி பரதனுக்கு அரசாட்சி என்றும், தனக்கு கானகம் என்றும் தந்தை தசரதன் கூறியபோது பின்னவன் பெற்ற செல்வமெல்லாம் நான் பெற்றதே என்று அன்றைக்கு பூத்த செந்தாமரை போன்ற முகத்துடன் கானகம் சென்றார் ராமன் என்று கம்பர் எழுதுகிறார்.

ஆனால், ஆர்எஸ்எஸ் - பாஜக வகையறா முன்னிறுத்தும் ராமன், மக்கள் மனதில் படிந்துள்ள ராமருடைய சித்திரத்தை ஒத்ததாக இல்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்று கூறி பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தினார். இந்த கலக யாத்திரையின் முடிவாக பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையொட்டி நடந்த கலவரங்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த ரணம் ஒரு வடுவாக இந்திய வரலாற்றில் பதிந்துவிட்டது.

அனைத்து மக்களையும் அணைத்து செல்வதே மக்கள் மனதில் பதிந்துள்ள ராமநெறி. அதைத்தான் அண்ணல் காந்தியும் முன்னிறுத்தினார். ஆனால் இந்துத்துவாவை முன்னிறுத்தும், ஆர்எஸ்எஸ் - பாஜக வகையறா, சிறுபான்மை மக்கள் இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்கள் என்று கூறுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் குருமார்கள் துவங்கி, இன்றைய தலைவர்கள் வரை இத்தகைய கண்ணோட்டத்தைத்தான் முன்வைக்கின்றனர்.

இன்றைக்கு பிரதமர் வேட்பாளராக பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திரமோடி சிறுபான்மை மக்கள் மீது எந்தளவுக்கு வன்மம் கொண்டுள்ளார் என்பதை 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்செயல்கள் காட்டின.

நம்முடைய நாட்டின் பன்முகப் பண்பாட்டிற்கு மாறாக, ஒற்றை பண்பாட்டை இந்து தேசியம் என்ற பெயரில் திணிக்க முயல்கிறது ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பின் விரல் அசைவிற்கு ஏற்ப ஆட்டம் போடும் தோல்கூத்துப் பாவையாகவே பாஜக விளங்குகிறது.

இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் மதச்சார்பின்மையும் பாதுகாக்கப்படவேண்டுமானால், பன்முக பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

கட்டுரையாளர்:

மத்தியக்குழு உறுப்பினர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com