பொருளாதாரக் கண்ணிவெடிகள்

பெரிய நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை சரி செய்ய கடைசி உத்தியாக சில ஏமாற்று நகாசு வேலைகளை கணக்குத் தணிக்கையாளர்கள் செய்வார்கள் என்ற அவப் பெயர் உள்ளது.
Updated on
3 min read

பெரிய நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை சரி செய்ய கடைசி உத்தியாக சில ஏமாற்று நகாசு வேலைகளை கணக்குத் தணிக்கையாளர்கள் செய்வார்கள் என்ற அவப் பெயர் உள்ளது. (பெரிய நிறுவனங்களுக்கு கணக்குத் தணிக்கை செய்வதை நான் 1979லேயே நிறுத்திவிட்டேன். அப்போது பெரிய நிறுவனங்களின் கணக்குகள் ஓரளவு நேர்மையாக இருந்தன). கணக்குத் தணிக்கையாளர்களின் கடைசி உத்திதான், நிதி அமைச்சர்களின் முதல் உத்தியாக உள்ளது.

2013-14ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையையும், 2014-15ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையையும் பார்த்தோமானால், எண்கள் எப்படி திரித்துக் கையாளப்பட்டுள்ளன என்பதும், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கண்ணிவெடிகள் எப்படி மறைந்துள்ளன என்பதும் தெரியவரும். 2013-14ஆம் ஆண்டின் நிதிப் பற்றாக்குறை புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்வோம். நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.6 சதவீதத்துக்குள் வைத்துள்ளதற்காக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டப்படுகிறார். இது வடிகட்டிய பொய்யாகும்.

2013-14ஆம் ஆண்டின் பற்றாக்குறையை 3 விதங்களில் ப.சிதம்பரம் திரித்துள்ளார். பணிபுரியும் நிறுவனங்களிலேயே பிடித்தம் செய்யப்படும் (டி.டீ.எஸ்.) வருமான வரி 31.3.2014க்குப் பிறகுதான் அரசுக்கு வங்கிகள் செலுத்த வேண்டும். ஆனால், அதை முன்கூட்டியே செலுத்துமாறு ப.சிதம்பரம் உத்தரவிட்டார். இந்த வரியின் மூலம் கிடைத்த ரூ.20 ஆயிரம் கோடி இப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வரி வசூல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முன்கூட்டியே வசூலித்து தனது வரி வசூல் பட்டியலில் ப.சிதம்பரம் சேர்த்துக் கொண்டுவிட்டார்.

இரண்டாவது, ப.சிதம்பரம் அளித்த உத்தேச மறுமதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை விட வருவாயில் ரூ.15 ஆயிரம் கோடி குறைந்துள்ளது அப்படியே மறைக்கப்பட்டுவிட்டது. மூன்றாவதாக, பெட்ரோலியத்துக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுவிட்டது. இதையும், இப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்த 3 விஷயங்களுமே 2013-14ஆம் ஆண்டின் நிதிப் பற்றாக்குறையை 4.6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தக் கூடியதாகும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையில் 94 சதவீதத்தை 2013 நவம்பரிலேயே தொட்டுவிட்டது என்று 2014-15ஆம் ஆண்டுக்கான நிதிக் கொள்கை திட்டமிடல் அறிக்கை தெரிவிக்கிறது. அதன் பின்னர் 2014 மார்ச் வரை அதே அளவு நிதிப் பற்றாக்குறை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, அந்த மாதங்களில் நிதிப் பற்றாக்குறை மிகச் சிறிய அளவு என்பதே அதன் பொருள். இந்த அதிசயத்தை ப.சிதம்பரம் எப்படி நிகழ்த்தினார்?

சிக்கன நடவடிக்கைகள் மூலமும், திட்டமிடா செலவினத்தை 10 சதவீதம் குறைத்ததன் மூலமும், திட்டமிட்ட செலவினத்தை முறைப்படுத்தியதன் மூலமும் இந்த அதிசயம் நிகழ்த்தப்பட்டது என்று திட்டமிடல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது உண்மைதானா? திட்டமிடா செலவினங்களைப் பொருத்தவரை இது பாதியளவுக்குதான் உண்மையாகும். திட்டமிடா செலவுகள் பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்ததை விட ரூ.6 ஆயிரம் கோடி எகிறியது என்பதுதான் உண்மை.

திட்டமிட்ட செலவுதான் (வளர்ச்சிக்கான செலவு) ரூ.80 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்டது. பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தபடி வளர்ச்சி நிதி செலவழிக்கப்பட்டிருந்தால் நிதிப் பற்றாக்குறை மேலும் 0.7 சதவீதம் கூடுதலாகி 5.7 சதவீதத்தைத் தொட்டிருக்கும். ஆனால், விந்தையைப் பாருங்கள். 2013 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வளர்ச்சிக்கான நிதி 34 சதவீதம் (ரூ.1.41 லட்சம் கோடி) அதிகரிக்கப்பட்டிருப்பதாக பெருமையுடன் அறிவித்து பாராட்டுதல்களையும் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

2014 பிப்ரவரியில், வளர்ச்சிக்கான நிதியில் 58 சதவீதத்தைக் குறைப்பதாக அறிவித்து, நிதிப் பற்றாக்குறையைக் குறைத்ததற்காக பாராட்டுதல்களைப் பெற்றார். வளர்ச்சி நிதியில் ஐந்தில் இரு பங்கைக் குறைத்ததற்காக கொஞ்சம் கூட வருத்த உணர்வு அவருக்கு இல்லை.

2014-15ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்துப் பார்ப்போம். ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை அபகரித்ததுடன், பெட்ரோலிய பொருள்களுக்கான மானியத்தில் ரூ.10 ஆயிரம் கோடியை அளிக்காததால், அருண் ஜேட்லி இப்போது சமர்ப்பிக்க உள்ள பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி துண்டுவிழும் நிலையை ப. சிதம்பரம் ஏற்படுத்திவிட்டார். அவர் இத்துடன் நிறுத்தவில்லை.

2014-15ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 4.1 சதவீதமாகத்தான் இருக்கும் என்றும் மார்தட்டிக் கொண்டார். அருண் ஜேட்லியின் பட்ஜெட்டை சிதைக்கும் பல பொருளாதார கண்ணிவெடிகளை அவர் மறைத்துவிட்டார். இந்தப் பொருளாதார கண்ணிவெடிகளை கண்டுபிடித்து, சரியான நேரத்தில் சரியான தீர்வுகளை அளிக்காவிட்டால், இவை தேசத்தின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும்.

2014-15ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 13.4 சதவீதமாகவும், வருவாய் அதிகரிப்பு 19.2 சதவீதமாகவும் இருக்கும் என ப.சிதம்பரம் மதிப்பிட்டுள்ளார். வளர்ச்சியைவிட வருவாய் எப்படி அதிகரிக்கும்? வளர்ச்சியை விட கிடைக்கும் கூடுதல் வருவாயை பொருளாதார வல்லுநர்கள் எழுச்சி விகிதம் என்று குறிப்பிடுகின்றனர்.

2014-15ஆம் ஆண்டுக்கு இந்த விகிதம் ஜிடிபியை விட 43 சதவீதம் அதிகம் இருக்கும் என ப.சிதம்பரம் மதிப்பிட்டுள்ளார். 2013-14இல் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 13.4 சதவீதமாக இருக்கும் என அவர் மதிப்பிட்டார். எதிர்மறை எழுச்சி விகிதமாக 13 சதவீதம் மட்டுமே வருவாய் அதிகரிப்பு இருந்தது. இந்த சூழ்நிலையில், 2014-15ஆம் ஆண்டுக்கு மதிப்பிடப்பட்டுள்ள 43 சதவீதம் என்பது கானல் நீர் போன்றதே.

2013-14இல் சுங்க வரி மூலம் 6 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. இது 2014-15இல், ஒன்றரை மடங்கு உயர்ந்து 15 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14இல் உற்பத்தி வரி மூலம் 1.6 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. இது 2014-15இல் 7 மடங்கு அதிகரித்து 11.7 சதவீதம் உயரும் என ப. சிதம்பரம் மதிப்பீடு செய்துள்ளார். இந்த அடிப்படையிலேயே எழுச்சி விகிதம் 43 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டைப் போலவே வருவாய் அதிகரிப்பு இருக்குமானால், 2014-15இல் நிதிப் பற்றாக்குறை ரூ.48 ஆயிரம் கோடியாக உயரும்.

பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பதன் மூலம் 2013-14இல் ரூ.54 ஆயிரம் கோடி திரட்ட முடியும் என ப. சிதம்பரம் மதிப்பிட்டார். ஆனால், கிடைத்ததோ வெறும் ரூ.19 ஆயிரம் கோடி. 2014-15இல் இதன் மூலம் ரூ.52 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளார். நிலைமை 2013-14 போலவே இருக்குமானால் பற்றாக்குறை ரூ.33 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, செலவழிக்க மட்டுமே செய்துள்ளது. வருவாயைப் பெருக்கும் எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் இப்போது பொருளாதாரக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சீரழிவை சரி செய்ய வேண்டுமானால், வருவாயைப் பெருக்க புதுமையான, துணிச்சலான, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில், 2013-14 பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கான வரிச் சலுகைகளைத் திரும்பப் பெற வேண்டும். இதில் ஐந்தில் ஒரு பகுதியை இந்த ஆண்டில் விலக்கிக் கொண்டால், அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். அடுத்ததாக, அன்னியச் செலாவணி, பத்திரம் மற்றும் பங்கு ஆகியவற்றின் ஊக வணிகத்துக்கு வரி விதிக்கப்பட வேண்டும். ரூ.100க்கு 10 பைசா வரி விதிக்கப்படுவதன் மூலம் ரூ.60 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும்.

ஊக பேரத்தைக் கட்டுப்படுத்த பொருளாதார வல்லுநர் ஜான் மேநார்ட் கீன்ஸ் இத்தகைய வரி விதிப்பை பரிந்துரைத்துள்ளார். பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பங்குகளில் ஊக வணிகம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு மேற்கத்திய நாடுகளில் 0.5 முதல் 1.6 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வரி விகிதம் மிகக் குறைவாக 0.004 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இவ்வகை வணிகம் வெறும் ஊகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவை ஆகும். இதற்கு வரி விதிக்கப்பட்டால், இத்தகைய சந்தையின் நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்த இயலும். வருவாய்க்கான புதிய ஆதாரங்களும் உருவெடுக்கும். இந்த 2 விதமான நடவடிக்கைகளின் மூலம் அரசுக்கு ரூ.1.70 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இதன் மூலம் முந்தைய அரசால் மறைக்கப்பட்ட பொருளாதார கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்ய முடியும். துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில், தற்போதைய பொருளாதார நிலையே தொடரும். இந்த நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விட்டுச் சென்ற பொருளாதார கண்ணிவெடிகள் நாட்டுக்கு எத்தகைய சீரழிவை உண்டாக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com