நடப்பு நிதியாண்டின் (2014-15) மீதியுள்ள காலகட்டத்துக்கு பட்ஜெட் தயாரிக்கும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சந்தித்த மிகப் பெரிய சவால், பிரதமர் நரேந்திர மோடி பற்றி மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்புதான். சுதந்திரத்துக்குப் பின்னர், எந்தவொரு அரசும் மக்கள் மத்தியில் இத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.
காங்கிரஸ் கூட்டணி அரசின் மிக மோசமான ஆட்சி மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இத்தகைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது எந்தவோர் அரசுக்கும் எளிதானதல்ல.
சென்ற ஆட்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இருந்து 40 பில்லியன் டாலர் கடனாகப் பெறப்பட்டு, தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சாதூர்யமாகவும், தற்காலிகமாகவும் செயற்கையான முறையில் குறைத்துக் காட்டியிருந்தார் முந்தைய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
அத்துடன், நிதிப் பற்றாக்குறை அதிகரித்து அரசு கடன் வலைக்குள் விழும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்டிருந்தது. இதுவும் புதிய அரசுக்கு தலைவலியாக இருந்தது.
அருண் ஜேட்லிக்கு முன்பு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எண் ஜாலம் செய்து பற்றாக்குறையை குறைத்துக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதனால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தளங்களில் கடும் நெருக்கடியை புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை தோன்றியது. புதிய அரசுக்கு பிரச்னைகள் இத்துடன் நிற்கவில்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மிக அதிகமான தொகை செலவிட்டு மக்கள் ஆதரவு பெற்ற பல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தியது. இந்த எல்லா விஷயங்களையுமே சரிசெய்ய வேண்டிய நிர்பந்தம் அருண் ஜேட்லிக்கு உண்டானது.
ஆனால், பொருளாதாரம் ஏற்கெனவே வலுவாக இல்லாத நிலையில் அருண் ஜேட்லி மேலும் கடுமையான சுமைகளை மக்கள் மீது ஏற்ற முடியாது. நலிவுற்ற நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிக தொகை தேவைப்படுகிறது. இந்நிலையில், அவரால் செலவினங்களையும் குறைக்க இயலாது.
இத்துடன் சேர்ந்து, மோடி அரசு ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சாதகமானதாக இல்லாமல் பெரு நிறுவனங்களுக்கே சாதகமானதாக இருக்கும் என்ற பிரசாரமும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
முந்தைய அரசால் செயல்படுத்தப்பட்ட மக்கள் ஆதரவு பெற்ற திட்டங்களை எந்த அரசும் கைவிட துணியாது. இந்தப் பின்னணியில் மோடி அரசு பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பட்ஜெட் ஓர் இலக்கை நோக்கிய பயணத்தின் தொடக்கம்தான் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது உரையில் சரியாகக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் செயல் இந்த பட்ஜெட்டில் தொடங்கியுள்ளது என்பதுதான் அதன் பொருள்.
மக்களின் பெரும் எதிர்பார்ப்பை சமாளிப்பதற்கான முயற்சியாக அருண் ஜேட்லி இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், கடந்த காலாண்டில் முந்தைய அரசின் இடைக்கால பட்ஜெட் நடைமுறையில் இருந்தது. இப்போது தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் அடுத்த 7 மாதங்களுக்கானது மட்டுமே.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் பொருளாதார மீட்டெடுப்புக்கான தொடக்கமாகத்தான் இருக்க முடியும். இத்தகைய கடுமையான, மோசமான சூழலில் மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் சிறந்த பணியையே செய்துள்ளது என்று உறுதியாகக் கூறமுடியும்.
அடிப்படை உள்கட்டமைப்புகளுக்கு அதிக ஒதுக்கீடு செய்தது பட்ஜெட்டின் குறிப்பிடத்தக்க அம்சம். திட்டப் பணிகளுக்காக 2013-14ஐ காட்டிலும் ரூ.1 லட்சம் கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் அடிப்படை உள்கட்டமைப்புகளுக்கு மட்டும் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை நவீன மயம், கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணி, சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்டதையும் சேர்த்தால் இது ரூ.83 ஆயிரம் கோடியாக உயரும்.
சாலை அமைக்கும் பணிகளுக்காக ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1999-2000த்தில் இதுபோன்று தங்க நாற்கர சாலை திட்டத்துக்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டதால் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் பெரும் புரட்சியே நிகழ்த்தப்பட்டது எனலாம்.
வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்க மோடி அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு இந்த ஒதுக்கீடு முக்கியமானது. அடிப்படை உள்கட்டமைப்புக்கான முதலீடு, வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.
விவசாயத்துக்கும், கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கும் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் சேர்த்து சுமார் ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடியவை ஆகும். இதில் கிராமப்புற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளுக்காக ரூ.14,389 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜேட்லியின் பட்ஜெட் உரையில் பத்தி 102இல் இடம்பெற்ற மிக முக்கியமானதொரு விஷயத்தை பெருநிறுவனங்களின் தலைமையிலான ஊடகங்கள் புறந்தள்ளிவிட்டன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் தீட்ட முதல் முறையாக பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள்தான் நாட்டில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஆனால், இதன் தேவைகளுக்கு வங்கிகளிடம் இருந்து வெறும் 4 சதவீதம் மட்டுமே நிதி உதவி பெற முடிகிறது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்க மூலதனம் அளிக்க ரூ.10 ஆயிரம் கோடி கொண்ட நிதியம் உருவாக்குவதைப் பற்றியும் ஜேட்லி பேசியிருக்கிறார். இந்த நிதியம் இதைப் போன்று பல மடங்கு முதலீட்டை உருவாக்கவல்லதாகும். ரூ.11.5 லட்சம் கோடி அசையா சொத்துகளைக் கொண்டுள்ள இந்தப் பிரிவுக்கு ஜேட்லியின் அறிவிப்பானது ஒவ்வோர் ஆண்டும் மேலும் ரூ.6.8 லட்சம் கோடி வருவாயைக் கூடுதலாக்கும்.
அத்துடன் 10.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்தத் துறையில் போடப்படும் ஒவ்வொரு ரூபாயும், பெரு நிறுவனங்கள் உருவாக்குவதைப் போல பல மடங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்லது. ÷இந்த விஷயத்தில் பட்ஜெட்டின் நோக்கம் செயலாக்கம் பெறுமானால் நாடு மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும். இதுதான் வளர்ச்சிக்கான இந்திய பாணி அணுகுமுறையாகும்.
பட்ஜெட் பற்றிய விவாதத்தில் மேலும் 2 முக்கியமான விஷயங்கள் கவனிக்கப்படாமலேயே போய்விட்டன. ஒன்று, குடும்ப சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலான மாற்றம் ஆகும்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் திட்டங்கள் எல்லாமே பங்குச் சந்தையை மனதில் கொண்டே தீட்டப்பட்டன. ஆனால், அந்தத் திட்டங்களால் பலன் ஏதும் ஏற்படவில்லை. பொது மக்கள் வருங்கால வைப்பு நிதி, சொந்த வீட்டுக் கடனுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு போன்ற அறிவிப்புகள் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலானவை ஆகும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு இலவச அன்பளிப்புத் தொகை போல செயல்படுத்தி வந்தது. அந்தத் திட்டத்தை விவசாயப் பணிகளுடனும், அரசு சொத்துகளை உருவாக்கும் பணிகளுடனும் இணைத்து சீரமைத்துள்ளார்.
செலவின மேலாண்மை ஆணையம், வரி பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கைகள், துறைமுக மேம்பாடு, நதிநீர் போக்குவரத்து, பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பகுதிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட மேலும் பல நல்ல அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
இதுபோன்ற நல்ல அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும், பட்ஜெட்டில் உள்ள குறைபாடுகள் பட்ஜெட்டின் முழு விவரங்களும் வெளியாகும்போதுதான் தெரியவரும்.
ஆனால், ஒரு விஷயம் வெளிப்படை. 2014-15ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்பதை ஜேட்லி தெரிவிக்கவில்லை. சவாலான விஷயமாக, முந்தைய நிதியமைச்சர் நிதிப் பற்றாக்குறை 4.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தார். அந்த சவாலை தான் ஏற்றுக் கொள்வதாக மட்டுமே ஜேட்லி குறிப்பிட்டார்.
சிதம்பரத்தின் வருவாய் இலக்குகள் ஆழ்ந்த விருப்பத்தின் அடிப்படையிலானவை என்று குறிப்பிட்ட ஜேட்லி, செலவினத்தில் மேலும் ரூ.32 ஆயிரம் கோடியையும் சேர்த்துவிட்டு, நிதிப் பற்றாக்குறை தொடர்பான ப.சிதம்பரத்தின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஜேட்லி இன்னும் வெளிப்படையாக இருந்திருக்கலாம்.
இறுதியாக, அடிப்படை உள்கட்டமைப்புகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையை 8 மாதங்களுக்குள் மோடி அரசு எப்படி செலவிடப் போகிறது என்பது மிகப் பெரிய சவாலாகும்.
வளர்ச்சி விவகாரத்தில் குஜராத்தில் செயல்பட்டதுபோல தில்லியில் வேகமாகச் செயல்படவில்லை என்றால், வளர்ச்சி நிதி தேக்கமடைந்துவிடும். வளர்ச்சிக்கான நிதியை செலவிடுவதே பொருளாதார
மீட்சிக்கு முக்கியமானதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.