பயமுறுத்தும் பயணங்கள்

இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். பகல், இரவு, வெயில், மழை, புயல், சூறாவளி, இன - மதக் கலவரம், தடையுத்தரவு, தலைவர்கள் மரணம், படுகொலை போன்ற எல்லா அசாதாரணமான சூழலிலும் நான் பயணித்திருக்கிறேன், அநேகமாகத் தனியாக.

இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். பகல், இரவு, வெயில், மழை, புயல், சூறாவளி, இன - மதக் கலவரம், தடையுத்தரவு, தலைவர்கள் மரணம், படுகொலை போன்ற எல்லா அசாதாரணமான சூழலிலும் நான் பயணித்திருக்கிறேன், அநேகமாகத் தனியாக. தனியாக என்பது திட்டமிட்டதோ, வலிந்து, விரும்பி ஏற்றுக்கொண்டதோ அல்ல. வாழ்க்கைப் போக்கில் தனியாகப் பயணிக்கிறேன்.

பதினேழு வயதில் முதன்முதலில் சென்னைக்குத் தனியாகப் பயணித்திருக்கிறேன். இருபது வயதில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு வந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதத்தால் கொட்டும் மழையில் கிளம்பி, பேருந்துகள் இயங்காத ஓர் இரவில் டி.வி.எஸ். பார்சல் வண்டியில் ஏறி நள்ளிரவுக்கு மேல் வீடு வந்து சேர்ந்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அன்று திருப்பதியில் இருந்தேன். கையில் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்ட நிலையில், இரண்டு நாள்கள் பல்வேறு வாகனங்களில் பயணித்து வீடு வந்து சேர்ந்திருக்கிறேன். பயணங்கள் எனக்கு விதவிதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கின்றன.

இந்தப் பயணங்களின் இடையூறுகளை நான் ஆண்களின் துணையுடந்தான் கடந்திருக்கிறேன். இரவு நேர தனிப் பயணங்களில் முன்பின் தெரியாத யாரோ ஓர் ஆண் கட்டாயம் உதவ முன்வந்திருக்கிறார். அவரின் நோக்கம் முழுமையாக உதவுவதாக மட்டும் இருந்திருக்க முடியாது. வலிந்துப் பேச்சுக் கொடுத்து என்னைப் பற்றிய விவரங்களை கேட்பது, நான் எங்குப் போகணும், யாரைப் பார்க்கணும், எதற்குப் போகணும் போன்ற அவருக்குத் தேவையற்ற தகவல்களைப் பெறும் அல்ப சந்தோஷமும் அதில் இருக்கும்.

ஆனால், தனித்து விடப்படும் அந்த இரவுகளில் அந்த அபத்தப் பேச்சை பொருள்படுத்தாமல் அவர் உதவியை கவசம் போல் மாற்றிக் கொண்டுப் பயணத்தை நிறைவு செய்ய முடியும். உண்மையான அக்கறையோடு உதவுபவர்களும் இருந்திருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்த அன்று கையில் பணமில்லாமல் நானும் மற்றும் சிலரும் நின்ற நேரத்தில் எங்களைப் போலவே போக வழியில்லாமல் நின்ற அறிமுகமற்ற ஒருவர், தன்னுடைய மோதிரத்தை அடகு வைத்து எங்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, பேருந்துக்கு பணமும் கொடுத்து அனுப்பியதை மறக்க முடியுமா? அவர் உருவம் நிழலாகத்தான் நினைவில் இருக்கிறது.

ஆனால், அவர் தன் விரலில் இருந்து கழட்டிக் கொடுத்த வி.ஏ. என்று இனிஷியல் போட்ட மோதிரம் இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. பொது வெளியில் அன்று தனித்துப் பயணிப்பதிலோ, இரவில் பயணிப்பதிலோ மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை.

தனியாகச் செல்வதால் சின்னச் சின்ன பயங்கள் மட்டும் இருக்கும். அதற்கான அபயக் கரங்களும் அங்கேயே இருக்கும். ஓடும் பேருந்தில் அப்பொழுதெல்லாம் புகை பிடிப்பவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஒரே ஒரு ஆள் புகைத்தாலும், என்னால் ஒரு நிமிடம் பொறுக்க முடியாது. நான் எழுந்துபோய் சிகரெட்டை கீழே போடச் சொல்லி சண்டையிடுவேன்.

சில முகச் சுளிப்புகள் இருந்தாலும், ஒரு பெண் வந்து சொல்லுகிறாளே என்ற அவமானத்தில் உடனடியாக சிகரெட்டை கீழே எறிவார்கள். சிலர் வம்புக்காகவே அடுத்த சிகரெட்டை பற்ற வைப்பதும் நடக்கும். ஓடும் பேருந்தில் இருந்து எச்சில் துப்புவார்கள். உரத்த குரலில் "அறிவிருக்கா' என்று கேட்டு சண்டை போட்டுள்ளேன்.

பக்கத்தில் உட்கார்ந்து யாராவது தூங்குவது போலவோ அல்லது நிஜமாகவே தூங்கிவீழ்ந்தாலோ ஒரு நிமிடத்திற்குமேல் பொறுக்க மாட்டேன். கோபத்துடன் பேசி உடனடியாக இருக்கையை காலி செய்ய வைத்துவிடுவேன். அல்லது நான் எழுந்து நின்று கொள்வேன். யாராவது திரும்பிப் பார்ப்பது தெரிந்தால் போதும் நானே எழுந்து போய், "என்ன விஷயம்... எதுக்கு முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்க' என்று கேட்டிருக்கிறேன்.

அப்பொதெல்லாம் ஒரு பேருந்தில் 40, 50 பேர் பயணிக்கிறார்கள் என்றால், ஓரிருவர்தான் குடித்துவிட்டு வந்திருப்பார்கள். அவர்களும் தாங்கள் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு வந்திருக்கிறோம் என்ற லேசான குற்ற உணர்வில் உட்கார்ந்திருப்பார்கள். அப்படிக் குடித்துவிட்டு வருபவர்கள் தாங்களாகவே கடைசி இருக்கைக்குச் சென்றுவிடுவார்கள். எல்லாரையும் பார்த்து, பரவாயில்லை.. பிரச்னையில்லை என்பதுபோல அவ்வப்பொழுது சிரித்துக் கொள்வார்கள். ஓரிருவர் வம்பு செய்தால் நடத்துனர் விசிலடித்துப் பேருந்தை நிறுத்தி நடுக்காட்டில்கூட அவர்களை இறக்கி விட்டிருக்கிறார்கள்.

இப்பொழுதும் வேலை நிமித்தமாக, எனக்கு நள்ளிரவுப் பயணங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக வெகுவாக மாறியுள்ள இரவு நேரக் காட்சிகள் மிகவும் அச்சுறுத்தல் நிரம்பியவையாக உள்ளன.

இரவு என்பது இன்னும் முழுமையாக ஆண்கள் கையிலிருப்பதைப் பார்க்க முடிகிறது. முன்பு எங்கோ ஒரு பெண் தனித்து நின்றிருப்பதற்குப் பதிலாக நான்கைந்து பேர் இருக்கிறார்கள். அதிலும் ஓரிருவர் பாதுகாப்பான துணையுடன்.

இன்றும் நள்ளிரவில் பயணம் செய்யும் பெண் மீது விழும் பார்வை ஆரோக்கியம் நிரம்பியதாக இல்லை. தேவை நிமித்தமாகத்தான் இவளின் பயணம் இருக்கும் என்று ஒரு ஆளும் நம்புவதாகத் தெரியவில்லை. பார்வையில் ஆடையை உரிக்கும் ஆண்கள், பக்கத்தில் உட்கார நேர்ந்தால் எப்படியாவது உரசிவிட துடிக்கும் ஆண்கள் பெருகிவிட்டார்கள்.

பெரும் மாற்றமாக நான் பார்ப்பது போதையில் மிதக்கும் ஆண்கள். நள்ளிரவு ஈக்கள்போல் ஆண்கள் வீதிகளெங்கும் போதையில் மொய்த்துக் கிடக்கிறார்கள். பார்வையில் அசிங்கமான பாலியல் இச்சையுடன், ஒரு ஜந்துவைப் போல் இருக்கும் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அருவருப்பில் உடம்பு குறுகிப் போகிறது. அதிக வேதனையான விஷயம் பதினைந்து வயதுப் பையனிலிருந்து வயசு வித்தியாசம் இல்லாமல் இதில் அடக்கம் என்பதே.

ஒழுக்க வரையறைகளுக்கு அப்பாற்பட்டு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது இந்தக் காட்சி. ஒரு பேருந்தில் குடிக்காத ஆண்கள் ஓரிருவர் இருந்தாலே ஆச்சர்யம். குடிப்பது என்பது மயங்கி விழும்வரை என்ற தவறான புரிதல் தமிழர்களுக்கு எப்படி வந்தது என்று புரியவில்லை.

தன் நிறுத்தத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் குடித்துவிட்டு பேருந்து ஏறும் ஆண்களுக்கு அந்தப் போதையிலும் நன்றாகப் புரியும் விஷயம், தனியாக இருக்கும் பெண்ணைப் பார்த்து வெறிப்பது என்பதுதான்.

இரவு நேரத்தில் பேருந்தில் நான் மட்டும் தனியாக இருக்கும், சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. ஓட்டுனரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு உட்கார்ந்தவுடன் ஏதோ சிந்தனையில் ஒன்றிரண்டு நிமிடங்கள் போகும்.

சற்று நேரத்தில் நம்மை யாரோ கவனிப்பதுபோல் குறுகுறுப்பாக இருக்கும். திரும்பிப் பார்த்தால் பின்னால் இரண்டு, மூன்று இருக்கைகளில் இருக்கும் ஆள்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாதி போதையில் தள்ளாடியபடியே பார்வையை மட்டும் நிலையாக வைத்திருப்பார்கள். நினைவு போக குடித்திருந்தாலும் ஒரு பெண்ணைப் பதற்றத்திற்கு உள்ளாக்கும் வேலையை மட்டும் அவர்களால் சரியாகச் செய்துவிட முடியும்.

படித்தவர், படிக்காதவர், கடைநிலை ஊழியர், அதிகாரி எல்லாரும் இவ்விஷயத்தில் சமம். வார இறுதி நாள்கள் என்றால் சொல்லவே வேண்டாம். கொண்டாட்டம் கூரையைப் பிய்த்தெடுக்கும். முழு போதையில் கையில் உள்ள செல்போனில் சப்தமாக மிச்சம் மீதி உள்ள சண்டைகளை யாரிடமாவது தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

இரண்டு சாத்தான்களின் சேர்க்கையால் எப்படி நல்லது நடக்கும்? நிதானமற்ற நேரத்தில், அவர்களால் எந்த வன்முறையையும் எளிதாக செய்துவிட முடியும் என்ற பயம் வருகிறது. அவர்கள் என் அருகில் உட்கார வந்தால் பேச்சேதுமின்றி வேறு இருக்கைக்கு மாறிப் போய்விடுகிறேன்.

உட்கார்ந்த இடத்திலே எச்சில் துப்புவது, வாந்தி எடுப்பது, சாப்பிட்டுவிட்டு மிச்சம் மீதியை போடுவது என்று அவர்களின் நடவடிக்கைகள் பொறுக்கவே முடியாது. இளம் வயதுப் பையன்களின் உரையாடல்களில் ஆபாசம் பொங்கி வழியும். அவர்களுக்கு அறிமுகமான எல்லாப் பெண்களின் நடத்தையையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், அவர்களிடம் சென்று ஒரு வார்த்தைப் பேச துணிவு வருவதில்லை. அவர்களின் அடுத்த நடவடிக்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற பயம் வந்துவிட்டது. மரியாதை அற்ற வார்த்தைகளால் திருப்பிப் பேசலாம், அவர்களின் நடவடிக்கை முன்பைவிட வேகப்படலாம் அல்லது அவர்கள் வன்முறையில்கூட ஈடுபடலாம். ஒழுங்காக ஊர் போய் சேர்வதற்கு மெளனம் காத்தால் மட்டுமே நன்று.

அறிமுகமானவர், அறிமுகமற்றவர் என்று யாரிடம் வேண்டுமென்றாலும் வரைமுறையற்று நடந்துகொள்வது இன்றைய தலைமுறைக்கு எளிதாக இருக்கிறது. பொது வெளியில் பாதுகாப்பு என்பது முற்றிலும் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனித்துப் பயணிக்கப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கும் போதை ஆண்களால் நான் என் பயணங்களை ஒத்தி வைக்கிறேன் அல்லது ரத்து செய்து விடுகிறேன். என் மகளை தனியாகப் பயணம் செய்ய நான் அனுமதிப்பதே இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com