ஆழ்மனதில் இருக்கும் ஆணியம்

பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அண்மையில் நம் நாட்டில் அதிக அளவில் நிகழ்ந்து உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அண்மையில் நம் நாட்டில் அதிக அளவில் நிகழ்ந்து உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பெண்ணிய அமைப்புகள் குற்றவாளிகளை ஆண்மை நீக்கம் செய்வது முதல் தூக்கில் போடுவது வரையான பல தண்டனைகளைப் பரிந்துரைக்கின்றன.

இந்த மாதிரியான மனோ பாவங்களுக்கு மதம், சாதி, சமூகம் சார்ந்த காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஓர் ஆணின் மனதுக்கு அடியில் குடியிருக்கும் ஆழ்மன உணர்வே முதன்மையான காரணமென்று அண்மை ஆய்வுகள் காட்டுகின்றன.

பாகிஸ்தானில் பெண்களுக்காகப் போராடி வரும் அஸ்மா ஜஹாங்கீரை உலகமே பாராட்டுகிறது. ஆனால் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் "அவர் பெண்களின் மனதைக் கெடுத்துத் தீய வழியில் செலுத்துகிறார்!' என்று குற்றம் சாட்டுகிறார்கள். அங்கு முல்லாக்களின் ஆதரவில் ஆதாயம் காணும் அரசியல்வாதிகளும், ராணுவ சர்வாதிகாரிகளும் அதை வழிமொழிகிறார்கள்.

ஜீன்ஸ் அணிந்தது, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தது, சினிமாப் பாட்டை முணுமுணுத்தது, பெண் குழந்தை பெற்றது போன்ற செயல்களால் குடும்ப மானத்தைக் குலைத்துவிட்டதாக இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை காரணமாக மலாலா என்ற சிறுமியைத் தலிபான்கள் சுட்டுக் கொல்ல முயன்றிருக்கிறார்கள்.  இளம்பெண்ணைக் கெüரவக் கொலை செய்வது குடும்பத்துக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயமாகிவிட்டது.

அமெரிக்காவில் ஆண் பெயரிடப்பட்ட புயல்களை விடப் பெண் பெயரிடப்பட்ட புயல்கள் இரு மடங்கு அதிகமான சேதத்தை ஏற்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இல்லினாய் மற்றும் அரிசோனாப் பல்கலைக்கழக ஆய்வர்கள் அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையில் ஆண்கள் தம்மையுமறியாமல் தமது ஆழ்மனதில் பெற்றிருக்கிற பட்சபாத எண்ணங்களே அதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.

இயல்பாகவே பல ஆண்கள் பெண்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் தருவதில்லை. பெண் பெயருள்ள புயல்களைக்கூட அதே கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். ஆண் பெயருள்ள புயல்கள் அதிகமான ஆக்ரோஷத்துடன் வீசி அதிகச் சேதத்தை உண்டாக்கும் என எண்ணி அதற்கேற்றவாறு உயிரையும் உடைமைகளையும் பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள்.

பெண் பெயருள்ள புயல்கள் நளினமாக ஒய்யார நடை போட்டுக் கொண்டு போய் விடும் என்று எண்ணுகிறார்கள். பெண்களே கூடப் பெண் பெயருள்ள புயல்களை எச்சரிக்கையுணர்வுடன் எதிர்கொள்வதில்லை.

பெண் பெயருள்ள ஒரு புயல் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வீசப் போகிறது என்று எச்சரிக்கை விடுத்தால்கூட பயம் கொள்ளாமல் ஏனோதானோ என்ற அலட்சிய பாவத்துடனேயே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதுவே பெண் பெயருள்ள புயல்களால் அதிகமான ஆட்சேதம் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

1950 முதல் 2012ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் வீசிய புயல்களில் பெண் பெயருள்ள புயல்கள் ஆண்டுக்குச் சராசரியாக 45 பேரையும் ஆண் பெயருள்ளவை அதில் பாதிப் பேரையும் பலி வாங்கியிருக்கின்றன. 2005ஆம் ஆண்டில் வீசிய காத்ரீனாப் புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு அதற்கு ஓர் அழகான பெண் பெயரைச் சூட்டியதுதான் காரணமென ஆய்வர்கள் கருதுகிறார்கள்.

கிஜு யங் என்ற ஆய்வர் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆண் பெயருள்ள புயல்களே அதிகச் சேதம் விளைவிக்கும் என்ற கருத்து மிகப் பெரும்பான்மையானவர்களிடம் இருப்பது தெரிந்தது.

அலக்சாந்தர், விக்டர் போன்ற அதிகமான ஆண்மைத் தனமுள்ள பெயர்கள் சூட்டப்பட்ட புயல்களைப் பற்றி அதிகமான அச்சம் தோன்றியது. அதன் காரணமாகவே தம் இருப்பிடங்களை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடும் நாட்டமும் அதிகமாகத் தென்பட்டது.

இவ்வாறான இனப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு போன்றவை கோணல் மனதினரின் குறுகிய சிந்தனைகளால் ஏற்படுவதாகச் சொல்ல முடியாது. கடந்த இருபதாண்டுகளாகச் செய்யப்பட்ட ஆய்வுகள் நல்ல உள்ளமும் எண்ணமும் கொண்டோரிடம் கூட இத்தகைய ஆழ்மனத்து ஆணியப் போக்கு அவ்வப்போது தலைதூக்கி விடுவதைக் காட்டுகின்றன.

தேர்தலில் நிற்கிற வேட்பாளர், தலைமை அதிகாரி, வேலை கோரி வருபவர், விற்பனைப் பிரதிநிதிகள் போன்றவர்களிடம் ஒருவர் காட்டும் அணுகுமுறையும் அவர் எடுக்கும் முடிவுகளும் எதிராளி ஆணா பெண்ணா என்பதைச் சார்ந்தே அமைகின்றன.

அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டன் போன்ற திறமையான பெண்மணியை விடக் கருப்பராக இருந்தபோதிலும் ஒபாமா என்ற ஆணே அதிபர் பதவிக்கு ஏற்றவர் என்றே மக்கள் கருதினார்கள். இதுவரை ஒரு பெண் கூட அமெரிக்க அதிபராக ஆக முடியவில்லை. எதிர்காலத்தில் ஆக முடியும் என்றும் தோன்றவில்லை.

பெண்ணுக்கு எதிரான பாகுபாட்டிற்குப் பெண்ணின வெறுப்பு மட்டுமே காரணமாக முடியாது என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான சூஸன் ஃபிஸ்கி கூறுகிறார். எல்லாரிடமுமே அவர்களது ஆழ்மனதில் பிறவிக் குணமாக, தானே தோன்றியதாக, அனிச்சையானதாக, அர்த்தமற்றதாக அமைந்த பெண்ணின வெறுப்பு உள்ளது.

எனக்குப் பெண்களைப் பிடிக்காது என்று யாரும் வெளிப்படையாகவோ தமக்குத் தாமே ரகசியமாகவோகூட ஒப்புக் கொள்வதில்லை. பெண்களுக்குத் திறமை குறைவு என்றாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றாலும் அவர்கள் இனிமையானவர்கள் என்பதால் அவர்களை விரும்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது என்றே பெரும்பாலான ஆண்களும் மிகப் பல பெண்களும் எண்ணுகிறதாக ஃபிஸ்கி கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழக ஆய்வர் குழுவொன்று பல பல்கலைக்கழகங்களில் அறிவியல் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்களுக்கு தலா இரண்டு விண்ணப்பங்களை அனுப்பியது. புதிதாகப் பட்டம் பெற்ற ஒரு நபர் ஆராய்ச்சிப் பணி வழங்கக் கோரும் விண்ணப்பங்கள் அவை.

இரண்டிலும் ஒரே மாதிரியான கல்வித் தகுதிகளும், தன் விவரங்களும் அமைந்திருந்தன. ஆனால் ஒரு விண்ணப்பத்தில் ஆணும் மற்றதில் பெண்ணும் பணி கோருவதாகக் கையொப்பமிடப்பட்டிருந்தது. இருவருமே கற்பனையான நபர்கள்தான்.

அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து தகுதியான நபரைப் பரிந்துரைக்குமாறு அந்தத் துறைத் தலைவர்களிடம் கோரப்பட்டது. அவர்கள் ஆண் விண்ணப்பதாரருக்கு அதிக மதிப்பெண்களை வழங்கியதுடன் அதிகமான ஊதிய விகிதத்தையும் பரிந்துரைத்தனர்.

அந்தத் துறைத் தலைவர்களில் எல்லா வயதினரும் எல்லா இனத்தினரும் இருந்தனர். அவர்களில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு, அவர்கள் தேர்வு செய்த விதத்திற்கும் அவர்களது வயது, இனம், பாலினம் போன்ற அம்சங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதாகத் தோன்றவில்லை.

இதேபோலப் பல வர்த்தக நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் வேலை கோரும் விண்ணப்பங்கள் ஆண் பெயரிலும் பெண் பெயரிலும் அனுப்பப்பட்டன. அவற்றின் தலைமை அதிகாரிகளும் ஆண் விண்ணப்பதாரருக்கே அதிகத் தகுதியிருப்பதாக மதிப்பிட்டனர்.

ஸ்டான்போர்டு வர்த்தகப் பள்ளியின் மாணவர்களிடம் அதே போன்ற விண்ணப்பங்களைக் காட்டிக் கருத்துக் கேட்டபோது அவர்களும் ஆண் விண்ணப்பதாரருக்கே அதிக ஆதரவு அளித்ததுடன் பெண் விண்ணப்பதாரர் அதிகமான அதிகார ஆசையும், சுய தம்பட்டம் அடிக்கும் போக்கும் உள்ளவராகத் தோன்றுகிறார் என விமர்சித்தனர்.

வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செசிலியா மோ என்ற ஆய்வர் சில தொகுதிகளில் மாதிரி கருத்துக் கணிப்பு மேற்கொண்டபோது ஒரு தேர்தலில் தகுதிமிக்க ஒரு பெண், வேட்பாளராக நின்றால் அவருக்கே வாக்களிக்க ஆயத்தமாக இருப்பதாகப் பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தேர்தல் முடிவில் பல தகுதி வாய்ந்த பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை. வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வேட்பாளர் பட்டியலைப் பார்வையிடும் போது அவரது ஆழ்மனம் ஆண்கள் தான் தலைமைப் பதவியை வகிக்க முடியும் என்று தூண்டிவிட்டு அவரை ஆண் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு செய்து விடுகிறதாக மோ கூறுகிறார்.

இத்தகைய பட்சபாதமான ஆழ்மனப் பதிவுகள் ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவான ஊதியங்களை நிர்ணயிக்கின்றன. பெண்கள் ஆண்களால் கொடுமைப்படுத்தப்படும்போது ஆண்களின் பங்களிப்பைக் குறைத்துப் பேசவும், மூடி மறைக்கவும், பூசி மெழுகவும் முயலுகின்றன.

பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் போன்ற பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவான சதவீதமாக இருப்பதற்கும் இதுவே காரணம். இத்தகைய ஆழ்மனத் துவேஷங்கள் கண்ணுக்கும் உணர்வுக்கும் புலனாகாதவை. ஆனால் அவை பெரும் தீங்கிழைப்பவை. அவற்றைப் போக்க ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகக் கடமையும் பொறுப்பும், கட்டாயமும் உள்ளது.

ஏனெனில் பெண்களின் ஆழ்மனதிலும் அத்தகைய துவேஷங்கள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com