கவலைக்கிடமான கழிவறைகள்
கழிப்பறையைச் சுத்தம் செய்து கழிப்பிட பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி.


கழிப்பறையைச் சுத்தம் செய்து கழிப்பிட பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி.
இன்று கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளும், சுத்தமில்லாமல் இருப்பதில் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளும் முன்னோடியாகத் திகழ்கின்றன.
எத்தனையோ தினங்கள் கடைப்பிடிக்கப்படுவதுபோல கழிப்பறைக்கும் ஒரு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினமும் மற்ற தினங்களைப்போல ஏதோ சம்பிரதாயத்துக்காக கடைப்பிடிக்கப்படுகிறது.
கழிப்பறை தினம் என்ன நோக்கத்துக்காக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து, எல்லாரும் தினமும் அதன்படி கடைப்பிடித்து வந்தால் நாட்டில் முழுச் சுகாதாரம் பேணப்படும் என்பது உறுதி.
தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மட்டுமே அதிகளவில் கழிப்பறை பயன்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனைய மாவட்டங்களில் கழிப்பறைப் பயன்பாடு குறைவாகவும், திறந்தவெளிப் பயன்பாடு அதிகரித்தும் காணப்படுகிறதாம்.
நாடு முழுவதும் கழிப்பறைகளைப் பராமரிப்பதில், வீடு, பள்ளி, கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஓரளவுக்குச் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், பொதுக்கழிப்பறை பராமரிப்புதான் கேள்விக்குறியாகவே உள்ளது.
அதிலும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளுக்குச் செல்ல வேண்டுமானால் மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டும். வெளியே வரும்போது ஏதெனும் நோய் தொற்றிக்கொண்டிருக்குமோ என்ற ஒருவித அச்சத்துடனே வரவேண்டியுள்ளது.
எல்லா அரசுகளும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல பல்வேறு விஷயங்களில் காட்டிக்கொண்டாலும், வீட்டைவிட்டு வெளியில் வரும் பெண்களுக்குப் பாதுகாப்பான கழிப்பறை மிக அவசியம் என்பதை மறந்துவிடுகின்றன.
நாடு முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பேருந்து நிலைங்களில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெரும்பாலான கழிப்பறைகள் (கட்டண கழிப்பிடங்கள் உள்பட) போதிய தண்ணீர் வசதியின்றியும், பெண்களுக்கு பாதுகாப்பின்றியுமே உள்ளன.
அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதே கிடையாது. அறைகுறை கதவுடனும், உடைந்த டப்பாக்கள் தொங்கவிடப்பட்டும், எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டும்தான் காணப்படுகின்றன.
கழிப்பறையைப் பயன்படுத்துபவர்கள் கட்டணம் செலுத்துதைக்கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் கட்டணம் கொடுத்தாலும் அந்தக் கழிப்பறைகள் சரியான பராமரிப்பின்றி இருப்பதுதான் அவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள இந்தப் பிரச்னையைத் தீர்க்க, அந்தந்த மாநில அரசுகள் அதிரடியாக முடிவெடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய துறையான ரயில்வேயால், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் கழிப்பறையை மிகச் சிறப்பாக பராமரிக்க முடிகிறது.
கழிப்பறைகளை மட்டுமன்றி ரயில்வே தண்டவாளங்களில் கிடக்கும் மனிதக் கழிவுகளையும்கூட அவ்வப்போது சுத்தம் செய்துவிடுகின்றனர்.
ஆனால் ரயில்வேயை ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவே பயன்பாட்டில் இருக்கும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளைச் சரியாகப் பராமரிப்பதில் ஏன் மாநில அரசுகள் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பது வியப்பாக உள்ளது.
நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பேருந்து நிலைய கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய கழிப்பறைகளை சர்வதேச அளவில் சிறப்பாக பராமரிக்க வேண்டும். இதற்கென மாநில அரசு ஏன் தனியாக ஒரு துறையை உருவாக்கக் கூடாது?
பொதுமக்களின் நேரடிப் பயன்பாடு குறைவாக உள்ள துறைக்கே ஒரு அமைச்சர், ஒரு இயக்குநர் போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அப்படியிருக்க, நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கழிப்பறைக்கு, தனித்துறை, அதற்கென ஒரு அமைச்சர், ஒரு இயக்குநர் மேலும் சில பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து பேருந்து நிலையங்களிலும் உள்ள கழிப்பறைகளை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த வேண்டாமா?
அதன்மூலம் அனைத்து பேருந்து நிலையங்களிலும் உள்ள கழிப்பறைகள் அத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். நாள்தோறும் சிறப்பாகப் பராமரிக்கப்படும். நாடு முழுவதும் சுகாதாரம் பேணப்படும்.
கழிப்பறைக்கென தனியாக ஒரு துறை உருவாக்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டிய நேரம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...