மக்களால் மக்களுக்காக

ஜனநாயக நாட்டில் உச்சபட்சமான அதிகாரம் கொண்டது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றந்தான். அது அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டது.
Updated on
3 min read

ஜனநாயக நாட்டில் உச்சபட்சமான அதிகாரம் கொண்டது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றந்தான். அது அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டது. அனைத்து மக்களும் நாடாளுமன்றத்தில் வீற்றிருக்க முடியாது என்பதால், மக்கள் பிரதிநிதிகளாகச் சிலர் இடம்பெறுகிறார்கள். அவர்கள் சட்டம் இயற்றுகிறார்கள். தேவைப்படும்போது அரசியல் சாசனத்தைத் திருத்தியும் அமைக்கிறார்கள்.

அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? செயல்பாட்டிற்கென வகுக்கப்பட்ட நெறிமுறைகள், வழிகாட்டும் விதிகள் சரியாக பின்பற்றப்பட்டனவா? அவற்றைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறதா?

"அரசின் செயற்பாடுகள் ரகசியமானவை. பொதுமக்களுக்கு அதில் சம்பந்தம் கிடையாது. தனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தமில்லாத ஒன்றில் குடிமக்கள் ஆர்வம் காட்டக்கூடாது. அது அவர்கள் வேலையில்லை' என்று, சட்டம் இயற்றியவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளில் சிலர் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அது ஏற்கப்பட்ட மரபாக இருந்து வந்தது.

இந்தியா ஆங்கிலேயர்களின் காலனியாக பல ஆண்டுகள் இருந்ததால் - மக்கள் அன்னியப்பட்டிருந்தார்கள். அரசில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அரசின் செயற்பாடுகள் தெரிய வந்தால் மக்கள் கிளர்ச்சி செய்வார்களோ என்று அரசினர் பயந்தார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும், அதே நிலை நீடித்தது.

சுதந்திர நாட்டில் அரசாங்கம் செயல்படும் விதம் பற்றி சட்டத்திற்கு உள்பட்ட முறையில் தகவல்கள் வேண்டுமென்று மக்களின் சார்பாகச் சிலர் கோரிக்கை முன் வைத்தார்கள்.

மக்கள் வாக்கால் நாடாளுமன்ற உறுப்பினராகி, அமைச்சர்களானவர்களில் சிலர் மக்கள் கேள்வி கேட்பதைக் கண்டு கடுங்கோபம் கொண்டார்கள். தங்களின் கோட்பாடுகள் நிந்தனைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதினார்கள்.

அவர்களோடு அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொண்டார்கள். அன்னியர்களின் விசுவாசியாக இருந்து தங்களையும், தங்கள் பரம்பரையையும் வளர்த்துக் கொண்டவர்கள், புதிய ஆளும் வர்க்கத்தோடு ஒன்றாகச் சேர்ந்து கொண்டார்கள்.

"உயர்கல்வி கற்று, பல ஆண்டுகள் நிர்வாகம் புரிந்து சிறந்த அதிகாரிகள் என்று இருக்கும் எங்கள் செயல்பாடுகள் பற்றி பாமர மக்கள் கேள்வி கேட்பதா? யாரோ சொல்லிக் கொடுத்த - எழுதி கொடுத்த கேள்வியைக் கேட்கிறார்கள். இவர்களுக்குச் சொந்தமாக ஒன்றும் தெரியாது. சொன்னாலும் ஒன்றும் புரியாது.

நாட்டின் பொருளாதாரம், வரவு செலவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? நாளொன்றுக்கு பதினொன்று, பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யும் நாங்கள், காசு வாங்கிக் கொண்டு வாக்களித்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? அரசின் தலைமைச் செயலக விவகாரம் பாமர மக்கள் சம்பந்தப்பட்டதில்லை. ஜனநாயகம் என்பது வரையறைகளுக்கு உள்பட்டது என்பது போல அரசியல்வாதிகளை விட்டுச் சொல்ல வைத்துவிட்டார்கள்.

பல நாடுகளிலும் நடப்பதை நேரடியாகவும், படித்தும் அறிந்தவர்கள், "ஜனநாயக அரசில் நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையே மக்களை அரசு மீது நம்பிக்கைக் கொள்ள வைக்கும். அதனால் நல்ல இணக்கம் ஏற்படும்' என்கிறார்கள்.

மேலும் "அரசின் செயல்பாடுகள் எப்போதுமே கோப்புகள், ஆவணங்களின்அடிப்படையில் நடைபெறுகின்றன. அவற்றை மக்கள் கேட்கும்போது கொடுப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? பல நாடுகளிலும் மக்கள் கேட்கும் தகவல்களைக் கொடுத்து வருகிறார்கள்' என்று எடுத்துக்காட்டினார்கள்.

தங்கள் அரசிடம் இருந்து தகவல் பெறும் உரிமை பெற்றுள்ள நாடுகளில் வாழும் மக்கள் அரசிடம் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசு, அரசு அதிகாரிகள் பற்றிய வீண் வதந்திகள், லஞ்ச ஊழல் புகார்கள் குறைந்து இருக்கின்றன. நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகள் பாராட்டு பெற்றிருக்கின்றன.

ஜனநாயக நாட்டில் அடிப்படையான அம்சங்களில் ஒன்று தகவல் பெறும் உரிமை என்றார்கள். பத்திரிகைகள், ஊடகங்கள் தகவல் பெறும் உரிமைக்காகத் தொடர்ந்து எழுதியும், விவாதங்கள் நடத்தியும் வந்துள்ளன.

அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி ஒளிப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் அதைக் கொடுப்பதுதானே என்பது எல்லா தரப்பு மக்களின் கோரிக்கையானது.

கொடுக்கப்படும் தகவல்கள் வழியாக, கொடுக்கப்படாத உண்மைகள் வெளியே தெரிந்துவிடும் என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருதினார்கள். அதனால் மக்கள் தகவல் பெற முடியாமல் செய்ய என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து வந்தார்கள்.

ஆனால் ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சி மாண்பு மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் தொடர்ந்து போராடி வந்தார்கள். அவர்கள் தகவல் பெறும் சட்டம் பற்றிய சரித்திரத்தையும், அது அமலில் உள்ள சில நாடுகளில் லஞ்சம், ஊழல் குறைந்து உள்ளதையும், தவறான ஆள்களுக்கு, திறமையற்ற நபர்களுக்கு சலுகைகள் காட்டுவது குறைந்து இருப்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.

அது ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை அதன் அற கோட்பாடுகள் மீது செயல்பட வைத்தது. தன் மக்களை கெளரவமாகவும் கண்ணியமாகவும் நடத்துவது அரசின் பொறுப்பு என்பதை நிலை நிறுத்தியது.

உலகத்திலேயே, முதன் முதலாக தம் மக்களுக்குத் தகவல் பெறும் உரிமையை இருநூற்று நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கிய நாடு ஸ்பெயின். அதற்கு அயராது பாடுபட்டவர் பின்லாந்தில் பிறந்த பாதிரியார் ஆன்ட்ரூஸ் செனீடஸ். முற்போக்கான எண்ணமும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறையும் கொண்டவர்.

ஒரு நாட்டு மக்கள், தங்கள் நாட்டு அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள உரிமை பெற்றவர்கள் என்று பேசியும் எழுதியும் வந்தார் அவர். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. கேப் என்ற அரசியல் கட்சியில் சேர்ந்து ஸ்பெயின் நாடாளுமன்ற தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் மக்கள் தகவல் பெற சட்டம் இயற்ற வேண்டுமென பேசினார். அதனை மன்னரும், அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டனர்.

1766, டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று ஸ்பெயின் மன்னர், அரசாங்கத்திடம் இருந்து தகவல்கள் பெற்றுக்கொள்ள மக்கள் உரிமை பெற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தினார். பதினைந்து பக்கங்கள் கொண்ட அந்தப் பிரகடனத்தில் அரசின் சார்பில் மன்னர் கையெழுத்திட்டார். பின்னர் அது அரசு முத்திரை வைக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டது.

ஐரோப்பாவின் வடக்கில் நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை ஒன்று சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று சொல்வது வழக்கம். கல்வி, கலை, விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், சமூக பாதுகாப்பு போன்றவற்றில் முன்னே இருப்பது ஸ்வீடன்.

உலகத்தின் அரசியல் நிலைமைகள் மாறியபோது ஸ்வீடன் நாட்டில் தனித்தன்மை கொண்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும், மக்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் கொண்டு வந்தார்கள்.

ஆனால் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான சட்டமில்லை. அந்தந்த நாட்டின் அரசியல் சூழ்நிலைகள், தலைவர்கள், மக்கள் மனோநிலைமைகளுக்கு ஏற்ப மாறுதல்கள் செய்து கொண்டார்கள். கேட்கக் கூடியது, கேட்கக் கூடாதது என்று வரையறையும் செய்து கொண்டார்கள். சட்டம் அனுமதிக்கும் வரையில்தான் தகவல் பெற முடியும். இது எல்லா நாட்டிற்கும் பொருந்துகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தால் மகத்தான புரட்சி ஏற்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் அது மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கிறது. அரசாங்கத்தை மக்களோடு இணைப்பதில் முக்கியமான காரணியாக இருக்கிறது.

உலகத்தில் 95 நாடுகளில் மக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் நாடுகளில் நன்கு செயல்படுகிறது. பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப், மக்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு 2002ஆம் ஆண்டில் அங்கீகாரம் அளித்தார். இருபத்தொரு நாள்களில் மக்கள் கைகளுக்கு அவர்கள் கேட்கும் தகவல்கள் போக வேண்டும் என்று உத்தரவு போட்டார். 2007ஆம் ஆண்டில் சீனாவில் இந்த மக்கள் தகவல் பெறும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 2005ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மக்கள் தகவல் பெறும் சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. அதில் ராணுவம், சி.பி.ஐ. உள்பட பல துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

மக்கள் தகவல் பெறும் உரிமை பெற்ற 250ஆம் ஆண்டு, இன்னும் இரண்டாண்டுகளில் வரப் போகிறது. அதனைக் கொண்டாட உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

கூடுமான வரையில் அரசின் பல துறைகளையும் அதற்குள் கொண்டு வர வேண்டும். நாங்கள் உள்ளே வர மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை முதலில் உள்ளே கொண்டு வர வேண்டும். ஜனநாயகம் என்பதன் உண்மையான அர்த்தம் அதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com