பொருளுக்கும் இலக்கணம் கண்ட தமிழ்!

உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஊரும், நாடும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித இனமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு அடையாளம் என்ன? மனிதனை மனிதனாக ஆக்குவன எவை? மொழியும், இலக்கியமும், பண்பாடுமே. ஆனால் நாம் அதனை வசதியாக மறந்து விட்டோம்.
Updated on
3 min read

உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஊரும், நாடும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித இனமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு அடையாளம் என்ன? மனிதனை மனிதனாக ஆக்குவன எவை? மொழியும், இலக்கியமும், பண்பாடுமே. ஆனால் நாம் அதனை வசதியாக மறந்து விட்டோம்.

இந்தக் காலத்தில் இலக்கியம் படிப்பது குறைந்துவிட்டது. தமிழ் இலக்கியம் படிப்பதால் வேலை வாய்ப்பு குறைவு என்பதால் எதிர்காலம் இல்லை என்று கூறப்படுகிறது. தமிழ் படிப்பதால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லாத நிலையென்றால், இதற்காகத் தமிழர்கள் வெட்கப்பட வேண்டாமா?

பொருள் ஈட்ட வேண்டியது அவசியம்தான். "பணம் பத்தும் செய்யும்' என்பது உண்மைதான். என்றாலும், பண்பாடு இல்லாத சமுதாயம் மனிதநேயம் மறந்து விலங்கு நிலையை அடைந்துவிடும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? கல்வி, மொழி, இலக்கியம் என்பவை மனிதனை மனிதனாக வாழ வைக்கும் நாகரிகக் குறியீடுகள் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

"மொழியின் வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம்' என்றார் அறிஞர் ஹட்சன். இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் இன்னொரு ஊடகம் என்று கூறலாம்.

உலகில் எண்ணற்ற மொழிகள் தோன்றின; வளர்ந்தன. ஆனால் காலப்போக்கில் பல அழிந்தன, சில அழிந்து கொண்டும் இருக்கின்றன. வளர்ந்துவரும் அறிவியலுக்கு ஈடுகொடுக்க முடியாதவை அழியும். அதை யாராலும் தடுக்க முடியாது.

செம்மொழிகள் என்று சிறப்பிக்கப்படும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகியவற்றில் முதல் நான்கு மொழிகளும் வழக்கிழந்து போயின. சீனமும், தமிழுமே இன்றும் வாழ்ந்து வருகின்றன. அந்தப் பெருமையைக் கொண்டாட வேண்டாமா?

"சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே' என்றும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் பாரதி பாடி மகிழ்ந்தார்.

தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், தனக்கே உரிய வளம் வாய்ந்த செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் மாக்ஸ்முல்லர் என்னும் மொழியியல் அறிஞர் கூறுகிறார்.

ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் பல கருத்துகளைப் புலப்படுத்துவதில் தமிழ் மொழி போல் வேறு எம்மொழியும் இல்லை என்று பெர்சிவல் பாதிரியார் கூறியதை நினைவு படுத்திக் கொள்வோம்.

"இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பிங்கல நிகண்டு கூறுகிறது. அனுமன் சீதாதேவியிடம் தூது சென்றபோது மதுரமான மொழியில் பேசினான் என்று வால்மீகி முனிவர் சுந்தரகாண்டத்தில் எழுதியிருப்பதைக் கொண்டு அம்மதுரமொழி தமிழ் மொழியென்றே கொள்ளலாம் என்று மகாவித்துவான் ரா. ராகவையங்கார் "தமிழ் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியின் ஆதி காவியமான வால்மீகி இராமாயணத்தில் பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. வியாச முனிவரின் மகாபாரதத்திலும் தமிழ்நாட்டின் சிறப்பும், பாண்டியர் அரசும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

இதனால், "பாண்டியர் ஆண்ட நாட்டின் தொன்மையும், அவர் பேசிய தமிழ் மொழியின் தொன்மையும் ஓராற்றான் தெளியப்படுமாறு காண்க' என்று பரிதிமாற் கலைஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"தமிழ்மொழியானது கவிதையைப் பொருத்தவரை கிரேக்க மொழியைவிட பண்பட்டது; இலத்தீன் மொழியைவிட அழகானது; ஆற்றலிலும், முழுமையிலும் ஆங்கிலம் மற்றும் ஜெர்மனுக்கு இணையானது' என்று டாக்டர் வின்ஸ்லோ கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

ஜெர்மானிய தத்துவஞானி ஆல்பர்ட் சுவிட்சர், திருக்குறளை ஆராய்ந்து பார்த்துவிட்டுக் கூறினார்: "திருக்குறளை விடவும் சிறந்த அறநெறி இலக்கியம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.'

பொதுவாக எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் மட்டும்தான் பொருளுக்கும் இலக்கணம் காணப்பட்டது. நமது பழந்தமிழ் இலக்கண நூலாகிய "தொல்காப்பியம்' எழுத்து, சொல், பொருள் என்று முப்பிரிவுகளாகவே பகுக்கப்பட்டுள்ளது.

அக்காலத் தமிழர் வாழ்க்கை யினை அகம், புறம் என இரு பிரிவுகளாகவே பகுத்தனர். தலைமகனும், தலைமகளும் உள்ளம் கலந்து கூடி வாழும் வாழ்க்கையைக் கூறும் பாடல்கள் அகம் எனப்பட்டன.

போர், கொடை, வெற்றி ஆகியவற்றைக் கூறும் பாடல்கள் புறம் எனப்பட்டன. அக வாழ்வு வீட்டுக்கானது, புற வாழ்வு நாட்டுக்கானது.

"போரும், காதலும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், அறிவியலும், மானிடவியலும் தற்கால இலக்கியங்களின் பிழிவாகவும் அமைந்துள்ளன' என்று அறிஞர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை குறிப்பிடுவார்.

காலத்துக்கு ஏற்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை காலம் புறம் தள்ளிவிடும் என்பது வரலாறு. காலத்திற்கு ஏற்ப கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதால்தான் தமிழ் "என்றுமுள தென்றமி'ழாய் இன்றும் நின்று நிலவுகிறது. அதனை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு இல்லையா?

வாழ்க்கை என்பதே தமக்காக வாழ்வதல்ல, பிறருக்காக வாழ்வதாகும் என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த உலகம் அழியாமல் நிலை பெற்றிருப்பதற்குக் காரணம், தமக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெருமக்கள் இருப்பதால்தான் என்று புற நானூறு கூறுகிறது.

மன்னனை "அவன்' என்றும், புலவர்களை "அவர்' என்றும் பேசும் மரபு தமிழுக்குரியது. "அவனை அவர் பாடியது' என்றே இலக்கியங்கள் வகுக்கப் பெற்றுள்ளன. புலவர்கள் தம் நாட்டைப் பாடாமல் போவதை மன்னர்கள் அவமானமாகக் கருதினர்.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவ னாக

உலகமொரு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்

புலவர் பாடாது வரைகவென் நிலவரை'

என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ளான். மன்னர்களும் புலவர்களாகவும், புரவலர்களாகவும் வாழ்ந்த காலம் அது.

"புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுளிற் புனைந்து காட்டும் ஆற்றலினும், அகத்தே தோன்றும் காட்சிகளை உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் மிகவும் சிறந்தது...' என்று டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் குறுந்தொகைக்கு எழுதிய முன்னுரையில் வியந்து பாராட்டுகிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உலகப் பார்வையோடு அறிவியல் பார்வையும் அகத்தே கொண்டிருப்பன சங்க நூல்கள்.

மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

என்ற உவமை மூலம் அறிவியல் உண்மைகளை எடுத்து இயம்புகிறது.

சுமார் கி.பி. 60இல் தோன்றியுள்ள "பெரிபுளூஸ்' என்னும் நூல், கி.பி. 77 வந்த "பிளினியன் இயற்கை வரலாறு', கி.பி. 170இல் வந்த தாலமியின் "பூகோள விவரணம்' ஆகிய நூல்களில் இவ்வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கும் நுண்ணிய விவரங்கள் சங்க நூல்கள் பலவற்றில் காணப்படும் கருத்துகளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கின்றன என்று டாக்டர் கே.கே. பிள்ளை தமது "தென்னிந்திய வரலாறு' நூலில் கூறியுள்ளார்.

இவ்வாறு உலகளாவிய பரந்துபட்ட பார்வையுடைய ஓர் இனத்தின் தாய்மொழி உள்ளூரிலேயே மதிக்கப்பட வில்லை என்பது பரிதாபமானது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். இந்தக் கடமை அரசுக்கு மட்டுமல்ல, தமிழர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

பதிமூன்றாம் லூமி என்ற பிரெஞ்சுப் பேரரசன் மொழியைப் பேணிக் காக்க 1525ஆம் ஆண்டு பிரெஞ்சு கலைக்கழகத்தைத் தோற்றுவித்தான். நம் முன்னோர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்.

"சங்கத் தமிழ் மூன்றும் தா' என்றார் ஒளவைப் பிராட்டி. இதனைக் கொஞ்சமும் குறைவு படாமல் அடுத்தத் தலைமுறைக்கு அளித்துவிட்டுச் செல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. முழக்கங்கள் தமிழை வளர்த்து விடாது; முயற்சிகளே தமிழை வளர்க்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com