370 - ரத்து செய்யப்பட வேண்டும்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படும் காஷ்மீரம் மூன்று பிரிவுகளாக உள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு பகுதி.
Updated on
3 min read

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படும் காஷ்மீரம் மூன்று பிரிவுகளாக உள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு பகுதி. (இப்பகுதியில் உலகப் புகழ் பெற்ற வைஷ்ணவி கோயில் உள்ளது.) முஸ்லிம்களும் ஆட்சியாளர்களும் மட்டுமே வசிக்கும் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதி, பெளத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லடாக் பகுதி. தற்போது அரசியல் சாஸனப் பிரிவு 370இன் படி காஷ்மீருக்காக ஒதுக்கப்படும் பெருமளவு நிதி மற்றும் திட்டங்கள் ஸ்ரீநகர் பகுதியிலேயே செலவிடப்படுகிறது. ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகள் முழுமையாக புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியாவிற்கு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ஒரு நாள் முன்பாகவே சுதந்திரம் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் முழுமையாக முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவின் சுதந்திரமோ, இந்தியத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் சமஸ்தானங்கள் விரும்பினால் இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாம் என்கிற கொள்கையோடு வழங்கப்பட்டது. இதன் காரணமாக 586 சமஸ்தானங்களை சுதந்திர இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் படேல் செய்தார்.

இந்தியாவுடன் இணைய மறுத்த ஹைதராபாத், ஜீனோகட் சமஸ்தானங்கள் சர்தார் படேலின் போலீஸ் நடவடிக்கை மூலம் பணிய வைக்கப்பட்டன. இதே முறையில் காஷ்மீரத்தையும் இந்தியாவுடன் படேல் இணைத்திருப்பார். ஆனால் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு காஷ்மீர் தனது மூதாதையர்களின் மாநிலம் என்றும் எனவே தனது சொந்த மாநிலத்தின் விவகாரத்தை தான் நேரடியாக பார்த்துக்கொள்வதாகவும் கூறிவிட்டார். எனவே சர்தார் படேல் காஷ்மீர் விஷயத்தில் சற்று விலகியே இருந்தார்.

காஷ்மீரத்தை ஆட்சி செய்த மஹாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணையத்தான் விரும்பினார். ஆனால், திருவிதாங்கூர், ஹைதராபாத், ஜீனோகட் போன்ற சமஸ்தானங்கள் விரும்பியது போலக் காஷ்மீரும் தனி நாடாக இயங்கினால் என்ன என்கிற நப்பாசை அவருக்கு இருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுடன் இணைந்து பலூசிஸ்தான் முஸ்லிம் மலைவாழ் மக்களும் காஷ்மீரை ஆக்கிரமிக்கத் துவங்கினர். காஷ்மீரில் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு, பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரில் நரவேட்டையாடியபோதுதான், வேறுவழியின்றி மஹாராஜா ஹரிசிங் நிபந்தனையின்றி இந்தியாவுடன் காஷ்மீர் மாநிலத்தை முழுமையாக இணைத்தார். தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனரான ஷேக் அப்துல்லா காஷ்மீர் முஸ்லீம் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்.

அவரது ஒப்புதல் இல்லாமல் போனால், காஷ்மீர மக்கள் இணைப்பை எதிர்க்கக்கூடும் என்று பிரதமர் நேரு கருதினார். எனவே அவரது வேண்டுகோளை ஏற்க வேண்டும் எனக்கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென அரசியல் சாஸனப்பிரிவு - 370 உருவாக்கப்பட்டது.

சட்ட மந்திரி அம்பேத்கர், உள்துறை மந்திரி படேல் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் பிரதமர் நேரு, ஷேக் அப்துல்லாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். காஷ்மீரை காப்பாற்ற இந்தியப் படைகள் களமிறங்கியது. பாகிஸ்தான் இராணுவம் விரட்டியடிக்கப்பட்டது. காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமானது.

அந்த 24 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய பகுதியை நாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்கிறோம். பாகிஸ்தானியர்கள் இதனை விடுதலை செய்யப்பட்ட காஷ்மீர் பகுதி (ஆசாத் காஷ்மீர்) என்று சொல்கிறார்கள்.

இப்பகுதியில்தான், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல், ஆயுத விற்பனை ஆகியவற்றின் மையமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் உள்ளது. முழு காஷ்மீரையும் மீட்கும் நடவடிக்கையில் இந்திய இராணுவம் வெற்றி பெற்றுக் கொண்டு இருந்த போது, நேரு இப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சென்றார். யுத்த நிறுத்தம் செய்தார்.

ஐ.நா சபை இது விஷயத்தில் தலையிட்டு பாகிஸ்தான் படை காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்றும், காஷ்மீர் பகுதி மக்களிடம் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியது. மூன்றில் ஒரு பகுதியான ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் இது நாள் வரை வெளியேறாத காரணத்தால் இந்திய அரசு இந்த வாக்கெடுப்பு குறித்து கவலைப்படவில்லை.

எனவே பாகிஸ்தானும் இந்தியாவும் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டிற்கு இருபுறமும் இருக்கும் பகுதிகளை தங்கள் பகுதியாக கருதிக் கொண்டு ஆட்சி நடத்துகின்றன. ஆனால் இந்திய அரசு முழு காஷ்மீரையும் தன் வரைபடத்தில் காட்டுகிறது.

அரசியல் சாஸனப்பிரிவு - 370இன் படி ஒரு நாடு, இரண்டு கொடி, இரண்டு பிரதமர். காஷ்மீருக்குள் பிற மாநிலத்தவர் நுழைய அனுமதி அட்டை பெற வேண்டும் எனும் நிலை இருந்தது. காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவும் பிரதமர் என்றுதான் அழைக்கப்பட்டார், காஷ்மீருக்கு தனிக்கொடி இருந்தது.

ஒரு நாட்டிற்குள் ஒரு நாடு எனும் நிலை மாற வேண்டும் என பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி "ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் முழக்கத்துடன் காஷ்மீருக்குள் தடையை மீறி நுழைந்தார். ஷேக் அப்துல்லா அரசாங்கத்தால் அவர் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் மர்மமான முறையில் அவரது மரணம் நிகழ்ந்தது. அதன் பின்னர் தனிக்கொடி, தனி பிரதமர், அடையாள அட்டை போன்ற விஷயங்கள் மாறின.

ஆனாலும் அரசியல் சாஸனப் பிரிவு 370இன் படி காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் பொருந்தாது. அதாவது இந்திய நாடாளுமன்ற அதிகார வரம்பிற்குள் காஷ்மீரம் இல்லை. காஷ்மீர் சட்டசபை அங்கீகரித்தால் மட்டுமே நமது நாடாளுமன்றத்தின் அதிகாரம் செல்லுபடியாகும். காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம்.

காஷ்மீர் மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் மாநில ஆண்கள் வெளி மாநிலப் பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் காஷ்மீரில் சொத்து வாங்கலாம்.

மாநில எல்லைகளை நிர்ணயிக்கும் அரசியல் சாஸனப்பிரிவு 238 இம்மாநிலத்திற்கு பொருந்தாது. இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்துமே ஜம்மு காஷ்மீர் நீங்கலாக என்று தான் இயற்றப்படுகிறது.

அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. உண்மை காஷ்மீரிகளான பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிலும், டெல்லியிலும் லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, "அரசியல் சாஸனப்பிரிவு 370ஐ ரத்து செய்வேன்' என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த பாரதிய ஜனதா கட்சி, காஷ்மீர் மாநிலத்தின் ஆறு தொகுதிகளில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றுள்ளது.

எனவே அரசியல் சாஸனப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்குண்டான தனது கருத்தை ப.ஜ.க தலைவர்கள் வெளிப்படுத்த துவங்கியுள்ளனர். ஆனால் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா 370ஐ ரத்து செய்தால் காஷ்மீரம் இந்தியாவுடன் இருக்காது என மிரட்டி வருகிறார்.

நேரு காலத்தில் இதேபோல ஷேக் அப்துல்லா நடந்து கொண்டபோது ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு தமிழகத்தில் கொடைக்கானல் விருந்தினர் மாளிகையில் காவல் வைக்கப்பட்டார். தாத்தாவுக்கு ஒரு நீதி, பேரனுக்கு ஒரு நீதியா? இந்தியாவை மிரட்டும் அளவுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு துணிவு ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?

தற்பொழுது இடது சாரி இயக்கங்களும் சிறுபான்மை ஆதரவு இயங்கங்கள் என்று சொல்லிக்கொள்வோரும், மதச்சார்பற்ற தன்மை பற்றிப் பேசுவோரும் 370ஐ ரத்து செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்வதால் இவர்களுக்கு என்ன பாதிப்பு என்று தெரியவில்லை. இதனால் எல்லாம் இந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் இவர்களுக்கு ஆதரவாகி விடுவார்கள் என்று கருதினால் அதைவிட அறிவீனம் எதுவும் இருக்க முடியாது.

பாரதிய ஜனதா கட்சி 370ஐ துணிந்து ரத்து செய்ய வேண்டும். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரின் பகுதிகளை நாம் திரும்பப் பெற்றாக வேண்டும். இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற நிலை வரவேண்டும். ஜம்மு லடாக் ஆகிய பகுதிகள் காஷ்மீரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித் தனி மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும். தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி புதிய பிரதமர் நரேந்திர மோடி இதை செய்து முடிப்பார் என்று எதிர்பார்ப்போம்.

கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com