ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1948லிருந்து இந்தியா பாகிஸ்தானிடையே பிரச்னை துவங்கி, வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போகிறது. உலகிலேயே எல்லைப் பாதுகாப்புப் பணியில் மிக கடினமான பிரதேசம் சியாசன் பகுதி என்று கருதப்படுகிறது. அடர்ந்த பனி சூழ்ந்த அந்த இடத்தில் நமது பாதுகாப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்கின்றனர். கார்கில், அனந்தநாக், பாரமுல்லா, குப்வாரா, பூஞ்ச், ஊரி போன்ற ஜம்மு காஷ்மீரின் மேற்கு பகுதியில் எப்போதும் எல்லைப் பிரச்னை மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலால் வளர்ந்துவரும் பயங்கரவாதம் இருந்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவானால் துப்பாக்கி சுடும் சப்தம் சர்வ சாதாரணமாக கேட்கும். அங்குள்ள மக்களுக்கு இது பழகிப் போய்விட்டது. பாதுகாப்பு வீரர்களுக்கோ யார் தீவிரவாதிகள், யார் சாதாரண மக்கள் என்று அடையாளம் காண்பதே கஷ்டம். முக்கியமான சந்திப்புகளில் மத்திய ரிசர்வ படையினரின் செக் போஸ்டுகள் உண்டு. அவற்றுக்கும் முழுபாதுகாப்பு உண்டு. ஏனெனில் எப்போது வேண்டுமானால் அவை தாக்கப்படலாம்.
ராணுவம், மத்திய துணை ராணுவ பிரிவுகள், மாநில காவல்துறை, பல்வேறு நுண்ணறிவு பிரிவுகள் போன்றவை காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ளன. அவைகளை ஒருங்கிணைப்பதே மிகப்பெரிய சவால். பல தகவல்கள் வரும். அதில் உண்மை எது, எவ்வாறு வெற்றிகரமாக தீவிரவாதிகளின் சதியை முறியடிப்பது என்பது அன்றாட போராட்டம். இத்தகைய மோதல்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சிவில் அமைப்பாகிய காவல்துறை, சட்ட விரோத கும்பலை கட்டுக்குள் கொண்டு வர குறைந்த பட்ச பலத்தைத்தான் பிரயோகிக்க முடியும். ஆனால் ராணுவப் பயிற்சி அவ்வாறு இல்லை. எதிரியை தாக்க வேண்டும் என்றால் முழு பலத்தையும் செலுத்த வேண்டும். அதனால்தான் உள்நாட்டு கிளர்ச்சி விவகாரங்களை ராணுவம் கையாளும் பொழுது உயிரிழப்பு ஏற்படுகிறது. அதன் தொடர்பாக உள்ளூர் மக்களின் வெறுப்பையும் பெற வேண்டிய சூழல் உருவாகுகிறது.
இம்மாதிரி தருணங்களில் சட்டப்படி பாதுகாத்துக் கொள்ள ராணுவ அதிகார காப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை வைத்து பாதிக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்பட்ட இடத்தில் - ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற பகுதிகளில் - அமைதியை நிலைநாட்ட உள்நாட்டு கிளர்ச்சியை உருவாக்குபவர்கள் மீது உரிய எச்சரிக்கைக்கு பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்க வழி வகைசெய்கிறது.
சர்ச்சைக்குரிய இந்த சட்டம் அபரிமிதமான அதிகாரத்தை பாதுகாப்புதுறைக்கு அளிக்கிறது. மனித உரிமை அத்து மீறல்கள் சர்வசாதாரணமாக நிகழ வழிவகை செய்கிறது என்ற குற்றச்சாட்டும் அசாதாரண நிலைமை உள்ளூர் பாதுகாப்பிற்கு பாதிப்பும் இந்திய இறையாண்மையை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் என்றும் இருமுனை வாதங்கள் நிலைமைக்கு ஏற்றவாறு முன்வைக்கப்படுகின்றன.
எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தின் தாக்கம் 1990லிருந்து வலுவடைந்துள்ளது. பாகிஸ்தான் தூண்டுதலால் அல்கொய்தா, ஜெய்ஷ் ஏ முகமது, இந்திய முஜாஹிதின், சிமி என்று பல இயக்கங்கள் வேரூன்றியுள்ளன. இந்த இயக்கங்களின் நோக்கம் பொது இடங்களுக்கு குந்தகம் விளைவிப்பது, மதவாதம் தலைதூக்கச் செய்து சமுதாயத்தை பிளவுபடுத்துவது. பாகிஸ்தான் மறைமுகமாக நடத்தும் இந்த மிதமான போரில் பாதுகாப்பு வீரர்களை வழிநடத்தும் அதிகாரிகளை குறிவைக்கின்றனர். அதனால்தான் காஷ்மீரில் இளம் அதிகாரிகள் உயிரிழக்கின்றனர்.
சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். நமது மண்ணின் மைந்தர் என்பதால் நமக்கு இன்னும் அதிகமாக வலிக்கிறது. எவ்வளவு கண்ணியமாக மேஜரின் பெற்றோரும் துணைவியாரும் இழப்பை ஏற்றுக் கொண்டனர். நமது முதல்வரின் உணர்ச்சி பூர்வமான கடிதமும் உடனடி நிவாரண தொகையும் ஆறுதல் மருந்தாக துக்கத்தை தணித்
திருக்கும்.
இந்திய முஜாஹிதின், பாகிஸ்தான் உளவுப் பிரிவு ஆதரவோடு இந்தியாவில் உள்நாட்டு அமைதியை தகர்க்க உருவாக்கப்பட்ட இயக்கம். இந்திய ஜனநாயக விரோதம்தான் அவர்களது சித்தாந்தம். பயங்கரவாத நிகழ்வுகள் மூலம் பொது அமைதியை நிலைகுலையச் செய்வது, சமுதாயத்தில் பிரிவினை வாதத்தை பரப்புவது - மொத்ததில் மக்களிடத்தில் பீதியை கிளப்பி முன்னேற்றத்தை தடுப்பது தான் முக்கிய நோக்கம்.
நடந்துக் கொண்டிருக்கும் தேர்தலில்போது தீவிரவாதிகள் பொது இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை கணக்கிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய முஜாஹிதின் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் நேபாளத்தில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டது இந்திய பாதுகாப்பு அமைப்பின் மிகப்பெரிய வெற்றி. அதைத் தொடர்ந்து அப்துல் கரீம் துன்டா கைது, முஜாஹிதின் இயக்கத்தை ஓரளவு முடங்கச் செய்தது.
இவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நீதிமன்ற வளாகங்களில் 2007ஆம் வருடம் நடந்த தொடர் குண்டு வெடிப்பிலும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்கள். இவ்வாறு பயங்கரவாத இயக்கங்களான அல்கொய்தா, லக்ஷர் இ தொய்பா, ஜெம், முஜாஹிதின் போன்ற அமைப்புகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது.
சென்னை ரயில் நிலையத்தில் மே முதல் நாள் குவாஹாத்தி விரைவு வண்டியில் வெடித்த குண்டு குறைந்த சக்தி வெடிபொருளானதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெங்களூரிலிருந்து சென்னை வந்த விரைவு வண்டி சென்னையிலிருந்து ஆந்திரா கடந்து வட கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். ரயில் தாமதமாக ஒடிக் கொண்டிருந்தது. ஆந்திர மாநிலப்பகுதியில் குண்டு வெடிக்கும் வகையில் திட்டமிட்டிருக்கலாம்.
உயிரிழப்பு ஈடுசெய்ய முடியாததுதான். ஆனால் தெய்வாதீனமாக பெரிய சேதம் விளையவில்லை. மக்களும் பீதியடையவில்லை. சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் ரயிலும் புறப்பட்டுள்ளது. காவல்துறை துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டுள்ளது. தேசிய புலனாய்வுக் குழுவுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்பது திண்ணம்.
முழுமை அடைய முடியாத இலக்கு என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறுவார். முழுமை அடைந்து விட்டோம் என்று நினைக்கும் பொழுது அது நம்மைவிட்டு விலகும். அது போல பாதுகாப்பில் முழுமை என்பது எட்டாத எல்லை. ஓட்டைகளை அடைத்துவிட்டோம் என்று திருப்தியடைய முடியாது, ஏதாவது புற்றிலிருந்து பாம்பு கிளம்பும். அதுவும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மிக கடினம்.
பல்லாயிரக்கணக்கான பிரயாணிகள். பிளாட்பாரம் நுழைவாயிலில் மட்டும் சோதனை செய்யலாம். ஆனால் தண்டவாளப் பகுதியிலிருந்து பணி நிமித்தமாக வருபவர், சில்லறை வியாபாரிகள் ஏனைய மக்கள் வருதல் போதலை கண்காணிப்பது கடினம். ரெயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே நிர்வாகத்தின் சொத்துக்கள் பாதுகாக்கும் பணியில் உள்ளது.
ரயில்வே போலீஸார் ஓடும் ரயிலில் நடக்கும் திருட்டு வழக்குகள் பிளாட்பாரங்களில் பிரயாணிகள் பாதுகாப்பு, ஓடும் ரயிலில் ரோந்து என்று அடுத்த கட்ட பாதுகாப்பு பணியில் உள்ளனர். ரயில்வே போலீஸின் செலவினங்களின் ஒரு பகுதியை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்
கொள்கிறது.
ரயில்வே நிர்வாகத்தோடு இணைந்து ஓரளவு அவர்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மற்றபடி மாநில காவல்துறையின் கட்டுப்பாட்டில் ரயில்வே போலீஸ் இயங்குகிறது. தேவையான அளவில் ஆள்களும் மாநில காவல்துறையிலிருந்து பெறப்படுகிறது.
அறுபத்தைந்தாயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதையில் 8,000 ரயில் நிலையங்களில் தினமும் 25 லட்சம் மக்கள் பயணிக்கும் ரயில்களில் எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்? இங்குதான் மக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.
நம்மோடு பிரயாணம் செய்பவர்களை கவனிக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர் கொடுக்கும் பொருளை வாங்கக் கூடாது. எந்தப் பொருள்கள் எவருடையது என்று சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டும். கேட்பாரற்ற பொருள் இருந்தால் உடனடியாக டிக்கட் பரிசோதகரிடமோ, ரயில் பெட்டி உதவியாளரிடமோ அல்லது காவலரிடமோ தெரிவிக்க வேண்டும்.
ரிசர்வ் பெட்டியில் அனாமத்தாக ஏறுபவர்களை டிக்கட் பரிசோதகர் நிச்சயமாக அனுமதிக்க கூடாது. இம்மாதிரி தொற்றிக் கொள்பவர்கள்தான் தகாத செயல்களில் ஈடுபடுவர். பாதுகாப்பு நமது கையில் உள்ளது. ரயில் பாதுகாப்பு அமைப்புகளும் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட வேண்டும்.
நினைத்துப் பார்க்க முடியாததை நினைக்க வேண்டும். சிந்தித்துப் பார்க்க முடியாததை சிந்தனை செய்து புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்பதுதான் பயங்கரவாதத்தை ஒடுக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். மனிதகுண்டு, விமானத்தை வைத்து இரட்டை கோபுரம் தகர்ப்பு என்று சிந்தனைக்கு எட்டாதவை நிகழ்ந்துள்ளன என்பதை மறக்கலாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.