தேர்தலின் பல முகங்கள்

ஜனநாயகம் என்பதே தேர்தல்தான். தேர்தல் என்பது வாக்குரிமை பெற்ற குடிமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்குச் சென்று சுதந்திரமாக வாக்கு அளிப்பதுதான்.
Updated on
3 min read

ஜனநாயகம் என்பதே தேர்தல்தான். தேர்தல் என்பது வாக்குரிமை பெற்ற குடிமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்குச் சென்று சுதந்திரமாக வாக்கு அளிப்பதுதான். தேர்தல் என்பது பழைய முறை. உலகத்தில் பல நாடுகளிலும் நடைமுறையில் இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் தேர்தல் மூலமாகத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஒருமுறை ஜனநாயக முறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் வஞ்சகம், சூழ்ச்சியால் தன்னை பலமுறை தேர்ந்தெடுக்க வழி கண்டுபிடித்துக் கொண்டார்கள். அதனால் தேர்தல் முறை என்பதே பலனற்றது என்றாகியது. தமிழ்நாட்டில் எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளில் கிராம சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. வேட்பாளர்களுக்கு தகுதி தீர்மானிக்கப்பட்டு இருந்தது. அது உத்திரமேரூர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

அதனால் தேர்தல் என்பது ஏற்கெனவே இல்லாததில்லை. பழையது, புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. நவீன விஞ்ஞான முறையில் துல்லியமான கணக்கீடுகள், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நடத்தப்

படுகிறது.

மக்களுக்குத் தொண்டாற்ற, ஏழை எளிய மக்கள் எல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ, கல்வி, சுகாதாரம் பெற, வறுமையென்பதை ஒழிக்க என்றே கட்சிகள் தோன்றி இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் தனது லட்சியத்தை அடைய வழிமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை அடைய, சட்டமாக்க மக்கள் ஆதரவை கோரி தேர்தல் களத்தில் இறங்குகின்றன.

தேர்தல் வெற்றியே கட்சிக்கு ஆட்சி புரியும் அதிகாரத்தைக் கொடுக்கிறது. அதிகாரம் நாடாளுமன்றத்தின் சட்டங்கள் மூலமாக தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்கால் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவர் கையெழுத்து இட்டதும் சட்டமாகிறது. அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட சட்டமென்றால் அதனை உச்சநீதிமன்றம் கூட தடை செய்ய முடியாது.

எனவேதான் நாடாளுமன்றம் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி வாய்ந்தவர்களாக, கல்வி கற்றவர்களாக, மக்கள் நலம் சார்ந்து செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டுமென்று வாக்களிக்கும் வாக்காள பெருமக்கள் கருதுகிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் எல்லாரும் திறமைசாலிகளாக இருப்பதில்லை.

கட்சி தனக்குள்ள நிர்ப்பந்தம் காரணமாக ஊழல் பேர்வழிகள், குற்றவாளிகள், படிப்பறிவற்றவர்கள், மக்கள் விரோதிகள் ஆகியோரை எல்லாம் தேர்தலில் நிறுத்தி விடுகிறது. அதனைக் கண்டு மக்கள் மனம் புழுங்கினார்கள். கூக்குரல் இட்டார்கள்.

தகுதியற்ற வேட்பாளர்களுக்குத் தகுதி வாய்ந்த நான் எப்படி வாக்களிப்பது என்று நியாயமாகக் கேட்டார்கள். அந்த நியாயம் புரிந்தது. எனவே வேட்பாளர் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர் நோட்டாவில் வாக்களிக்கலாம் என்று உரிமை கொடுத்திருக்கிறார்கள். நோட்டாவில் வாக்களிக்கக் காரணம் சொல்ல வேண்டியது இல்லை. வாக்கு என்பதே காரணம் சொல்லாமல் வாக்களிப்பதுதான். அதுவேதான் நோட்டாவிற்கும்.

நோட்டா எதிர்ப்பைப் பதிவு செய்வது. ஆனால் இந்திய தேர்தல் விதியின்படி ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிகமான எண்ணிக்கையில் வாக்கு பெற்றவர் வெற்றி பெற்றவர் ஆவார். நோட்டா வாக்குகளைவிட குறைவாகப் பெற்று இருந்தாலும் அவரே வெற்றியாளர்.

நோட்டா வாக்கு என்பது மக்கள் மனநிலை என்ன என்பதைக் காட்டுவதுதான். அதோடு மக்களுக்கு தங்கள் எதிர்ப்பை நிலைநாட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்ற திருப்தி. ஆனாலும் நோட்டாவால் அரசியல் கட்சிகள் திறமையான, தகுதியான ஆற்றல் மிகுந்த வேட்பாளர்களைத் தேர்தல் களத்தில் இறக்கும் என்று நம்பிக்கைதான்.

அது நல்ல நம்பிக்கைதான். ஆனால் காரியத்தில் நடப்பதில்லை. ஒவ்வொரு கட்சியும் வலிமையான மறைமுகத் திட்டம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தேர்தல் சமயத்தில் சாதுரியமாக, கவர்ச்சிகரமான முறையில் மக்கள் முன்பு வைக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க குறைந்தபட்ச வயது இருபத்தைந்து என்று சட்டம் இருக்கிறது. கட்சிகள் இருபத்தாறு, இருபத்தேழு வயது கொண்ட அனுபவ அறிவற்ற இளைஞர்களைத் தேர்தலில் முன்நிறுத்துகிறது.

அதற்குக் கட்சி சொல்லும் காரணம்: இளைஞர்கள் நாட்டின் மனித வளம். அவர்கள் செயல்திறன் நாட்டிற்கு அவசியம். எங்கள் கட்சி இளைஞர் நலம் சார்ந்தது. எனவே நாடாளுமன்றத்திற்கு திறமை கொண்ட இளம் வீரர்களை அனுப்பி வைக்க இருக்கிறோம். வாக்காளர்கள் இளைஞர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்கிறது.

இன்னொரு கட்சி எழுபது, எண்பது வயது நிரம்பிய நடக்க முடியாதவர்கள், காது கேளாதவர்கள், சரியாகப் பேச முடியாதவர்கள், பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில் முன்னே இருக்கிறது. அதற்குச் சொல்லும் காரணம் அறிவுக்கும் வயதுக்கும் சம்பந்தம் கிடையாது. அனுபவ அறிவு, அனுபவ முதிர்ச்சி நாட்டிற்குத் தேவை. எனவே எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறது.

பத்திரிகைகள், ஊடகங்கள் இந்தியா முழுவதிலும் தேர்தல் பற்றிக் கருத்துக் கணிப்புகள் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டன. கருத்துக் கணிப்பு என்பது ஹேஷ்யமாக இல்லாமல் - இந்தக் கட்சி வெற்றி பெறப் போகிறது; இத்தனை இடங்கள் பெற போகிறது என்றும் இன்ன இன்ன கட்சிகள் தோல்வி அடையப் போகின்றன என்றும் முடிவுகளை வெளியிட்டன.

அதனால் சில கட்சிகள் - வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டக் கட்சிகள் உற்சாகமடைந்தன. தோல்வி அடையப் போகிறது என்று சொல்லப்பட்ட கட்சிகள், கருத்துக் கணிப்பு என்பது ஒரு மோசடி. விஞ்ஞான பூர்வமானது கிடையாது. நம்பகத்தன்மை அற்றது. காசு கொடுத்து தயாரிக்கப்பட்டது. எளிய மக்கள் மனதில் பாதகமான கருத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே தேர்தல் ஆணையம் கருத்துக் கணிப்பு நடத்தவும், அதனை வெளியிடவும் தடை விதிக்க வேண்டுமென்றன.

வாக்காளர்களின் மனோநிலையை தெரிந்து கொண்ட சில தலைவர்கள், கேபினட் அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், நான்கு முறை, ஐந்து முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்தலில் நின்று வாகை சூடியவர்கள் நாசுக்காக ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.

இது இளைஞர்களின் பொற்காலம். என் பணியை என் மகன் தொடர்வார்; மகள் நாடாளுமன்றம் செல்ல வாக்களிங்கள் என்று சிலர் அறிக்கைகள் விட்டனர். நாடாளுமன்றம் அவர்களின் பரம்பரை சொத்து என்று நினைத்துக் கொண்டு விட்டார்கள்.

மக்களவைக்கான தேர்தலில் பெரிய அடி வாங்கியது பெண்களுக்கு 33 சதவீதம் என்ற கோரிக்கைதான். பெண்ணும் ஆணும் சமம் என்று அரசியல் சாசனம் சொல்லும் நாட்டில் உள் ஒதுக்கீடாக நாடாளுமன்றத்தில் இருந்து எல்லா அமைப்புகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று பெண்கள் பல ஆண்டுகளாகக் கோரி வந்தார்கள்.

அது நாடாளுமன்றத்தில் சட்டமாக ஆக்கப்படும் என்று தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் எல்லாம் கூறி வந்தன. ஆனால் சாதுரியமாகச் சட்டமாக்காமல், அதே கட்சிகள் தடுத்து வந்தன. தேர்தல் வந்ததும் கட்சிகள் சட்டம் இல்லாமலே பெண்களுக்கு 33 சதவீத டிக்கெட் கொடுக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது.

ஆனால் எந்தக் கட்சியும் பெண்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கவில்லை. அதில் பெண்களே தலைமை தாங்கும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி எல்லாம் அடக்கம். பெண்களுக்கு முதன்மையான இடம் கொடுக்க வேண்டும்; பெண்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவது நாட்டின் முன்னேற்றத்தைக் காட்டும் என்று நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டவர்கள், கலவரம் செய்தவர்கள், சபை நடவடிக்கைகளை முடக்கியவர்கள் எல்லாம் தேர்தலில் பெண்களுக்கு இடம் கொடுப்பதில் முடங்கிப் போய்விட்டார்கள்.

சிறிய கட்சித் தலைவர்கள் மகள், மருமகளுக்கு டிக்கெட் கொடுத்து மகளிர் கோட்டாவை நிறைவு செய்து கொண்டுவிட்டார்கள். ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கியவர்கள் மனைவி, துணைவிகளுக்கு சீட் வாங்கிக் கொண்டார்கள்.

வலுவான மாநிலக் கட்சிகள் தோன்றி மக்களிடம் செல்வாக்குப் பெற்றன. அதனால் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் ஆதரவு, ஒத்துழைப்பு என்பதைச் சார்ந்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாநிலத் தலைவர்கள் தேசிய அரசியலில் முதன்மை பெற்றார்கள்.

அவர்களின் கொள்கைகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தேசியத் தலைவர்கள் நிமிர்ந்து நிற்பதும், குனிவதும் தவிர்க்க முடியாததாகியது.

தேர்தல் முறை பற்றியும், தேர்தல் நடத்தப்படும் விதம் பற்றியும், வேட்பாளர்கள் தகுதி பற்றியும் எத்தனை நிறை குறைகள் சொன்னாலும், மக்கள் நேரடியாக அரசியலில் பங்கு பெற இதைத் தவிர வேறு முறையேதுமில்லை. எனவேதான் ஜனநாயக தேர்தல் முறை பல நாடுகளிலும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஜனநாயக தேர்தல் முறையில் வாக்காளர் தன் சந்தோஷத்தைக் காட்ட தனக்கு விருப்பமான கட்சிக்கு - வேட்பாளருக்கு வாக்களிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அது மறக்க முடியாததாக இருக்கிறது. தனது ஒற்றை வாக்கால் வேட்பாளர் வெற்றி கண்டதாகக் களிப்படைகிறார்.

அதுவே குதூகலத்துடன் தேர்தல் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கச் செய்கிறது. மனிதர்கள் சுய மரியாதை, சுய கெளரவம், சுய மதிப்பு என்பது போற்றப்படும்போது நற்காரியங்கள் செய்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com