ஏரி காத்த ராமராக மக்கள்

ஏரிகள் நாடு என பின்லாந்தும், ஏரிகள் மாவட்டம் என்று அன்றைய செங்கல்பட்டு மாவட்டமும் பள்ளிப் பாடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். வெளிநாடு சென்று பின்லாந்திலுள்ள ஆயிரக்ககணக்கான ஏரிகளைக் காண முடியாவிட்டாலும், தமிழ்நாட்டிலுள்ள நம் மண்ணின் ஏரிகளை இளைய சமுதாயம் பார்த்து அனுபவிக்க, பயனடைய பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நம்முள் எழ வேண்டும்.
Updated on
4 min read

ஏரிகள் நாடு என பின்லாந்தும், ஏரிகள் மாவட்டம் என்று அன்றைய செங்கல்பட்டு மாவட்டமும் பள்ளிப் பாடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். வெளிநாடு சென்று பின்லாந்திலுள்ள ஆயிரக்ககணக்கான ஏரிகளைக் காண முடியாவிட்டாலும், தமிழ்நாட்டிலுள்ள நம் மண்ணின் ஏரிகளை இளைய சமுதாயம் பார்த்து அனுபவிக்க, பயனடைய பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நம்முள் எழ வேண்டும்.

சென்னைக்குச் சுற்றுலா செல்லும் வழியில் தவறாமல் காட்டப்பட்ட இரண்டு ஏரிகள், மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு ஏரி.

பிந்தைய நாள்களில், செம்பரம்பாக்கம் ஏரி, புழலேரி, பொன்னேரி ஏரி போன்ற ஏரிகள் பிரமிப்பூட்டின. பெருமழை பெய்து எல்லா ஏரிகளும் கொள்ளளவு நிரம்பி வழிந்து வெள்ள அபாயம் அறிவித்த காலம் அது. சென்னைப் பட்டினத்திலே வெப்பேரி, முகப்பேரி, நுங்கம்பாக்கம், ஒட்டேரி என்று பல இடங்களில் பெரியது சிறியதுமாக பல ஏரிகள் இருந்தன.

மூன்று முக்கிய ஆறுகளான கூவம், கொசஸ்தலையாறு, அடையாறு ஆகியவை நகரின் வழியே பாய்ந்து வங்க கடலைச் சென்றடைகின்றன. பக்கிங்காம் கால்வாய் இம்மூன்று ஆறுகளையும் இணைக்கிறது. கழிவு நீர் கலப்பு, நில ஆக்கிரமிப்புகளால் நீர் ஆதாரங்கள் சுருங்கி வருகின்றன.

பூண்டி, புழலேரி, செம்பரம்பாக்கம் ஆகியவை சென்னைக் குடிநீருக்கு முக்கியமான நீர் ஆதாரங்கள். சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், சேலையூர், மாங்காடு, வளசரவாக்கம், முகப்பேர், அம்பத்தூர், வீராபுரம் இவற்றைச் சுற்றி 29 ஏரிகள் இருக்கின்றன. இவை, முன்பு விவசாயத்திற்குப் பயன்பட்டன.

ஆனால், நகரமயமாக்கலால் குடியிருப்புகள் அங்கு முளைத்துள்ளன. அவற்றைப் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டிலிருந்து குடிநீர் வாரிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஆணை 2003-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. சுருங்கி வரும் இது போன்ற நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சென்னைப் பெருநகரின் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி 82.4 லட்சம். தேவையான குடிநீர் நாள் ஒன்றுக்கு 1,200 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) லிட்டர். 2004-ஆம் வருடம் வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டதால், வீராணம் நீரும் கிருஷ்ணா நீரும் ஏரிகளை நிரப்புகின்றன.

குடிநீர் வாரியம் 830 மில்லியன் லிட்டர் தண்ணீரை தினமும் குழாய்கள் மூலம் இணைப்பு பெற்றவர்களுக்கு விநியோகிக்கிறது. வரும் காலத்தில் கூடுதலாக 1,044 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை அதிகரிக்கும்.

முழுதும் நீர் நிரம்பி காட்சி தந்த மதுராந்தகம் ஏரி, எரி காத்த ராமர் கோயில் என்று ஏரிக்காகவே அமைந்த காவல் தெய்வம் கொண்ட ஏரி, இன்று வண்டல் மணல் தூர்ந்து, கோரையும், ஓணான் செடிகளும் மண்டிக் கிடக்கின்றன.

மழைக் காலத்தில் சில வாரங்கள் மட்டும் முழுக் கொள்ளளவும் நீர் நிரம்பி இருக்கும் போதே, தூர்ந்த மண்ணில் நீண்டு வளர்ந்திருக்கும் ஓணான் செடிகளின் கிளைகள் நீர்ப்பறவைகள் போல் தலைநீட்டிக் கொண்டிருக்கும். ஏரியின் ஆழம் ஒணான் செடி உயரமே எனப் புரியும் போது அன்று மகிழ்ந்த மனது இன்று புழுங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 17,000 சிற்றூர், பேரூர்களின் 20,000 ஏரிகளிலும் மழைக்காலத்தில் மட்டும் நீர் இருக்கும். கோடையில் வறண்டு, கரையோரம் பள்ளங்களில் மட்டும் கால்நடைகள் குடிக்குமளவு ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். வறண்ட ஏரியின் பிற பகுதிகளில் படிந்த களி மண், பாளம் பாளமாய் வெடித்திருக்கும்.

கோடையில் உழவு வேலை இல்லாத விவசாயிகள், தத்தம் மாட்டு வண்டிகளில் ஆண்டு முழுவதும் குவித்து வைத்திருந்த சாணக் குப்பையை பயிர் நிலங்களுக்கு எடுத்துச் சென்று முட்டு முட்டாகக் கொட்டி வைப்பார்கள். மேலும், ஏரியிலுள்ள களிமண்ணையும் அந்தந்த ஊர் மக்களே, மாட்டு வண்டியில் வாரி எடுத்துச் சென்று வயல்களில் திட்டுத் திட்டாகப் பரப்பி விடுவார்கள்.

வயலிலிருந்து வெள்ளம் வழியாக வந்த வண்டல் மண், மீண்டும் வயலுக்கே சென்று விடும். ஆண்டுதோறும் வண்டல் மண் தோண்டி எடுக்கப்படுவதால், ஏரியின் ஆழம் குறையாமல் இருக்கும்.

ஆனால், ஏரி மண்ணை அனுமதியின்றி அந்தந்த ஊர் மக்களே கூட எந்த நோக்கத்துக்கும் தொடக்கூடாது என்பது விதி. களிமண், ஏழை மக்கள் மண் சுவர் வைக்க, பொங்கல் நேரத்தில் பூச செங்கல் அறுக்க - என எந்தச் சிறுசிறு நோக்கத்துக்கும் ஏரி மண்னைத் தோண்ட அனுமதி இல்லை.

ஏரியில் ஆண்டு முழுதும் நீர் இருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர் இருக்கும். கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள் (ஆர்ழ்ங் ஜ்ங்ப்ப்) அமைத்து நிலத்தடி நீரை ஊறிஞ்சுசின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், பூமியின் மேற்பரப்பில் வளரும் மரங்களின் வேர்களுக்கு நீர் எட்டாமல் போவதால் அவை பட்டுப் போகின்ற நிலை.

நீர் பாய்ச்சாத காட்டு மரங்கள் பட்டுப் போகாதபோது, நீர் பாய்ச்சும் மரங்கள், நீர்ப் பாசனமோ, சொட்டு நீர்ப் பாசனமோ இல்லாவிட்டால் பட்டுப்போகின்றன.

ஊர்கள் வறண்டு, ஊர்க் குடிநீர்க் கிணறுகளும் வறண்டு, குடி நீருக்கான ஆதாரங்களும் வறண்டுவிட்டதால், பல மைல் தொலைவில் பாயும் ஆற்று நீரை, ஆழ்துளைக் குழாய்களின் மூலம் கொண்டு வந்து கிராமத்துக்கே குடிநீர் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

பண்டைய காலங்களில் அந்தந்த ஊரின் நீர், அந்தந்த ஊருக்குப் போதுமானதாக இருந்தது. ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் ஒரு சேந்து கிணறு, ஓவ்வொரு தெருவிலும் ஒரு பொதுக் கிணறு இருந்தது. கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர், அருகிலேயே குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நீர் தோட்டத்தில் வாழை, முருங்கை, கறிவேப்பிலை, சுண்டை, காய்கறிச் செடி கொடிகளுக்குப் பாய்ந்து, நிலத்தில் ஊறி, மீண்டும் கிணற்று நீருடன் அதன் நீர்மட்டத்தில் சேர்ந்து விடும்.

இன்றோ, குழாய் வழியாக தொலை தூரத்து நீர் வருகிறது, அது கழிவு நீராகி எங்கோ தொலை தூரத்துக்கு பாதாளச் சாக்கடைகள் மூலம் அனுப்படுகிறது. மழைக் காலங்களைத் தவிர, மற்ற நாள்களில் எந்த ஊரிலும், மண் தண்ணீரைப் பார்ப்பதே இல்லை. வாசலில் காலை நேரம் சாணம் அல்லது நீர் தெளிப்பதும்கூட அருகிக் கொண்டிருக்கிறது.

இப்படியிருந்தால், புவி வெப்பமாகாமல் போகுமா? வெப்பத்தால் தாவரங்கள் கருகாமல் இருக்குமா? வெயில் நாள்களிலும் காற்றிலுள்ள ஈரப்பதத்தில் இருந்து வளரும் வேலிக்காத்தான், பார்த்தீனியம் போன்ற நச்சுச் செடிகள் செழித்தோங்கி மண் பரப்பெல்லாம் படராமல் தடுக்க முடியுமா? தற்போது பார்த்தீனியத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க அரசு ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

நூறு நாள் வேலைத் திட்டத்தால், விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி, நிலங்களில் பயிரிடும் பரப்பும் குறைந்துவிட்டது. வீட்டுமனைகள் சாலையோரங்களில் எல்லாம் கொடி கட்டி வண்ணமயமாக ஜொலிக்கின்றன.

பயிரிடும் நிலப்பரப்பு குறைந்து வரும் நிலையில், பயிரிடும் நிலங்களுக்கும் இயற்கை உரமான ஏரி களி மண் கிட்டாமல், நிலத்தடி நீரும் எட்டாமல் போனால் விவசாயம் பாதிக்கப்படும்.

அன்றைய சோவியத் ஒன்றியத்தில் (ம.ந.ந.த.) காராரும் என்ற ஒரு பாலைவனம், கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் பல நூறு மைல்கள் நீண்டு பரந்து கிடந்தது.

அமுர், சிர் எனும் இரண்டு ஆறுகள் வடக்கு தெற்காகப் பாய்ந்து காஸ்பியன் கடலில் கலந்து கொண்டிருந்தன.

சோவியத் அரசு ஓர் அபார சாதனை நிகழ்த்தியது. காராரும் பாலைவன மணலைத் துடைத்து எடுத்து அடிப்பகுதிலிருந்த கெட்டியான நிலத்தின் மீது, மலைகள் பீட பூமியிலிருந்து வளமான மண்ணைக் கொண்டு வந்து பரப்பியது.

அமுர், சிர் ஆறுகளைத் திசை திருப்பி, கடலில் கலந்த இரு நதிகளையும் மறு நதியில் கலக்க வைத்தது. பாலைவனம் வழியாகப் பாய்ந்து அதுவரை காஸ்பியன் கடலில் கலந்து கொண்டிருந்த நதிகளைக் கருங்கடலில் கலக்க வைத்தனர். பாலைவனமெங்கும் கால்வாய் வழி நீர் பாய்ந்தது. காராரும் பாலைவனம் சோலைவனமானது.

மதுராந்தகம் ஏரியின் பரப்பளவு 34 சதுர கிலோமீட்டர். 21 அடி ஆழம். 1798-இல் பலத்த மழை காரணமாக ஏரி நீர் நிரம்பி உடையும் ஆபத்து இருந்தபோது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் லயனல் ப்ளேஸ் மதுராந்தகத்தில் தங்கி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்ததாகவும், இரவு ஏரியின் மதகின் மீது வில்லு அம்பு ஏந்திய இருவர் நின்று ஏரியைப் பாதுகாத்ததை அவர் பார்த்ததாகவும், அன்று இரவு மழை நின்று ஏரி காப்பாற்றப்பட்ட அதிசயம் நிகழ்ந்ததாகவும் மதுராந்தகம் கோயிலில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று போதுமான நீர் இல்லாததால், ஏரி காத்த ராமர் ஏக்கம் அடைந்துள்ளார்.

வறண்ட காலத்தில் ஏரிகளில் உள்ள களி மண்ணை அந்தந்த ஊர் மக்கள் உபயோகித்துக் கொள்ள உரிமையும், அவர்களுக்கு ஏரிகளைத் தூர் வாரும் பணியும் கொடுக்கப்பட வேண்டும்.

எல்லாருமே தங்கள் ஊர் எல்லையில் உள்ள ஏரிகளைப் பாதுகாத்தால்தான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தமிழக ஏரிகள் ஆழமாகும். அதிக நீர் தேங்கும்.

தாவரங்களும், விலங்குகளும் மட்டுமன்றி, மனித சமுதாயமும் தாகம் தீர்வர்; வாழ்த்துவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com