மங்கள்யான்' நம் நாட்டுக்கு தேவையா என்கிற சிலரின் வியாக்கியானம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னமேயே பாரதி காதுகளில் விழுந்திருக்க வேண்டும். அதனால்தான் "சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்' என்றதும், அடுத்த கணமே "சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்' என்றான். இரண்டுமே கனவுத் திட்டங்கள்.
பாரதி நினைவு நாளை ஒட்டி (செப்டம்பர் 11) மங்கள்யான் செப்டம்பர் 24 அன்று சந்திரனுக்கு அப்பால் செவ்வாய்க் கிரகத்து இயல் கண்டு தெளியவும் தொடங்கினோம். ஒரே வார இடைவெளியில் காந்தி ஜெயந்தி அன்று (அக்டோபர் 2) தெருப் பெருக்கும் "தூய்மை இந்தியா' பிறந்தும் ஆயிற்று.
தூய்மை என்றால் சுத்தப்படுத்துவது, துப்புரவாக வைப்பது, கழிவுகளை அப்பறப்படுத்துவது, அழுக்கை அகற்றுவது தானே. அவரவர் வீட்டையும் நாட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க ஏன் இத்தனை விமரிசனங்கள்? கண்ணுக்குப் புலப்படும் குப்பைகள், கழிவுகள் மாசுகளை அப்புறப்படுத்த வேறு என்ன செய்யலாம்? எரித்துச் சாம்பல் ஆக்கலாம்; கடலில் கரைக்கலாம்; தரை அடியில் ஆழத்தில் புதைக்கலாம்.
மாநிலம் விட்டு மாநிலத்தில் போய் குப்பை கொட்ட முடியாது. நாடு விட்டு நாடு அல்லது கண்டம் விட்டுக் கண்டம் கொண்டு வேண்டுமானால் சேர்க்கலாம். புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கலாம். செலவு அதிகம் ஆகும். இந்தப் பூமிப் பந்தில் இருந்து அண்டவெளியிலும் வீசி விடலாம்.
காற்றைத் தூய்மைப்படுத்த முடியாது. மாசு அளவைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோதான் முயல்கிறோம். என்னவோ நூறு சதவீதம் தூய ஆக்சிஜன் வாயு கிடைத்தால் மட்டுமே இந்த உலகில் வாழ முடியும் என்று நினைக்கிறோம். காற்றில் ஆக்சிஜன் 20 சதவீதத்தை விஞ்சினால் மூச்சுத் திணறி செத்துப்போவோம்.
உண்மை என்பது "உண்டால் அம்ம இவ்வுலம்' என்பது போல நிலைத்த உண்மையைச் சுட்டும். நம்மால் வேண்டுகிறபடி அதை மாற்ற இயலாது. ஆனால் பொய்யாமொழிப் புலவன் வாய்மொழிப்படி, வாய்மை என்பது "புரை தீர்ந்த' (குற்றம் அற்ற) நன்மை பயக்கும் என்றால் பொய்யும் வாய்மைதான். அது "தீமை இலாத சொலல்'.
"யாம் மெய்யாக் கண்டவற்றுள்' வாய்மையே நன்று. ஆனால், மெய்மை என்பது "வினைத்தூய்மை'. தெரிந்தோ தெரியாமலோ இது "சொல்வன்மை' அதிகாரத்திற்குப் பின் வருகிறது. அதற்கும் முந்தியது "அமைச்சு'. மனத்தூய்மை அமைய வேண்டிய இடத்தின் குறியீடோ என்னவோ?
இந்திய விண்கலங்களின் தரக்கட்டுப்பாடு அதிகாரியாகப் பணியாற்றி அனுபவம். ஒரு பொருளின் தரத்தைத் தேர்வு செய்யும்போது, ஆய்வுக்குத் தரப்பட்ட மாதிரிகளை வைத்தே அவற்றின் தர முடிவுகள் அறிவிக்கப்படும். நாம் தேர்ந்து எடுத்த மாதிரிகள் அந்தப் பொருளின் பிரதிநிதியாக அமைந்து இருக்க வேண்டும். அவ்விதம் தேர்வு செய்வதே தரக் கட்டுப்பாட்டில் மிகச் சிரமமான பணி.
அதில் கையாளப்படும் எரிபொருள், உந்துபொறி, மின்னணு ஆணைநிரல்கள், தொலைத் தகவல் தொடர்பு நுட்பங்கள் அனைத்துமே இத்தகைய கெடுபிடியான தரக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளுக்கு ஆள்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படும். அதனால்தான் பூமியில் இருந்தபடி 66 கோடி கிலோமீட்டர் தொலைவில் மங்கள்யானை நாம் தொடர்ந்து கண்காணிக்க முடிந்தது.
அடுத்த தெருவில் நிற்கும் உங்கள் கார் கதவை ரிமோட் மூலம் திறக்க முடிந்தால் முயன்று பாருங்கள். அப்போது தெரியும் மங்கள்யானின் தரக் கட்டுப்பாடு. ஆள் அரவம் அற்ற அண்டவெளியில் 66 கோடி கிலோமீட்டர் தொலைவில் உட்கார்ந்து கொண்டு அதனை இயக்குகிறோம்.
பத்து மாதங்களுக்குப் பிறகு சர்வ சாதாரணமாக 4 நொடிகள் ஒரே வீச்சில் முதல் முயற்சியில் உந்துபொறியைத் தூண்டுவிக்க முடிந்ததே மங்கள்யான் தொழில்நுட்பத்தின் வெற்றி.
சரி, நடந்து சென்றபடி கைக் காமிராவினால் தூரத்தில் ஒரு காட்சியை அலுங்காமல் படம்பிடியுங்கள். பார்ப்போம். அலங்கோலம் தெரியும். பசை சிந்திய மாதிரி இருக்கும். பிம்பம் தெளிவாக இராது. ஏறத்தாழ 422 கிலோமீட்டர் செவ்வாய் அருகிலும், 77,000 கிலோமீட்டர் அப்பாலும் ஆக நீள்வட்டப்பாதையில் சுற்றும் மங்கள்யானின் படப்பதிவும் செயல்பாடும் தரக் கட்டுப்பாட்டின் உச்சம்.
நொடிக்கு 1,600 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து செல்லும் மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்து இருப்பீர்கள். இதுவே அசாதாரணம்.
பொதுவாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சென்றாலே கார் கதவுகள் படபடத்துச் சிறகு அசைக்க ஆரம்பித்துவிடுமே. நம் மங்கள்யான் அவ்வளவு உறுதி ஆனது.
உள்ளபடியே, செவ்வாயில் ஊர்ந்து ஆராய்ச்சி செய்த விண்கலன் விவரங்கள் சற்றே தவறாகப் பதிவாகி வருகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் "ரோவர்' (ஊர்தி) என்கிறோம்.
ஆப்பர்ச்சூனிட்டி சமீபத்தில் செவ்வாய் தேசத்தில் 40 கிலோ மீட்டர் பயணம் செய்துவிட்டது. 2012 ஆகஸ்ட் 6 அன்று செவ்வாய் தேசத்தில் சென்று இறங்கிய அமெரிக்காவின் "கியூரியாசிட்டி' 2014 ஜூலை 28-ஆம் தேதியோடு செவ்வாய் தேசத்தில் 687 நாள்கள் தங்கி நிறைவு செய்து விட்டது. இவை செவ்வாயைச் சுற்றிவரும் விண்கலன்கள் அல்ல.
அவ்வாறே, நம் மங்கள்யானுக்குப் பின்னாலேயே 2013 நவம்பர் 18 அன்று அந்தச் சிகப்புக் கோள் நோக்கி அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் "மாவென்', 22-09-2014 அன்று செவ்வாய் சென்று சேர்ந்தது.
"செவ்வாயின் வளிமண்டலம் மற்றும் ஆவிநிலை வளிமங்கள் உருவாக்கம்' (மார்ஸ் அட்மாஸ்ஃபியர் அண்ட் வாலட்டைல் எவல்யூஷன்) குறித்த ஆய்வுக்கான விண்கலம். அது செவ்வாய்த் தரையில் இறங்கவில்லை என்பது இன்னொரு தகவல்.
இன்றைக்கும் செவ்வாய் வான்சுற்றும் அணியில் அமெரிக்காவின் "மார்ஸ் ஒடிஸி', "மார்ஸ் ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர்' (எம்.ஆர்.ஓ.), "மாவென்' மற்றும் ஐரோப்பாவின் "மார்ஸ் எக்ஸ்பிரஸ்' ஆகியவற்றுடன் மங்கள்யானும் இணைந்து கொண்டது.
செவ்வாய்ப் பயணத்தால் நாம் உலக அரங்கினில் சோவியத் ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த நான்காம் இடம் என்றும் கூறிவருகிறோம். துறை நிபுணர்களே சொல்லி வருகிறார்கள்.
அதிலும் முதல் பயணத்திலேயே வெற்றிகரமாகச் செவ்வாய் சுற்றிய முதல் நிறுவனம் "ஐரோப்பிய விண்வெளிக் கழகம்'. இரண்டாவதுதான் இந்தியா என்றும் மேனாட்டு வலைதளங்கள் பதிவு செய்கின்றன.
ஐரோப்பிய விண்வெளிக் கழகம், 20 தனிநாடுகளின் கூட்டமைப்பு. அதுவும் தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்பேரில் தயாரித்து வாங்கிய விண்கலன் "மார்ஸ் எக்ஸ்பிரஸ்'. அதனை ரஷியாவின் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து "சோயுஸ் - ஃபிரெகத்' என்ற அன்னிய ஏவுகலனால் செலுத்தியது.
தனிநாடாக, சொந்த விண்கலனை, சொந்த ஏவுகலனில், சொந்த ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்குச் செலுத்தி சாதனை படைத்த உலக நாடுகளில் முதல் நாடு இந்தியாதான்.
ரஷியா, அமெரிக்கா, ஐப்பான் போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக நம் மங்கள்யான் சாதனை படைக்கப் போவதாகவும் சிலர் வரிசைப்படுத்தினர்.
உண்மையில், 1998 ஜூலை 4 அன்று ஜப்பான் "நோசுமி' (சர்க்ஷ்ன்ம்ண்) என்ற விண்கலனை அனுப்பியது. அதுகூட எரிபொருள் பற்றாக்குறையாலோ, மின்சாரக் கோளாறாலோ பாதியிலேயே செயல் இழந்தது. ஜப்பானியர் நம்பிக்கையும் போனது. உண்மையில் "நோசுமி' என்றால் ஜப்பாய மொழியில் நம்பிக்கை என்றுதான் பொருள்.
மங்கள்யானின் நீண்ட கால பயணத்தின்போது எரிபொருள் சிக்கனமான ஒரு பயணப்பாதையைக் கையாண்டோம். அதாவது ஒரு கோளின் நிறையீர்ப்புக்கு ஆள்பட்டு சுண்டி இழுத்து வீசப்படும் வேக வளர்ச்சி நுட்பம். இன்றுவரை நம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் மாரீனர் - 10, கலீலியோ, காசினி, யுலிசெஸ், வாயேஜர் - 1, மெசஞ்சர் போன்ற சில விண்கலன்கள் இந்த உத்தியில் புதன், வியாழன், சனி, ஞாயிறு (சூரியன்) ஆகியவற்றுக்கும் அப்பாலும் விண்பயணங்கள் மேற்கொண்டு உள்ளன. திங்களுக்கும், செவ்வாய்க்கும் (முறையே சந்திரயானிலும், மங்கள்யானிலும்) இந்த உத்தி யைக் கையாண்ட முதல்நாடு இந்தியா.
ஏற்கெனவே செவ்வாய்க் கிரகம் நோக்கிப் பல நாடுகளின் விண்கலன்கள் ஆராய்ந்து உள்ளன. இந்திய அரசு 2012 ஆகஸ்ட் 3 அன்று நம் நாட்டு செவ்வாய்த் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. திட்ட மதிப்பீடு சுமார் 450 கோடி. உள்ளபடியே மேலைநாட்டுத் திரைப்படங்களின் தயாரிப்புச் செலவில் மூன்றில் ஒரு பங்கு. இத்தகையத் திட்டங்களுக்கு மேனாடுகள் செலவிடும் நிதி அளவில் ஏறத்தாழ பத்தில் ஒரு பங்கு. ஆனால், அவர்களை விடவும் குறைந்த செலவில் செவ்வாய் சென்ற முதல்நாடு இந்தியா.
இத்தனைக்கும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் வான் தொட்ட முதல் நாடு இந்தியா - பாரதியின் "வானநூல் பயிற்சி' கொள் மற்றும் "வையத்தலைமை கொள்' ஆகிய புதிய ஆத்திசூடியினை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம்.
கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.