ஒரு திருமணத்திற்காகப் பெருந்துறை சென்றபோது நண்பர்கள் சென்னிமலைக்குச் சென்று வருமாறு கூறினர். வள்ளி, தெய்வானை இருவரும் முருகனில்லாமல் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ள அம்மலையின் உச்சியில்தான் மொழிச் செப்பக் குறைபாட்டால் சிக்கலொன்று தோன்றிற்று.
மலையின் மேற்பகுதிக்குச் செல்லும் வழியில் பின்நாக்குச் சித்தர் என எழுதப்பட்ட ஒரு பலகை இருந்தது. அருகில் இருந்த மேடைமீது அமர்ந்து கொண்டிருந்த எழுபது வயது முதியவரிடம் இதுபற்றிக் கேட்டேன். அவர், "அதுவா, அருள்வாக்குச் சொல்லும்போது நாக்கைப் பின்பக்கம் மடித்துவைத்துப் பேசுவார். அதனால் அவருக்குப் பின் நாக்குச் சித்தர் என்று பெயர்' என விளக்கினார்.
ஆனால் சித்தர் சன்னதி வாசலில் புண்ணாக்குச் சித்தர் என்றெழுதப்பட்டிருந்ததுடன் புண்ணாக்குச் சித்தர் வெண்பா எனப் பத்து வெண்பாக்களும் புகைப்படம்போலச் சட்டமிடப்பெற்று மாட்டப் பெற்றிருந்தன. இப்படி மூல வடிவத்தைப் பேச்சிலும் எழுத்திலும் புண்ணாக்கும் போக்குதான் இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் காணப்படுகிறது.
சில இடங்களில் உண்மை வடிவைத் தேடிக் கண்டுபிடித்தால் கிடைக்கும் சொற்கள் சுகம் தரும். மதுரையில் ஊமச்சிகுளம் என்றோர் ஊர்ப்பெயரைப் பார்த்ததும் ஒரு மாதிரியாக இருந்தது. ஆவணம் கூறும் பெயர் ஊர்மெச்சியகுளம்.
புதுச்சேரியில் ஒரு வாடகை உந்தின் பின்புறம் பிட்லாயி அம்மன் துணை எனப் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. புதிராக இருந்தது. களஆய்வு செல்லச் செல்லப் புத்தின் உள்ளே உள்ள அம்மன் என்ற பொருள் தருமாறு அமையும் புத்துளாய் அம்மன் புத்ளாயம்மனாகி, புட்லாய் அம்மனாகி, பிட்லாயி அம்மனான கதை புரிந்தது.
இவற்றுக்கெல்லாம் என்ன காரணங்கள்? ஒன்று, எழுதும்போதும் பேசும்போதும் தமிழைச் சிதைப்பது. இரண்டாவது நாகரிகமென்ற பேரால் பிறமொழிப் போக்குகளைத் தமிழ்ச் சொற்கள் மீது பாய்ச்சுவது.
முனைவர் மு. பொன்னவைக்கோவிடம் தொலைபேசி வழியே பேசநேர்ந்தது. "என் கைபேசி எண்...' என நான் ஆரம்பித்தபோது குறுக்கிட்ட அவர், "அப்படியானால் வீட்டிலிருப்பது கால்பேசியா' எனக் கேட்டார். எனக்கெதுவும் புரியவில்லை. செல்பேசி என்பதைத் தமிழில்லை என்ற மயக்கம்தான் இதற்குக் காரணம்.
"செல்லுமிடம் எல்லாம் எடுத்துச் செல்லும் தொலைபேசி என்பதால் செல்பேசி என்பது தமிழ்தானே' என்றார் அவர். விசாரித்ததில் "செல்லிடப்பேசி', "அலைபேசி', "உலாப்பேசி' என்ற பலபெயர்கள் செல்பேசிக்கு இருப்பதும் தெரியவந்தது.
இந்தச் செல்பேசியில் யாருடனாவது பேச முற்படுங்கள். யாருடன் பேச விரும்புகின்றீர்களோ அவர் வேறொருவருடன் உரையாடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் உங்களுக்குச் செய்திவரும் பாருங்கள்:
"நீங்கள் பேசவிரும்பும் நபர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்'.
"நீங்கள் அழைக்க விரும்புபவர் வேறோரு இணைப்பில் உள்ளார்'.
"நீங்கள் பேசவிரும்பும் நபர் மற்றொரு காலில் இருக்கிறார்'.
கால் (CALL) என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழ்ச் சொற்களுக்கிடையே தமிழ்போல அமுக்கி, அழுத்தி இப்படிக் கூறுவது பிழை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அஃது எதுவரை போய் நிற்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழகத் தலைநகரில் ஒரு தொலைபேசி நிறுவன விளம்பரப் பதாகையில் காணப்பட்ட புதுக்கவிதையைப் பதிவாக்கலாம்.
அந்தக் கவிதை, "நாய்க்கு நான்கு கால்கள் இருந்தாலும் அதனால் ஒரு மிஸ்ட்டு கால் போடமுடியாது'. ஆங்கிலக் காலும் (Call) மனிதக்காலும் உணரப்படாமையின் விளைவே இத்தகைய கீழ்மைக்குக் காரணம்.
ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதுவதும், நல்ல தமிழ்ச் சொல் இருக்கும்போது, மேலோட்டமாக மொழிபெயர்ப்பதும் சரியில்லை. அருவி என்ற அருந்தமிழை மறந்துவிட்டு Water falls என்ற சொல்லுக்கு நீர் வீழ்ச்சி எனத் தமிழாக்கம் செய்வது பொருத்தம்தானா என எண்ணிப் பார்க்க வேண்டும் எனப் பழந்தமிழ் அறிஞர்கள் பலமுறை அறிவுறுத்தியும் பயனில்லை.
பரம்பரை பரம்பரையாக ஆங்கிலமே பேசிவருவதைப் போன்ற போலித்தனமாக மனப்போக்கால், மொழி பல இடங்களில் சேதாரப்படுகிறது. ஓர் உறைமீது, ஆசிரியர் என்று எழுதி அதன் கீழே ஒரு நாளேட்டின் பெயரை எழுதி முகவரியையும் எழுதியிருந்தேன். அதனைத் தூதஞ்சலில் அனுப்ப அங்கிருந்த அலுவலகத்தில் தந்தேன்.
முகவரிகளை நானெழுதிய வண்ணம் தமிழில் எழுதுவதே முறையானது. அதற்குமுன் ஆங்கிலத்திலேயே முகவரிகளை எழுதிவந்த அந்தநபர் என் முகவரியை ஆங்கிலத்தில் எளிதாக எழுதிவிட்டார். பெறுபவர் முகவரியில் உள்ள ஆசிரியர் என்பதற்கான EDITOR என்ற ஆங்கிலச் சொல்லை அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் எழுத முற்பட்டு அவருக்குத் தெரிந்தபடி TEACHER என எழுதித் தந்தார்.
நயங்காட்டியும் பயங்காட்டியும் விவாதித்தபின் இப்போது தமிழில் முகவரி இருந்தால் தமிழிலும் ஆங்கிலத்திலும் முகவரி எழுதப்பட்டிருப்பின் அம்மொழியிலும் எழுதிவருகின்றார்.
ஆங்கிலத்தில் முகவரி எழுதினால் கடிதம் போய்ச்சேராதா என வம்புப் பேச்சுப் பேசுபவர்கள் உண்டு. தமிழ் நாட்டெல்லைக்கப்பால் மடல் போக வேண்டுமானால் ஆங்கிலமோ பிறமொழிகளோ பயன்படுத்தப்படவேண்டும். தமிழ்நாட்டிற்குள்ளேயே ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகும் கடித உறையில் ஆங்கிலம் எதற்கு?
கேலி பேசும் ஆட்களுக்காக ஓர் உண்மையை உரைப்பது தேவையாகிறது. மலேசியாவைச் சேர்ந்தவர் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன். அவரிடம் இருந்து தமிழக அன்பர்களுக்கு வரும் கடிதங்கள் எல்லாமும் வான்வழிக் கடிதங்கள்தாம் (AIR --MAIL). முகவரிப் பகுதியில் பெயர், பதவி, நிறுவனம் போன்றவை தமிழில்தான் இருக்கும். ஊரும், நாடும் மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மலேசியாவில், கோலாலம்பூர் அஞ்சலகத்தில் சேர்க்கப்பெறும் கடிதம் இந்தியாவிற்கு வரவும் இந்தியாவில் குறிப்பிட்ட ஊருக்கு வந்து சேரவும் ஆங்கிலம் இன்றியமையாதது என்பது உண்மைதான். தமிழகம் அல்லது புதுச்சேரிப் பகுதியிலுள்ள அஞ்சலகத்திற்கு அம்மடல் வந்தபின் முகவரியில் உள்ள இடத்தையும் ஆளையும் அறியத் தமிழ் போதுமே.
இப்படியும் தமிழ் நடைமுறைப்படுத்தப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்? தாய்மொழிக்கு உரிய இடம் தருவதும் தேவையின்றிப் பிறமொழியை அண்டியிருப்பதும் எவ்வகையில் நேர்மையாகும்?
ஒருமொழி வாழ அம்மொழியைப் பயன்படுத்துவோரிடம் ஒரு செப்பம் இருக்க வேண்டும். தரமான சொற்களைத் தேடத் தயங்குவது முதற்குறை. கிடைத்த நல்ல சொற்களைப் பரிமாறாமல் இலகுவான முறை என்ற பேரால் பிறமொழிச் சொற்களை அப்படியே இறக்குமதி செய்தல் அடுத்த குறை. அரிசியுடன் கல்லைக் கலப்பது போன்றது இது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உற்று நோக்குங்கள். நிகழ்ச்சிகளின் தலைப்புகளை உச்சரித்துப் பாருங்கள். நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் உச்சரிப்புகளைப் பாருங்கள். அரிசி மணிகளை விடக் கற்களே கூடுதலாக இருப்பதை உணருவீர்கள்.
மாணவர்களுக்கு ஒரு சொல்லை எப்படி உச்சரிப்பது எனவும் எவ்வாறு எழுதுதல் வேண்டும் எனவும் ஆசியர்களே பயிற்றுவிக்க வேண்டும். கூடுதலாக அரசாங்கத்தின் கடமையும் இணையவேண்டும்.
இலங்கை வானவூர்தி மையத்தில் PHYSICALLY CHALLENGED PEOPLE என ஆங்கிலத்தில் எழுதி, அதற்குமேல் "அறைகூவலர்' எனத் தமிழில் எழுதியிருப்பதைக் காணலாம். இப்படி அரசின் பங்களிப்பும் மொழிச் செப்பத்திற்கு அடிப்படையாக அமையவேண்டும்.
"கம்ப்யூட்டர்' என்பதைக் "கணிப்பொறி', "கணிப்பான்', "கணினி' என்றெல்லாம் தமிழகத்தில் எழுதுவதைப் பார்க்கலாம். ஆனால், பிரெஞ்சு நாட்டில் இப்படியெல்லாம் ஆளுக்கொரு விதமாக எழுத இயலாது. குறிப்பாக அரசுமுறை மடல்களில் எழுதவே முடியாது.
பிரெஞ்சு அரசாங்கத்தின் மொழிவளத்துறை ஒரு பொருளுக்குப் பல பெயர்களைக் கூறாமல் தரப்படுத்தப்பெற்ற சொற்களை இனங்காட்டும். அந்தச் சொல்லைத் தவிர வேறு சொல்லைப் பயன்படுத்தினால் பிரெஞ்சுக் குழு (FRENCH ACADEMY) தண்டனை தரும். ஒறுப்புக் கட்டணம் (Fine) கட்டுமாறு ஆணையிடும்.
சட்டம் போட்டால்தான் மனிதர்கள் கட்டுப்படுவார்கள் என்ற நிலைப்பாட்டிற்குத் தமிழரும் விதிவிலக்கல்லர். இதைப்போலத் தமிழின் சீரிளமைத்திறம் கெடாமலிருக்க தாய்மொழிக் காப்பு என்ற வேலி வேண்டும்; பிறமொழிகளைத் தேவையில்லாமல் திணிப்பது கூடாது; அரசு மொழித்தூய்மை பேண ஆவன செய்தல் தேவை.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும். மொழிச் செப்பம் ஏற்பட்டால் அக்கனவு மெய்ப்படும்.
கட்டுரையாளர்: தமிழ்ப் பேராசிரியர் புதுவை மையப் பல்கலைக்கழகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.