நன்மை செய்யும் கிருமிகள்!

கிருமிகளில் நோயுண்டாக்கும் தீயவை மட்டுமல்ல; நமக்குப் பல விதங்களிலும் உதவுகிற நல்ல கிருமிகளும் உண்டு.

கிருமிகளில் நோயுண்டாக்கும் தீயவை மட்டுமல்ல; நமக்குப் பல விதங்களிலும் உதவுகிற நல்ல கிருமிகளும் உண்டு. அவை இட்லி மாவைப் புளிக்க வைத்து மென்மையான இட்லி தயாரிக்க உதவுகின்றன. பாலைத் தயிராக மாற்றுகின்றன. ரொட்டி மற்றும் மது தயாரிப்பில் உதவுகின்றன. பயறு வகைத் தாவரங்களின் வேர்களில் குடியேறி நைட்ரஜனை உரமாக மாற்றி மண் வளத்தைப் பெருக்குகின்றன.

இசாட் லிடினெட்ஸ்கி என்ற ரஷிய விஞ்ஞானி, மனிதனுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து, மின்சக்தி, விலையுயர்ந்த உலோகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யவும், நகரங்களில் குவியும் குப்பைகளைப் பயன் தரும் பொருள்களாக மாற்றவும், தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லவும், நீர்நிலைகள் தூர்ந்து விடாமல் பராமரிக்கவும் கிருமிகளைப் பயன்படுத்த முடியும் என்கிறார்.

உலகில் கிருமிகள் இல்லாத இடமேயில்லை. தரையிலும், நீரிலும் காற்றிலும், உறைபனித் துருவங்களிலும், வெந்நீர் ஊற்றுகளிலும், மலைச் சிகரங்களிலும், கடலடியிலும்கூட அவை காணக் கிடைக்கும்.

கிருமி என்பது மிகப்பெரும் செயல்திறன் கொண்ட ஒரு ரசாயனத் தொழிற்சாலைக்கு ஒப்பானது. சில கிருமிகள் தாவர - மாமிசக் கூட்டுப் புரதங்களையும், சில கிருமிகள் சாதாரணக் குப்பைகளையும் சாப்பிட்டு ஜீரணம் செய்கின்றன.

வேறு சில, காற்றிலுள்ள நைட்ரஜனையும் கரியமில வாயுவையும் உட்கொண்டு மண் வளத்தைப் பெருக்கும் நைட்ரேட்டுகளை வெளிப்படுத்துகின்றன. யீஸ்ட், பாக்டிரியம், பூஞ்சை, ஆல்கா போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகக்கூடிய புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

கிருமிகளுக்கு உணவாகக்கூடிய ஊட்டச்சத்துகள் அடங்கிய செயற்கையான வளர் ஊடகங்களில் யீஸ்ட் கிருமிகளை வேகமாக இனப்பெருக்கம் செய்ய வைத்துக் கால்நடைத் தீவனங்களுடன் கலக்கக்கூடிய ஒற்றை ùஸல் புரதங்களைத் தயாரிப்பதற்குப் பல்வேறு நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் கால்நடைத் தீவனங்களின் புரத உள்ளடக்கம் 50 சதவீதத்துக்கு மேல் அதிகமாகிறது.

கால்நடைகளுக்கு ஊட்டப்படுகிற தீவனத்தில் 20 முதல் 30 சதவீத அளவே மாமிசமாகவும் பாலாகவும் திரும்பக் கிடைக்கும். கால்நடைக்கு வயதானால் இது 5 முதல் 10 சதவீதம் என்று குறைந்து போகும்.

இவ்வாறு சுற்றி வளைத்துப் புரதச்சத்தைப் பெறுவதைவிட கால்நடைகளுக்கான புரதச்சத்துகளையும் கார்போ ஹைட்ரேட்டுகளையும் வைட்டமின்களுடன் கலந்து நேரடியாகவே மனிதர்கள் சாப்பிடக்கூடிய சத்துணவை உருவாக்கி விடலாம் என ஆய்வர்களுக்குத் தோன்றுகிறது.

அமெரிக்காவில் சோயா மொச்சைப் புரதங்களைப் பயன்படுத்தி, கிருமிகளின் உதவியால் மாடு, கோழி, பன்றி ஆகியவற்றின் மாமிசத்தை ஒத்திருக்கிற உணவுகள் உருவாக்கப்படுகின்றன.

ரொட்டி மாவை நொதிக்க வைக்க உதவும் யீஸ்ட் கிருமிகளை எதைல் ஆல்கஹாலில் வளர்த்துப் பெருக்கி அவற்றைக் கோதுமை மாவுடன் கலந்து அதன் புரத உள்ளடக்கத்தை அதிகரிக்கும் முறையை ரஷிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

காற்றின் நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக மாற்றும் சில வகை பாக்டிரியங்களை செயற்கையான வளர் ஊடகங்களில் வளர்த்துப் பெருக்கி மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம்.

ஆக்சிஜன் தேவைப்படாமல் உயிர் வாழக்கூடிய சில பாக்டிரியங்களைப் பயன்படுத்தி, ஏரிகள், குளங்கள் போன்றவற்றின் அடித்தரையை இறுக்கிக் கெட்டிப்படுத்தலாம் என்று ஜியார்ஜிய விஞ்ஞானிகள் திட்டமிடுகின்றனர்.

இதன் மூலம் நீர் தரைக்குள் ஊறிப்போய் விடாலும், சுற்றுப்புறங்களுக்குக் கசிந்து வெளியேறி விடாமலும் பாதுகாக்க முடிகிறது.

சிலவகைப் பாறைகளையும் தாதுப் படிவுகளையும் உருவாக்குவதில் சில வகைக் கிருமிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வேறு சில வகைக் கிருமிகள் சில வகைப் பாறைகளையும் உலோகத் தாதுக்களையும் கரைத்துச் சிதைக்கின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயுப் படிவங்களை உருவாக்குவதிலும் சில கிருமிகள் பங்கு வகிக்கின்றன. அத்தகைய கிருமிகளைப் பயன்படுத்திப் பல பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

சுரங்கங்களில் உலோகத் தாதுக்களை வெட்டியெடுக்கும்போது, ஐந்து முதல் இருபது சதவீத தாதுக்கள் மண்ணிலேயே தங்கி விடும். அவற்றை மீட்டெடுப்பது பெரும் செலவு பிடிக்கிற வேலை. கந்தகச் சத்துகளும் இரும்புச் சத்துகளும் சில வகை பாக்டிரியங்களால் உள்கவரப்பட்டு நீரில் கரைகிற கூட்டுப் பொருள்களாக மாறும்.

அவை சுரங்கங்களில் கசியும் நீரில் கரைந்து தேங்கும். அந்தக் கரைசலை எளிதாக வெளியேற்றி தாதுக்களைப் பிரித்தெடுக்கலாம். இந்த முறையில் ரஷியாவிலும் மெக்சிகோவிலும் இருப்பு தீர்ந்து போனதாகக் கைவிடப்பட்ட சில செப்புச் சுரங்கங்களிலிருந்து பல நூறு டன் செப்பு வெளிக்கொணரப்பட்டது.

சில கிருமிகள் தங்கத்தையும் கூடக் கரைக்க வல்லவை. அவற்றைப் பயன்படுத்தி தங்கச் சுரங்கங்களின் அடிமண்ணிலிருந்து 82 சதவீதம் வரை தங்கத்தை மீட்டெடுக்கிறார்கள்.

நிலக்கரிச் சுரங்கங்களில் மீத்தேன் வாயுக் கசிவு ஏற்பட்டு பயங்கரமான தீ விபத்துகள் ஏற்படுவதுண்டு. ரஷிய விஞ்ஞானிகள் மீத்தேன் வாயுவை உள்கவரக்கூடிய நுண்ணுயிரிகளை நிலக்கரிச் சுரங்கங்களில் வளர்த்து, மீத்தேன் செறிவை வெகுவாகக் குறைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சில நுண்ணுயிரிகள் மின்னாற்றலை உற்பத்தி செய்து, அதைச் சேமித்து வைத்துக்கொள்ளும் திறமையைப் பெற்றிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மலிவான, கையடக்கமான உயிரி ரசாயன மின்கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

விண்வெளிப் பயணக் கலங்களில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், குடிநீர், சுவாசக் காற்று போன்ற இன்றியமையாத் தேவையுள்ள பொருள்களை உற்பத்தி செய்யும் கருவிகளை இயக்க இத்தகைய உயிரி மின் சேமிப்புக் கலங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கடலில் மிதக்கும் எச்சரிக்கை விளக்கு மிதவைகள் கடலின் ஆழம், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மீன் கூட்டங்களின் நடமாட்டம் போன்றவற்றை எதிரொலிகள் மூலம் கண்காணிக்கிற சோனார் கருவிகள், கலங்கரை விளக்குகள், மின் சைகை விளக்குகள் போன்றவற்றில் உயிரி ரசாயன மின்கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரிட்டிஷ் ஆய்வர்கள் பாலிகுளோரோவைனல் வகைப் பிளாஸ்டிக்குகளைச் சிதைத்துக் கார்பனாக மாற்ற வல்ல ஒரு கிருமியினத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கூடிய விரைவில் மற்ற வகைப் பிளாஸ்டிக்குகளையும் சிதைத்து அழிக்கவல்ல கிருமிகளை உருவாக்கிவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

சில விசேஷமான கிருமிகளை பிளாஸ்டிக்கின் உற்பத்திக் கட்டத்திலேயே அதனுடன் கலந்துவிடும் ஓர் உத்தி பரிசோதனையிலுள்ளது. கொஞ்ச காலத்துக்கு அந்தக் கிருமிகள் செயலற்ற நிலையிலிருக்கும்.

பிளாஸ்டிக் பொருள்களைக் குப்பைத் தொட்டிகளில் போட்டவுடன் பிற குப்பைகளிலிருந்து வெளிப்படும் வாயுக்கள் அக்கிருமிகளைத் தூண்டுவிட்டுப் பிளாஸ்டிக் பொருள்களைச் சிதைக்க வைக்கும்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல்களில் பல்லாயிரம் கோடிக் கிருமிகள் கூட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றன. அவை உணவிலுள்ள ஊட்டச்சத்து

களைப் பிரித்து உடலுக்கு வழங்குவதிலும், கழிவுப் பொருள்களை வெளியேற்றுவதிலும் பெரும் பணியாற்றுகின்றன.

இத்தகைய சகவாழ்வுக் கிருமிகள், தயிர் மூலமும், நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் மூலமும் உட்கொள்ளப்படுகின்றன. சில நோய்த் தாக்குதல்களின்போது, அதிக அளவில் கிருமிக்கொல்லி மருந்துகளை உட்கொள்வதால் குடல் வாழ் கிருமிகளும் அழிக்கப்படுவதுண்டு.

அப்போது வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள் ஏற்படும். அதற்கு மாற்றாக புரோபயாட்டிக் மருந்துகளை உட்கொண்டு குடல் கிருமிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

மனிதனுக்கு உதவும் பாக்டிரியங்களை உருவாக்கும் கலை, படிப்படியாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு செயலுக்கும், நோக்கத்துக்கும் உரிய பாக்டிரியங்களைப் பெயர் சொல்லி மருந்துக்கடைகளில் கேட்டு வாங்கிப் பயன்படுத்தும் காலம் விரைவில் வரலாம்.

கிருமிகளை முழு அளவில் கட்டுப்படுத்தவும், தேவையான அளவில் உருவாக்கவும் மனிதன் தேர்ச்சி பெற்ற பின் அண்மையிலுள்ள கோள்களின் வாயு மண்டலத்தை மாற்றியமைத்து அவற்றில் மனிதக் குடியேற்றங்களை உருவாக்க முயலலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உதாரணமாக, புதனின் வாயு மண்டலம் கரியமில வாயுவாலானது. அதைச் சிதைத்து கார்பனாகவும் ஆக்சிஜனாகவும் மாற்றக்கூடிய கிருமிக் கூட்டங்களை ஏராளமான அளவில் புதனின் வளிமண்டலத்தின் மேலடுக்குகளில் பரப்பிவிட்டால், ஒரு சில நூற்றாண்டுகளுக்குப் பின் அங்கு மனிதர்கள் வாழக்கூடிய அளவுக்கு ஆக்சிஜன் செறிவு அதிகமாகிவிடும் என்கிறார்கள்.

ஆதியில் பூமியின் வளிமண்டலமும் கரியமில வாயுவாலானதாகத்தானிருந்தது. பல கோடி ஆண்டுகளாகக் கிருமிகள் செயல்பட்டு அதை இன்றைய தன்மைக்கு மாற்றியுள்ளன. எனவே, ஒரு சில நூற்றாண்டுகள் என்பது அவ்வளவு அதிக கால இடைவெளியல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com