தற்போது அறிவியல் துறை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. உலகம் முழுவதும் தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதிகள், சரக்குப் பரிமாற்றம், மின்னியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளன.
இதன் காரணமாக, உலகப் பரப்பு சுருங்கி தொடர்பு கொள்வது எளிதாகியும், குறிப்பிட்ட இடத்தை அடையும் காலவிரயம் குறைந்தும் காணப்படுகின்றன.
விவசாயம், மருத்துவம், உணவுப்பதனீடு, எரிசக்தி, போக்குவரத்து, கால்நடை, உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பங்கு இன்றியமையாததாகிவிட்டது.
இன்று மின்சாரம், தொலைபேசி, வாகனங்கள் ஆகியவை இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பதென்பது மிகவும் சிரமமான செயல் என்றாகிவிட்டது.
அறிவியல் துறை மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் காலத்துக்கேற்ற வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் விஞ்ஞானிகள் என்றழைக்கப்படும் அறிவியலாளர்கள்தான்.
அறிவியல் அறிஞர்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் படைப்புகளை தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் அல்லர்.
அவை பெரும்பாலும் உலக மக்களின் நலனுக்காகப் பயன்படும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கண்டுபிடிப்புகள்.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் அறிஞர்கள் அவற்றுக்காக தங்களது வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணிக்கும் உணர்வு கொண்டவர்கள். தங்களது கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் வரை தூக்கம், நிம்மதி ஆகியவற்றை இழந்து, பல்வேறு ஏளனத்துக்கு ஆளாகி அதன் பின்னர் சாதித்த அறிவியலாளர்கள் ஏராளம்.
பல அறிவியலாளர்கள் தங்களது குடும்பத்தினரைக்கூட சந்திக்காமல் இருந்து கண்டுபிடிப்புகளுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர்.
அவ்வாறு அர்ப்பணிப்பில் ஈடுபட்டாலும் தங்களது கண்டுபிடிப்பில் வெற்றி பெற்று வெளியுலகுக்கு அதுபற்றித் தெரியவரும் போதுதான் அவர்களுக்கான முகவரி தெரிகிறது.
அவ்வாறு அல்லாமல் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக தோல்வியடைந்து வெளியுலகுக்குத் தெரியாமல் போனவர்களும் ஏராளமானோர்.
ஆனால், அவர்கள் கண்டுபிடித்த படைப்புகளை அனுபவிக்கும் பலர், கண்டுபிடித்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை.
அறிவியலாளர்களின் தேவை உலகுக்கு அவசியமான ஒன்று. உலகம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில், காலத்துக்கேற்ப அவற்றை எதிர்கொள்ள அறிவியல் வல்லுநர்களின் திறமை இன்றியமையாததாகும்.
அறிவியல் அறிஞர்களைப் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில் சர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28-ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது.
அறிவியல் மேதை சர் சி.வி.ராமன் 1888-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பிறந்தார். இவரது இயற் பெயர் வெங்கட்ராமன். 1921- ஆம் ஆண்டு லண்டனில் உலகப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சபையில் கல்கத்தா பல்கலைக்கழத்தின் சார்பில் சர் சி.வி.ராமன் பங்கேற்றார்.
அப்போது கடல் பயணம் மேற்கொண்டபோது கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது, வானத்தின் நிறமா, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போது நீல நிறமாக எப்படி இருக்கும் எனத் தனக்குள் பல்வேறு கேள்விகளைக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், சூரிய ஒளியை நீர்த்துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீல நிறமாக உள்ளது என்று அறிந்தார். சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும் பிற பொருள்களிலும் எப்படிப் பயணிக்கிறது என ஆராய்ந்தார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதைக் கண்டுபிடித்தார்.
இதனையடுத்து, ஒளி பல்வேறு பொருள்களில் பயணிக்கும் போது புதிய கோடுகள் உருவாவதைக் கண்டுபிடித்தார். இதற்கு ராமன் கோடுகள் எனப் பெயரிடப்பட்டது.
இந்த விளைவு ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இக்கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதனால், நோபல் பரிசு பெற்ற வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும், முதல் ஆசியர் என்ற பெருமையையும் பெற்றார்.
அறிவியலாளர்களின் அரிய பணிகளை மனதில் வைத்து அவர்களை ஆதரித்து மத்திய, மாநில அரசுகளும், அமைப்புகளும் உதவி செய்து ஊக்குவிக்க வேண்டும்.
அறிவியலாளர்களின் சிறிய அளவிலான கண்டுபிடிப்புகளைக்கூட அங்கீகரித்து விருதுகள், சான்றுகள் போன்றவற்றை வழங்கி ஊக்குவித்தால், மிகப் பெரிய அளவிலான கண்டுபிடிப்புகளில் ஈடுபட அறிவியலாளர்கள் தூண்டப்படுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.