திட்டமிட்டால் வெற்றி உறுதி!

உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த "ஃபிஃபா' உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பிரேசிலில் நடந்து முடிந்துள்ளது.

உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த "ஃபிஃபா' உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பிரேசிலில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டி நடைபெற்ற ஒரு மாதம் முழுவதும் உலகெங்கும் கால்பந்து பற்றிய பேச்சாகவே இருந்தது.

ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டினா அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. இந்த வெற்றியை நான் கைதட்டி ரசித்தபோதும் மனதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.

32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் தகுதிச் சுற்றிலேயே தோல்வி அடைந்து இந்தியா வெளியேறியதை நினைத்தபோது என் மனங்கவர்ந்த ஜெர்மனியின் வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை.

120 கோடி மக்களைக் கொண்ட நம்மால் உலக் கோப்பைக்குள் நுழையவே முடியவில்லை. ஆனால், 9 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனி கோப்பையை வென்றுள்ளது.

2 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நெதர்லாந்து, ஐவரிகோஸ்ட், ஈகுவடார் போன்ற நாடுகள் உலகக் கோப்பையில் சாதனை படைத்துள்ளன.

கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் நம்மால் சாதிக்க முடியவில்லை. ஒரு காலத்தில் இந்தியா கோலோச்சிய ஹாக்கியிலும் இன்று பின்தங்கி விட்டோம்.

நாம் மீண்டும் விளையாட்டுகளில் சாதனை படைக்க வேண்டுமானால், பள்ளிக் கூடங்களிலேயே விளையாட்டுகளுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்.

விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தனியாக பயிற்சி அளித்து மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேசப் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும்.

மீனவக் குடும்பங்களில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே நீச்சலில் திறமை இருக்கும். அதுபோல பழங்குடியின மக்களுக்கு வில்வித்தை, ஈட்டி எறிதல், மல்யுத்தம் போன்றவற்றில் இயற்கையான திறமை இருக்கும். இந்த வகையிலும் திறமையாளர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்க வேண்டும்.

சர்வதேசப் போட்டிகளில் அரசின் உதவி இல்லாமல் சாதிப்பது சாத்தியமல்லை. விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் நாட்டின் பருவநிலைக்கேற்ற சூழலில் விளையாட பயிற்சி அளிப்பது, விளையாட்டுக்கேற்ற உடைகள், பாதுகாப்பு சாதனங்கள், கருவிகள் என மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.

காமன்வெல்த், ஆசிய மற்றும் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் எத்தனையோ விளையாட்டுகள் உள்ளன. அவற்றுக்கான பயிற்சிகள், திட்டங்கள் குறித்த விவரங்களை பள்ளிக்கூட பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

விளையாட்டுக்கென தொலைக்காட்சி சேனல்கள், அமைப்புகள் உருவாக வேண்டும். தாலுகா அளவில் விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும்.

சர்வதேச விளையாட்டு போட்டி என்றால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வீரர்களைத் தேர்வு செய்து அதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். கடைசி நேரத்தில் எந்த வசதிகளும் இல்லாமல் நமது வீரர்களை வெளிநாடுகளில் தவிக்க விடக் கூடாது.

இப்படி நாம் கவலைக் கொள்ளும் நேரத்தில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தைப் பெற்று நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர்.

தற்போது நடைபெறும் ஆசிய மற்றும் வருகிற ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்க மளிக்கும் வகையில் ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் என பரிசுகளை அறிவித்த தமிழக முதல்வரையும், அவர்களுக்கு வேலை வழங்க முன்வந்த ரயில்வே துறை, வங்கி

களை நாம் பாராட்டியாக வேண்டும்.

பல வேறுபாடுகளைக் கொண்ட நம் நாட்டில் விளையாட்டுதான் ஒற்றுமையை உண்டாக்கும். விளையாட்டு மூலமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும்.

விளையாட்டின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் அதிகரிக்க முடியும். விளையாட்டுத் தொடர்பான பொருள்கள் விற்பனை உலக அளவில் 40 ஆயிரம் கோடிக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தியிலும் இந்தியா பின்தங்கியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தியிலும் இந்தியா சாதனை படைக்க வேண்டும்.

விளையாட்டு அமைப்புகளின் பொறுப்பாளர்களாக அந்தந்த விளையாட்டில் சாதனை படைத்த முன்னாள் வீரர்களையே நியமிக்க வேண்டும். விளையாட்டில் அரசியலை கலக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் அளித்தால் நம்மை வெல்ல யாராலும் முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com