பெண்ணே நீ தலை வணங்காய்!

பெண்ணின தீங்கிழைப்புப் பற்றிய விவாதம் தில்லி நிர்பயா நிகழ்வுக்குப் பிறகு நடு மையத்துக்கு வந்து வதைந்து ஓய்ந்து,
Updated on
4 min read

பெண்ணின தீங்கிழைப்புப் பற்றிய விவாதம் தில்லி நிர்பயா நிகழ்வுக்குப் பிறகு நடு மையத்துக்கு வந்து வதைந்து ஓய்ந்து, "இந்தியாவின் மகள்' என்ற பி.பி.சி.யின் குறும்படத்தை ஒளிபரப்புவதற்கான தடைக்குப் பிறகு ஊடகச் சர்ச்சையில் மீண்டும் உழல்கிறது.

ஒளிபரப்புக்குத் தடை என்பது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்று ஒரு வாதம். நம்மையே நாம் எடை போட்டு, ஒரு சம்பவத்தை வைத்து நாட்டையே தாழ்த்தித் தாக்குவது சரியில்லை என்பது நியாயமான வாதம். அழுக்கேறிப்போன மேற்கத்திய சமுதாயத்தினருக்கு நம்மைப் பற்றிக் குறை கூற என்ன அருகதை என்பதும் சரியான கேள்வி.

இந்தியக் கலாசாரத்தை பத்தாம் பசலித்தனம் என்று பொத்தாம் பொதுவாக வெறுப்பவரும், போலி மதச்சார்பின்மைக்கு குரல் கொடுக்கும் நாகரிக நடுவர்கள் என்று தம்மைத் தாமே முன்னிறுத்திக்கொள்ளும் போலி அறிவு ஜீவிகளும் பி.பி.சி. குறும்படத்தை தலையில் வைத்துக் கூத்தாடுவதும், நல்லது - கெட்டது எதற்கும் நிர்வாகத்துக்கு எதிராகவே ஆர்ப்பரித்து பிழைப்பு நடத்தும் சில மகளிர் அமைப்புகளும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தன. அதில் கூச்சல்தான் அதிகம் ஒலித்தது.

சமுதாயக் கொடுமைகளை எதிர்கொண்டு, களைய வேண்டிய குற்றவியல் ஆளுமையை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய கருத்துகள் எழவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல் துறையின் அணுகுமுறையில் எதிர்பார்க்கும் மாற்றம் முழுமையடையவில்லை.

புலன் விசாரணையின் தரத்தை உயர்த்துவதற்கான வழிகள் உறுதி செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. நீயா, நானா என்று ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு யார் சொல்வது சரி என்ற தர்க்கம்தான் தொடர்கிறது.

ஹரியாணா மாநிலம், ரோட்டக் என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் அழுகிய நிலையில் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கிடந்தது. காவல் துறையின் விசாரணையில் அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரை பல கயவர்கள் வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்பதும்

தெரிய வந்தது.

இறந்த பெண்ணும், அவரது சகோதரியும் நேபாளத்தில் இருந்து இங்கு பணிபுரிய வந்தவர்கள். தனது தங்கை காணாமல் போனதைப் பற்றி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால், புகார் பதிவு செய்யப்படவில்லை. காவல் துறை உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த அபலைப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

அதன் விளைவாக குற்றவாளிகளை காவல் துறை விரைவில் கைது செய்தது. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பதினெட்டு வயதிலிருந்து முப்பது வயது நிரம்பிய எட்டு இளைஞர்கள் கூட்டாக இந்தக் கொடுமையை நடத்தியிருக்கிறார்கள். புலன் விசாரணை முடிந்து எப்போது எந்த அளவில் தண்டனை கிடைக்கும் என்பது கேள்விக்குறி.

நிர்பயா நிகழ்வுக்குப் பின் எட்டு மாதம் கடந்து 2013 ஆகஸ்டில் மும்பை நகரில் இரு இளம் பெண்கள் வெவ்வேறு சமயத்தில் பாழடைந்த சக்தி நூற்பாலை வளாகத்தில் தாக்கப்பட்டு வன்புணர்ச்சிக்கு இரையாகினர். தில்லிக்குப் பிறகு மும்பையில் இந்தக் கொடுமை.

தாக்கப்பட்டவர் பாழடைந்த கட்டடத்தைப் புகைப்படம் எடுத்து கட்டுரை வரைய வந்த இளம் பெண் நிருபர். அவர் உடனே தைரியமாக காவல் துறைக்குப் புகார் கொடுத்ததன் விளைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள குடிசை வாழ் இளைஞர்கள்.

பாதிக்கப்பட்டவர் பெண் பத்திரிகையாளர் என்பதால் ஊடகங்களில் பிரதானமாக செய்தி வந்தது. அந்தச் செய்தியைப் பார்த்து மேற்படி சம்பவத்துக்கு முன்னால் அதே இடத்தில் தாக்கப்பட்ட இன்னோர் இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணையில், அதே குற்றவாளிகள் இந்தக் கொடுமையை செய்தது தெரியவந்தது. எவ்வளவு பெண்களை அவர்கள் சீரழித்திருப்பார்கள், எவ்வளவு குற்றங்கள் புகார் இல்லாமல் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்டிருக்கும்?

தைரியமாக புகார் கொடுத்த பெண் நிருபரைப் பாராட்ட வேண்டும். அவரது புகாரைப் பார்த்துத்தான் அதே பாதிப்புக்குள்ளாகிய மற்றொருவர் காவல் துறையை அணுகியதால் விசாரண முடுக்கப்பட்டு, விரைவு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையும் விரைவில் முடிந்தது.

நிர்பயா கொடூரத்தை விசாரித்த நீதியரசர் வர்மா கமிஷன் பரிந்துரையின் பேரில் திருத்தி அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி வன்புணர்ச்சி குற்றத்துக்கு குறைந்தபட்சம் இருபது வருடம் அல்லது ஆயுள் தண்டனை (ஆயுள் முடியும் வரை சிறை வாசம்). இரண்டு அல்லது அதற்கு அதிகமானவர்கள் சேர்ந்து வன்புணர்ச்சி குற்றங்களில் ஈடுபட்டால் அல்லது ஒருவரே திரும்ப அதே செயலில் ஈடுபட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் முடியும் வரை சிறை.

இந்த வகையில் சக்தி நூற்பாலையில் குற்றத்தைப் புரிந்த கொடூரன்களுக்கு மரண தண்டனை என்ற தீர்ப்பு புதிய சட்டத்தின்படி அளிக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னால் பெண்களை ஆபாசப் படம் எடுத்து இணையதளங்கள் மூலம் விற்ற டாக்டர் பிரகாஷ் வழக்கில் பல மகளிர் அமைப்புகள் புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணையில் காவல் துறைக்கு உதவின. அதன் பலன் சென்னை விரைவு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை அளித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்தது.

பெண்களுக்கு எதிரான எல்லா வழக்குகளிலும் பரபரப்பாக உணரப்பட்ட வழக்குகள் போல வெற்றி கிடைப்பதில்லை. 2012-ஆம் ஆண்டில் 24,923 வழக்குகள், 2013-இல் 33,707 வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகின. அதிகமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2013-இல் 4,335 வழக்குகள், ராஜஸ்தானில் 3,285, மகாராஷ்டிரத்தில் 3,063, உத்தரப் பிரதேசத்தில் 3,050. தமிழகத்தில் குறைவாக 923 வழக்குகள், சென்னையில் 83 மட்டுமே.

தில்லியில் 2012-இல் 585-ஆக இருந்த வன்புணர்ச்சி வழக்குகளின் எண்ணிக்கை 2013-இல் 1,441-ஆனது. மொத்தத்தில் நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகள் 27 மட்டும்தான் என்பது வருத்தம் அளிக்கும் உண்மை. இத்தனைக்கும் 94 சதவீத வழக்குகளில் தெரிந்த குற்றவாளிகள் கைதாகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு புலன் விசாரணையில் தேக்கம், நீதிமன்றத்தில் தேக்கம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நகரங்களில் அதிகமாகப் பதிவாகின்றன. கிராமப்புறங்களில் குறைவு. வன்புணர்ச்சியால் பாதிக்கப்படும் 70% பெண்களின் வயது 14-லிருந்து 30 வரை. இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் 60% குற்றவாளிகளின் வயது 18-லிருந்து 30 வரை.

ஆனால், மேலை நாடுகளில் வன்புணர்ச்சியில் சிக்கிய ஆண்களின் சராசரி வயது 30. அதாவது, நமது நாட்டில் இள வயதிலிருந்தே சிற்றின்பக் கிளர்ச்சியில் இளைஞர்கள் மயங்கி பெண்களை இச்சைக்கு இரையாக்குகிறார்கள்.

தேசிய குற்ற ஆவண காப்பகப் புள்ளி விவரப்படி 1991-இல் கொலைக் குற்றத்தில் 30 வயதுக்கு கீழ் ஆண்கள் 38,961 பேர் கைதாயினர். ஆனால், 2011-இல் இதே வயதினர் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர் எண்ணிக்கை 29,937-ஆகக் குறைந்தது.

மேலும், பொது இடங்களில் சண்டைச் சச்சரவுகளில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை 1991-இல் 2.7 லட்சத்திலிருந்து 2011-இல் 72,867 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், அதே வயதினர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் எண்ணிக்கை கடந்த இருபது வருடங்களில் உயர்ந்துள்ளது என்பது வேதனை தரும் நிலை.

நகரங்களுக்குப் படையெடுக்கும், படிப்பு அவ்வளவாக இல்லாத, வேலை தேடி அலையும் இளைஞர்கள் சமுதாயத்தின் மேல் உள்ள வெறுப்பை பெண்களின் மீது காட்டுகிறார்களோ? பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் போதிய கவனிப்பு குறைவு, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சுதந்திரம், துணிவு வந்துவிடுகிறது.

ஐம்புல உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான். வசதி படைத்தவர்களுக்கு இதைத் தீர்த்துக்கொள்ள உள்ள மாற்று வழிகள் சாதாரண மக்களுக்கு இல்லை. பெண்களை தன் வசப்படுத்துவது ஓர் அந்தஸ்து, இனம்புரியாத வெற்றிக்கு அடையாளமாகக் கருதப்படுவதும் ஒரு காரணம் என்கிறார்கள் சமூக ஆராய்ச்சியாளர்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைக்கு இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவரின் மனநிலை, பின்புல காரணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து காவல் துறை தனது களப் பணியை மேற்கொள்வது அவசியமாகிறது. இந்த சைகலாஜிகல் புரொஃபைலிங் மிக முக்கியம்.

நகரங்களில் அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் ஸ்டண்ட் செய்யும் இளம் வட்டங்களின் சேட்டைகள் இன்னொரு கலாசாரமாக வளர்ந்து வருகிறது. இது சேட்டையில் துவங்கி வன்முறையில் முடிகிறது. இளைஞர்களை வழி நடத்தாமல் அவர்கள் கேட்காமலேயே வயதுக்கு மீறிய வசதி செய்து தரும் பெற்றோர்களே இதற்கு முக்கியக் காரணம்.

அமெரிக்காவில் இத்தகைய மோட்டார் சைக்கிள் மைனர்கள் தம்மை நரகத்தின் தேவதைகள்- "ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்' என்று அடையாளப்படுத்திக் கொண்டு வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு வளைய வரும் சமூக விரோதிகள் காவல் துறைக்கு பெரும் தலை வலி.

சமுதாய நிலைப்பாடுகள் தேய்ந்து வருகின்றன. நல்ல முன் உதாரணங்கள் இல்லை. உழைக்காமலேயே எல்லாவற்றையும் இன்றே அடைய வேண்டும் என்ற பேராசைக் கலாசாரம் வளர்ந்துள்ளது.

ஆடம்பரத் திருமணங்களில் பணம் விரயமாகிறது. வரதட்சிணைப் பிரச்னை பெண்ணைப் பெற்றவரை கதிகலங்க வைக்கிறது. அதன் விளைவாக பெண் சிசுக் கொலையும், பாலின சோதனைக்குப் பிறகு கருக் கலைப்பும் தொடர்கிறது. இவற்றை ஒழிக்க, சீர்திருத்த மீண்டும் ஒரு ராஜாராம் மோஹன் ராய்தான் பிறக்க வேண்டும்.

திருமண வைபவங்களில் நம்பிக்கை அடிப்படையில் நடைபெறும் வழக்கங்களை கொச்சைப்படுத்துவதைவிட்டு, வரதட்சிணை கேட்டல், சொத்து பிரித்துக் கொடுக்க வற்புறுத்தல், புகுந்த வீட்டில் பெண்ணைக் கொடுமைப்படுத்துதல் போன்றவற்றை எதிர்த்துப் போராட வேண்டும்.

தமது வீட்டில் பெண்களைக் கௌரவமாக நடத்துதல், பிறன் மனை நோக்கா பேராண்மையைக் கடைப்பிடித்தல், மனைவியிடம் அன்புடனும் பண்புடனும் நடந்து அவளது முகம் கோணாத வகையில் போற்றி ஏகபத்தினி விரதம் கொள்ளுதல், பெண்களுக்கு எல்லாவற்றிலும் சம அந்தஸ்து அளித்தல் போன்ற இத்தகைய நெறிகளை பெரியவர்கள், தலைவர்கள் கடைப்பிடித்து மக்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து அறிவுறுத்தினால் சமுதாயம் வளம் பெறும், நாடு செழிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com