பிழைப்பும் எழுத்தும் - ஜெயகாந்தன்

தான் எழுதிய எழுத்தை நம்பி வாழ்ந்தவர் எழுத்தாளர் தண்டபாணி பிள்ளை முருகேசன் என்னும் ஜெயகாந்தன். முப்பதாண்டுகளுக்கு மேல் தமிழ்ப் பத்திரிகை வாசகர்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்.
Updated on
3 min read

தான் எழுதிய எழுத்தை நம்பி வாழ்ந்தவர் எழுத்தாளர் தண்டபாணி பிள்ளை முருகேசன் என்னும் ஜெயகாந்தன். முப்பதாண்டுகளுக்கு மேல் தமிழ்ப் பத்திரிகை வாசகர்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர். இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என்று பலரும் அவரது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்தார்கள். அவர் எழுத்துகளில் தங்களைக் கண்டு கொண்டார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட நவீன தமிழ்ப் படைப்பு எழுத்தாளராக அவர் இருந்தார். எழுதி எழுதியே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது கதைகள் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள்தான். ஆனால், அவற்றில் வெளிவந்த மரபான கதைகள் இல்லை. அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் ஒதுக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்டவர்களைப் பற்றி அவர்களின் பேச்சு மொழியில் எழுதினார். அது முதல் நிலை.

இரண்டாவது நிலையில் சிந்திக்கவும், பேசவும் தெரிந்த பெண்கள், ஆண்கள் பற்றி சமூகம் சார்ந்து எழுதினார். அவர் யதார்த்த எழுத்தாளர். அவரது படைப்புகளில் லட்சியவாதம் ஊற்றாக இருந்தது.

1950-ஆம் ஆண்டில் "சௌபாக்கியம்' என்னும் அரசு இதழில் அவரது முதல் சிறுகதை வெளிவந்தது. பின்னர் விஜயபாஸ்கரன், சரஸ்வதியில் பல கதைகள் எழுதினார். ஆனால், அவர் பத்திரிகை எழுத்தாளர் இல்லை. வெகுஜன பத்திரிகைகளில் எழுதி பிரபலமானபோதுகூட அவர் பத்திரிகைகள் குணநலன் சார்ந்து எழுதியதில்லை. அவற்றுக்கு எதிராகவே எழுதினார்.

"நான் பத்திரிகை எழுத்தாளன். பத்திரிகைகள் கேட்டதால் எழுதினேன். பத்திரிகைகள் கேட்டிருக்காவிட்டால் எழுதியிருக்கவே மாட்டேன்' என்று ஒருசமயம் குறிப்பிட்டார். ஆனால், அவர் பத்திரிகை எழுத்தாளர் இல்லை. தான் எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்ததை பத்திரிகைகள் கேட்டபோது எழுதிக் கொடுத்தார். அவர் கதைகளை வெளியிட்ட எந்தப் பத்திரிகையின் எழுத்தோடும் கருத்தோடும் அவர் சேர்ந்துபோன மாதிரி எழுதியதில்லை.

"நான் என் கதைகளை வெளியிடும் பத்திரிகைகளை எல்லாம் படிப்பதில்லை. அது அவசியமும் இல்லை. என் கதை வந்த பக்கங்களைக் கிழித்தெடுத்துக் கொண்டு பத்திரிகையைக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவேன்' - என்று ஒரு முறை கூறினார்.

அது பத்திரிகைகளை அவமரியாதை செய்யவோ, அகங்காரத்தால் சொன்னதோ இல்லை. என்ன செய்தாரோ அதையே சொன்னார். தன் காலத்துப் பத்திரிகைகள் மலினப்பட்டு, சீரழிந்து, தரம் தாழ்ந்து கிடப்பது கண்டு வருத்தமுற்றே சொன்னார்.

ஜெயகாந்தன் 12 வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டார். அவர் மாமா ராதாகிருஷ்ணன் கம்யூனிஸ்டாக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் கம்யூனில் இளம் தொண்டராகச் சேர்ந்து கொண்டார். ஜீவானந்தம், மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம் என்று பல தலைவர்கள் - தொண்டர்கள் நேசத்துக்கு உரியவராக இருந்தார்.

தான் நேசிக்கப்பட்டது போலவே அவர் மற்றவர்களையும் மிகவும் நேசித்தார். அவர் படைப்பு முழுவதிலும் இழையறாமல் இருப்பது மனிதர்களிடமும், விலங்குகளிடமும் அவர் கொள்ளும் நேசம்தான். நேசிப்பதற்குக் காரணம் வேண்டுமா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார்.

அவரது கேள்விக்கான பதில்தான் சிறுகதைகள், நாவல்கள். அவை மிகையாக இருக்கின்றனவா? லட்சியவாதமாக இருக்கிறதா என்று அவர் யோசித்தது இல்லை. தான் சமூகத்திடம் இருந்து பெற்றதை மற்றவர்களுக்கு உரிய முறையில் வழங்க வேண்டும் என்ற பேரவா கொண்டு எழுதினார்.

முருகேசனான ஜெயகாந்தனின் பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரையில்தான். அதுகூட ஃபெயில். ஃபெயிலானதற்காக சந்தோஷப்பட்டேன் என்று ஒருமுறை கூறினார். அவரோடு படித்த சாரங்கபாணி என்னும் கி. வீரமணி தன் பள்ளிக்கூட நாள்களை நினைவுபடுத்தியபோது அதைப் பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டார்.

ஆனால், அவர் சொந்தமாகத் தமிழ் இலக்கியம், இலக்கணம் எல்லாம் படித்துக் கொண்டார். திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் உள்பட பல பனுவல்களில் பெரும் பகுதி மனப்பாடம். பாரதியார் கவிதைகள் முழுவதும் சொல்லக்கூடியவர்.

ஆங்கிலம் சரளமாகப் படிக்கவும், பேசவும் கற்றுக் கொண்டிருந்தார். அதன் வழியாக சர்வதேச இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்திருந்தார். இலக்கியப் படிப்பு என்பதைத் தாண்டி தத்துவம் கற்றிருந்தார். கார்ல் மார்க்ûஸ மிகுந்த ஈடுபாட்டோடு படித்து இருந்தது பேச்சின் வெளிப்பாடாக இருந்தது.

நவீன தமிழ் இலக்கியத்தை புதுச்சேரி விஜயதங்கம் என்னும் "தமிழ் ஒளி'தான் தனக்கு முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்ததாக அடிக்கடி சொல்வார். அதுவும் லா.ச.ராமாமிர்தம் ஜனனியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னதாகவும், அதனைப் படித்துவிட்டு வேறு புத்தகம் கேட்டபோது, "ஒன்று போதும், போ' என்று சொன்னதாகச் சொன்னார்.

எஸ்.ஆர்.கே. என்று அறியப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் மீதும், கம்யூனிஸ்ட் விமர்சகர் ஆர்.கே.கண்ணன் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்கள், இலக்கியரீதியில் தன்னை நெறிப்படுத்தியவர்கள் என்றே கருதினார். தமிழின் நவீன படைப்புகள் முழுவதையும் - நான் படிப்பதே இல்லை என்று சொல்லிக்கொண்டே படித்து வந்தார்.

தமிழ் எழுத்தாளர்களுள் புதுமைப்பித்தன், மௌனி, தி.ஜானகிராமன் ஆகியோரது எழுத்துகள் அவருக்குப் பிடித்திருந்தன. அவர்களுள் புதுமைப்பித்தன், மௌனி மீது அவருக்கு விமர்சனம் இல்லை. ஆனால், தி.ஜானகிராமன் நாவல்கள் குறித்தும், அவர் எடுத்தெழுதும் கருத்துகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் விமர்சனமாக எதுவும் எழுதாவிட்டாலும் சபையில் பேசிக்கொண்டே இருந்தார்.

"ஜெயகாந்தன் சபை' என்பது நண்பர்களோடு அவர் உட்கார்ந்து பேசும் இடம். சென்னை ஆழ்வார்பேட்டையில் அரச மரத்தடி பக்கத்தில் இருந்த மாடியில்தான் பல ஆண்டுகள் இந்த சபை கூடியது. மாலையில் கூடும் சபையில் ஜெயகாந்தன் வந்ததும் களை கட்டிவிடும். தேநீர், காபி என்று ஒரு மணி வரையில் உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களும் அலசி ஆராயப்படும். ஜெயகாந்தனின் ஆளுமையே சபையை நடத்திக் கொண்டிருந்தது.

இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஜெயகாந்தனுக்கு உலகமே வீடாகியது. "சின்னஞ்சிறு வயதில் இருபத்தொரு வேலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு வேலையில் சேரும்போதும் அதிலேயே வாழ்க்கை முழுவதும் கழியப்போகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால், என் சுபாவம் நெடுநாள் ஒரு வேலையில் இருக்க விடாது. ஐஸ் பெட்டி தள்ளியிருக்கிறேன். தஞ்சாவூரில் குதிரை வண்டிக்காரனுக்கு துணையாக வேலை பார்த்திருக்கிறேன். நான் அதிக நாள் பார்த்த வேலை புத்தகம் பிழை திருத்துவது. ஆனால், வெளியில் சொல்லக்கூடாத, தப்பான எந்த ஒரு வேலையையும் செய்ததில்லை.

மானமான எந்த வேலையும் செய்து பிழைக்க நான் தயாராக இருந்தேன். அதுதான் நான்' - என்றவர் 1948-ஆம் ஆண்டில் சென்னையில் டிராம் வண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைகள் விற்றதையும் மகாத்மா காந்தி மரணமுற்ற நாளையும் நினைவு கூர்ந்தார்.

"மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எனக்கு 14 வயது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். கட்சிப் பத்திரிகை விற்பதுதான் வேலை. டிராம் வண்டியில் பத்திரிகை விற்று வந்தேன். நான் டிராமில் ஏறியபோது சிலர் கையில் பத்திரிகை வைத்துக்கொண்டு காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டொருவர் என்னிடம் தினசரி பத்திரிகையை வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்தார்கள். அவர்கள் முகம் மாறியது. தாழ்ந்த குரலில் மகாத்மா கொல்லப்பட்டுவிட்டது பற்றி பேசிக் கொண்டார்கள். என்னால் மேற்கொண்டு டிராமில் இருக்க முடியவில்லை. கீழே இறங்கி பத்திரிகையைப் பிரித்துப் படித்தேன். அழுகை வந்துவிட்டது. நான் சாதாரணமாக அழக்கூடிய ஆளில்லை. தந்தை இறந்தபோதுகூட அழுததில்லை. ஆனால், காந்திக்காக அழுதேன்.

கடலூரில் கோயில் கோபுரத்தில் காந்தி சிலை இருக்கிறது. கடவுள்கள்தான் சிலையாக கோபுரத்தில் இருக்கும் என்பது என் நினைப்பு. அதனால் காந்தியும் கடவுள்தான். கடவுள் எப்படி சாவார் என்று நினைத்தேன். அதனால் அழுகை வந்துவிட்டது' என்று கடலூரில் காந்தி சிலையைக் காட்டி ஆவணப் படம் எடுக்கும்போது எங்களிடம் சொன்னார்.

ரோமன் ரோலந்து எழுதிய மகாத்மா காந்தி பற்றியப் புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர், திரைப்பட இயக்குநர், கொடுஞ் செயல்களுக்கு எதிராகச் செயல்படுகிறவர் என்று அறியப்பட்டிருந்த

ஜெயகாந்தன், மனதில்படுகிற கருத்துகளை சபை நாகரிகம் என்று மறைத்து நாசூக்காகப் பேசியவர் இல்லை. பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், எல்லா இடங்களிலும் தைரியமாகப் பேசக் கூடியவராக வாழ்ந்து மறைந்தார்.

ஓர் எழுத்தாளன் பற்றி - அவன் எழுத்துகள் பற்றி எத்தனை எழுதினாலும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள எழுத்துகளைப் படிப்பதுதான் சரி; படிக்க வைக்கவே ஏராளமாக எழுதப்படுகின்றன என்ற அரிச்சுவடிதான் ஜெயகாந்தனுக்கு. அவரை அறிந்துகொள்ள, நிறையவே எழுதியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com