செல்லிடப்பேசியும் கதிர்வீச்சும்!

உலகெலாம் அறிந்து ஓதற்கு இனியது இணையம். நாட்டில் இணைந்த மக்கள் (அதுதான் "சிட்டிசன்கள்') எல்லாரும் இன்று
Updated on
4 min read

உலகெலாம் அறிந்து ஓதற்கு இனியது இணையம். நாட்டில் இணைந்த மக்கள் (அதுதான் "சிட்டிசன்கள்') எல்லாரும் இன்று "இணைய மக்கள்' ("நெடிசன்கள்') ஆகிவிட்டனர்.

"நெட்' வலைதளத்தில் உலா வருகிறார்கள். "நெட் நியுட்ராலிட்டி' என்கிற விவாதம் சூடு பிடித்து வருகிறது. அதாவது, "இணையச் சமன்மை' பற்றியது. இதனை "இணைய சுதந்திரம்' என்கிற மாதிரி சிலர் சிந்திக்கின்றனர். இதில் குறுக்கிட்டால் தனிமனித உரிமை மீறலாம்.

இணைய சேவை வழங்குவோரும் சந்தைப் போட்டி என்ற சந்தடிச் சாக்கில் கண்டதையும் வலைத் தளத்தில் ஏற்ற முடியாது. எதைத்தான் விற்கலாம் என்று ஒரு வரையறை வேண்டும். வாடிக்கையாளனும் அதை வாங்குவது உரிமை என்று வழக்காட முடியாது.

இன்றைக்கு இந்த இணையவாசிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்க முயன்று வருகிறது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். "இணையம் நமக்கு வினைதான்' என்கிற விளம்பரத்துடன்தான் விற்க வேண்டி இருக்கும்போல.

உலகின் 700 கோடி மக்களில் 450 கோடி பேருக்கு முறையான கழிப்பறை வசதியே இல்லையாம். ஆனால், 600 கோடி பேருக்குக் கையில் செல்லிடப்பேசி இல்லை என்றால் பைத்தியமே பிடித்துவிடும் என்ற நிலை. அவர்களில் 300 கோடி பேர் இணையத்தில் உலவுகிறார்கள். அதிலும் இன்று "சமர்த்துப் பேசி' ("ஸ்மார்ட் ஃபோன்') வந்துவிட்டது. 230 கோடி பேர் கட்சி தாவி விட்டார்கள்.

இந்த 2015-ஆம் ஆண்டுக் கணிப்புப்படி, இந்தியாவில் 25 கோடி மக்கள் சமர்த்துப்பேசியின் பேச்சாளர்கள். இணையத்திலும் கரைபவர்கள் ஏறத்தாழ 16 கோடி. அதில் 4 கோடி பேர் கிராமத்தவர்கள் என்பது ஓர் அதிர்ச்சித் தகவல். நகர்ப்புற எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டுக்குள் இன்றைக்கு இருப்பதிலும் 50 சதவீதம் அதிகரிக்குமாம்.

உண்ணாமல், உறங்காமல் செல்லிடப்பேசியும் கணிப்பொறியுமாக வயது, பாலினம், சாதி, மொழி, இனம், மாநில எல்லைகள் பாராமல் நம்மில் பலர் இருக்கிறார்கள். ஒலி, ஒளி எனப் பல்வேறு வடிவங்களில் நிறைய தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றன. இதனைப் "பெருந்தரவு' என்கிறார்கள்.

தகவலின் "வால்யும்' (கன அளவு), "வெரைட்டி' (பன்மப் பதிவு), "வெலாசிட்டி' (செயல் விரைவு) ஆகிய மூன்று ஆங்கில "வி' சொற்கள் அதிகம் ஆனது "பெருந்தரவு'. இந்தப் "பெருந்தரவு' இணையத்துடன் அதிவேக மின்காந்த மூக்கணாங் கயிறுகளால் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஓர் இணையத்தில் நுழைவது என்பது கட்டணம் செலுத்த ஒரு பொருள்காட்சிக்குள் செல்வது மாதிரி. அங்கே புகுந்து விளையாடலாம் என்கிற வாதம் அபத்தம். இலவசமாகப் பார்க்கவும், கேட்கவும் பல விஷயங்கள் கிடைக்கலாம். ஆனால், சில அரங்குகளில் பிரத்யேகத் தகவல்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றையும் இலவசமாகத் தரவேண்டும் என்று அடம்பிடித்தால் எப்படி?

உள்ளபடியே, இந்த இணைய வசதியை இரு பிரிவுகளாகப் பார்க்கலாம். ஒன்று, "சேவை வழங்கிகள்' ("சர்வீஸ் புரொவைடர்'கள்). மற்றொன்று "தேவை வழங்கிகள்' ("கன்டென்ட் புரொவைடர்'கள்).

மின்னஞ்சல், வாட்ஸ்அப் எல்லாம் இணைய சேவை சந்தாதாரர்களுக்கு இலவசம். "யூ-டியூப்', "ரெட்டிட்', முகநூல் ("ஃபேஸ்புக்'), சுட்டுரை ("டுவிட்டர்'), "காண்டிபிரஷ்' என்று அண்டா குண்டா என்று என்ன எல்லாமோ இருக்கிறது. பயன்பாடு ஆகிய "அப்ளிகேஷன்' ("அப்ஸ்') வகையில் "வாட்ஸ்அப்', "வைபர்' என்று அரட்டை வசதிகள் ஏராளம். அதில் முகம் பாராமலே முகத்துதி நட்பு. முகநூலின் "மாய நண்பர்கள்' வெற்றுக்குப் புகழ்வார்கள். வெறுத்துவிட்டால் கணிப்பொறி வழி காறி உமிழ்வார்கள். அனைத்தும் தனிமனித விவகாரங்கள், போகட்டும்.

சந்தாதாரரின் தேவைக்குத் தகவல் வழங்க கூகுள், யாகூ என்று எல்லாம் இருக்கிறது. தங்கள் வலைத் தளத்தில் சேமித்து வைத்து இருக்கிற விசேஷத் தகவல்களை தனிக் கட்டணத்துக்கு விற்பதில் தப்பு இல்லையே.

அந்தத் தகவல்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தால் கட்டுப்பாடு, விதிமுறைகள் தேவைதானே. படம், பாடம், பாசம், ஆபாசம், நற்குணம், வக்கிரம்

எதுவாகவும் இருக்கலாம். அவற்றைப் பெறுவதற்கு உங்கள் மின்னஞ்சல், தொலைபேசி அடையாளங்களைத் தெரிவித்தால் அல்லது தனிக் கட்டணம் செலுத்தினால் தன்மானம் போய்விடுமா என்ன? தகவல் ஒழுங்குமுறை சரி என்றே தோன்றுகிறது.

சமர்த்துப்பேசிகள் நம் மூளை இணைப்பையே தடம் புரட்டிவிடக் கூடியவை. அதனால்தான், சில கணினி மேதாவிகள் காட்டுமிராண்டிகள் போல, சிறுவயதிலே பள்ளிக்கூடத்தில் அல்லது கல்லூரியில் பாலியல் பாடமும் செய்முறைப் பயிற்சியும் தப்பு இல்லை என்று வாதாடுகிறார்கள்.

ஹரியாணாவில் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரிடமே ஒரு மாணவர், நிஜப் பெண்களைவிட வலைத் தளங்களின் ஆபாசத் திரைப்படங்களே மேல் என்று வாயாடினாராம்.

கனடாவில் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் முதுமுனைவர் பட்ட ஆய்வுப் பேராசிரியர் டாக்டர் நாத்தானியல் பார் என்பவரிடம் ஒருவர், "மாணவர்கள் இணையத்தை எந்த அளவுக்குத் தகவல் சேகரிக்க உபயோகிக்கிறார்கள்?' என்று கேட்டாராம். அதற்குப் பேராசிரியர் அளித்த பதில்: "பகுத்து ஆராய்ந்து சிந்திக்கத் தயங்குபவர்களும் சிந்திக்கவே முடியாதவர்களும்தான்'. இன்றைக்கு சமர்த்துப்பேசிகளுக்கு நம்மவர் அடிமைகள் என்கிறார் தெர்பி பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் டாக்டர் ஜாகீர் உசேன்.

சமர்த்துப்பேசி உபயோகிப்போர் பெரும்பாலும் கவனக் குறைவு, நினைவாற்றல் இழப்பு, பகுப்பாய்வுத் திறன் இன்மை, இரவு எல்லாம் மன உளைச்சல், நிஜமற்ற உலகம், தங்கள் மனமுறிவுக்குத் தீனிபோடும் மந்தபுத்தியினரோடு சகவாசம், பெரியவர்கள் முன் விட்டேற்றியாக நடந்து கொள்வது, குடும்பத்தில் உறவுகளிலும், பள்ளிப் படிப்பிலும் திசைமாற்றம்.

"நான்-எனக்கு-நானே' என்கிற தன்னைச் சுற்றியே இந்தப் பூமி சுழல வேண்டும் என்ற ஊடக முரண் எண்ணம் கொண்டவர்கள். சின்னச் சின்ன கணக்குகளில் மட்டும் அன்றி, சொந்தக்காரர்களின் பெயர், முகம், முகவரி என எல்லாவற்றுக்கும் சமர்த்துப்பேசியைத்தான் சரணாகதி அடைகிறார்கள்.

"பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றிய'மும், உலக சுகாதார நிறுவனமும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையும் இணைந்து செல்லிடப்பேசியின் கதிர்வீச்சு அபாயங்கள் குறித்துக் கருத்தாக்கம் வெளியிட்டு உள்ளன.

1973-ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவனத்தின் ஜான் எஃப். மிஷ்செல்,  மார்ட்டின் கூப்பர் ஆகியோர் கண்டுபிடித்த செல்லிடப்பேசியின் எடை ஒரு கிலோ. இன்றைய செல்லிடப்பேசி, தீப்பெட்டி எடையளவு வந்துவிட்டது. அதில் இடம்பெறும் அலைபரப்புக் கருவி வெளிவிடும் கதிர்வீச்சு என்பது 1 - 2 வாட் திறன். அதாவது 20 செல்லிடப்பேசிகளின் கதிர்வீச்சு ஒரு மின்விசிறியின் திறனுக்குச் சமம்.

முன்பு எல்லாம் வீட்டினுள் பழைய தொலைபேசி மணி அலறினால் மாடியில் இருந்து கீழே ஓடிவந்து "ரிசீவரை' எடுப்போம். இன்றைக்கோ செல்லிடப்பேசி மணி அடித்தால் எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குத்தான் ஓடுகிறோம். தலைகீழ் ஓட்டம்.

காரணம், சிக்னல் முழுமையாகக் கிடைக்கிறதாம். காற்றுவெளியில் இருப்பதைவிட கண்ணாடி அறைக்குள் "சிக்னல்' குறைவு. மரக் கதவு அறைக்குள் "சிக்னல்' இன்னும் குறைவு. கான்கிரீட் வீட்டுக்குள் கேட்கவே வேண்டாம். அதனால்தான், திறந்த மாடிக்கு ஓடுகிறோம்.

உண்மையில் உங்கள் செல்லிடப்பேசியில் சிக்னல் செறிவைக் காட்டும் குறியீடு குறைவாகக் காட்டினால் அங்கே உங்கள் மீது பாயும் செல்லிடப்பேசிக் கதிர்வீச்சு அளவு அதிகம் என்று பொருள். அதனால், காற்றுவெளி நோக்கிச் செல்வது உடலுக்கும் நல்லது.

ஆனால், அங்கேயும் ஒரு சிக்கல். இன்றைக்கு எல்லாம் பெரிய அடுக்ககங்களின் மொட்டை மாடிகளில்தான் வானம் பார்த்துக் கிடக்கிறான் பகாசுரன். ஒற்றை அலைதிரட்டி ஆன்டனா மிகப் பிரமாண்டம். அதன் பக்கத்தில் போய் விடாதீர்கள். செல்லிடப்பேசி அலைபரப்பு கோபுரம் உமிழும் கதிர்வீச்சு 20 வாட் அளவு. அலைதிரட்டியின் கதிர்வீச்சு உங்களை மெல்லச் சுட்டு எரித்துவிடும், எச்சரிக்கை.

சராசரி 60 கிலோ மனித உடல் அதிகபட்சம் 120 வாட் அதாவது மூன்று மின்விசிறி திறன் அளவுக்குக் கதிர்வீச்சு ஏற்கலாம். அதற்கும் அதிகமானால் நித்திய கண்டம் ஆபத்து.

உலகின் 13 நாடுகளில் செல்லிடப்பேசி பயன்படுத்தும் நடுத்தர வயது மக்களைத் தேர்வு செய்து ஆராய்ந்ததில், 10 ஆண்டுகளாக இதைக் கையாள்பவர்களுக்கு மூளை நரம்புக் கட்டி ("கிளையோமா') அல்லது மூளைக்  காய்ச்சல் ("மெனஞ்சைட்டிஸ்') ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கவில்லை. ஆனால், நோய் வர வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கவில்லை.

ஒரு நாளைக்கு 18-24 நிமிடங்களுக்கு மேல் செல்லிடப்பேசியை நம்பாதீர்கள் என்கிறது இந்திய சுகாதார அமைச்சகம். கதிர்வீச்சு அவ்வப்போது உடம்பில் புகுந்தால் தேங்கும் அபாயம் உண்டு. வாய்மொழி எதற்கு? தேவைப்பட்டால் குறுஞ்செய்தி அனுப்பி விடுங்கள்.

புற ஊதாக்கதிர்கள் என்றால் உடம்பின் ஒரு மூலக்கூறின் பிணைப்பையும் உடைத்துவிடும். செல்லிடப்பேசி கதிர்வீச்சு அதனினும் 4,80,000-இல் ஒரு பங்கே என்று ஆறுதல் அடையலாம். ஆனாலும் தொடர்ந்து பயன்படுத்தினால் ஆபத்து.

இன்னொரு பொய்யா மொழி - செல்லிடப்பேசியைக் காதருகே வைத்துப் பேசாதீர்கள். குறைந்தது ஒரு விரல் தொலைவில் இருக்கட்டும். இல்லை என்றால் காதில் தலைபேசி ("ஹெட்ஃபோன்') மாட்டிக் கொள்ளுங்கள்.

நம் உடம்பில் இருந்து ஓர் அடி தொலைவில்தான் செல்லிடப்பேசியைப் பிடிக்க வேண்டும். வாகனம் ஓட்டிச் "செல்'லும்போது பேசுவதைத் தவிர்க்கவும். சாலை விபத்தில் இறப்பு 3-4 மடங்கு அதிகரித்து உள்ளதாம்.

இடுப்புக் கச்சையிலோ, சட்டை மேல் பையிலோ வைத்தால் செல்லிடப்பேசித் திரை உங்களைப் பார்த்தவண்ணம் இருக்கட்டும். செல்லிடப்பேசியின் முதுகு பரப்பும் அலை உடலுக்குள் புகாமல் ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.

அமெரிக்க இனப்பெருக்க மருத்துவக் கழகத்தின் ஆய்வுப்படி, செல்லிடப்பேசியால் இளைஞர்களில் 30 சதவீதம் பேருக்கு ஆண் தன்மை வற்றிப் போகிறதாம். அவர்களின் பெற்றோர் சிலருக்கேனும் பேரன், பேத்தியுடன் கொஞ்சும் பாக்கியம் இல்லாமல் போகலாம்.

"கர்ப்பிணிப் பெண்டிரும், பிணியுடையீரும், தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர் பெறாதீரும், செல்லிடப்பேசிக் கதிர்வீச்சும் இணைய தளப்பேச்சும் கொல்வகைக் காட்சிகளும் தவிர்த்திடுக' என்று பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது போல விஞ்ஞானப் "புதுநானூறு' பாடினால் கேளுங்களேன்.

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com