

தயாநிதி மாறன் முன்ஜாமீன் வழக்கில் அவரைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், அவரைக் கைது செய்வதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஏன் கருதக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதையும் ஊடகங்கள் தலைப்புச் செய்திபோல பிரதானப்படுத்தியுள்ளன.
2013-ஆம் ஆண்டிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும் இரண்டு ஆண்டுகளாக தயாநிதி மாறனைக் கைது செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
"மேலும், சட்டவிரோத இணைப்பு மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.2 கோடி என நீங்கள் (சி.பி.ஐ.) மதிப்பிட்டுள்ளீர்கள். அந்தத் தொகையை கட்டுவதற்குத் தயாநிதி மாறன் தயாராக இருக்கிறார். இதில் அதிகார துஷ்பிரயோகம் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அவரைக் கைது செய்யும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய ஊழல் இல்லை' என்று சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இப்படிச் சொன்ன உச்சநீதிமன்றம், தயாநிதி மாறனை வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி வரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளதுடன், மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நடைபெற்றுள்ள விசாரணை தொடர்பான விவரங்களை விரிவான வாக்குமூலமாகத் தாக்கல் செய்யுமாறும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியின் வாதங்களை ஊடகங்கள் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களும் கடந்த 4 ஆண்டுகளாக "தினமணி' நாளிதழ் மூலம் பொது மக்களின் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குத் தெரிய வேண்டிய முக்கியமான உண்மைகள் மிகவும் அதிகமானவை அல்ல.
2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் 341 அதிநவீன இணைப்புகள் கொண்ட பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகத்தை சட்ட விரோதமாக நிறுவினார். இது கணக்கில் வராமல் ரகசியமாகச் செயல்பட்டு வந்தது.
இந்த ஒவ்வோர் இணைப்பையும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வாடகைக்கு விட்டால் ஆண்டுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது, 2004-05 முதல் 2007-08 வரையிலான காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.136 கோடி வருவாய் கிடைத்திருக்கும்.
இதேபோல தயாநிதி மாறன், போட் கிளப் பகுதியில் உள்ள தனது நவீன பங்களாவில் கூடுதலாக 323 அதிநவீன இணைப்புகளை சட்ட விரோதமாகப் பெற்றிருந்தார். 2007-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இவை செயல்பட்டு வந்தன.
2006-07 மற்றும் 2007-08 ஆகிய ஆண்டுகளுக்கு இந்த கூடுதல் இணைப்புகளுக்கான வாடகையைக் கணக்கிட்டால் ரூ.65 கோடி வரும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் 764 இணைப்புகளுக்கு வாடகையாக மட்டும் ரூ.200 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.2 கோடியை வேண்டுமானால் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று தாராள மனதுடன் மாறன் சார்பில் தெரிவிக்கப்பட்டது நீதிமன்றத்தைக் கவர்ந்திருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த ரூ.1.2 கோடி என்பது பி.எஸ்.என்.எல். நிறுவனம் கேபிள் பதித்ததற்கு ஆன செலவுதான்.
அளவிட முடியாத பயன்பாட்டுக் கட்டணங்களைக் கணக்கிடாவிட்டாலும்கூட, குறைந்தபட்ச இழப்பு ரூ.200 கோடி என்பதை நீதிமன்றத்திடம் சி.பி.ஐ. தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கவில்லையா அல்லது அது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?
1974-ஆம் ஆண்டில் ரூ.265 (ஆம், வெறும் ரூ.265 தான்) லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு 30 ஆண்டு கால வழக்கு விசாரணைக்குப் பிறகு 2014-இல் அவரது 76-ஆவது வயதில் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற தீர்ப்புகளால்தான் ஊழலை ஒழிக்க முடியும். இப்படியும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஊழலுக்குக் கடிவாளம் போடத்தான் செய்கிறது.
என்ன நோக்கத்துக்காக, என்ன பயன்பாட்டுக்காக 764 இணைப்புகள் கொண்ட இரண்டு இணைப்பகங்கள் தயாநிதி மாறன் வீட்டில் சட்ட விரோதமாக நிறுவப்பட்டன என்று அட்டார்னி ஜெனரல் ரோத்தகி நீதிமன்றத்தில் குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை.
தயாநிதி மாறன் சட்ட விரோதமாகத் தொலைபேசி இணைப்பகத்தை நிறுவியதுடன், தனது வீட்டிலிருந்து தொலை தூரத்தில் உள்ள சன் தொலைக்காட்சி குழும அலுவலகத்துக்கு சட்ட விரோதமாக இணைப்பு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சன் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலரின் வீடுகளுக்கும் கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் இணைப்பு கொடுத்துள்ளார். தனது சகோதரரின் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கிலேயே மாறன் இவ்வாறு செய்துள்ளார். இந்தத் தகவல்கள் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படவில்லையா அல்லது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?
மாறன் வீட்டில், அவரது பெயரில் இல்லாமல் சென்னை தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளர் பெயரில் இணைப்பகம் நிறுவப்பட்டுள்ளது. இது ஏன் என்கிற கேள்வியை நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் எழுப்பவில்லையா அல்லது அது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?
தனது மோசடி செயலுக்கு மாறன், பி.எஸ்.என்.எல். தலைமை அதிகாரியை முகமூடியாகப் பயன்படுத்தியுள்ளார். இதை யாரும் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இது உண்மையான மற்றும் மோசடியான நோக்கத்தை மறைக்கும் நடவடிக்கை என்று அட்டார்னி ஜெனரல் கேள்வி எழுப்பவில்லையா அல்லது அது நீதிமன்றத்தின் கவனத்தைக் கவரவில்லையா?
இதுபோன்ற கேள்விகளை அட்டார்னி ஜெனரல் இதுவரை நீதிமன்றத்தில் எழுப்பவில்லை என்றால் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போதாவது "கனம் நீதிபதி அவர்களே, இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? அல்லது இது திட்டமிட்ட சதி மற்றும் மோசடி வேலை இல்லையா?' என்று கேள்வி எழுப்ப வேண்டும்.
முறைகேடாகப் பெற்ற 764 இணைப்புகளின் பயன்பாட்டை அளவிட முடியாமல், கண்காணிக்க முடியாத வகையில் இது அலுவலகப் பயன்பாட்டுக்கு என முத்திரை குத்தப்பட்டது என்பதையும் அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கூற வேண்டும். நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும்.
2007-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. எழுதிய கடிதத்தில் ஓர் இணைப்பில் ஒரு மாதத்தில் 48 லட்சம் யூனிட் அழைப்புகள் பேசப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு 764 இணைப்புகளுக்கு 40 மாதக் கட்டணம் கணக்கிட்டால் அது பல நூறு கோடியாக ரூபாயாக உருவெடுக்கும். 764 இணைப்புகளின் செயல்பாடு கணக்கில் காட்டப்படாமல் மூடிமறைக்கப்பட்டுள்ளதை அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் சொல்லியிருக்க வேண்டாமா?
சி.பி.ஐ.யின் பிரமாணப் பத்திரத்தில் அனைத்து அடிப்படை உண்மைகள் இடம் பெற்றிருக்கும், அட்டார்னி ஜெனரலும் இது தொடர்பான கேள்விகளைக் கேட்பார் என்று நம்புவோமாக.
இந்த வழக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஏன் கருதக் கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இத்தனை நாள்களாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தனது தோழமைக் கட்சி என்பதால் அரசியல் பாதுகாப்பு நடவடிக்கையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கைக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது என்று அதை நீதிமன்றம் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை?
மாறனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததால் தனது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்தது என்ற உண்மையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. ஏன் தெளிவுபடுத்தவில்லை?
தயாநிதி மாறன் 2004-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் சட்ட விரோதமாக 764 இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்பகம் நிறுவப்பட்டது.
அதாவது 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 341 இணைப்புகளும் 2007 ஜனவரியில் 323 இணைப்புகளும் சட்ட விரோதமாகப் பெறப்பட்டுள்ளன. தனது தாத்தாவும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாறன் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். உடனே சி.பி.ஐ. ஆரம்ப கட்ட விசாரணைக்குத் தயாரானது.
புலன் விசாரணை நடத்த தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் சி.பி.ஐ. 2007-இல் அனுமதி கேட்டது. ஆனால், 2008-இல் கருணாநிதியுடன் மாறன் சமாதானமாகப் போனதை அடுத்து விசாரணை மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இதுவல்லவா உண்மை?
பின்னர், 2011-ஆம் ஆண்டில் "தினமணி' நாளிதழ் இந்த மோசடியை அம்பலப்படுத்தியது. 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இது தொடர்பாக ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நிர்பந்தம் காரணமாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் பதவியேற்ற பின்னர்தான் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வேறு சிலர் கைது செய்யப்பட்ட போதிலும், கீழமை நீதிமன்றங்களில் இருந்த செல்வாக்கு காரணமாக மாறனைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை.
764 அதிநவீன இணைப்புகளை அவர் பெற்றது எப்படி, அதை எப்படி அவர் சன் தொலைக்காட்சிக்குத் தொடர்புபடுத்தினார், அதன் மூலம் அவர் எப்படி பயனடைந்தார், தனது அமைச்சக அலுவலகத்தை மாறன் சன் தொலைக்காட்சி அலுவலக வளாகத்திலேயே நடத்தினாரா அல்லது சன் தொலைக்காட்சி தனது நிகழ்ச்சிகளை இலவசமாக அப்-லிங்க் செய்ய உதவினாரா, திமுக தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் அந்த இணைப்பை இலவசமாக பயன்படுத்திக் கொண்டார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு மாறனைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான் விடை கிடைக்கும் என சி.பி.ஐ. கருதுகிறது.
தனது வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சி குழும அலுவலகத்துக்கு எதற்காக மாறன் இணைப்பு கொடுத்தார், அங்கிருந்தால்தான் அவரால் செயல்பட்டிருக்க முடியுமா, ஏன் வீட்டில் இருந்தவாறே அவரால் செயல்பட்டிருக்க முடியாதா?
வீட்டில் இருந்தபடி செயல்பட்டிருந்தால் அவருக்கு ஓர் இணைப்பே போதுமானதாக இருந்திருக்கும். பேராசைக்காரராக இருந்தால்கூட இரண்டு இணைப்புகள் போதுமானவை. 764 இணைப்புகள் எதற்கு என்ற கேள்விகளை அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் எழுப்ப வேண்டும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குழிதோண்டி புதைக்க முற்பட்ட ஒரு வழக்கை இப்போதைய அரசு புலன் விசாரணை நடத்த முற்படுவது எந்த வகையில் அரசியல் பழிவாங்கும் செயலாகும் என்றும் சி.பி.ஐ. கேள்வி எழுப்ப வேண்டும். முறைகேடாக, சட்ட விரோதமாக, கள்ளத்தனமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தை வைத்திருப்பது தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஆகாதா?
மாறன் அமைச்சராவதற்கு முன்னரே, மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலாளர் தலைமையில் 2003 ஏப்ரல் 26-இல் நடைபெற்ற கூட்டத்தில் சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு அல்லது இணைப்பகம் இருப்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காதா என்பது பற்றி விரிவாக பேசப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உளவுத் துறையினரும், செல்லிடப்பேசி நிறுவனத்தினரும் பங்கேற்றனர். "சட்ட விரோதமாக, மறைமுகமாக தொலைபேசி இணைப்பு இருந்தாலோ அல்லது இணைப்பகம் செயல்பட்டாலோ அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும்.
இதைத் தடுக்க எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்று தொலைபேசி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2010-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி வெளியிட்ட தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மாறன் தாராள மனதுடன் ரூ.1.2 கோடியைச் செலுத்தி வழக்கை முடித்துக் கொள்ள தயார் என்று சொல்லும் அளவுக்கு இது ஒன்றும் சாதாரண வழக்கு அல்ல. தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கு என்ற கோணத்தில் இதை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும்.
துரதிருஷ்டவசமாக அட்டார்னி ஜெனரல் இதுபோன்ற கேள்விகளை முன்வைக்க முடியாது. ஏனெனில், வேறு ஒரு வழக்கில் அவர் மாறனுக்கு ஆதரவான கருத்தைச் சொல்லியிருக்கிறார். வழக்கின் முக்கிய அம்சங்களை அவரிடம் எடுத்துச் சொன்னால்தானே அவரால் நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியும்.
இனியாவது, அவர் முக்கியக் கேள்விகளை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பாரா? கடவுளுக்குத்தான் தெரியும். இதை அவர் எடுத்துரைக்கவில்லை எனில், முக்கியமான இந்த விவரங்கள் குறித்து நீதிமன்றத்துக்குத் தெரியாமலே போய்விடும்.
எதிர்தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல், நீதிபதி ஒரு கருத்தைச் கூறுவாரேயானால் சட்டத்தில் அதற்கு மதிப்பு இருக்காது. இதைப் புரிந்து கொள்ளாத ஊடகங்கள் ஏதோ மாறன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதுபோல் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
விவேகமும், முன்யோசனையும் அறிவாற்றலும் உள்ள நீதிபதிகள் அவசரப்பட்டு எந்தக் கருத்தையும் முன்வைக்க மாட்டார்கள்.
ஊழல் வழக்கில் தவறு செய்தவர் யார் என்பதுதான் முக்கியம். தவறு செய்பவர் உயர் பொறுப்பில் இருந்தால் நீதித் துறை கடுமையாகச் செயல்பட வேண்டும். ஆனால், நீதித் துறை இதற்கு மாறாகச் செயல்படுகிறது.
வெறும் ரூ.265 லஞ்சம் பெற்றவருக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. செல்வாக்குள்ளவர்களுக்கு அனுசரணையாகச் செயல்படுகிறது.
மாறனுக்கு வேண்டுமானால் ரூ.1.2 கோடி பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேசத்துக்கு அது பெரிய தொகை. அமைச்சர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தால், அவர் தவறு செய்ததாக நிரூபணமானால் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் இது குற்றம் அவ்வளவுதான்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துப் பதவி வகித்த அமைச்சர் விஷயத்தில் அப்படியல்ல. ÷
சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே தவறு செய்தால், தண்டனையை இன்னும் கடுமையாக்குவதுதான் அரசியலமைப்புச் சட்டப்படி நீதிபதியின் கடமையாகும்.
கலியுகத்தில் யாருக்கு அதிக செல்வாக்கு என்பதைப் பொருத்துதான் நீதி அமைவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. கலியுகத்தின் ஆயுள் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளாகும்.
நல்லவேளையாக, இப்போதுதான் 5,116 ஆண்டுகள் முடிந்துள்ளன. கலி முற்றுவதற்கு நீண்ட காலம் உள்ளதால், மாறன் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் தப்பிவிடமாட்டார்கள் என நம்பலாம்.
கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குழிதோண்டி புதைக்க முற்பட்ட ஒரு வழக்கை இப்போதைய அரசு புலன் விசாரணை நடத்த முற்படுவது எந்த வகையில் அரசியல் பழிவாங்கும் செயலாகும் என்றும் சி.பி.ஐ. கேள்வி எழுப்ப வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.