நமது நாட்டின் பண்டிகைகள் அலாதியானவை. பல்வேறு பிராந்தியங்களின் வண்ணங்களைப் பிரதிபலிப்பவையாக அவை விளங்குகின்றன. ஆயினும், தேசத்தை இணைக்கும் பசையாக சில பண்டிகைகள் மட்டுமே அமைகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ரக்ஷாபந்தன் திருநாள்.
ஆவணி மாத பெüர்ணமியில் பெண்கள் தங்கள் சகோதரர்களின் வலது மணிக்கட்டில் "ராக்கி' எனப்படும் பட்டு மணிக்கயிற்றை அணிவித்து, அவர்களிடம் பரிசு பெறும் நாள் ரக்ஷாபந்தன் நன்னாள். தமிழகத்திலும் இதேபோன்ற வழக்கம், பெüர்ணமியை ஒட்டி வரும் ஆவணி அவிட்ட நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாறு தான் நமது பாரத தேசியம் மலர்ந்தது. நம் மண்ணில் கண்ணுக்குத் தெரியாமல் ஆழ ஓடிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் இணைந்தே இந்தத் தேசத்தைக் கட்டியமைத்தன.
அதற்கு வெளிப்புறத்தில் நாம் கொடுத்த கட்டுக்கோப்பான வடிவம்தான் இந்திய அரசியல் சாசனம். கண்ணுக்குப் புலப்படாத மின்சாரம்போல இந்த நாட்டை ஒருங்கிணைத்திருப்பதும், நம்மை இந்தியர்களாக உணரச் செய்வதும் இந்தப் பண்பாட்டு விழுமியங்களே.
நம்மைச் சூழ்ந்திருக்கும் அதிவேக இயந்திர உலகில் இதை நினைவுபடுத்த மகாத்மா காந்தி, லோகமான்ய திலகர் போன்ற மகான்கள் இப்போதில்லை. அதன் விளைவையே ஆங்காங்கே தென்படும் உக்கிரமான மோதல்களாகக் காண்கிறோம்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக வித்திட்டது பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கரின் உயிர்த் தியாகம்தான். 27 நாள்கள் தொடர்ந்த அவரது உண்ணாவிரதம் அவரது உயிரைப் பறித்தது; அதே
சமயம், புதிய ஆந்திரமும் மொழிவாரி மாநிலங்களும் உருவாக வழிவகுத்தது.
எந்த மொழிக்காக ஸ்ரீராமுலு தன்னுயிர் ஈந்தாரோ அதே தெலுங்கு பேசும் மக்கள், தங்கள் சகோதரத்துவத்தை மறந்து, ஆந்திரப் பிரதேசம் - தெலங்கானா என்ற இரு மாநிலங்களாகப் பிரிந்து சச்சரவிட்டுக் கொள்கிறார்கள். இதற்கு வழிவகுத்தது அரசியல் தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த நாடு, முழுவதும் புனிதத் தீர்த்தங்களால் நிறைந்தது. தினசரி நீராடலின்போது, கங்கை முதல் காவிரி வரை தியானிப்பது மரபாகவே இருக்கிறது.
நாடு முழுவதிலும் உள்ள நதிகள் அனைத்தும் புனிதம் என்ற சிந்தனையுடன், அவை அனைவருக்கும் பொது என்ற எண்ணமும் செழித்திருந்த காலமுண்டு. அதை மன்னர்கள் மறந்தபோது, இந்த மண்ணில் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரலாற்றையும் நாம் மறந்துவிட்டோம்.
அதனால்தான், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நீருக்கு கர்நாடகத்திடமும், முல்லைப் பெரியாறு நீருக்கு கேரளத்திடமும் தமிழகம் மல்லுக் கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அண்டை மாநிலத்தவரும் நம்மைப் போன்ற மக்கள் தான் என்ற சகோதரத்துவ மனப்பான்மை மங்கி யதன் விளைவல்லவா இது?
இந்த உலகில் வாழும் எவருமே தன்னிச்சையாக இயங்க முடியாது. பலதரப்பட்டவர்களின் இயக்கத்தால் தான் இந்த உலகம் வாழ்கிறது. எனவேதான், சமுதாயம் சீராக இயங்க நமது முன்னோர் சில ஏற்பாடுகளைச் செய்துவைத்தனர்.
தொழில்ரீதியான இந்தப் வகைப்பாடுகள் காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் ஜாதியாக மாற்றம் பெற்றபோதும்கூட, ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் வன்மங்களில் ஈடுபட்டதில்லை. ஆனால் இன்றைய நிலை என்ன?
நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், மேலவளவு, நாயக்கன்கொட்டாய், உத்தப்புரம், சேஷசமுத்திரம் என தீண்டாமையின் கொடுமைகளுக்குச் சாட்சியாகும் பெயர்கள் நீள்கின்றனவே, இதுவா நமது தலைவர்கள் கனவு கண்ட சமுதாய ஒற்றுமை?
அம்பேத்கர் சிலைகளுக்கும் முத்துராலிங்கத் தேவர் சிலைகளுக்கும் கம்பித் தடுப்புகளால் கவசப் பாதுகாப்பு செய்ய வேண்டிய நிலையில் தான் நமது ஒற்றுமை இருக்கிறது என்பது, மகத்தான கனவுகளைக் கண்ட நமது முன்னோருக்கு இழைக்கப்படும் அவமானமல்லவா?
"வசுதைவ குடும்பகம்' என்பது நமது உபநிடத மகாவாக்கியம். இதையே கணியன் பூங்குன்றனார் தமிழில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முழங்கினார். உலகம் ஒரு குடும்பம்; மக்கள் அனைவரும் உறவினர்கள் என்ற இந்த உயரிய பண்பாட்டை மறந்ததால் அல்லவா, மதத்தின் பெயரால் நாட்டில் ஆங்காங்கே ரத்தம் சிந்தப்படுகிறது? இங்கு சிந்தப்படும் ஒவ்வொரு துளி செந்நீருக்கும் கண்ணீருக்கும் விலையாக, நாட்டின் ஒற்றுமை பலிகடா ஆக்கப்படுவது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா?
கட்டிய மனைவியைத் தவிர பிற பெண்களெல்லாம் அன்னையரே; ஸ்ரீராமனே ஆண்களின் முன்மாதிரி வடிவம் என்று வாழ்ந்த நமது கலாசாரம் எங்கு போனது? ஆண் - பெண் என்ற இரு பாலின சமநிலையில் தான் உலகம் இயங்குகிறது என்பதை மறந்து, பெண்களை காமத்துடன் நோக்கும் கயமை எப்போது நம்மிடையே பரவியது?
இந்தக் கேள்விகள், பதில் கூற முடியாத கேள்விகளல்ல. இவற்றுக்கான விடைகளை நாம் அறிந்தே இருக்கிறோம். தெரிந்தோ, தெரியாமலோ, நம் ஆழத்தில் இயங்கும் பண்பாட்டு ஊற்று இப்போதும் நம்மை சில நேரங்களிலேனும் சிந்திக்கச் செய்கிறது.
நம்மைப் பிளவுபடுத்தும் கோடரிகளைவிட நம்மை இணைக்கும் வேர்கள், ஆழமானவை; வலிமையானவை. அவை நம் கண்களுக்குத் தெரியாததால், நாம் அடிக்கடி திக்கின்றித் திகைக்கிறோம். இத்தகைய சூழல்களுக்கு கலங்கரை விளக்கமாக நமது முன்னோர் உருவாக்கிச் சென்ற பண்டிகைதான் ரக்ஷாபந்தன் விழா.
"இந்தியா எனது தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறப்புகள்" என்று உதட்டளவில் உச்சரிப்பது மட்டுமல்லாது உளப்பூர்வமாக உணர்த்துவதே ரக்ஷாபந்தனின் சிறப்பு.
கண்ணனின் மணிக்கரத்தில் பாஞ்சாலி அணிவித்த ரக்ஷையின் தொடர்ச்சி இது. ரஜபுதன வீரர்களும், மாவீரன் சிவாஜியும், மாமன்னன் ராஜராஜ சோழனும் கங்கணமாக அணிந்த மங்கலக் கயிறு இது.
இந்த நாளில், நமது சகோதர பந்தத்தை உறுதிப்படுத்த ராக்கியைப் பயன்படுத்துவோம். சகோதர - சகோதரி பாவனையை வளர்க்க உதவும் இந்த ரக்ஷை, நமது சகோதரத்துவத்தையும் மேம்படுத்தட்டும்.
நாம் ஒருவருக்கொருவர் அணிவிக்கும் ராக்கி நமது பந்தத்தை பலப்படுத்தும்; கூடவே நாட்டின் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும்.
இன்று ரக்ஷாபந்தன் தினம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

