பாரதி-அறுபத்தாறு பாடல்களில், ""புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம், சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம், ஸநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம், நாமமுயர் சீனத்துத் "தாவு' மார்க்கம், நல்ல "கன்பூசி' மத முதலாப் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல உளவாம்'' என்று "ஸர்வ மத ஸமரஸம்' பாடினான்.
இதைத்தான் இன்றைக்கு "மதச் சார்பின்மை' என்று அரசியல் சிந்தனையாளர்கள் கையாளுகிறார்கள். ஏதாயினும், "செக்குலரிசம்' என்ற கலைச் சொல்லினை ஆங்கிலத்தில் 1851-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்கே (1817-1906) என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர். "சாம்பர்ஸ் அகராதி' இதற்குத் தரும் பொருள்: ""ஒரு சமுதாயத்தின் விழுமியங்களும் செந்தரங்களும் மதத்தினாலோ அல்லது (கிறித்தவ) தேவாலயத்தினாலோ பாதிக்கப்படவோ, கட்டுப்படுத்தப்படவோ கூடாது''.
கிரேக்க மொழியில் "செ' என்றால் இன்மை. "குல' என்றால் "குலம்'தான்.
குலமின்மைதான் செக்குலரிசம். "கிர்' என்ற சொல் காட்டினைக் குறிக்கும்.
காடுகளில் மிருக வேட்டைத் தொழிலை விட்டு "கிர்' அல்லாத நிலப்பரப்பில் "அகர' (பயிர்) வாழ்வு தொடங்கினான் மனிதன். அ-கிர்-குல-ஆச்சாரம் தானே ஆங்கிலத்திலும் "அக்ரிகல்ச்சர்' (வேளாண்மை) ஆனது.
அந்தக் காலத்தில் பிராமணர்கள்தான் விவசாயம் செய்தனர். அதனாலேயே இன்றும் பசு அவர்களுக்குப் பிரதான வழிபாட்டுப் படிமம். வேளாண்மை செய்வோர் நிலை இன்று தலைகீழாக மாறி இருக்கிறது. தொழில் மட்டுமல்ல கலைகளும்தான். அன்றைய பரத்(û)த நடனம் மேட்டுக்குடி மக்களுக்கு விருந்தளித்தது. இன்றோ பரத நாட்டியமாகி உயர்குலத்தோர்தம் கலையாகி உள்ளது. "மாறிக் கொண்டிருப்பது மாறா இயற்கை' என்று உலோகாயதச் சித்தர் பாடுகிறார்.
கலாசாரமும், வாழ்வியலும், சிந்தனையும், கலைச்சொற்களுமே காலந்தோறும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. "ஸ்மார்ட் ஃபோன்' என்பதை "சமர்த்துப் பேசி' என்று மொழிபெயர்த்தேன். "சமர்த்து' வடமொழி என்றார் ஓர் அறிஞர். எந்த "வட'மொழி என்று கேட்டேன். பாலியா, பிராகிருதமா, மாகதியா?
பிரிக்கப்படாத பண்டைய இந்திய நிலப்பரப்பில் வங்க தேசம், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தானத்தின் கிழக்குப் பகுதிகள் போன்றவை அடங்கும். பாலை மணல் வழி வந்தவர்கள் தங்களை "அய்ர' என்றே சொல்லிக் கொண்டனர். ஆதி ஈரானிய மொழியிலும், வடமொழியிலும் இதற்கு "மணல்' என்றே பொருள். ""திரையிடு மணலினும் பலரே'' என்கிறது மதுரைக் காஞ்சி.
"ஆயிரம்' பன்மையைக் குறிப்பது. ஈரான் என்று ஆங்கிலத்தில் உச்சரித்தால் இறுதி எழுத்து அமைதியாகிறது. "ஐ-ஆர்-ஏ', "அய்ர' என்றே ஒலிக்கிறது. ஐ, ஐய, ஐயர், அய்யன் என்றால் தலைமை. இன்னொரு வகையில் "ஆயிர' (வைசியர்) - "ஆரிய' (வைசியர்) தானே. ஆரிய அரசர் பிரகத்தனுக்கு தமிழ் போதிக்கவே கபிலர் குறிஞ்சிப் பாட்டு பாடினாராம். வடகிழக்குப் பகுதியில் இருந்து குடியேறிய பழஞ்சீன இனத்தவரையும் "ஆரியர்' என்றே சங்கப் பாடல்கள் குறிக்கின்றன.
பொதுவாக, பழஞ்சீன முனிவர்கள், ஆதிஈரானிய (ஆரிய)க் கற்பிதங்களை எதிர்ப்பர். ""சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன்'' என்கிறார் அகத்தியர். (ஞானப்பாடல்கள் - "ஞானம்' வரி 5). ""சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கி, சூத்திரத்தைக் கண்டுதுயர் அறுப்பது எக்காலம்?'' என்பார் பத்திரகிரியார் (மெஞ்ஞானப் புலம்பல் - 155).
""நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சார்த்தியே, சுற்றி வந்து முணு முணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?'' என்பார் சிவ வாக்கியர்.
புத்தம், "பூதம்' ஆகியன பெüதிகப் பொருள் சார்ந்தது. போதி க்ஷ-ர்-க்-ஹ் ஆன உடல், பொருள்தானே? சித்தர்கள் "சிதை'யில் எரிக்கப்பட்டவர்கள். புத்தர்கள் "புதை'யில் பாதுகாக்கப்பட்டவர்கள்.
இந்தியாவில் எப்போதுமே சமகால இருவேறு கலாசார நீரோட்டங்கள் ஒழுகும். ஆதிஈரானிய மரபினர் "ரிஷி' என்றும், பழஞ்சீன மரபினர் "முனி' என்றும் குறிக்கப்பெறுவர்.
உரோமரிஷி எனப்படுபவரும் ஒரு சித்தர். இவர் ரோம் நாட்டிலிருந்து வந்தவராகக் கருதப்படுகிறார். பிறப்பினால் முகம்மதியரான யாக்கோபு பின்னாளில் இராமதேவ ரிஷி என்று அறியப்படுகிறார். வடமொழியில் மண்டூக ரிஷி, தேரையர் ஆனார். பாலி மொழியில் தேரன்
(சேரன்?) என்பது பெüத்தத் துறவிகளைக் குறிக்கும். ஆதலால், இவர் பெüத்த முனி என்றும் வழங்கப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், வடநூல் அனைத்தும் அறிந்தவர்.
தமிழில் பதினெண் சித்தர்கள் பட்டியலிலும் பல வேறுபாடுகள் உள்ளன. என்றாலும் அகத்திய முனி (தட்சிணா மூர்த்தி) தொடங்கி, திருமூலர், மச்சமுனி, கோரக்கர், பாம்பாட்டிச் சித்தர் (கோசாயி மரபினர்) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். நீலகண்ட மாமுனிவர், சமதக்கினி குமாரனான திரணாக்கிய (தேரன்? ஆகிய) முனிவருக்கு உபதேசித்தது "யூகிமுனி சிகிச்சாச்சாரம்' எனும் வைத்திய நூல். போகர், அவருடன் வந்த புலிப்பாணி, போகரின் புதல்வர் கொங்கணர், சிவ வாக்கியர் ("சென்' பெüத்தர்) போன்ற முனிவர்கள் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
சித்த மருத்துவம் தென்னிந்தியாவில் பிரபலம். அய்ர வேதம் (ஆயிர்வேதம், ஆயுர்வேதம்) வட இந்தியாவிலும் பிரபலம் அடைந்தன. முன்னது, சைவ சம்பிரதாயம் (அல்லது சீன? முனிவர்கள் முறை) என்றும் பின்னது ஆர்ஷ (ஆர்ய) சம்பிரதாயம் (ரிஷிகளின் முறை) என்றும் குறிக்கப் பெறும்.
புத்தர் உபதேசங்கள் சம்ஸ்கிருத மொழியில் இல்லை. அவை பெரும்பாலும் அன்றைய மகத நாட்டு மக்கள் வழக்காகிய பிராகிருத ("பறைக் கிராதர்') மொழியிலேயே அமைந்திருந்தன. அதிலும் வட்டார மொழிச் சுளிவுகள் தோன்றி மாகதி, மகராஷ்டிரீ, பைசாசி போன்ற பிரிவுகள் ஏற்பட்டன. அவற்றைச் செம்மைப்படுத்திய ஆரியப் பண்டிதர்களால் "ஒருங்கிணைந்த' (சமஸ்) கிராத மொழியாக - "சம்ஸ்கிருத' வடமொழி உருவாயிற்று.
"சம்-யுனிசம்' ஆங்கிலத்தில் "கம்'யூனிசம் என்றே சொல் ஒலித்தது. "சம்கிரஹ' - "காங்கிஹ' ஆனது. ஆதி ஈரானிய ஒலிப்பில் ஸிந்து-ஹிந்து, ஸிந்தி-ஹிந்தி, ùஸமி (பாதி) - ஹெமி (அரை), சமணம்-அமணம், சமயம்-அமயம் போல, காங்கிஹ- "காங்கிரஸ்' என்றே எழுத நேரும்.
மகதத்தில் வழங்கிய "மாகதி' மொழி - "பாட்லிபுத்ர' நகரின் பேரால் மருவி "பாலி புத்த' எனச் சுருங்கி "பாலி' என்றாயிற்று. பாலியில் சொல்லப்பட்ட புத்த மதச் சிந்தனைகளை சம்ஸ்கிருத மொழியில் பரப்பக்கூடாது என்பது அசோகரின் கட்டளை. ஆக, பாலி மொழிச் சிந்தனைகளைச் சுமந்து தெற்கே வந்த திராவிட மொழியில் பல பாலி ஒலிச் சொற்கள் புகுந்தன. சிந்துவெளிக் குறியீடுகளில் இருந்து வட பிராமி, தமிழ்பிராமி என்று வரிவடிவங்கள் அடிப்படையிலேயே மொழியின் தொன்மையை விவாதித்து வருகிறோம்?
ஏதாயினும், புத்தக் கருத்துகளுடன் கிழக்கே சென்ற "கணக்கர்' (அன்றைய தமிழில் "புரப்புநர்') "பெங்களா' (வங்காள) பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலை வழி குஜராத் தொடங்கி, தெற்கே "பெங்களூர்', (கோயன்) புத்தூர், போத்தமடை, போத்தனூர், புத்தூர், போத்தனஹள்ளி தொடங்கி திரு"புத்தங்'கோடு ஆகிய திருவிதாங்கோடு (திருவாங்கூர்) எனும் நாஞ்சில் நாடு வரை பரவினர். தென்னிலங்கையிலும் புத்தக் கருத்துகளையும், சமணக் கருத்துகளையும் தமிழ் வாரி அணைத்துக் கொண்டது.
அதனாலேயே இன்றைக்கும் கிழக்கின் வங்காள மக்களும், தெற்கின் கேரள மக்களும் கல்வியறிவு, எழுத்தறிவு, மீன் உணவு, பொதுவுடைமைச் சித்தாந்தம் போன்ற பல தளங்களில் ஒத்த நிலையில் உள்ளனர்.
இங்கு பெüத்த வசனங்களையும், திரிபிடங்களையும் சுட்டுதற்கு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோசர் எனும் அந்தணர் கையாண்டது இந்தப் பாலி மொழியே. அவருக்கு முன்னம் இலங்கை சென்று புத்த பகவானின் சாசனங்களை மாகத (பாலி) மொழியில் பெயர்த்தவர் புத்த தத்தர். "புத்த கோஸ் உப்பத்தி' (புத்த கோஷரின் உற்பத்தி) எனும் நூலில் இவ்விருவர் எனும் நூலில் சந்திப்பு பற்றிய உரையாடல் உள்ளது.
""ஆயுஷ்மான் புத்த கோஸ! அளம் தயா புட்பே (நான் உனக்கு முன்பே) லங்குக தீபே (இலங்கைத் தீவிற்கு) பகவதோ ஸாது சாஸனம் காதும் அசுதோம் ஹதி (பகவானின் சாசனங்களை மொழிபெயர்க்க வந்துள்ளேன்). அகம் அப்பாயுகோ (எனக்கு அற்ப ஆயுசு, வயதாகிவிட்டது). தவம் யேக கரோஹுகி (நீயே சரியாகச் செய்ய வேண்டும்.)'' புத்த தத்தரின் இந்தக் கூற்று ஏறத்தாழ சம்ஸ்கிருதம் மாதிரி ஒலித்தாலும், பாலிச் சொற்கள்.
பாலியின் தம்மம், சம்ஸ்கிருதத்தில் "தர்மம்'. கூர்ந்து கவனித்தால் "ர' சேர்த்த (வட) சொற்களைத் தமிழாக்குவதற்கு அந்த "ர்' தவிர்த்து வழங்குகிறோம். இருதயம் (இதயம்), அமிர்தம் (அமுதம்), மதுர (மது), மர்ய (மாயா), சொர்ணா-சோனா, கர்ணன் (கன்னன்), அருணன் (அண்ணன்), மாத்ர் (மாதா), பித்ரு (பிதா) போல திருப்பாதப் புலியூரும் திருப்பாதிரிப் புலியூரும் ஒன்று அல்லவா? மலையாளத்திலும் சிரேட்டன் - சேட்டன் (அண்ணன்), யாத்ரா (ஜாத்ரா) - ஜாதா (ஊர்வலம்) ஆகிறது. ஆங்கிலத்திலும் கூட, "செர்வ்' (ஊழியம் செ), தமிழில் "சேவை'.
"புத்த' என்றால் "புத்ர' (மகன்). புறநானூற்றில் மட்டும் 217, 220, 221, 222, 223 ஆகிய பாடல்களின் அடிக்குறிப்புகளில் "பொத்தி' என்ற சொல் வருகிறது. வடக்கிருந்த கோப்பெருஞ்சோழனிடம் வந்த பிசிராந்தையாரைக் கண்டு பாடிய புலவர், பொத்தியார். பொ(த்)திகை மலை, புலவன் அகத்தியன் வாழ்ந்த மலை அல்லவா? "த்ரமிள' - தமிழ் அன்றோ? அந்த வகையில் வச்சிர நந்தி முனிவர் சமணர் நிறுவிய "திரமிள சங்கம்' தானோ தமிழ்ச் சங்கம்?
"அன்றைய பரத்(û)த நடனம் மேட்டுக்குடி மக்களுக்கு விருந்தளித்தது. இன்றோ பரத நாட்டியமாகி உயர்குலத்தோர்தம் கலையாகி உள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.