வெள்ளத்தைத் தடுப்பதற்கு எத்தனையோ வழிகள்...

தமிழகத்தில் நவம்பர் இறுதியில், டிசம்பர் முதல் வாரத்தில் கனமழை பெய்தது. இம்மழை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள
Updated on
3 min read

தமிழகத்தில் நவம்பர் இறுதியில், டிசம்பர் முதல் வாரத்தில் கனமழை பெய்தது. இம்மழை சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. பொருள் இழந்தோர், சேமித்த தொகை இழந்தோர், கல்லூரி, பள்ளிச் சான்றிதழ் தொலைத்தோர் என்று பட்டியல் நீள்கிறது.
 இப்படி ஒரு மழையா என்ற கேள்வியோடு நவம்பர் முதல் வாரத்தில் காய்ந்து கிடந்த செம்பரம்பாக்கம் ஏரி திடீரென்று பெய்த பெரும் மழையால் நிரம்பி திறந்துவிடப்பட்டு, ஓடி வந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைப் பற்றி அரசியல் கட்சிகள் விமர்சனங்களை வைத்துக்கொண்டிருக்கின்றன.
 சென்னைக்கு மழை புதிதா என்றால் கடந்த கால நிகழ்வுகளை திரும்பிப் பார்த்தால் இல்லை என்ற பதில் வரும். 1943-இல், 6 நாள் பெய்த பெரும் மழையால் சென்னை மூழ்கியது. ஊருக்குள் வெள்ளம் படையெடுத்த வருடங்கள் 2005, 2010, 2013.
 சென்னை ஒரு தாழ்வான பிரதேசம் என்பதும், பல இடங்கள் சமமான பூமி என்பதும், கடல் மட்டத்திலிருந்து சில பகுதிகள் சமமாகவும், சில பகுதிகள் 6.7 மீட்டர் அளவே உயர்ந்து இருக்கிறது என்பதையும், சென்னையின் அமைப்பையும், நீர் மேலாண்மைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலைப்பாடு. சென்னையின் நீர் வழித்தடம் 1860-இல் திட்டமிடப்பட்டு 1891-இல் தொடங்கப்பட்டது. 1960-இல் அது மேம்படுத்தப்பட்டது.
 பெருகி வருகிற மக்கள் தொகைக்கு ஏற்ப நீர் வெளியேற்றும் கால்வாய்களும், கழிவுநீர் வெளியேற்றும் திட்டங்களும் போதுமளவு இல்லாத காரணத்தினால், பல பிரச்னைகளை நாம் எதிர்கொள்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கில், 2,841 கி.மீ. உள்ள நகரச் சாலைகளில், 855 கி.மீ. வெள்ளநீர் வடிகால் கால்வாய்கள்தான் உள்ளன என்பது வேதனைக்குரியது. இன்றைக்கு 50 புதிய வார்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
 சென்னை நகரத்தில் 650 நீர்த் தேக்கங்கள், பெரிய ஏரிகள், குளங்கள், அழிக்கப்பட்டு தற்சமயம் 27தான் இருக்கிறது என்பது தேசிய பேரிடர் மையத்தின் கணக்காக இருக்கிறது. இதில் 19 பெரிய ஏரிகளின் சுற்றளவு 1,930 ஹெக்டேரிலிருந்து 640 ஹெக்டேராக குறைந்திருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் தகவல்.
 வெள்ளப் பெருக்கைத் தடுக்க வேண்டுமென்பதற்காக, 2009-இல் சோழிங்கநல்லூர் பக்கத்திலுள்ள ஒக்கியம் மடுவாங்கரை தெற்கு பக்கிங்காம் கால்வாய், ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக 1.7 கி.மீ. அளவில் கடலில் கலக்கின்ற புதிய கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. வேளச்சேரியில் உபரி நீரின் வடிகாலுக்கான 8 கி.மீட்டரில் கட்டப்படவேண்டிய சுவர் 627 மீட்டர் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது என்பது நாம் சந்திக்கிற வேதனை ஆகும். ஆக்கிரமிப்பாளரை அகற்ற முடியாமல் மத்திய பக்கிங்காம் கால்வாய் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.
 விருகம்பாக்கம், அரும்பாக்கம் பகுதிகள் வெள்ளக்காடாவதைத் தடுக்க மதுரவாயல் ஏரியிலிருந்து கூவம் நதிக்கு நீரை திருப்பி விட போட்ட திட்டம் நடைபெறவில்லை. தேங்கிய நீரை வெளியேற்றுவதற்காக சென்னை நகரத்தில் வடிகால் அமைப்பதற்கு 2010-இல் ஜவாஹர்லால் நேரு நகர மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து கொடுக்கப்பட்ட ரூ. 633.3 கோடியில் வெறும் ரூ.394 கோடிதான் செலவிடப்பட்டிருக்கிறது என்று புள்ளி விவரம் சொல்கிறது.
 தண்ணீரைத் தேக்காமல் வடிகட்டுகின்ற சென்னையின் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 5,000 ஹெக்டேரிலிருந்து 500 ஹெக்டேராக குறைந்துவிட்டது எப்படி? பேராசை மனிதர்கள் இயற்கை வளத்தைச் சூறையாடுகிறார்கள், ஆக்கிரமிக்கிறார்கள், பணம் சேர்க்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
 இவையெல்லாம் போதாதென்று நதி ஓரங்களில் ஆக்கிரமிப்பு, நீர் நிலைகளில் வீடுகள், இன்னும் வேதனையான நிலை என்னவென்றால், நீர்ப்பிடிப்பு ஏரிகளில் அரசுக் கட்டடங்கள், குடிசை மாற்று வாரிய மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும், கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று உத்தரவுப் போடுகிற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உலகநேரி ஏரிக்குள்.
 செங்குளம் குளத்துக்குள் தான் மதுரையின் மாவட்ட நீதிமன்றம். கோவையில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையம் ஏரிக்குள். மதுரை அனுப்பாநடி கண்மாய் அனுப்பாநடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பாக உருவாகியிருக்கிறது. சொக்கிக்குளம் கண்மாயிலிருந்து தான் நம்முடைய அகில இந்திய வானொலி தன்னுடைய ஒலிபரப்பை நிகழ்த்துகிறது. மத்திய அரசு கட்டடங்களும் இக்குளத்தில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. சங்கம் வளர்த்த தமிழுக்கு தல்லாகுளம் கண்மாயில் புதிய கட்டடம் கட்ட துவங்கப்பட்டிருக்கிறது.
 வில்லாபுரம் கண்மாய், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குடியிருக்க, வேறு வழியின்றி நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். ஆனால், மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளர்கள் அரசு தான்.
 ஒரு காரியத்தை முடிவுக்குக் கொண்டு வராமல் பிரச்னைகளைத் தள்ளிப்போட வேண்டுமென்றால், நீதி விசாரணைப் போடவேண்டும் என்பது 65 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கற்ற பாடம். செம்பரம்பாக்கத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதும் இந்த ரகம்தான்.
 முகலிவாக்கம் கட்டடம் ஏன் இடிந்தது என்பதை இன்னும் அறிய முடியவில்லை. குடியிருக்க வீடு வேண்டுமென்ற ஆசையில் கடன் வாங்கி முகலிவாக்கத்தில் வீடு வாங்கிய மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தீர்வில்லை. எதனால் இடிந்தது என்று தெரிவதனால் அவர்களுக்கு என்ன பயன்?
 திருச்செந்தூர் சுப்பிரமணியம் பிள்ளை இறந்ததற்கு நீதிபதி பால் அவர்கள் விசாரணையில் தற்கொலை அல்ல, கொலை தான் என்று சொன்னார். இதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள்.. முடிவுகள்தான் என்ன? இறந்தது உதயகுமார் இல்லை என்று சொன்னபோது நீதிபதி ராமசாமி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இறந்தது உதயகுமார் தான் என்று தீர்ப்பளித்தார். நியாயம் கிடைத்தா? ஆகவே, இதையெல்லாம் விட்டுவிட்டு எதிர் காலத்தில் இயற்கைப் பேரழிவுகள் வரும் என்று குறிக்கப்பட்ட நகரங்களையும், இடங்களையும், மக்களையும் எப்படி காப்பாற்றுவதென்ற சிந்தனை எல்லோரிடமும் வரவேண்டும்.
 கடலூர் போன்ற மாவட்டத்திற்கு தனிகவனம் தேவை. சென்னையோடு சேர்க்கப்பட்ட புதிய இடங்களிலும் வடிகால், வாய்க்கால்கள், கழிவுநீர் திட்டங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். பேரிடர் காலத்தில் ஒன்றிணைக்க ஒரு மைய அமைப்பு அமைக்கப்படவேண்டும். எல்லா பகுதிகளிலும் இது போன்ற காலங்களில் எப்படி செயலாற்றுவது என்று ஓர் அமைப்பை உருவாக்கி, அதிலுள்ளவர்களுக்கு பயிற்சித்தர வேண்டும்.
 இயற்கைப் பேரழிவோ, தீவிரவாத தாக்குதலோ போன்ற நிகழ்வுகளின்போது உடனடியாக செயலாற்றுகிற ஒரு படை ஒன்றை உருவாக்க வேண்டும். வெள்ள அபாயங்களை அறிவிப்பதற்கு ஆற்றோரங்களிலும், கடலோரங்களிலும், அறிவிக்க ஒலிபெருக்கி அமைக்கப்படவேண்டும். இயற்கை சீற்றங்களின்போது மின்சாரம் தடைபடாமல் இருக்க வேண்டுமென்றால் உயரமான கட்டடங்களில் டிரான்ஸ் பார்மர் அமைக்கப்படவேண்டும்.
 ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறபொழுது ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடங்களை அரசு தரவேண்டும். நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வரவேண்டும். தேவைப்பட்டால் தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும்.
 உலக நாடுகள் பலவற்றையும் வெள்ளம் பாதித்திருக்கிறது. இயற்கையை வெல்ல முடியாது. ஆனால், ஏற்படுகிற உயிர்ச்சேத்தையும், பொருள் சேதத்தையும், முன்கூட்டியே தடுக்க முடியும். பல்வேறு வழிமுறைகள் இன்றைக்கு உலக நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.
 பெருகிவரும் தண்ணீரை திசைத் திருப்பி வேறு இடங்களில் உருவாக்கப்பட்ட குளத்திலோ, வாய்க்காலிலோ கொண்டு செலுத்துகிற முறை வெள்ளத்தின் பாதிப்பை பெருமளவு குறைக்கும். இந்த முறை கனடாவின் வின்னிபர்க் நகரத்தையும், பிலிப்பின்ஸின் மணிலா நகரத்தையும் பாதுகாக்கிறது. நார்வேயின் பொறியாளர்கள் 1999-இல் கண்டுபிடித்த நீர்வழி வேலிகள் எளிதானதாகவும், தேவைப்பட்டால் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடியதாகவும் கண்டுபிடித்தனர். அமெரிக்க இராணுவ பொறியாளர்களால் இது பாராட்டப்பட்டது.
 அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கைப் பேரழிவிலிருந்து நம்மை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பைக் குறைப்பதற்கும், உடனடியாக மக்களை பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 2005-ல் திட்டங்கள் வகுக்கப்பட்டு 168 நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.
 அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இராணுவம் வெள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அணைகளை கண்காணிக்கிறது. இந்தியாவில் கடலோர இயற்கைச் சீற்றத்தை இராணுவத்திடம் ஒப்படைக்கலாம். மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெள்ளத்திற்கென்றே உதவ சட்டங்கள் இருக்கின்றன. அதுபோல, இங்கும் ஒரு சட்டத்தை இயற்றலாம். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில் இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வழிகளைத் தேடி நாம்தான் செல்லவேண்டும். வருமுன் காப்பது இன்னொரு பாதிப்பைத் தடுக்க உதவும்.
 முடிவாக, ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடத்தை கற்பித்துப்போகிறது. இந்தப் பாடத்தை உணர மறுத்தால் மிகப்பெரிய விலையை நாம் கொடுக்க வேண்டிவரும். புதிய ஆக்கிரமிப்புகள், நீர்நிலைகளில் வராமல் தடுக்க வேண்டும். சிந்தனையும், சிறப்பும், உத்வேகமும், தியாகமும், ஆற்றலும் உள்ள தன்னார்வ இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
 வெள்ளத்தைத் தடுப்பதற்கு என்று இருக்கின்ற எத்தனையோ வழிகளை ஆராய்ந்து, அறிந்து உடனடியாக அரசு செயலாற்ற வேண்டும். எல்லா ஆற்றலும் உள்ள மக்களை நாம் இணைத்து கையாள்வதன் மூலம் இந்நாட்டில் வளமும், இளைஞர்களின் எதிர்காலமும் உள்ளது.
 
 கட்டுரையாளர்:
 மூத்த துணைத் தலைவர், த.மா.கா.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com