ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் தயாரிக்கும் அகால மரணம் குறித்த பட்டியலில், சாலை விபத்துகள் 6-ஆவது இடம் பெறுகின்றன. பல நாடுகள் சாலைப் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகளை குறைத்திருக்கின்றன.
ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் நிலைமை தலைகீழாக உள்ளது. பொருளாதார முன்னேற்றப் பயணத்தில் இத்தகைய உயிர்ப் பலிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தீர்வில்லாமல் திணற வைக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி, இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 2012-இல் 74 லட்சம் பேர். இதுவே முதலிடம் வகிக்கிறது. அதே வரிசையில் சர்க்கரை நோய், புற்று நோய், வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களாலும் உயிழப்பு ஏற்படுகிறது.
சாலை விபத்துகளால் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 15 லட்சம் மக்கள் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் 2013-ஆம் ஆண்டு சாலை விபத்துகளால் 1,37,423 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 15,630 சாலை உயிரிழப்புகள். தமிழ்நாட்டில் சாலைகளும் வாகனங்களும் அதிகம். அதன் விளைவு 66,238 சாலை விபத்துகள் 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்தன.
பண்டிகை, திருவிழா, திருமண நாள் என்றில்லாமல் இப்போது எல்லா நாள்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாகி வருகிறது. சாலையில் நெரிசல் நம்மை துரத்துகிறதா அல்லது நாமே வலிய சிக்கிக் கொள்கிறோமா என்பதே புரிவதில்லை.
உல்லாச நாள்கள் பொதுமக்களுக்கு கொண்டாட்டம் என்றால், காவல் துறைக்கு அதுவும் போக்குவரத்து காவலருக்கு பெரும் தலைவலி. புது வருஷக் கொண்டாட்டத்தில் அதி வேகமாக கார்கள், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது ஒரு கேளிக்கையாகி விட்டது. தெருவிலேயே பந்தயம் வைத்து, ஸ்டண்ட் செய்யும் இள வட்டங்களை அடக்குவதும் கண்காணிப்பதும் போலீஸூக்கு பெரும் தலைவலி.
விபத்தில்லாமல் நாள் கழிய வேண்டுமே என்பது ஒருபுறமிருக்க, விசேஷ நாள்களில் அதிக போலீஸ் கெடுபிடி இருந்தால் மக்கள் முகம் சுளிப்பார்கள். கண்டிப்பு, கரிசனம் இரண்டும் கலந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
சாலைப் பாதுகாப்பில் எல்லோருடைய பங்கும் இருந்தால்தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும். உயிரிழப்பு தவிர காயமுற்றவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் சராசரியாக ஆறு லட்சம் பேர் ஓராண்டில் விபத்துகளில் காயமடைவதால் அவர்களது வாழ்க்கை தொய்வடைகிறது.
சாலை விபத்துகளினால் ஏற்படும் பொருளாதாரச் சீர்குலைவும் நஷ்டமும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்பதும், இது தோராயமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டில் மூன்று சதவீதம் என்பதும் நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பரிதாப நிலை வர்ணிக்க இயலாது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஷ்ணகிரி அருகில் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் முன் ஜாக்கிரதையாக பகலில்தான் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த கோர விபத்து மூன்று உயிர்களை பலி கொண்டது.
சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அதிகமாக இறக்கின்றனர். சில விபத்துகளில் குடும்பமே அழிந்து விடுகிறது. அதுவும் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்பவர்கள் அல்லது சென்று திரும்புபவர்களே அதிகம் விபத்தில் சிக்குகிறார்கள்.
சாலை விதிகள் அமலாக்கம், சாலை சீர் அமைப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்புகளை வலுவடைய நடவடிக்கை - இந்த நான்கு முறைகளும் சாலைப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்று காலம் காலமாக வலியுறுத்தப்படுகிறது.
சாலைப் பாதுகாப்பு வாரம் ஆங்கிலம் புது வருட ஆரம்பத்திலேயே நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. விபத்துகளைத் தடுப்பதிலும் மக்களைப் பாதுகாப்பதிலும் காவல் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. தடுப்பு நடவடிக்கை, அமலாக்கம், பலதரப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்பு என்று அன்றாடம் முழு வீச்சில் காவல் துறை செயல்பட வேண்டும்.
"மோட்டார் வாகன சட்டம் 1988' தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று திருத்திய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்தில் உள்ளது.
விபத்துகள் அதிகமாவதற்கு முக்கியமான காரணங்கள், சாலை உபயோகிப்போரின் ஒழுக்கமற்ற நடத்தை; வாகனம் மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் தவறுகள்; மோசமான சாலைப் பராமரிப்பு, முரண்பாடான சாலை வடிவம்; விதி மீறலுக்கு தண்டனை அளிப்பதில் தாமதம், தயக்கம்; சுணக்கமான அமலாக்கம், ஊழலின் தாக்கம்.
இப்போது மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் சட்டத் திருத்தம் மேற்கூறிய பிரச்னைகளைக் களைந்து சாலைகளைப் பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து மேலாண்மை என்பது எல்லா நகர காவல் துறைக்கும் ஒரு சவாலாகவும் காவல் திறனை சோதிக்கும் விதமாகவும் வளர்ந்துள்ளது. எவ்வளவு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தாலும் கடலில் கரைத்த பெருங்காயமாக கரைந்து விடுகிறது.
சட்ட அமலாக்கம், சாலை உபயோகிப்போர் மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்பின்றி நிறைவு பெறாது. உதாரணத்திற்கு, சாலையில் உள்ள சிறு சிறு ஓட்டைகள், பழுதுகள் அவ்வப்போது செப்பனிடப்படவில்லை என்றால், ஓட்டை பள்ளமாகி போக்குவரத்து தடைப்படுகிறது.
இது போதாதென்று, போலீúஸ பல இடங்களில் தடுப்புச் சுவர்களை சாலையின் குறுக்கே போடுவது நெரிசலை அதிகமாக்குகிறது. சிறு சிறு ஒட்டைகளை அந்தந்த சாலைப் பராமரிப்புப் பொறியாளர்கள் சரி செய்துவிட முடியும்.
சரக போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறையோடு இணைந்து செயல்பட்டால் ஓரளவு பிரச்னை தீரும். பெரிய டெண்டர் போட்டு சாலை செப்பனிடும் வரை சில்லறை பராமரிப்பு, சாலையை ஓரளவு சீராக வைக்கும்.
மது குடித்து வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக கவனமின்றி வண்டிகளை செலுத்துவது, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ஒருகையால் ஓட்டுவது ஆகிய செயல்கள் விபத்துக்கு வித்திடுபவை.
உலக அளவிலும் இந்த நிலைதான். ஆனால், மேலை நாடுகளில் முனைப்பான செயலாக்கம் இருக்கிறது. நம் நாட்டில் பேச்சளவில் நிற்கிறது. எனவே, உயிரிழப்பு தொடர்கிறது. பெருவாரியான பொது மக்களும் இதே கருத்தை வலியுறுத்துவதில் ஆச்சரியமில்லை.
ஏனெனில், சாலைப் பாதுகாப்பு எல்லோரையும் பாதிக்கிறது. எண்பது சதவீதம் உயிரிழப்போர் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுநர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என்று மத்திய ஆவணக் காப்பகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சாலை விபத்துகளைத் தடுப்பது ஒருபுறம், அதே சமயம் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி செய்வது உயிர்களை காப்பாற்றும். "கோல்டன் ஹவர்' சிகிச்சை அளிக்க வேண்டியது சட்டப்படி நமது பொறுப்பு.
கேள்வி கேட்காமல் எல்லா மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிர் காப்பாற்றுவதுதான் முதன்மைப் பொறுப்பு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் வலியுறுத்தியுள்ளது. தமிழக நெடுஞ்சாலைகளில் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தனியாருடன் இணைந்து பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாவட்ட பொது மருத்துவமனைகள் மட்டுமன்றி, சில முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் காயமுற்றவருக்கு நிவாரணம் அளிக்கும் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் விரிவு படுத்தப்பட வேண்டும். அவசர சிகிச்சை அளிக்கும் பயிற்சி போக்குவரத்து காவல் துறையினருக்கு அளிக்க வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கும் அவசர சிகிச்சைக்கான பயிற்சி தேவை. சர்வதேச அவசர சிகிச்சை மற்றும் தீவிர பராமரிப்பு அமைப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை உயிரிழப்புகளை தவிர்க்க அரசுத் துறைகளோடு இணைந்து செயல்பட்டது கணிசமான வெற்றியை ஈட்டியது. மருத்துவ நிபுணர் குழாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பத்து ஆண்டுகளில் சாலை விபத்து உயிரிழப்புகள் இரண்டுமடங்காக உயர்ந்துள்ளது. காவல் துறையின் நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்துள்ளது என்றாலும், சாலை விபத்துகள் அதிகமாகிக் கொண்டு வருவதை காவல் துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டமும் முந்தைய ஆண்டைவிட விபத்துகளை குறைந்தபட்சம் 25 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்ற இலக்கு வைத்து, கூராய்வு செய்து முழுவீச்சில் களப்பணி செய்தால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியும்.
இத்தகைய அணுகுமுறை சென்னை மாநகரில் 2004 - 2005-இல் நடைமுறைபடுத்தப்பட்டதால் முந்தைய வருடத்தை விட முப்பது சதவீத உயிரிழப்பு குறைந்தது.
விபத்தின்மையே முழுமையான சாலைப் பாதுகாப்பு. விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, ரயில் பாதுகாப்பு ஆணையம் இருப்பது போல, சாலை பாதுகாப்பு ஆணையம் உரிய அதிகாரத்தோடும் சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கும் விதமாகவும் அமைக்கப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் சாலை விபத்தில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
விதிகளை மதி, கவனமாக ஓட்டு, முந்துவதைத் தவிர், வேகத்தை குறை, நில் கவனி செல், லேனுக்குள் ஓட்டு, இரவில் ஹைபீம் லைட் போடாதே, செல்லிடப்பேசியில் பேசாதே, மது அருந்திவிட்டு ஓட்டாதே, போலீஸூடன் ஒத்துழை என்ற பத்து கட்டளைகளை பின்பற்றினால், விபத்தில்லா நிலை உருவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.