பொங்கல் வாழ்த்து போனதெங்கே?

அந்தக் காலத்தில் பொங்கல் திருநாளின் இனிய, அழகிய அடையாளங்களில் ஒன்றாக பொங்கல் வாழ்த்து இருந்தது. பொங்கல் சமயத்தில் தபால்காரர் கொண்டு தரும் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் உறைகளும் தரக்கூடிய ஆனந்தம் அலாதியானது.

அந்தக் காலத்தில் பொங்கல் திருநாளின் இனிய, அழகிய அடையாளங்களில் ஒன்றாக பொங்கல் வாழ்த்து இருந்தது. பொங்கல் சமயத்தில் தபால்காரர் கொண்டு தரும் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் உறைகளும் தரக்கூடிய ஆனந்தம் அலாதியானது.

பொங்கல் திருநாள் வந்துவிட்டது. ஆனால், பொங்கல் வாழ்த்து வருமா?

பொங்கலை ஒட்டி நண்பர்களும் உறவினர்களும் ஒருவருக்கு ஒருவர் அஞ்சல்வழியாக பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் இனிய நடைமுறை தற்போது வழக்கொழிந்து வருகிறது.

பொங்கல் திருநாளின் வண்ணமயமான காட்சிகளில் தபால்காரர் வருகையும் ஒன்று என்பதை சென்ற தலைமுறையினர் அறிவார்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது, சைக்கிள் கேரியரில் வாழ்த்து அட்டைகள் பிதுங்கி வழியும் காக்கிப் பையிலிருந்து தபால்காரர் எங்களுக்கான பொங்கல் வாழ்த்து அட்டைகளை எடுத்துத்தருவார்.

அவற்றை வாங்குவதற்கு எங்களைப் போன்ற சிறார்களிடையே போட்டியே நடக்கும். எங்கள் பெயர் எழுதப்பட்ட வாழ்த்து உறைகளைப் பார்த்து எங்களுக்குப் பெருமை பிடிபடாது.

அதுபோலவே, கடைகளுக்குச் சென்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிவந்து முகவரி எழுதி அஞ்சலில் சேர்ப்பதும் பொங்கலை வரவேற்கும் செயல்களில் ஒன்றாக இருக்கும்.

பெரும்பாலான பொங்கல் வாழ்த்துகள் எளிமையாக, ஆனால் வண்ணமயமாக இருக்கும். பொங்கி வழியும் பொங்கல் பானை, இருபுறமும் கரும்புகள், மாலை அணிந்த மாடுகள்.

அந்தக் காலத்து சினிமா பிரபலங்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் படங்களுடன் வரும் வாழ்த்துகளும் பிரசித்தம்.

அஞ்சலில் அனுப்பிய பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி அட்டைகள் நம்மைத் தேடிவரும். பொங்கல் முடிந்தபின் நம் கைகளில் கிடைக்கும் நன்றி அட்டைகள் வாழ்த்து கிடைத்ததன் அடையாளமாகவும் நமது வாஞ்சையின் எதிரொலியாகவும் இருக்கும்.

அஞ்சல் துறையில் வாழ்த்து அட்டைகளை "செகண்ட் கிளாஸ் மெயில்' ஆகத்தான் வகைப்படுத்துவார்கள். வாழ்த்துகளுக்கு முன்னுரிமை கிடையாது.

பொங்கலன்று விடுமுறை நாளாக இருக்கும். ஆனாலும்கூட, தபால்காரர் பொங்கல் வாழ்த்துகளை பொங்கல் அன்றே கொண்டுவந்து கொடுத்து விடுவார்.

கடந்த வாரம் நான் சந்தித்த தபால்காரர் வருத்தத்துடன் சொன்னார்: "பொங்கல் வாழ்த்துகளை இப்போதெல்லாம் வரதில்லை சார். அந்தக் காலத்துல பொங்கல் வாழ்த்துகளை கொடுக்கும்போது குழந்தைகள் சந்தோஷமாக துள்ளிக் குதிப்பதை பார்க்கும்போது மனசுக்கு பூரிப்பாக இருக்கும் சார். எவ்வளவோ கடிதங்கள் டெலிவரி செய்தாலும் பண்டிகை வாழ்த்துகளை கொடுப்பது தனி அனுபவம் சார்!'

ஒவ்வொரு வீட்டிலும் ஆண்டுதோறும் தபாலில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் நண்பர்கள், உறவினர்களின் பட்டியலே இருந்தது. "இன்னாரிடமிருந்து இந்த வருஷம் பொங்கல் வாழ்த்து வரவில்லையே...' என்று கவலைப்படுவார்கள்.

வெளியூரில் இருக்கும் அவ்வளவாகப் படிக்காத மாமா அனுப்பும் வாழ்த்தில் உங்களை எல்லாம் என்றும் "மரவாத மாமா' - என்று எழுதியிருப்பார். இன்றுவரை அவர் வாழ்த்தை "மரக்க' முடியவில்லை!

பள்ளி ஆசிரியரான என் தந்தை அதைப்பார்த்து சிரித்து விட்டு எங்களிடம் தருவாரே ஒழிய அந்த "ர'னாவை திருத்தவே மாட்டார்.

அப்பாவின் இளமைக்கால நண்பர் ஒருவர் இருந்தார். அவர் அப்பாவுடன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஒன்றாகப் படித்தார். அவரிடமிருந்து ஆண்டுதோறும் தவறாமல் பொங்கல் வாழ்த்து வந்துவிடும்.

என் தந்தை எண்பது வயதை எட்டியபோதும் அவர் வயதை ஒத்த அந்த நண்பர் பொங்கல் வாழ்த்து அனுப்புவதை நிறுத்தவில்லை. "நான் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்' என்று அந்த நண்பர் சொல்லாமல் சொல்லும் அந்த வாழ்த்து அப்பாவையும் "வாழ' வைத்தது.

பொங்கல் வாழ்த்து என்பது வெறும் அச்சிட்ட வாசகங்களைத் தாங்கிய அட்டை அன்று. நம்மை நேசிக்கும் நெஞ்சங்கள் நமக்காக வாசிக்கும் ராகம் அது.

உறவோ, நட்போ அந்த வாழ்த்து அட்டைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நேசத்தின் ரீங்காரத்தை நாம் மனத்தில் கேட்க முடியும்.

இ-மெயில்களிலும், வாட்ஸ்-ஆப்புகளிலும் கண்சிமிட்டி மறையும் நமக்கான வாழ்த்துகளில் இந்த நெருக்கமும் நேசமும் சாத்தியமா?

தற்போது அஞ்சல் துறை தந்திச் சேவையை நிறுத்திவிட்டது. முன்பு பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தந்தி மூலம் அனுப்புவது உண்டு. இதற்கான "தயார் வாக்கியங்கள்' இருந்தன.

அவ்வாறு அனுப்பப்படும் வாழ்த்துத் தந்திகளை சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகம் முகவரிதாரருக்கு தொலைபேசி வழியாக வாழ்த்து வாசகங்களைத் தெரிவிக்கக் கூடாது என்று தொலைபேசித் துறையில் ஒரு விதியே நடைமுறையில் இருந்தது.

வாழ்த்துத் தந்திகளை நேரில் கொண்டு சென்றுதான் "டெலிவரி' செய்ய வேண்டும். எழுத்துமூலம் அனுப்பப்படும் வாழ்த்துக்குத் தனிமரியாதை அளித்தது தந்தித் துறை!

நாமும் அளிப்பதில் தடை ஏதும் உண்டோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com