கருத்து என்பது தனித்துவமானது. அது மனித மூளையில் தோன்றுகிறது. ஓவியர்கள் அதனைக் கோடுகள், வண்ணங்கள் வழியாகச் சொல்கின்றனர். பாடகர்கள் இசைக் கோலங்கள் மூலம் பிரதிபலிக்கின்றனர்.
கவிஞர்கள், எழுத்தாளர்கள் சொற்கள் வழியாகச் சொல்கிறார்கள். வரையப்பட்டதையும், இசைக்கப்பட்டதையும், எழுதப்பட்டதையும் குறித்து அறிந்து கொண்டவர்கள், கருத்து என்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கிறார்கள்.
கருத்து என்பதை எதிர்கொள்வதிலும், பரப்புவதிலும் மொழி முதலிடத்தில் இருக்கிறது. கல்வி வழியாகவே மொழி பரவுகிறது. புரிதல் என்பதை எளிதாக்குகிறது.
எனவே, மொழியில் அன்பை வெளிப்படுத்தும் சொற்கள், பரிவான சொற்கள், கிளர்ச்சியைத் தூண்டும் சொற்கள், சரணாகதி சொற்கள், தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் சொற்கள் என்று பலவிதமான பல்லாயிரம் சொற்கள் இருக்கின்றன. மொழியே கருத்தாகவும் ஆகி விடுகிறது. எனவே, கருத்துக்கு பரிமாணமும், அர்த்தமும் கொடுக்கும் விதத்தில் சொல்லைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
ஆகையால்தான், திருவள்ளுவர் "வெல்லும் சொல் இன்மை அறிந்து' சொல்ல வேண்டும் என்றார். சொல்லும் சொல்லின் மகத்துவம் அறிந்தவர் அவர். "கனி இருப்ப காய் கவர்ந்தற்று' என்று கவிஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் அவர் சொல்லியிருக்கிறார்.
நெடுங்காலமாக மனிதர்கள் தங்களின் கருத்துகளை பெரும்பாலும் மொழி வழியாகவே சொல்லி வருகிறார்கள். சொல்லப்பட்ட எல்லா கருத்துகளும் எப்போதும் வரவேற்பு பெற்றன என்று சொல்ல முடியாது.
ஆனால், தன் கருத்து மீது அசைக்க முடியாத உறுதி கொண்டவர்கள், அது சமூகத்திற்கு நலம் பயக்கக் கூடியது என்று நம்பியவர்கள் அச்சமற்று எதிர் விளைவுகளைப் புறந்தள்ளி தங்கள் கருத்துகளைத் தர்க்க முறையில் சொல்லி வந்தார்கள். அதற்கேற்றச் சொற்களைப் பயன்படுத்தினார்கள்.
சொல்லே பிரதானமாக இருந்த ஒரு காலத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். அவர் அரசியல், சமூக, கலாசார மேம்பாடு, முன்னேற்றம் பற்றி இளைஞர்களிடம் கூறினார்:
"உங்களைப் பற்றி நன்றாகச் சிந்தனை செய்யுங்கள். யார் சொன்னதையும் நம்பாதீர்கள். உங்கள் அறிவால் அறிந்து கொண்டு செயல்படுங்கள்' என்றார். அதாவது, அவரால் சொல்லப்பட்டதன் வழியாகச் சொல்லப்படாதது என்னவென்றால், "நீங்கள் சரியானவர்களால் ஆளப்படவில்லை. எனவே, புதிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்' என்பதுதான்.
அது ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து போனது. எனவே, சாக்ரடீஸ் ஆபத்தான ஆளானார். அவர் சொன்ன கருத்துக்காக நஞ்சு குடித்து சாக வேண்டுமென்று ஆட்சியாளர்கள் ஆணையிட்டார்கள். நல்ல குடிமகனாகிய அவர், மறுப்பு ஏதும் சொல்லாமல், நஞ்சைப் பருகி மாண்டார். தனது கருத்துக்காக மாண்டுபோன அவர்தான் சரித்திரத்தில் இன்றும் ஜீவிதமாக இருக்கிறார்.
அசலான, முன்னேற்றமான கருத்தொன்று சொல்லப்படும்போது, மரபுவாதிகள், பழைமையின் மீது ஈடுபாடு கொண்டோர் அதனை ஏற்று அங்கீகரிப்பதில்லை. அப்படி ஏற்பது, தங்களின் அதிகாரத்தைப் பறித்து விடும் என்றும், செல்வாக்கைக் குறைத்து விடும் என்றும் பயப்படுகிறார்கள். பயமே பழைமையைப் போற்றுவதில் ஆதாரமாக இருக்கிறது.
சமூக நலன் பற்றிச் சிந்தனை செய்கிறவர்கள், பழைமைவாதிகளுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்களுக்கும் உவப்பாக இல்லாத கருத்தைச் சொல்வதுதான் கருத்து சுதந்திரம். அது சுதந்திரம் என்று சொல்லப்படும் எல்லாவற்றையும்கூட தலையாய சுதந்திரம்.
அந்த சுதந்திரத்தை எவருக்கும் ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, ஒரு நாடோ கொடுப்பதில்லை. பிறப்பின் வழியாக ஒவ்வொரு மனிதனும் பெற்றிருப்பது. அதனை யாரும் பறிமுதல் செய்ய முடியாது. இதனை சொல்லித்தான் போராடி வருகிறார்கள்.
தங்கள் சமயந்தான் இன்மையில் நல்வாழ்க்கை வாழ வழி காட்டக்கூடியது என்றும், மறுமையில் மோட்ச சாம்ராஜ்யத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது என்றும் சொல்கிறார்கள். எனவே, அவர்களுடைய சமயத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அவமரியாதையான கருத்து என்று சொல்லி அடக்க முன்வருகிறார்கள்.
கருத்து சுதந்திரம் வேண்டுகிறவர்கள் அடங்கி ஒடுங்கி இருப்பதில்லை. அவர்கள் ஏற்படுத்தும் கலவரமே பல சமய சிந்தனைகளில் பெரும் கருத்து மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், அரசு என்பது இறுக்கமான அமைப்பு. அது சட்டம் - ஒழுங்கு, குற்றம், தண்டனை என்றே எப்போதும் இருப்பது. பொது அமைதிதான் அதன் முதன்மையான குறிக்கோள்.
பொது அமைதியைக் குலைக்கும் எந்தவொன்றையும் அனுமதிக்க முடியாது என்று கூறி கருத்துச் சுதந்திரத்தை நசுக்குகிறார்கள். அதற்கு அடிபணியாமல் கிளர்ந்து எழுந்து வருகிறவர்களை அடக்க சட்டம் வைத்திருக்கிறார்கள்.
இந்திய மரபில் மாற்றுக் கருத்துக்கு, எதிர்க் கருத்துக்கு எப்போதும் இடம் உண்டு. அது நெடு நாளைய மரபு.
"இறைவன் இருக்கிறான். அவன் பல நாமங்கள் கொண்டு, பல வடிவங்களில் இருக்கிறான். அலகிலா விளையாட்டை உடைய இறைவன், உலகத்தைப் படைத்து காத்து வருகிறான்' என்று திருவிழாக்கள், புனித யாத்திரைகள் மேற்கொள்ளுகிறவர்களிடம், "கடவுள் இல்லை, அவன் உலகத்தைப் படைக்கவில்லை, கடவுள் மனிதனால் படைக்கப்பட்டான்' என்று சொன்னவர்களைப் பகைத்துப் புறந்தள்ள வில்லை.
"அவர்கள் நாத்திகம் என்னும் கருத்து கொண்டவர்கள். அவர்களும் எங்கள் சமயம் சார்ந்தவர்கள்' என்று இந்து சமயம் அவர்களை அரவணைத்துக் கொண்டது.
எதிரான கருத்தை ஏற்பதுதான் வாழ்க்கை. பல சமூகங்கள் அதனை ஒரு பண்பாகவே கொண்டு இருக்கின்றன.
தமிழர்கள், "எங்கள் மொழி மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது. ஆனாலும் சீரிளமை கொண்டது. உலகத்து முதல் மொழி தமிழ்' என்று பெருமையுடன் பாராட்டிக் கொண்டிருந்தபோது, "தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை' என்றார் பெரியார்.
"உரைசால் பத்தினி கண்ணகி கதையைச் சொல்லும் தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம்' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, "அது ஆபாச காப்பியம்' என்று விமர்சனம் வைத்தார் அதே பெரியார்.
தமிழர்கள் பெரியார் மீது கோபம் கொள்ளவில்லை. அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யவில்லை. கருத்துச் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேரணி, கதவடைப்பு செய்யவில்லை.
ஏனெனில், அவருடைய சொல் கடந்து அவர் வெள்ளையுள்ளம் தெரிந்தது. "அவர் பெரியார். அவர் கருத்துகள் இருக்கட்டும்' என்று தமிழ்ப் புகழ்பாடிக் கொண்டும், கண்ணகிக்குப் பத்தினி கோட்டம் சுட்டிக் கொண்டும் இருந்தார்கள்.
சமூகம் எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. அக, புற காரணிகளால் அது நிலை தடுமாறுகிறது. சமூகமாக வாழும் மக்களிடம் இருந்து சிலர் சமூக பாதுகாவலர்களாக உருவாகி வருகிறார்கள்.
அவர்கள் "சொல்லப்பட்ட கருத்து எங்கள் சமய நல்லுணர்வுகளை நிந்தனை செய்கிறது. எங்கள் பெண்களை அவதூறு செய்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒன்றை எடுத்துக்காட்டி எங்கள் பிறப்பையே அவமானப்படுத்துகிறது. எங்கள் வாழ்க்கை காட்டு மிராண்டித்தனமானது என்று பரிகாசம் செய்கிறது. இதனைப் பொறுக்க முடியாது' என்று புத்தகம் எழுதியவனை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் பேசப்பட்ட பேச்சுக்கும், எழுதப்பட்ட புத்தகங்களுக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பழைமையான கலாசாரம் கொண்ட சீனாவில், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஹன் அரசு வம்சத்தினர், தங்கள் பரம்பரையைச் சிலர் பழித்து எழுதினார்கள் என்று எழுதப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் பறிமுதல் செய்து எரித்தார்கள்.
புத்தகத் தடை, எரிப்பு என்பதில் பெரியவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள், இளைஞர்கள் எழுதிய புத்தகங்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. தங்கள் கருத்தோடு ஒத்துப் போகாத எல்லாப் புத்தகங்களையும் அவர்கள் கொளுத்தினார்கள்.
காரல் மார்க்ஸின் கம்யூனிஸ்டு அறிக்கை பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது. சிறுவர்களுக்கான புத்தகமான "ஆலீஸ் அதிசய உலகம்' தடை செய்யப்பட்டது. பதினான்கு வயது சிறுமி ஆனி பிராங் டைரி ஆபாச புத்தகம் என்று கொளுத்தப்பட்டது.
ஆபாசப் புத்தகங்களுக்கு ஓர் ஈர்ப்பு இருப்பது போல எதிர்ப்பும் இருந்து வருகிறது. பதினெட்டாவது நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் அரச சபையில் ஆடல் மகளாக இருந்தவர் முத்து பழனி. தாய்மொழி தெலுங்கு. சம்ஸ்கிருதம், தமிழ் அறிந்திருந்தார்.
அவர் தெலுங்கில் ராதை தன் காதலைச் சொல்லும்விதமாக பாடல்கள் புனைந்திருந்தார். அந்த நூலின் பெயர் "ராதிகா சாந்த்வனம்'. அதனை 1910-ஆம் ஆண்டில் பெங்களூர் நாகரத்தனம்மாள் புத்தகமாகப் போட்டார் (இவர்தான் திருவையாற்றில் தியாகையர் சமாதியில் கோயில் கட்டியவர்).
முத்து பழனி எழுதிய "ராதிகா சாந்த்வனம்' ஆபாசமாக இருக்கிறது என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தெலுங்கு பண்டிதர்கள் மனு அனுப்பினார்கள். தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
"ராதிகா சாந்த்வனம்' ஒரு தாசி எழுதியது. அதனை இன்னொரு தாசி வெளியிட்டிருக்கிறார் என்று சமூக விமர்சனமாக எழுதினார்கள். அரசு அந்தப் புத்தகத்துக்குத் தடை போட்டது.
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்ட, எரிக்கப்பட்ட புத்தகங்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியல் ஒன்று இருக்கிறது. அந்தப் பட்டியலில் மகத்தான பல புத்தகங்களும், உலக வரலாற்றையே அடியோடு மாற்றியமைத்த புத்தகங்களும் இருக்கின்றன என்பதுதான் அறிய வேண்டிய முக்கியச் செய்தி.
சமூக பிரக்ஞையுடன், சமூக மேம்பாட்டிற்காக எழுத வருகின்ற எழுத்தாளர்கள், எழுதுவதற்கு முன்னேதான் சிந்தனை செய்கிறார்கள். எழுதி முடித்த பின்னர் - அதன் விளைவுகளை எதிர் கொள்வதில் பின்வாங்குவதில்லை.
தன் பேச்சு - எழுத்து என்பதற்கு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது இத்தகைய பொறுப்புணர்வால்தான் அர்த்தம் பெறுகிறது.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.