சாலை வழிச் சீற்றங்கள்

உடலை வருத்தி திறந்தவெளியில் சுடும் வெயிலில் வேலை செய்வது மிகவும் கடினம். பாரம் நிறைந்த காவல் பணியில்,
Updated on
4 min read

உடலை வருத்தி திறந்தவெளியில் சுடும் வெயிலில் வேலை செய்வது மிகவும் கடினம். பாரம் நிறைந்த காவல் பணியில், வேலைப் பளுச் சுமையோடு மனச்சுமையும் சேர்ந்து கொள்வதால் வேறு விதமான விளைவுகள் ஏற்படுகின்றன.
 ரோந்துப் பணியிலும், போக்குவரத்துக் கண்காணிப்பு, வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதங்களும் மோதல்களும் நாடெங்கிலும் அதிகமாகியுள்ளன.
 தில்லியில் சமீபத்தில் போக்குவரத்து ஹவில்தாருக்கும், ஸ்கூட்டரில் வந்த பெண்ணுக்கும் நடந்த சச்சரவில் அந்தப் பெண் முதலில் ஹவில்தார் மீது கல் வீச, ஹவில்தாரும் தன் பங்குக்கு, வீசிய கல்லைத் திரும்ப அந்த பெண் மீது வீசியதை ஒருவர் கனசிரத்தையாக விடியோ பிடித்தது எல்லா ஊடகங்களிலும் கவன ஈர்ப்புச் செய்தியாக வளைய வர, ஹவில்தார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
 வாகனத் தணிக்கை செய்த ஹவில்தார் கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் பதில் சொல்லியிருக்கலாம், எதற்குச் சண்டையிட வேண்டும்? அந்த வழியாகத் தினமும் செல்லும் பொதுமக்கள், அந்த ஹவில்தார் நேர்மையான பணியாளர் என்று கருத்து தெரிவித்தும் காவல் துறை மேலிடம் ஏன் அவசரப்பட்டு பணிநீக்கம் செய்தனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்னதான் ஆத்திரமூட்டும் செயலாக இருந்தாலும் பெண் மீது ஹவில்தார் கல் வீசியது தவறு என்பதை மறுக்க முடியாது.
 இன்னொரு நிகழ்வில் யோகேஷ் என்ற தில்லி போலீஸ் காவலர், நகர எல்லையான நொய்டாவில் பணியில் இருக்கையில், போக்குவரத்து விதிகளை மீறிய காரை தடுத்து நிறுத்த, அந்த வாகனம் நிற்காமல் அந்தக் காவலர் மீது மோத இருந்தது. அந்தக் காவலரும் அசராமல் அந்த காரில் தொத்திக்கொண்டு பானட் மீது ஏறி வாகனத்தை நிறுத்த முற்பட்டிருக்கிறார். இதனைக் கவனித்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், வாகனத்தைக் கடந்து அதன் முன்னால் ஆட்டோவை நிறுத்தியதால் வேறு வழியின்றி காரும் நின்றது. கார் ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கையும், திறமையாகப் பணி செய்த காவலருக்கு வெகுமதியும் என்பது நிறைவான முடிவு.
 சென்னையிலும் அடிக்கடி இத்தகைய சாலை மோதல்களுக்குக் குறைவில்லை. சமீபத்தில் வாகனத் தணிக்கை விபரீதத்தில் முடிந்தது. கே.கே. நகர் அருகே மூன்று பேர் பயணித்த இரு சக்கர வாகனத்தைப் போக்குவரத்துக் காவலர் நிறுத்த முற்பட்டபோது அவர்கள் முண்டியடித்துச் செல்ல அசம்பாவிதமாக சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி ஓர் இளைஞர் உயிர் இழந்தார். அடிபட்டவருக்குக் காவல் துறையினர் உதவவில்லை, அத்துமீறி நடந்தனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஆனால், குற்றம் புரிபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது காவலரின் கடமை, அதற்கு ஒத்துழைப்பு அளிப்பது பொதுமக்களின் பொறுப்பு. சம்பந்தப்பட்ட போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 ரோட் ரேஜ் எனப்படும் இத்தகைய சாலையோரச் சீற்றங்களும், பொதுமக்களும் காவல் துறையினரும் பொறுமையின்றி வெகுண்டெழுவதும் இப்போது ஏன் அதிகமாகியுள்ளது என்பது ஆராயப்பட வேண்டியதொன்று. வாகனங்கள் அதிகமாகியுள்ளன. பொருளாதார முன்னேற்றத்தோடு மக்களின் பயணங்களும் பெருகிவிட்டன. இத்தகைய சூழலில் சாலைகளில் பாதுகாப்பு அளிப்பது, போக்குவரத்து நெரிசலை சீரமைப்பது, விபத்துகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என்று காவலரின் மாறுபட்ட பணிகள் அதிகரித்துள்ளன.
 பொதுமக்களின் ஒத்துழைப்பு காவல் பணி மேம்பாட்டுக்கு அவசியம் என்பதை உணர்ந்து இப்போதெல்லாம் நகர எல்லையில் நகர போலீஸ் வரவேற்கிறது என்ற வரவேற்புப் பலகையைக் காணலாம். இது போலீஸார் மீது நல்லெண்ணம் ஏற்படுத்துவதற்காகவும் புதிதாக வருபவருக்கு நம்பிக்கையும் தைரியமும் அளிப்பதற்காகவும் என்பது தெளிவு. ஆனால், மறைந்திருந்துப் பார்க்கும் மர்மக் கலையைப் பயின்ற காவலர் திடீரென்று தோன்றி வாகனத் தணிக்கை செய்யும்போது எல்லா நல்லுணர்வும் மறைந்து விடுகிறது.
 இந்த நிலை நமது நாட்டில் மட்டுமா? பொருளாதார முன்னேற்றம் அடைந்த வல்லரசான அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் காவல் துறையின் நடவடிக்கை கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. 2014 நவம்பர் மாதம் டாமிர் ரைஸ் என்ற 12 வயதுச் சிறுவன் கைத் துப்பாக்கி வைத்திருக்கிறான் என்ற தகவலின் பேரில் சென்ற போலீஸார் சிறுவனை அநியாயமாகச் சுட்டதில் சிறுவன் உயிரிழந்தான். நடந்தது கிளீவ்லாந்தில். முதலில் காவல் அதிகாரிகளைப் பாதுகாத்த அரசு, மக்களின் கொந்தளிப்புக்கு இணங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
 அதே வருடம் ஆகஸ்ட் மாதம் மிசோரி மாநிலம், ஃபெர்குசன் நகரில், ஒரு கடையில் சில பொருள்கள் களவாடப்பட்டது என்ற தகவலின் அடிப்படையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் சந்தேக நபர்களைச் சோதனை செய்தனர். அதில் மைக்கேல் பிரௌன் என்ற 18 வயது இளைஞரைச் சந்தேகித்து விசாரிக்கையில் ஏற்பட்ட மோதலில், டேரன் வில்சன் என்ற போலீஸ் அதிகாரி சுட்டதில் மைக்கேல் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகரில் பல நாள்கள் கலவரம் நிகழ்ந்தது. வில்சன் மீது முதலில் கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டது. ஆனால், விசாரணை முடிவில் அவர் தற்காப்புக்காக கைத் துப்பாக்கியால் சுட நேர்ந்ததில் மைக்கேல் உயிரிழப்பு ஏற்பட்டது என்று வழக்கு முடிக்கப்பட்டது.
 இதைவிடக் கொடுமையான சம்பவம் நியூயார்க் நகரில் 2014 ஜூலையில் நிகழ்ந்தது. ரோந்து போலீஸ் அதிகாரி இருவர், எரிக் கார்னர் என்பவர் வரி செலுத்தாத சிகரெட்டுகளை தெருவில் விற்கிறார் என்று அவரைச் சோதனை செய்து கைது செய்கையில் அவர் திமிராமல் இருக்க அவரது இரு கைகளையும் பின்புறமாக வளைத்துக் கிடுக்கிப்பிடி போட்டு தரையில் வீழ்த்தினர். அதில் கார்னருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதம், காவல் அதிகாரிகளும் அவசர சிகிச்சை அளிக்கவில்லை. கார்னர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல ஆர்ப்பாட்டங்கள் நகர நிர்வாகத்துக்கு எதிராக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 2015 ஏப்ரலில் அமெரிக்காவில் மேரிலாந்து மாநிலம், பால்டிமோர் நகரில் ரோந்து காவல் அதிகாரிகள், ஃபிரெட்டி கிரே என்பவரை சந்தேகத்தில் சோதனை செய்து சட்டத்துக்கு விரோதமான கூர்மையான கத்தி வைத்திருந்தார் என்று கைது செய்து போலீஸ் வாகனத்தில் கொண்டு செல்கையில் அவர் மயக்கம் அடைந்து சில நிமிடங்களில் உயிர் இழந்தார். உடன் இருந்த காவல் அதிகாரிகளின் தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குற்றச்சாட்டு. நகரில் கலவரம் வெடித்தது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 வாகனத் தணிக்கை, சந்தேக நபர் கண்காணிப்பு போன்ற சாதாரண நடவடிக்கைகள் விபரீதத்தில் முடிய காரணம் திறமையற்ற, ஆணவம் மிகுந்த காவல் அடக்குமுறை. அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்கள் கருப்பினத்தவர், நம் நாட்டிலோ ஏழைகள்.
 போலீஸ் அடக்குமுறையின் உச்சகட்டம் என்பதற்கு ஹாலிவுட் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகர போலீஸ் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு சிறு
 சம்பவத்தில் தனது எல்லா நற்பெயரையும் இழந்தது. சம்பவம் நடந்தது 1991-ஆம் வருடம். அந்த நகரில் ரோட்னி கிங்க் என்ற கருப்பர் தனது சகாக்களுடன் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதைத் தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சவால் விடும் வகையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டினார். ஹெலிகாப்டர் மூலம் வாகனத்தைப் பின்பற்றி பல போலீஸ் கார்கள் ரோட்னி காரை முற்றுகையிட்ட பின்புதான் வேறு வழியின்றி நிறுத்தினார். கைது செய்கையில் ரோட்னியை போலீஸார் அடித்துத் துவைத்து விட்டனர். இதை ஜார்ஜ் ஹாலிடே என்பவர் விடியோ பதிவு செய்து ஊடகங்களுக்கு அனுப்ப, சம்பவம் இனவெறித் தாக்குதலாக உருவெடுத்து மிகப் பெரிய கலவரம் உருவானது. வாரன் கிறிஸ்டோபர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு காவல் துறையில் மனித நேயத்தை வளர்க்க துறை சார்ந்த நடவடிக்கையை வலியுறுத்தியது.
 தவறு இழைப்பவர்கள் சிலர்தான். ஆனால், சிறப்புப் பயிற்சி மூலம் அவர்கள் திருந்துவதில்லை, பெரும்பான்மை போலீஸார் பொறுப்புள்ளவர்கள். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அவசியம் இல்லை என்பதும் முக்கியமான கருத்து. துறையைத் திருத்த ஒரே வழி தவறு முளைக்க விடாமல் உடனே கிள்ளி எறிய வேண்டும்.
 பொது இடங்களில் காவல் பணி எவ்வாறு செய்ய வேண்டும், மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி முதல் கட்டப் பயிற்சியோடு சேர்த்து காவல் களப் பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், மாறி வரும் இன்றைய சமுதாயச் சூழலுக்கு ஏற்றவாறு காவலர் அணுகுமுறையிலும் மாற்றம் தேவை. சாலைகளில் பல தரப்பட்ட மக்களைச் சந்திக்க நேர்கிறது. பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். சில இடங்களில் இரவு நேரங்களிலும் ஷிப்ட் முறையில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி சேவைப் பணிகள் இயங்குகின்றன. இளைஞர்கள் கேளிக்கை நாடி நகரில் பல இடங்களில் குவிகின்றனர்.
 இது தவிர அரசியல், சமூக, வகுப்புவாதப் பிரச்னைகளுக்கோ குறைவில்லை. இத்தகைய முரண்பாடுகளுக்கிடையில் அமைதி நிலவ, நிலைநாட்ட எத்துணை மன வலிமையோடு காவல் துறை செயலாற்ற வேண்டும் என்பதை உயர் அதிகாரிகள் உணர்ந்து, அதற்கான பயிற்சி ஆளுமையை மேம்படுத்துதல் அவசியம்.
 பிரிட்டனில் மிகவும் மதிக்கப்படும் அரசுப் பணியாளர் லண்டன் பாபி என்று பெருமையாக அழைக்கப்படும் காவலர். லண்டன் பாபியிடம் ஆயுதம் கிடையாது. பேட்டன் எனப்படும் சிறிய குச்சி ஒன்றுதான், காவல் நிலையங்களிலும் ஆயுதம் ஏந்திய காவலர் கிடையாது. நேர்மையும், கடமையுணர்வும்தான் ஆயுதங்கள். அன்பும், பணிவும், கனிவுமே அணிகலன்கள்.
 லண்டன் பாபி மாதிரி இல்லாவிட்டாலும், நட்போடும் நயமோடும் பழகினாலே மக்கள் பாராட்டுவார்கள். காவலர் என்றாலே முரடனாக இருக்க வேண்டும் என்ற உணர்வு ஊறிவிட்டது. துறையின் கலாசாரமாகவே வளர்ந்து விட்டது.
 வளர்ந்து வரும் எல்லா நாடுகளிலும் காவல் துறையின் செயல்பாடுகளில் மாற்றம் வர வேண்டும் என்ற கருத்து வலுவடைந்துள்ளது. நடைமுறையிலும் பிரதிபலித்தால் காவல் போற்றுதும் காவல் போற்றுதும் என்று சமுதாயம் போற்றும்.
 
 கட்டுரையாளர்:
 காவல் துறை தலைமை இயக்குநர் (ஓய்வு)
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com